Site icon ilakkiyainfo

“உண்மையான விசுவாசி!” – பதுங்கிய தலைகள்… பதற்றத்தில் எடப்பாடி

பன்னீரின் கரம்பிடித்து ஆறுதல் சொன்ன சசிகலா, விஜயலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தார்.

“சந்தோஷத்துல ஒண்ணு சேர முடியாட்டியும், துக்கத்துல ஒண்ணு சேர்ந்துடணும்!” என்றொரு பழமொழி உண்டு.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் திடீர் மறைவு, கழகத்தையே மீளாத்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

துக்க வீட்டுக்குள் அரசியலைக் கொண்டுவருவது நியாயமல்ல என்றாலும், அதையொட்டி நடைபெற்றிருக்கும் அரசியல் மாற்றங்கள் அந்தப் பழமொழியை மெய்யாக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பிப்ரவரி 7, 2017-ல் தர்மயுத்தத்தைத் தொடங்கிய பன்னீர், “என்னைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவைத்தார்கள்.

கழகத்தை, ஆட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தும் ஒருவர் தேவை. இந்தக் கருத்தில் நான் கடைசிவரை உறுதியாக நிற்பேன்” என்று சசிகலாவுக்கு எதிராகப் பேட்டி கொடுத்தார்.

பன்னீரின் உறுதியை, சமீபத்திய தன் பத்து நிமிடச் சந்திப்பில் சசிகலா உடைத்துவிட்டதாகப் பரவும் தகவல்தான் அ.தி.மு.க-வைப் பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

சசிகலா வருகை… காத்திருந்த பன்னீர்!

சென்னை, பெருங்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் பத்து நாள்களாகச் சிகிச்சை பெற்றுவந்த விஜயலட்சுமி, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு செப்டம்பர் 1-ம் தேதி மறைந்தார்.

அன்று காலை சட்டமன்றத்துக்கு அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் வந்த பிறகே தகவல் தெரிந்ததால், வந்தவர்கள் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பெருங்குடியில் குழுமினர்.

அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கே சென்று பன்னீருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பெரியகுளத்துக்கு விஜயலட்சுமியின் உடலை எடுத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் வாகனமும் தயாரானது.

அந்தச் சூழலில்தான் சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனிடமிருந்து பன்னீர் தரப்புக்கு போன் வந்தது. “துக்கம் விசாரிக்க சின்னம்மா வந்துக்கிட்டிருக்காங்க” என்றார் கார்த்திகேயன்.

அதற்குள் ஆம்புலன்ஸில் விஜயலட்சுமியின் உடல் ஏற்றப்பட்டுவிட்டதால், இளைய மகன் ஜெயபிரதீப்பை மட்டும் ஆம்புலன்ஸோடு அனுப்பிவிட்டு, மருத்துவமனையிலேயே சசிகலாவுக்காகக் காத்திருந்தார் பன்னீர்.

இந்த ட்விஸ்ட்டை அ.தி.மு.க சீனியர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

உடனடியாகத் தன் சகாக்களுடன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, தளவாய் சுந்தரம் உள்ளிட்ட அ.தி.மு.க தலைவர்கள் மருத்துவமனையின் கார் பார்க்கிங்குக்கு வலதுபுறமிருந்த பூங்காவில் பதுங்கினார்கள்.

மறைந்த அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நிலையை அறிவதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு சசிகலா வந்தபோது, அங்கேயிருந்த அ.தி.மு.க தலைவர்கள் சிட்டாகப் பறந்தது விமர்சனத்தைக் கிளப்பியது.

அதுபோல இந்தமுறை சர்ச்சை ஏதும் வெடித்துவிடாதபடி, கவனமாக ஒதுங்கியது அ.தி.மு.க சீனியர்கள் தரப்பு.

பூங்காவில் அமர்ந்தபடி சசிகலாவின் வருகை குறித்து தங்களுக்குள் தீவிரமாகப் பேசிக்கொண்டனர்.

அந்தச் சூழலில், அரை மணி நேரம் கழித்து மருத்துவமனைக்கு அ.தி.மு.க கொடி கட்டிய காரில் வந்து இறங்கினார் சசிகலா.
“உண்மையான விசுவாசி!” – பதுங்கிய தலைகள்… பதற்றத்தில் எடப்பாடி

வாசல் வரை வந்த கவிதா… லீடு எடுத்த உதயகுமார்!

“அ.தி.மு.க கட்சிக்கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது” என்று போலீஸ் டி.ஜி.பி வரை புகாரளித்த கட்சி நிர்வாகிகள் எவரும், மருத்துவமனை வளாகத்தில் சசியை எதிர்த்து வாய் திறக்கவில்லை.

வாசலில் சசி காரைவிட்டு இறங்கியவுடன் ஓடிவந்தார் பன்னீரின் மகள் கவிதா. சசிகலாவைப் பார்த்தவுடன் அவர் கண்ணீர்விட்டு அழவும், அவரை சசிகலா தேற்றவும், அந்த இடமே துக்கத்தால் கனத்தது. அதற்குப் பிறகு நடந்தவைதான் அரசியல் ஹைலைட்ஸ்!

மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர்கள் சிலர், “மருத்துவமனைக்கு எத்தனையோ தலைவர்கள் துக்கம் விசாரிக்க வந்தபோதெல்லாம், தன் குடும்பத்தின் சார்பில் ஆளை அனுப்பி அழைத்துவரச் செய்யாத பன்னீர், சசிகலா வருவது தெரிந்ததும் தன் மகள் கவிதாவை மருத்துவமனை வாசலுக்கு அனுப்பிவைத்தார்.

மறைந்த விஜயலட்சுமியும் சசிகலாவும் நன்கு அறிமுகமானவர்கள். சசிகலாவுக்கு எதிராக பன்னீர் தர்மயுத்தம் நடத்திய காலத்தில்கூட, விவேக் ஜெயராமன், கிருஷ்ணபிரியா உள்ளிட்ட சசி உறவினர்களிடம் பன்னீரின் குடும்பத்தினர் நட்புறவோடுதான் இருந்தனர். அந்த உறவுப் பிணைப்பில்தான் சசிகலாவைப் பார்த்தவுடன் கவிதா அழுதுவிட்டார்.

ஆறாவது மாடியிலிருந்த பன்னீரைச் சந்திக்க சசிகலாவும் விவேக் ஜெயராமனும் சென்றார்கள். சசிகலாவைச் சந்திக்க விருப்பமில்லாமல் பலரும் ஒதுங்கிய வேளையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மட்டும் பன்னீருடன் இருந்தது பலரது புருவத்தையும் உயர்த்தியது.

கட்சி நிர்வாகிகள் சிலர் தங்களுடன் ஒதுங்கிவிடுமாறு உதயகுமாரை அழைத்தபோது, ‘சின்னம்மா வரும்போது நானும் பன்னீர் அண்ணனுடன் இருக்கிறேன்’ என்று கூறிவிட்டார் உதயகுமார்.

டிசம்பர் 2016-ல், ‘சசிகலா முதல்வராக வேண்டும்’ என்று ஜெயலலிதா சமாதியில் மொட்டை போட்டு, ஜெயலலிதா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றியவர்தான் ஆர்.பி.உதயகுமார். தான் தர்மயுத்தம் தொடங்கியபோது, உதயகுமாரின் இந்தச் செயலால் வருத்தமடைந்ததாகக் குறிப்பிட்டிருந்தார் பன்னீர்.

இப்படி வருத்தம் ஏற்படுத்தியவரும், வருத்தம் அடைந்தவரும் ஒரே நேரத்தில் சசிகலாவை வரவேற்றது அ.தி.மு.க-வை குழப்பமடைய வைத்திருக்கிறது.

சசிகலாவைப் பார்த்தவுடன் பன்னீரும் உதயகுமாரும் எழுந்து நின்று கைகூப்பினர். பிப்ரவரி 5, 2017-ம் தேதிக்குப் பிறகு, நான்கரை வருடங்கள் கழித்து சசிகலாவை நேரில் பார்த்த பன்னீர் உடைந்து கண்ணீர் உதிர்த்துவிட்டார்.
“உண்மையான விசுவாசி!” – பதுங்கிய தலைகள்… பதற்றத்தில் எடப்பாடி

“உண்மையான விசுவாசி நீங்கதான்!” – உலுக்கிய வார்த்தைகள்

பன்னீரின் கரம்பிடித்து ஆறுதல் சொன்ன சசிகலா, விஜயலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தார்.

பன்னீரின் மூத்த மகன் ரவீந்திரநாத் குமாரிடம் ஆறுதலாகப் பேசிய சசிகலா, தான் கிளம்புவதற்கு முன்பாக பன்னீரின் தோளில் தட்டிக்கொடுத்து, ‘உண்மையான விசுவாசி நீங்கள்தான்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

இந்த வார்த்தைகள் பன்னீரை மட்டுமல்ல, சுற்றியிருந்த அனைவரையும் உலுக்கிவிட்டன. மேற்கொண்டு பன்னீரால் எதுவும் பேச முடியவில்லை. கண்களில் நீர்வழிய சசிகலாவை வழியனுப்பிவைத்தார் அவர்.

பத்து நிமிடங்கள்தான் அவர்களுக்கு இடையிலான சந்திப்பு நிகழ்ந்தது என்றாலும், சசிகலாவின் அணுகுமுறை பன்னீரின் மனநிலையை வெகுவாக பாதித்துவிட்டது” என்றனர்.

சசிகலாவின் கணவர் ம.நடராசன் மறைந்தபோது, பன்னீர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க தலைவர்கள் எவரும் இரங்கல் தெரிவிக்கவில்லை.

எடப்பாடியின் தாயார் தவசாயி அம்மாள் மறைந்தபோது சசிகலா தரப்பிலிருந்து யாரும் செல்லவில்லை.

ஆனால், பன்னீரின் மனைவி இறப்புக்கு சசிகலாவே நேரில் வந்திருக்கிறார். அ.ம.மு.க-வின் பொருளாளர் வெற்றிவேல் மறைந்தபோதுகூட, கொரோனா பரவல் காரணமாக வெளியே வராத அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தற்போது பெரியகுளத்துக்கே நேரில் சென்று பன்னீரிடம் துக்கம் விசாரித்திருக்கிறார்.

இந்தப் பெரியகுளச் சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஒருவர், “தினகரனின் மகள் திருமணம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி திருவண்ணாமலையில் நடக்கிறது.

சுபகாரிய சம்பிரதாயங்களைக்கூடப் பொருட்படுத்தாமல், துக்க நிகழ்வுக்கு தினகரன் வந்தது பன்னீரின் ஆதரவாளர்களை ஆச்சர்யப்படுத்தியது.

பெரியகுளத்துக்கு தினகரனுடன் வந்தவர்கள், ‘அ.ம.மு.க மட்டும் அ.தி.மு.க-வுடன் இணைந்து போட்டியிட்டிருந்தா 20 தொகுதிகளைக் கூடுதலா ஜெயிச்சுருக்கலாம்.

இனிமேலும் சண்டை போடாம ஒத்துமையா இருக்கணும். நமக்கு துரோகி எடப்பாடிதான்’ என்று வெளிப்படையாகவே அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் பேசினார்கள்.

இந்தக் கருத்தை அங்கேயிருந்த கட்சிக்காரர்கள் யாரும் எதிர்க்கவில்லை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். பன்னீரைக் கையிலெடுத்து, அ.தி.மு.க-வுக்குள் சலசலப்பை உருவாக்கப் பார்க்கிறது சசிகலா தரப்பு. வரும் காலத்தில், ‘கட்சி ஒற்றுமையாக இருந்தால்தான் தி.மு.க-வை எதிர்கொள்ள முடியும். மனமாச்சர்யங்களை மறந்து ஒன்றுபடுவோம்’ என்று பன்னீரே சொல்லக்கூடும். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” என்றார்.

கொடநாடு வழக்கு சிக்கல்! – கைகொடுக்குமா டெல்லி?

எடப்பாடி பழனிசாமியைக் கட்சிக்குள் ஓரங்கட்டும் வேலையைச் சத்தமில்லாமல் ஆரம்பித்திருக்கிறாராம் பன்னீர்.

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தை முன்வைத்து சாலைமறியல், கொடநாடு விவகாரத்தில் அளவாகப் பேசுவது, எடப்பாடிக்கு எதிராகப் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களைத் தன்னுடன் அரவணைப்பது… என்று கட்சிக்குள் தன்னுடைய இருப்பை நிலைநிறுத்தும் முடிவில் தெளிவாக இருக்கிறார் பன்னீர்.

பன்னீர்-எடப்பாடி, இருவரின் அரசியல் மூவ்கள் அறிந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் இருவர் நம்மிடம் பேசுகையில், “இரட்டை இலைக்குக் கையெழுத்திடும் உரிமை எடப்பாடியிடமும் பன்னீரிடமும் இருக்கிறது.

பன்னீர் அதை விட்டுத்தரத் தயாராக இல்லை. அதேநேரத்தில், சசிகலாவுக்கு எதிராகக் கம்பு சுற்றவும் அவர் தயாரில்லை.

சசிகலாவைக் கட்சிக்குள் அனுமதிக்க முடியாது என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகக் கூறியபோதும், சசிக்கு எதிராக ஆணித்தரமான வார்த்தைகள் பன்னீரிடமிருந்து வரவில்லை.

தன் சொத்துகளைப் பாதுகாத்துக்கொள்ள சசிகலாவுக்கு அ.தி.மு.க என்கிற பிடிமானம் அவசியம்தானே தவிர, கட்சியைக் கைப்பற்ற அவர் நினைக்கவில்லை.

இதனால், பன்னீருக்கு எந்தச் சிக்கலும் எழப்போவதில்லை. எடப்பாடிதான் அந்தரத்தில் நிற்கிறார்.

கொடநாடு வழக்கில் அவர் பெயரையும் சேர்க்க தி.மு.க தரப்பு ஆயத்தமாகிறது. வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்த டி.எஸ்.பி தலைமையில் புதிய டீம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒரு சாட்சியாக மாறி சசிகலா ஏதாவது சொன்னால், அது எடப்பாடிக்குச் சிக்கலாகிவிடும்.

இதனால், சசி தரப்புடன் சமாதானமாகச் செல்ல எடப்பாடித் தரப்பு முயல்கிறது. அதற்கு சசி சம்மதிக்கவில்லை.

கடைசியாக எடப்பாடி நம்பியிருப்பது டெல்லியைத்தான். மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக, பா.ஜ.க மேலிடத்தை சசிகலாவுக்கு எதிராகத் திருப்பிவிடும் வேலையைத் துரிதப்படுத்தியிருக்கிறார் அவர்” என்றனர்.

“பன்னீருக்கு ஆறுதல் கூறச் சென்ற இடத்தில், பன்னீரை ‘விசுவாசி’ என்று வெளிப்படையாகப் பாராட்டிய சசிகலா, எடப்பாடியை ‘துரோகி’ என்று மறைமுகமாகச் சொல்லிச் சென்றுவிட்டார்.

சசிகலா வீசியிருக்கும் இந்த வார்த்தை, அ.தி.மு.க-வில் குறிப்பிடத்தக்க சலனங்களை ஏற்படுத்தலாம்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மேலும், தினகரனின் மகள் கல்யாணத்தை ஒட்டி நடைபெறவிருக்கும் அடுத்தடுத்த சந்திப்புகளால், அ.தி.மு.க-வுக்குள் அனல் அதிகரிக்கலாம்!

Exit mobile version