Site icon ilakkiyainfo

உலகின் முதல் கோயில்’: மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்

 

இந்த இடம் சடங்குகளைச் செய்யும் ஒரு மையமாகவோ, அல்லது இறந்தவர்களை வழிபடும் வளாகமாகவோ இருந்திருக்க வேண்டும்

மனித நாகரிகத்தின் முந்தைய வரலாறுகளை மாற்றி எழுதும் வகையில் அமைந்திருக்கிறது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் உருவானதாகக் கருதப்படும் பழமையான கட்டுமானம்.

25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளாஸ் ஸ்மிட் ஒரு துருக்கிய மலை உச்சியை ஆய்வு செய்தபோது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்கள் மிகவும் அசாதாரணமானவை, தனித்துவம் மிக்கவை என நம்பினார்.

உர்பா நகருக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு பீடபூமியின் மேல் “கோபெக்லி டெபே” என்று துருக்கியில் அழைக்கப்படும் மலை உச்சியில் 20 க்கும் மேற்பட்ட வட்டக் கல் அடைப்புகளைக் கண்டுபிடித்தார்.

அவற்றில் மிகப்பெரியது 20 மீ விட்டம் கொண்டதாக இருந்தது. அதன் மையத்தில் 5.5 மீ உயரமுள்ள இரண்டு செதுக்கப்பட்ட தூண்கள் நின்று கொண்டிருந்தன. கோபெக்லி டெபே என்றால் பெருவயிறு மலை என்று துருக்கிய மொழியில் பொருள்.

செதுக்கப்பட்ட கல் தூண்கள் கைகள் கட்டப்பட்ட மனித உருவத்தைக் கொண்டிருந்தன. அவை 10 டன்வரை எடை கொண்டவை.

அது விலங்குகள் பழக்கப்படுத்தப்படாத காலம். பாண்டங்கள் கண்டுபிடிக்கப்படாத, உலோகக் கருவிகள் இல்லாத காலம். அப்படியொரு காலத்தில் இத்தகைய பிரமாண்டமான கட்டுமானத்தை உருவாக்குவது மக்களுக்கு மிகப்பெரிய, தொழில்நுட்ப ரீதியில் சவாலாக இருந்திருக்க வேண்டும்.

இந்த கட்டமைப்புகள் 11,000 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவை அவை தங்குவதற்காக அல்லாமல் பிற காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட மனிதகுலத்தின் பழமையான கட்டுமானமாகக் கருதப்படுகிறது.

ஒரு தசாப்த பணிகளுக்குப் பிறகு, ஷ்மிட் ஒரு முடிவுக்கு வந்தார். நான் 2007இல் உர்பாவின் பழைய நகரத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது, ​”மனிதர்கள் விவசாயம் செய்யத் தொடங்கியது,

நிரந்தர குடியிருப்புகளில் வாழத் தொடங்கியது ஆகிவற்றுக்கான அடிப்படைகளை விளக்குவதன் மூலம் மனித நாகரிகத்தின் வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கு கோபெக்லி டெபே உதவும்” என்று என்னிடம் கூறினார்.

அந்த இடத்தில் கிடைத்த கல் கருவிகள் மற்றும் பிற சான்றுகள், வட்டக் கல் அடைப்புகள், வேட்டையாடுபவர்களால் கட்டப்பட்டவை என்பதை உணர்த்தின.

அவர்கள் கடந்த பனி யுகத்திற்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த மனிதர்கள். கண்டுபிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விலங்கு எலும்புகள் காட்டு இனங்களுடையவை. பயிரிடப்பட்ட தானியங்கள் அல்லது பிற தாவரங்ககள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

ரோமானிய, பிரிட்டன் துருப்புகளை அலற விட்ட ராணி பூடிக்கா வரலாறு
தமிழ்நாடு சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லின் வயது சுமார் 3,200 ஆண்டுகள்

இந்த வேட்டைக்காரர்கள் சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வந்து கோபெக்லி டெபேவின் T-வடிவ தூண்களை கல் கருவிகளால் செதுக்கியிருக்கலாம் என்று ஸ்மிட் கருதினார். அதற்கு குன்றின் அடிவாரத்தில் உள்ள சுண்ணாம்புக் கல் பாறையை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

தூண்களை செதுக்குவதும் நகர்த்துவதும் மிகப்பெரிய பணியாக இருந்திருக்கும். தூண்கள் மலை அடிவாரத்தின் இயற்கை சுண்ணாம்பு அடுக்குகளிலிருந்து செதுக்கப்பட்டுள்ளன.

சுண்ணாம்பு கல்லின் பளபளப்பு அந்த நேரத்தில் கிடைத்த மரக் கருவிகளைக் கொண்டு வேலை செய்யத் தக்க அளவில் மென்மையாக இருந்திருக்கிறது.

மேலும் மலையின் வடிவங்கள் 0.6 மீ மற்றும் 1.5 மீ தடிமன் கொண்ட கிடைமட்ட அடுக்குகளாக இருந்ததால், பக்கங்களில் இருந்து அதிகப்படியானவற்றை வெட்டியிருக்க வேண்டுமே தவிர, கீழே இருந்து வெட்டியிருக்க வாய்ப்பில்லை என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

வேட்டைக்காரர்கள் சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வந்து கோபெக்லி டெபேவின் T-வடிவ தூண்களை கல் கருவிகளால் செதுக்கியிருக்கலாம் என்று ஸ்மிட் கருதினார்

ஒரு தூண் செதுக்கப்பட்டவுடன் அவற்றை கயிற்றில் கட்டி மலை உச்சியில் சில நூறு மீட்டர் நகர்த்தியுள்ளனர்.

அந்தப் பகுதியைச் சுற்றியிருந்த நாடோடிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இங்கு கூடி கட்டுமானப்பணிகள், விருந்து விழாக்கள் போன்றவற்றை முடித்துவிட்டு மீண்டும் கலைந்து சென்றிருக்கிலாம் என்று ஸ்மிட் கூறினார்.

இந்த இடம் சடங்குகளைச் செய்யும் ஒரு மையமாகவோ, அல்லது இறந்தவர்களை வழிபடும் வளாகமாகவோ இருந்திருக்க வேண்டும் என்றும் ஸ்மிட் கருதினார்.

அது உண்மையெனில் அது மிகப்பெரிய கண்டுபிடிப்பு. பயிரிடுவது மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் சடங்குகள், மற்றும் வழிபாடுகள் போன்றவற்றுக்கான வளாகங்கள் உருவானதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறார்கள்.

இந்தக் காலகட்டத்தை புதிய கற்காலம் என்கிறார்கள். உணவு உபரியான பிறகுதான் அவற்றைப் படைத்து வணங்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.

ஆனால் கோபெக்லி டெபே இந்த காலக் கோட்டை தலைகீழாக மாற்றுகிறது என்று ஷ்மிட் கூறினார்.

இந்த இடத்தில் கிடைத்த கற்கருவிகள் கார்பன் ஆய்வு மூலம் புதிய கற்காலத்துக்கு முந்தையவை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் முதல் அகழ்வாராய்ச்சி நடந்து முடிந்து 25 ஆண்டுகள் ஆன பிறகும் அங்கு பயிரிடப்பட்டதற்கோ, பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் இருந்ததற்கோ ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. அங்கு நிரந்தரமாக யாரும் வாழ்ந்திருக்க முடியும் என்று ஷ்மிட் கருதவில்லை. அதை ஒரு “மலையின் தேவாலயம்” என்று அவர் அழைத்தார்.

வளாக சடங்கு மற்றும் சமூகக் கூட்டம் ஆகியவை விவசாயத்துக்கு முன்னரே வந்திருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. 1,000 ஆண்டு காலத் தொடர்ச்சியில் பெரிய கற்பாறைகளைச் செதுக்குவது,

அதற்கு ஏராளமான மனிதர்களைப் பயன்படுத்துவது போன்றவை, மக்களைத் திரட்டுவதற்கும் தூண்டியிருக்கின்றன. அவர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டியிருந்திருக்கிறது. அதற்காக விவசாயமும் வீட்டு விலங்குகளும் பயன்பாட்டுக்கு வந்திருக்கலாம். அதுவே புதிய கற்கால புரட்சியைத் தொடங்கியது.

நான் அவரைச் சந்தித்த 2007-க்கு ஓராண்டு முன்பு கோபெக்லி டெப் பற்றிய தனது முதல் அறிக்கையை ஷ்மிட் முன்பு வெளியிட்டபோது கற்கால அகழ்வாராய்சியில் ஈடுபடுவோர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. ஆனாலும்அதன் பிறகு பெரிய அளவு மாற்றங்கள் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது.

2000 ஆண்டின் நடுப்பகுதியில் தனது அறிக்கையை ஷ்மிட் வெளியிட்டபோது, ஊடகங்கள் அதை மதங்களின் பிறப்பிடம் என்று அழைத்தன. ஒரு ஜெர்மன் ஊடகம் இதை ஏதேன் தோட்டத்துடன் ஒப்பிட்டது.

அதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள மக்கள் அங்கு கூடினர். அடுத்த ஒரு தசாப்தத்திற்குள், மலை உச்சி முற்றிலும் மாறிவிட்டது. 2012 ஆம் ஆண்டில் அருகிலுள்ள சிரியாவில் உள்நாட்டுப் போரால் சுற்றுலா பாதிக்கப்படும்வரை, உலகின் “முதல் கோவில்” என்று அழைக்கப்படும் கட்டுமானத்தைக் காண மக்கள் வந்து கொண்டிருந்தனர்.

எனினும் ஐந்து ஆண்டுகளில் மீண்டும் இந்த இடம் புத்துணர்வு பெற்றிருக்கிறது. இன்று, சாலைகள் மற்றும் கார் நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்கின்றன. மத்திய உர்பாவில் 2015 இல் கட்டப்பட்ட சான்லூர்பா தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இங்கிருந்து எடுக்கப்பட்ட ‘T’ வடிவத் தூண்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

2018 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பதிவேட்டில் கோபெக்லி டெபே சேர்க்கப்பட்டது. மேலும் துருக்கிய சுற்றுலாத்துறை 2019 ஆம் ஆண்டை “கோபெக்லி டெபே ஆண்டு” என்று அறிவித்தது.

“அந்த இடம் ஒரு மலை உச்சியில், ஒரு தொலைதூர இடமாக எனக்கு இன்னும் நினைவிருக்கிறது” ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளர் ஜென்ஸ் நோட்ராஃப் கூறுகிறார். அவர் 2000 ஆண்டின் நடுப்பகுதியில் அந்த இடத்தில் ஒரு மாணவராக வேலை செய்யத் தொடங்கினார். “இது முற்றிலும் மாறிவிட்டது.” என்கிறார்.

2014 இல் கோபெக்லி டெபே பற்றிய உலகுக்கு அறிவித்த ஆராய்ச்சியாளரான ஸ்மிட் இறந்துவிட்டார். தூசி நிறைந்த மலை உச்சி இப்போது சுற்றுலாத் தலமாக மாறியிருப்பதை அவர் காணவில்லை. ஆனால் அவரது கண்டுபிடிப்புகள் புதிய கற்கால மாற்றத்தில் உலகளாவிய ஆர்வத்தைத் தூண்டின.

இப்போது ஷ்மிட்டைத் தொடர்ந்து லீ கிளாரின் தலைமையில் அங்கு அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அவர் முக்கியக் கட்டுமானத்தின் அடியில் பல மீட்டர்கள் தோண்டி ஆய்வு நடத்தியிருக்கிறார்.

கிளார் கண்டுபிடித்தவை வரலாற்றுக்கு முந்தைய காலத்தை மீண்டும் மாற்றி எழுதலாம். அவரது கண்டுபிடிப்பு அங்கிருந்தது ஒரு கோயில் மட்டுமல்ல, ஒரு குடியிருப்புப் பகுதியைச் சுற்றி கோயில் அமைந்திருப்பதாகக் கூறுகிறது.

மழைநீரைச் சேகரிப்பதற்கான ஒரு பெரிய நீர்த்தேக்கம் மற்றும் கால்வாய்கள் போன்றவை இருந்திருக்கின்றன. உணவு சமைப்பதற்கும் பீர் தயாரிப்பதற்கும் தானியங்களை பதப்படுத்துவதற்குமான ஆயிரக்கணக்கான அரைக்கும் கருவிகளை கிளார் தலைமையிலான குழு கண்டறிந்தது.

“கோபெக்லி டெபே இன்னும் ஒரு தனித்துவமான, சிறப்பான இடம். ஆயினும் மற்ற தளங்களில் இருந்து நமக்குக் கிடைத்த தகவல்களுடன் இது நன்றாகப் பொருந்துகிறது” என்று கிளேர் கூறினார். “இது நிரந்தர மக்கள் குடியேற்றத்தைக் கொண்ட இடமாகும். இது இந்த இடத்தைப் பற்றிய இதுவரையிலான புரிதலை மாற்றியிருக்கிறது” என்கிறார் கிளார்.

இதற்கிடையில், உர்பாவைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பணிபுரியும் துருக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறைந்தது மலை உச்சியில் அமைந்த இதேபோன்ற தூண்களைக் கொண்ட பல இடங்கள் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடித்தனர்.

“இது ஒரு தனித்த கோவில் அல்ல” என்று கூறுகிறார் ஆஸ்திரிய தொல்பொருள் நிறுவன ஆராய்ச்சியாளர் பார்பரா ஹோரெஸ். இவர் புதிய கற்கால ஆய்வில் ஈடுபட்டு வரும் நிபுணர்.”இந்தக் கண்டுபிடிப்புகள் கதையை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது” என்கிறார் அவர்.

துருக்கிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் மெஹ்மத் நூரி எர்சோய் இன்னும் ஒருபடி மேலேபோய், இந்த பகுதியை “தென்கிழக்கு துருக்கியின் பிரமிடுகள்” என்று குறிப்பிடலாம் என கூறினார்.

சுற்றியுள்ள பிராந்தியத்திலிருந்து கிடைக்கும் புதிய சான்றுகள் மூலம், மற்ற இடங்களில் உள்ள மக்கள் விலங்குகளை பழக்கப்படுத்துவதற்கும், பயிரிடுவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. வளர்க்கப்பட்ட விலங்குகள் மற்றும் தாவரங்களை பரிசோதிப்பதை காட்டுகிறது.

தளத்தின் கல் சிற்பங்கள் ஒரு முக்கியமான துப்பு என்று கிளேர் வாதிடுகிறார். கொபெக்லி டெபேவின் தூண்கள் மற்றும் சுவர்களில் உள்ள நரி, சிறுத்தை, பாம்பு மற்றும் கழுகுகளின் சிற்பங்கள், “நாம் வழக்கமாகப் பார்க்கும் விலங்குகள் அல்ல” என்று அவர் கூறுகிறார். “அவை வெறும் படங்கள் அல்ல. அவை குழுக்களை ஒன்றாக வைத்திருப்பதற்கும், பொதுவான அடையாளத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு வகையான விவரிப்புகள்” என்கிறார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன்முதலில் இந்தப் பகுதிக்கு வந்தபோது, ஒரு தொலைவின் உணர்வு ஏற்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. Stonehenge எனப்படும் இங்கிலாந்தில் உள்ள கல்வட்டத்துக்கு 6,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது கோபெக்லி டெபே. அதன் சிற்பங்களின் உண்மையான பொருள், ஒரு காலத்தில் அங்கு மக்கள் வாழ்ந்த உலகத்தைப் போன்றே, புரிந்துகொள்ள இயலாதது.

இதுதான் மக்களை ஈர்க்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான மக்கள் கேள்விப்படாத இடத்தில் இப்போது ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து ஆச்சரியப்படுகிறார்கள். அது ஏன் கட்டப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து முயற்சி செய்வார்கள். ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இந்த இடத்தைப் பற்றி நாம் ஏற்கெனவே அறிந்தவற்றை மாற்றக்கூடியவையாக இருக்கின்றன.

“புதிய கண்டுபிடிப்புகள் கிளாஸ் ஸ்மிட்டின் ஆய்வறிக்கையை அழிக்கவில்லை; மாறாக அவை அவரது தோள்களில் நிற்கின்றன” என்று கூறினார் ஹோரெஸ்.

“என் பார்வையில் பெருமளவு அறிவு பெறப்பட்டிருக்கிறது. அதனால் விளக்கம் மாறுகிறது. ஆனால் அதுதான் அறிவியல்”

 

Exit mobile version