Site icon ilakkiyainfo

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் எங்களை….? -வடபுலத்தான்

கைதடியில் இருக்கும் வட மாகாண சபையின் அலுவலகத்தில ஆளுநரை Vikki Governer-1மாற்றுவோம் என்று போர்க்கொடி ஏந்திய முதல்வர் ‘எங்கள் தங்கம் சிவசிவா’ விக்கியர், வேம்படி பாடசாலையில் ஆதே ஆளுனருடன் கைகுலுக்கி, ஆடிக்கூழைக் கூடிக்குடிச்சிருக்கிறார்.

இதைப்பார்த்த எனக்குச் சிரிக்கிறதா? சந்தோசப்படுகிறதா?

அழுகிறதா? நம்புகிறதா? இதை உண்மையெண்டு நம்பலாமா? எண்டு ஏகப்பட்ட குழப்பம்.

இது உண்மையெண்டால் இதுக்கு முதல் இந்த ஆளுநர் வேண்டாம் எண்டு முதல்வரும் கூட்டமைப்பினர் சொன்னதெல்லாம் பொய்யா?

அப்பிடியில்லை அது உண்மையெண்டால், இதெல்லாம் – இந்தக் கொஞ்சிக் குலாவுகிறதும் கூடிக்கூழ் குடிக்கிறதும் பொய்யா? நடிப்பா?

அந்தோனியாரே… மாவிட்டபுரக்கந்தனே… எனக்கொண்டும் விளங்குதில்லையே… தலைசுத்துதே…. உங்களுக்கு ஏதாவது விளங்குதா?

ஆளுநரைக் கண்டவுடனே அவனவன் என்ன மாதிரிக் குழைஞ்சாங்கள் எண்டு தெரியுமோ….!

அப்ப அங்க நிண்ட அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களை ஒருக்கால் கேட்டுப்பாருங்கோ… அங்க என்ன நடந்தது எண்டு தெரியும்.

எல்லாருக்கும் என்ன நடக்குது எண்டு ஒரே வியப்பு.

‘எங்கள் தங்கம் சிவசிவா’ விக்கியர் இதில ஒரு எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆள்.

அவர் தமிழ்த்தலைகளைக் கண்டால் ஒரு மாதிரியும் சிங்களத் தலைகளைக்கண்டால் இன்னொரு மாதிரியும் விளையாடிறதில படு கில்லாடி.

அரசியலுக்கு அவர் புதிசெண்டாலும் இந்த நடிப்பில ஆள் வலு கெட்டிக்காரன்.

மகிந்தரைக்கண்டால் ஒரு குளுகுளு சிரிப்பும் பவ்வியமும்.

ஆளுநரைக் கண்டால் கட்டிப்பிடி வைத்தியம்.

சம்மந்தியான வாசுதேச நாணயக்காரவோட கைகோர்ப்பும் கலகலப்பும்.

இதைவிட மந்திரிமார், இராணுவத்தளபதிகள் எண்டு பெரியதலைக் கண்டால் அட்டகாசச் சிரிப்பும் கும்மாளமும்.

இதைப்போலத்தான் மாகாணசபையிலயும் பாராளுமன்றத்திலயும் இருக்கிற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்ரை கனபேர் இரட்டை முகத்தோட விளையாடிக்கொண்டிருக்கினம். Vikki Governer-2

ஆனால், இது சுத்தமான மோசடி. கள்ளத்தனம். சுத்த ஏமாற்று எண்டுதான் சொல்லுவன்.

இந்த ஆளுநரை மீண்டும் ஜனாதிபதி நியமிச்சதுக்கு நாலு நாளைக்கு முதல் கடுமையாக எதிர்த்த ஆட்கள், இப்ப ஆளுனரின் காலடியில் விழுந்து கிடக்கினம்.

சரி, இது ஒரு நல்ல சகுனம் எண்டு எடுத்துக் கொள்ளலாம் எண்டால், அப்பிடி ஆளுநரோட இணைஞ்சு சனங்களுக்கு நன்மை செய்யிறதுக்கு இவை ஒரு நாளும் முன்னுக்கு வராயினம்.

தங்கட தேவைக்கும் சந்தோசத்துக்கும் எந்தப் பேயுடனும் கூட்டுச் சேருகிற சாத்தான்கள் எண்டு இவையைப்பற்றி கனகண்ணை சொன்னதில தப்பே இல்லை.

இல்லையெண்டால், ஆளுனருடன் சேர்ந்து ஆடிக்கூழ் காய்ச்சும் வடக்கு மாகாண முதல்வர் இதே ஆளுநருடன் இணைந்து வட மாகாண சபையை ஏன் செயற்படுத்த மறுக்கிறார்?

ஆளுநருடன் சேர்ந்து கட்டிடங்களைத் திறக்க முண்டியடிக்கிற ஆட்கள் ஆளுநருடன் சேர்ந்து நிர்வாக நடவடிக்கைகளைச் சீராக நடத்திறதுக்குப் பின்னுக்கு நிற்கிறது ஏன்?

அரசாங்கம் சொன்னதையெல்லாம் நிறைவேற்றவில்லை.

ஜனாதிபதி தந்த வாக்குறுதிகளை எல்லாம் மீறிவிட்டார் எண்டு சொல்லிற இவை தாங்கள் அரசாங்கத்துக்குக் குடுத்த வாக்குறுதிகளை எல்லாம் ஒழுங்காக நிறைவேற்றியிருக்கினமோ!

சனங்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய வாக்குறுதிகளில பாதியைக்கூட ஒப்பேற்றியிருக்கினமோ…!

சும்மா போங்கய்யா…

இந்த நடிப்புக் கோமாளிகளின்ரை கூத்தையும் கோமாளித்தனத்தையும் கண்டு கொண்டு இன்னும் எத்தினைகாலத்துக்குத்தான் இப்பிடியே இருக்கப்போறம்?

Exit mobile version