ஒரே நாளில் 793 மரணம்… இத்தாலியைக் கொரோனா சூறையாடக் காரணம் என்ன?

இத்தாலியின் சீனத் தொடர்புதான் காரணமா?
இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 793 பேரை பலிவாங்கியிருக்கிறது கொரோனா. மேலும் 6,557 பேருக்கு கொரோனா பரவியிருப்பதாக அந்த நாடு உறுதிப்படுத்தியுள்ளது.
தீயைவிட வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த வைரஸ், முதலில் மையம் கொண்டது என்னவோ சீனாவில்தான் என்றாலும், சீனாவின் புதிய நோய்பாதிப்புகள் எண்ணிக்கைத் தற்போது ஒற்றை இலக்கத்தைத் தொட்டிருக்கிறது.
ஆனால், ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நோய்த்தொற்று நினைத்துப் பார்க்க முடியாத வகையில் பரவிவருகிறது.
சீனாவில் உருவான நோய் ஐரோப்பாவை எப்படிச் சூறையாடியது? சீனாவுக்கும் இத்தாலிக்கும் என்ன தொடர்பு?
இத்தாலி இத்தனை மோசமான சூழலை எதிர்கொள்ளக் காரணம் அவர்களுடைய சமூக சுகாதாரத் திட்டம்தான் எனக் குற்றம்சாட்டுகிறார்கள் சிலர்.
அவசரகாலங்களில் இலவச சிகிச்சை என்பது ஐரோப்பிய மருத்துவமனைகள் முழுவதும் இருக்கும் மருத்துவத் திட்டம். இது ஐரோப்பாவில் தங்கியிருக்கும் எந்த நாட்டுக் குடிமக்களுக்கும் பொருந்தும்.
இலவசமாகச் சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள ஒரு சுகாதாரத்துறையால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போனதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்றவை ஐரோப்பாவின் சொகுசு நாடுகள். பெரும்பாலான முதியவர்கள் தங்களது ரிட்டையர்மென்ட் காலத்துக்காகத் தேர்ந்தெடுக்கும் நாடு என இத்தாலியைக் குறிப்பிடுவார்கள்.
உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் லம்போர்கினி, ஃபெராரி, ஃபியட், குஸ்ஸி உள்ளிட்ட பல சொகுசு வாகனகங்கள் இத்தாலியில்தான் உற்பத்தியாகின்றன.
லம்போர்கினி ரக கார்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு சீனா. 2018-ல் மட்டும் 674.8 மில்லியன் டாலர் மதிப்பிலான கார்களை இத்தாலியிடமிருந்து சீனா இறக்குமதி செய்தது.
ஜெர்மனியிடமிருந்து 13.9 பில்லியன் டாலர் மதிப்பிலான கார்களை இறக்குமதி செய்தது. சீனாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான வர்த்தகத் தொடர்புக்கு மேலே குறிப்பிட்ட டேட்டா சாட்சி.
இவை தவிர, ஐரோப்பா தனது 97 சதவிகித உற்பத்திப்பொருள்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. உலகின் அதிக மக்கள்தொகை உடைய நாடான சீனாவின் 24 சதவிகித மாணவர்கள் வெளிநாடுகளில்தான் உயர்கல்வியைப் படிக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பாக யுனெஸ்கோ சர்வேயின்படி சீனாவிலிருந்து இத்தாலிக்கு 7,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று படிக்கிறார்கள். சீனாவிலிருந்து ஜெர்மனிக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 16,000-த்தை எட்டும்.
மேலே குறிப்பிட்ட டேட்டாவுக்கும் இத்தாலியில் பரவிவரும் நோய்த்தொற்றுக்கும் என்ன தொடர்பு? இத்தாலியில் முதுகலை மேலாண்மை படித்துக்கொண்டிருக்கும் மாணவர் சித்தார்த் இதுதொடர்பாக நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்தார்.
“சீனாவின் புதுவருடம் 25 ஜனவரி 2020 அன்று தொடங்கியது. அன்றைய தினம் உலகம் முழுவதும் இருக்கும் சீனர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வார்கள்.
அந்தச் சமயம் சீனாவில் மட்டுமே நோய்த்தொற்று இருந்ததால் மற்ற உலக நாடுகள் கொரோனா குறித்த பாதுகாப்பில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.
புதுவருடக் கொண்டாட்டத்துக்காகத் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பல சீனர்கள் எந்த ஏர்போர்ட்களிலும் பரிசோதனை செய்யப்படவில்லை. இத்தாலியில் கொரோனா பாதிப்பும் அதற்குப் பிறகுதான் உறுதிசெய்யப்பட்டது.
அபெர்ரித்திவோ அலட்சியம்
இருந்தாலும் இத்தாலியில் அதிவேகமாகப் கொரோனா பரவுவதற்குக் காரணம் அந்த நாட்டு மக்கள் அதிகம் சமூகம் சார்ந்து இயங்குபவர்கள்.
மாலை 4 மணிக்கு மேல் உணவு உண்பதற்கு முன்பு மக்கள் பொது இடங்களில் கூடி அனைவரும் மது அருந்துவார்கள். இதற்கு அபெர்ரித்திவோ (Apreritivo) என்று பெயர்.
இது அவர்களது வழக்கம். நோய் பரவலுக்குப் பிறகும் கூட அவர்கள் இந்த வழக்கத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. கொரோனா வேகமாகப் பரவியதற்கு இது முக்கிய காரணம்” என்கிறார்.
நோய்ப்பரவலின் தொடக்கத்தில் இருந்த அலட்சியம் இன்று ஒரு சொகுசு நகரத்தையே சின்னாபின்னமாக்கிக்கொண்டிருக்கிறது.
கட்டுக்கு அடங்காமல் போகும் மரணத்தைத் தடுக்க சீனாவிலிருந்து மருத்துவர்களைத் தற்போது வரவழைத்துள்ளது இத்தாலி. நோய்ப் பாதித்தவர்களில் யாருக்குப் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிற அடிப்படையில் அவர்களுக்கான சிகிச்சையை அளிக்க அந்த நாட்டு மருத்துவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதனால் அங்கே 80 வயதுக்கு மேற்பட்ட கொரோனாநோய் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு சிகிச்சை தரப்படுவதில்லை என்கிற செய்தியும் பரவிவருகிறது.
வெறும் கைகழுவுதல் மட்டுமே நோய் பரவலைத் தடுக்காது. சமூகத்திலிருந்து சுயவிலகல்தான் பரவல் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் என்பதை இத்தாலியின் அச்சமூட்டும் இழப்பு எண்ணிக்கை நமக்கு உணர்த்துகிறது.
சீனாவுக்கு அடுத்து உலகின் அதிக மக்கள்தொகை உடைய தேசம் நாம். சுய ஊரடங்கில் இருப்போம், சக மக்களைக் காப்போம்!
There are no comments at the moment, do you want to add one?
Write a comment