Site icon ilakkiyainfo

கடல் நீரில் விளக்கேற்றும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசிப் பொங்கல் விழா – (09.06.2014 -வீடியோ)

இலங்கையின் வடபால் முல்லையும் மருதமும் நெய்தலும் ஒருங்கே சூழப்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை பதியில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் தாய்த் தெய்வமான கண்ணகி அம்மனின் வைகாசி விசாக பொங்கல் விழா இன்றாகும்.

“அன்னை அவள் முற்றம் ஏறி, அவள் பிள்ளைகள் ஒன்று கூடி பொங்கலிட்டு அன்னைக்கும் அமுது செய்து தாமும் அருள்பெற்று வீடு திரும்பும் புனித நன்னாள் இது”

“வைகாசி பெளர்ணமியில் கடல் நீரில் விளக்கெரியும்” வரலாற்று புதுமை மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வருடாந்த பொங்கல் விழா பாக்குதண்டல் என்ற பாரம்பரிய நிகழ்வுடன் ஆரம்பமாகும்.

வற்றாப்பளை கண்ணகி என்றதும் நினைவுக்கு வருவது “கடல் தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்” இந்த அதிசயத்துக்கு சொந்தக்காரி அண்டமெல்லாம் ஆள்கின்ற ஆதி பராசக்தியின் சொரூபமாய் வீற்றிருக்கும் அன்னையவளே.

நந்திக்கடலோரத்தில் வீற்றிருக்கும் அன்னையவள் வாசலில் கடல் தண்ணீரில் விளக்கெரியும் அதிசயம், காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும்.

தண்ணீரில் விளக்கெரிவது எப்படி…? என்ற கேள்விக்கு அன்னையின் அருள் மழையே என்பதை தவிர விடையேதும் இல்லை.

வைகாசிப் பொங்கல் விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பதாகவே பொங்கல் நாளில் கண்ணகி அம்மனுக்கு விளக்கு ஏற்றுவதற்கான கடல் நீரை எடுத்து வருவதற்கான சடங்குகள் ஆரம்பித்துவிடும்.

வைகாசி மாதத்து இரண்டாவது திங்கட்கிழமை தீர்த்தம் எடுத்தல் என்னும் புனிதமான நிகழ்வு இடம்பெறும்.

வற்றாப்பளை கண்ணகியை வழி வழியாக வைத்து வழிபட்டு தொண்டு செய்பவர்களே முழு நாளும் உபவாசமிருந்து விளக்கு ஏற்றுவதற்கான கடல் நீரை எடுக்கும் புனித கருமத்தை செய்வர்.
விளக்கு ஏற்றுவதற்கான கடல் நீரை “தீர்த்தம்” என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.

சிலப்பதிகாரத்தின், சிலம்பு கூறல் பாட்டிலே வற்றாப்பளைக் கண்ணகிக்கும், முள்ளியவளை என்னும் ஊரில் உள்ள காட்டாவிநாயகர் ஆலயத்திற்குமுள்ள தொடர்பு கூறப்பட்டுள்ளது.

“வைகாசித் திங்களில் வருவேன் ஒரு கிழமை காட்டா விநாயகர் கோவிலுக்கே” என்ற அந்த பாடல் வரிக்கு அமைவாக மரபு முறைப்படி தீர்த்தமெடுக்கும் புனிதப் பணி இடம்பெறுகிறது.

ஆரம்ப காலங்களில் நந்திக் கடலிலேயே விளக்கு ஏற்றுவதற்கான கடல் நீர் எடுக்கப்பட்டது.

பிற்காலத்தில் நந்திக்கடலில் தண்ணீர் குறைந்தமையால் முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தை எனும் ஊரிலுள்ள தீர்த்தக்கரை எனுமிடத்திலுள்ள கடலிலேயே தீபம் ஏற்றுவதற்கான கடல் நீர் எடுக்கப்படுகிறது.

தீர்த்தமெடுப்பவர் தீர்த்தமெடுக்கச் செல்லுமுன் பல கிரியைகளைச் செய்ய வேண்டும். முதலில் தீர்த்தமெடுப்பவருடைய வாய் வெள்ளைத் துணியால் கட்டப்படும்.

இவர் மெளனமாகத் தீர்த்தக்குடத்தினைத் தோளில் வைத்தவாறு, சிலாவத்தை கிராமத்திலுள்ள தீர்த்தக்கரை கடலை நோக்கி சம்பிரதாயபூர்வமாக பறை முழங்க அழைத்துச் செல்லப்படுவார்.

அங்கு தீர்த்தக்கரையில் அமைக்கப்பட்டுள்ள அம்மன் கோயிலில் மரபு முறைப்படி பூசைகள் நடைபெறும். முதலில் தீர்த்தக் குடத்திற்கான பூசை நடைபெறும். தொடர்ந்து கடலிலே தீர்த்தமெடுக்கும் நிகழ்ச்சி ஆரம்பமாகும்.

தீர்த்தக் குடத்தைத் தோளில் தாங்கியவரை மெய்சிலிர்க்கும் பறை முழக்கத்துடன் மணிகள் ஒலிக்க தீர்த்தக்கரைக்கு அழைத்துச் செல்வர். அங்கு தீர்த்தக் குடத்திற்கும், கடலுக்கும் தீபாராதனை செய்யப்படும்.

இவை முடிவுற்றதும் தீர்த்தம் எடுப்பவரை இருவர் இருபக்கக் கைகளிலும் பிடித்துக்கொண்டு, இடுப்பளவு ஆழமுள்ள பகுதிக்கு அழைத்துச்செல்வர்.

அத்தருணத்தில் கடல் கொந்தளித்துப் பேரலைகள் எழும்பும். இவ்வாறு அலை உயர்ந்து பேரலையாக வரும் பொழுது தீர்த்தக்குடம் வைத்திருப்பவரை, அருகிலுள்ள இருவரும் ஒரு சில கணம் நீருள் அமிழ்த்திப் பிடிப்பர்.

அவ்வேளையில் தீர்த்தக் குடம் நிரம்பியதும், மீண்டும் அவரைக் கரையிலுள்ள கோவிலுக்கு அழைத்து வருவர். இங்கு தீர்த்தக்குடத்துக்கான பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

பின்னர், தீர்த்தக்குடத்தைத் தோளில் ஏந்தியவாறு தீர்த்த யாத்திரை மீண்டும் ஆரம்பமாகும். இவ்யாத்திரை வரும் வழியெங்கும், பந்தல்கள் அமைத்து நிறைகுடம் வைத்துத், தேங்காய் உடைத்து அடியவர்களால் வரவேற்பு அளிக்கப்படும்.

இவ் யாத்திரை வரும் வழியில் சிலாவத்தைக் கண்ணகி, ஊற்றங்கரை விநாயகர் ஆலயம் ஆகியவற்றையும் தரிசித்து யாத்திரை இறுதியில் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தை வந்தடையும்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடத்திலிருக்கும் தீர்த்தம் புதிய மண்பானையில் ஊற்றப்பட்டு, அதன் வாய்ப்பகுதி வெள்ளைத் துணியால் கட்டப்பட்டு, மத்தியில் துவாரம் இடப்படும். அத்துவாரத்தினூடாகத் திரியிட்டு முதற் கடவுளான விநாயகனுக்கு தீபம் ஏற்றப்படும்.

இவ்வாறு ஒருவார காலத்திற்கு முள்ளியவளை காட்டா விநாயகர் இடம்பெறும் கிரிகைகள், வழிபாடுகளைத் தொடர்ந்து தீர்த்தம், வைகாசி விசாக பொங்கல் தினத்தன்று வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு அங்கு எஞ்சிய கடல் நீரில் விளக்கு ஏற்றப்படும்.

இப்பொங்கல் காலத்தில் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயிலில், ‘வளந்து நேருதல்’ என்னும் நிகழ்வு நடைபெறும். பூசாரியார் வளந்து எனப்படும் பிரதான பொங்கல் பானையை ஏந்தி கலை ஆடுவார்.

பறைகள், சங்குகள், மணிகள் ஒலிக்க நிகழும் இக் கலை ஆட்டத்தின் இறுதி நிலையில் அருள் உச்சம் பெற்றவராகி பூசாரியார் வளந்தினை தூக்கி எறிந்து ஏந்தி ஆடுவார், ஏந்துவார் பின்னர் அடுப்பில் வளந்தினை வைப்பார்.

இதனையடுத்து பொங்கலிடும் அரிசியை ஏந்தி ஆடுவார். கையில் ஏந்தியாடும் அரிசியையும் அள்ளி விண் நோக்கி எறிவார். இவ்வாறு எறியப்படும் அரிசிகள் நிலத்தில் விழுவதில்லை. அத்தனையும் வளந்து பானைக்குள்ளே சேர்ந்துவிடும்.

அத்தோடு வளந்துப் பானையில் சூத்திரதாரணம் செய்யப்பட்டு, பானையின் கழுத்தில் வெற்றிலை கட்டப்பட்டிருக்கும். இவை பொங்கலுக்காக எரிக்கப்படும் நெருப்பில் கூட எரிந்து சாம்பராகாது, கட்டியபடியே காணப்படும். இது பார்ப்போரை மெய்சிலிர்க்கவைக்கும்.

வைகாசி விசாக பொங்கல் உற்சவ காலத்தில் கண்ணகி வரலாற்றை சித்தரிக்கும் பல கூத்துக்களும் கலை நிகழ்வுகளும் இடம்பெறுவதுடன், இலட்சக்கணக்கான அடியவர்கள் காவடி, கரகம், பாற்குடம், தீச்சட்டி ஏந்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதும் சிறப்பம்சமாகும்.

மதுரையை எரித்த கண்ணகி தெற்கு நோக்கி சென்றாள் என்றும் அவள் வரும் வழியில் இருந்து இழைப்பாறி சென்ற இடங்களில் பத்தாவது இடமே நந்திக்கடற்கரை ஓரம். இதனால் பத்தாப்பளை (பத்தாவது பளை) என அழைக்கப்பட்ட இந்த இடம் பிற்காலத்தில் மருவி பற்றாப்பளை என்றும் இறுதியில் வற்றாப்பளை என்றும் பெயர் பெற்றதாக ஒரு ஐதீகம் உண்டு.

மூதாட்டி ரூபத்தில், நந்திக்கடல் ஓரத்தை வந்தடைந்த கண்ணகி அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் தனக்கு பசிப்பதாக கூறி பொங்கல் ஆக்கி தருமாறு கேட்டதோடு, பொழுது சாய்வதனால் விளக்கு ஏற்றித்தருமாறும் கேட்டுள்ளார்.

“விளக்கு ஏற்ற நெய் ஏதும் இல்லையே” என்ற அச்சிறார்களிடம் கடல் நீரில் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூற அவ்வாறே செய்த சிறுவர்கள் கடல் நீரில் விளக்கு எரியும் அற்புதம் கண்டு மெய்சிலிர்த்து நின்றனர்.

இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையிலேயே வைகாசிப் பொங்கல், கடல் நீரில் விளக்கெரிக்கும் வரலாற்று அற்புதம் என்பன தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

மேலும், வன்னி மன்னர்களால் பரிபாலிக்கப்பட்ட இவ்வாலயத்தை போர்த்துக்கேயர் காலத்தில் போர்த்துக்கேய தளபதியாகிய நெவில் என்பவன் அழிக்க முற்பட்ட போது ஆலயத்தில் நின்ற பன்னிச்சை மரம் தனது காய்களை வீசி ஆலயத்தை அழிக்க விடாது போர்த்துக்கேயரை விரட்டியடித்தது என்றும் ஒரு வரலாறு உண்டு.

இவ்வற்புத வரலாற்றை ஆலயத்தில் இன்றும் படிக்கப்படும் பன்னிச்சை ஆடிய பாடற்சிந்து மூலமும் ஆலயத்திலுள்ள சிற்பங்கள் மூலமும் அறிய முடிகிறது.

இவ்வாறு, ஏராளமான அற்புதங்களுக்கு சொந்தக்காரியான வற்றாப்பளை கண்ணகி அம்மனை பல இலட்சக்கணக்கான தமிழ், சிங்கள மக்கள் மிகுந்த பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.

Exit mobile version