Site icon ilakkiyainfo

கனடாவிலுள்ள புலிகளின் முக்கியஸ்தரை “இன்ரபோல்” உதவியுடன் இலங்கை கொண்டுவர நடவடிக்கை

புலிகளுக்கு மூன்று ஆயுதக் கப்பல்களை கொண்டுவந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வவுனியா மேல் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கனகராஜா ரவிஷங்கர் என்பவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போலின்) உதவி நாடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் நேற்று தெரிவித்தது.

கனடாவில் தற்போது வசித்து வரும் இவரை கைது செய்வதற்கு ‘Red Alert’ அறிவித்தலும் பொலிஸ் தலை மையகம் விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவி த்தார்.

1373 ஆவது ஐ.நா. உடன்படிக்கையின் படி பயங்கரவாதிகள் பட்டியலிலும் ரவி ஷங்கரின் பெயர் உட்படுத்தப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மத்திய வங்கி தாக்குதல் தொடர்பான வழக்கில் சந்தேக நபர் இல்லாமலேயே பிரபாகரன் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது போன்று சந்தேக நபர் கனடாவில் இருக்கும் நிலையில் அவருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் கடற்புலி பிரிவில் இணைந்துகொண்ட இவர் புலிகளின் கப்பல் கப்டனாக செயலாற்றியுள்ளார். 1971 ஆம் ஆண்டு யாழ். வல்வெட்டித் துறையில் பிறந்தவர். 1992 இல் புலிகள் இயக்கத்தில் இணைந்து வெளிநாட்டில் பயிற்சிகள் பெற்றார்.

விசேடமாக கப்பலில் கப்டனாக கடமையாற்றுவது தொடர்பில் இவர் வெளிநாட்டில் விசேட பயிற்சி பெற்றுள்ளார்.

1996 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் வடகொரியாவிலிருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் எறிகணைகள் அடங்கிய ஆயுதக் கப்பலொன்றை கொண்டு வந்துள்ளார்.

இந்தக் கப்பல் கிழக்கு பகுதியில் இறக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் எறிகணைகள். ஆயுதங்கள் அடங்கிய மூன்றாவது கப்பலையும் கொண்டு வந்துள்ளார்.

1996, 97, 99 காலப் பகுதியில் மூன்று ஆயுதக் கப்பலை கொண்டுவந்த இவர் புலிகள் சார்பில் சர்வதேச கப்பல் வலையமைப்புக்குள் தன்னை உட்புகுத்திக் கொண்டார்.

2005 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்குத் தப்பிச் சென்றுள்ள இவருக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. இதற்கமையவே இவருக்கு மூன்று வழக்குகளுக்கும் தலா 10 வருடம் வீதம் 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் இன்றைய நிலையில் அதனை குழப்புவதற்கு அல்லது மீண்டும் பயங்கரவாதத்தை கட்டியெழுப்புவதற்கு உள்நாட்டில் மட்டுமல்ல உலகில் எந்த மூலையில் இருந்து செயற்பட்டாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையில் தண்டனைக்கு உட்படுத்தப்படு வார்கள்.

மீண்டும் புலிகள் இயக்கத்தை உருவாக்க கடந்த காலங்களில் கோபி, அப்பன் போன்றோர் செயற்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாம் இதுவரை 5 பெண்கள் உட்பட 51 நபர்கள் கைதாகியிருக்கின்றனர்.

மார்ச் 8 ஆம் திகதிக்கு பின்னரே இவர்கள் இவ்வாறு கைதானார்கள். மார்ச் 8 ஆம் திகதிக்கு முன்னதாக சுமார் 110 சந்தேக நபர்கள் கைதுசெய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.

தற்போது கனடாவில் வதியும் கனகராஜா ரவிஷங்கரை கைதுசெய்ய இன்டர்போலின் உதவி பெறப்பட்டுள்ளதுடன் விரைவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்படுவார்.

இதேபோன்று பயங்கரவாதத்தை மீண்டும் தோற்றுவித்து நாட்டை குழப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும்.

இந்த வகையில் ஹொரன ரைகம் தோட்டத்தில் சுப்பிரமணியம் ரவிச்சந்திரன் என்பவர் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.2004 ஆம் ஆண்டு முதல் ரைகம் தோட் டத்தில் வதிபவராக தன்னை அடையாளப் படுத்துவதற்காக கிராம சேவருக்கு 500 ரூபா லஞ்சம் கொடுத்து ஆவணங்களை தயாரித்துள்ளார்.

தற்போது அந்த கிராமசேவகர் தலைமறைவாகியுள்ளார். ஓய்வுபெற்றுள்ள அவரை பொலிஸார் விரைவில் கைது செய்வார்கள்.

மேலும் புலிகளின் கடற்புலிகள் பிரிவில் புலிகளின் கடற்படையின் படகுகளை புதுப்பிக்கும் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றிய திருநாவுக்கரசு பிரதீபன் என்பவரும் கடந்த 19 ஆம் திகதி விமான நிலையத்தில் கைதானார் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Exit mobile version