ilakkiyainfo

கமல் 25 : பிறந்தநாள் ஸ்பெஷல்

கமல் 25 : பிறந்தநாள் ஸ்பெஷல்
November 08
08:10 2016

 

‛அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே…’ என அப்பாவி குழந்தையாய் ஏவிஎம்.,-ன் ‛களத்தூர் கண்ணம்மா’வில் அறிமுகமாகி பல சாதனைகள் செய்து இன்று தமிழ் சினிமாவின் விஸ்வரூபமாய் வளர்ந்து இருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

அவருக்கு இன்று(நவ, 7-ம் தேதி) 63வது பிறந்தநாள், இதையொட்டி கமலின் 25 சுவாரஸ்யமான விஷயங்களை இங்கு பார்ப்போம்….

1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமல்ஹாசன். சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி இவருடைய உடன் பிறந்தவர்கள். நான்கு குழந்தைகளில், கமல்தான் கடைக்குட்டி.

2. 1960 ல் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமானபோது, கமலுக்கு வயது ஆறு. அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்றார்.

பின்னர் குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த கமல், இளைஞனான பிறகு, 1970 ல் வெளியான மாணவன் என்ற படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றினார்.

3. கமலுக்கு திருப்புமுனையாக அமைந்தது 1973ல் வெளியான கே.பாலச்சந்தரின் அரங்கேற்றம் திரைப்படம்தான். அதன் பிறகு பல படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்தார்.

1974ல் வெளிவந்த, நான் அவன் இல்லை படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசிப் படம். சொல்லத்தான் நினைக்கிறன், குமாஸ்தாவின் மகள் போன்ற படங்களில் நெகட்டிவ்வான வேடங்களில் நடித்தார்.

4. தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமாகிய முதல் படம், கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய அபூர்வ ராகங்கள். இப்படத்திற்காக, அவருக்கு ஃபிலிம்ஃபேர் விருதும், அபூர்வ ராகங்கள் படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

5. 1970களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். 16 வயதினிலே, மூன்று முடிச்சு, அவர்கள், இளமை ஊஞ்சல் ஆடுகிறது போன்ற திரைப்படங்கள் இருவரின் கூட்டணியில் சக்கைப்போடு போட்டன.

6. சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு, நீயா, கல்யாண ராமன், நினைத்தாலே இனிக்கும், ராஜப்பார்வை, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் கமலுக்குப் வெற்றிப்படங்களாக மட்டுமின்றி, பல விருதுகளையும் அவருக்குத் தேடித்தந்தது.

7. 1980 களில், ஹிந்தித் திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கமல். ஏக் துஜே கே லியே, சாகர், ராஜ் திலக், கிரஃப்தார் ஆகிய படங்கள் அவருக்கு ஹிந்திப்படத்துறையில் பெரும்புகழையும் பெற்றுத்தந்தன.

8. ஒரே வருடத்தில் 5 வெள்ளிவிழா (சில்வர்ஜூப்ளி) படங்களை கொடுத்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையை இதுவரை முறியடிக்க முடியவில்லை.

இனியும் முறியடிக்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 – ஜன. 26 – வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 – மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 – சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 – சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 – ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)

9. களத்தூர் கண்ணம்மா படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக தேசிய விருது பெற்ற கமல், பல வருடங்களுக்குப் பிறகு மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதுகளைப் பெற்றார்.

10. 18 முறை ஃபிலிம்பேர் விருதுகள் பெற்ற பெருமைக்குரியவர், இந்தியாவிலேயே கமல்ஹாசன் ஒருவர்தான். (திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.) இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகி இருக்கும்.

ஆனால் ஒரு கட்டத்தில் கமலே இந்த விருதுகளை இனி புதியவர்களுக்குக் கொடுங்கள். எனக்கு வேண்டாம் என்று கூறி விட்டார்.

11. இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை அதாவது, 5 முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே 5 முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகர் கமல்தான்.

12. களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக நான்கு முறை தேசிய விருது பெற்ற கமல், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்றுள்ளார்.

விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் தரப்பட்டது. சமீபத்தில் இவருக்கு செவாலியே விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

13. உலகிலேயே அதிக விருதுகள் அதாவது 200 க்கும் அதிகமாக, பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. இந்த சாதனையை மற்ற நடிகர்கள் எட்ட குறைந்தபட்சம் இருபது வருடங்கள் தேவைப்படும்.

14. நடிப்பைத் தவிர, கமல் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார்.

15. அடிப்படையில் கமல் பரதநாட்டிய கலைஞர் என்பதால், கதாநாயகனாக நடிக்க வருவதற்கு முன் பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.

தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராகப் பணியாற்றிய கமல்ஹாசன், டான்ஸ் மாஸ்டராக வர விரும்பினார். காலம் அவரை நடிகனாக்கிவிட்டது.

தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்தபோது, எம்.ஜி.ஆருக்கு நான் ஏன் பிறந்தேன் படத்திலும், ஜெயலலிதாவுக்கு அன்பு தங்கை படத்திலும், சிவாஜிக்கு சவாலே சமாளி படத்திலும் உதவி டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார் கமல்.

அப்போது எம்.ஜி.ஆருக்கு சிவாஜிக்குரிய நடன அசைவுகளை வைக்க, குறும்புக்காரா… என்று செல்லமாக எம்.ஜி.ஆர். கோபித்தாராம்.

16. தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், எழுத்துத் திறமையினாலும் மய்யம் என்ற பத்திரிக்கையை தொடங்கி சில வருடங்கள் நடத்தினார். பின்னர் நேரமின்மை காரணமாக அப்பத்திரிகையை நிறுத்திவிட்டார். தற்போது மய்யம் என்ற பெயரில் இணையதளம் நடத்தி வருகிறார்.

17. பொதுவாக நடிகர்களின் ரசிகர் மன்றம் என்பது தியேட்டர்களில் கொடி தோரணம் கட்ட மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கமல் மட்டுமே தன் மன்றத்தை நற்பணி இயக்கமாக நடத்தி வருகிறார்.

இந்த அமைப்பின் கீழ் தன் ரசிகர்களை பல சமூக சேவையில் ஈடுபடுத்தி வருகிறார் கமல். ஏழைகளுக்கு உதவுவது, பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், கணினி போன்றவற்றை வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்கிறார்கள்.

உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்தான். கமல்ஹாசனும் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000க்கும் அதிகமான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோவுக்கும் அதிகமான அரிசியை ஏழை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

19. கமல்ஹாசனின் முதல் சொந்தப் பட நிறுவனத்தின் பெயர் ஹாசன் பிரதர்ஸ். இப்படநிறுவனத்தின் சார்பில்தான் ராஜபார்வை படத்தை கமல் தயாரித்தார்.

அதன் பிறகு அந்த பேனரில் படம் தயாரிப்பதை கைவிட்ட கமல் பின்னர் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷ்னல் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் இதுவரை உலக அளவில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகைக்கு வர்த்தகம் செய்திருக்கிறது.

20. கமல்ஹாசனின் கனவுப்படைப்பு மருதநாயகம் படம். இங்கிலாந்து மகாராணி எலிஸபெத்-2 அவர்களால் இப்படம் துவக்கி வைக்கப்பட்டது.

சில மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் அப்படத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பு மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக படத்தை ட்ராப் பண்ணினார் கமல். இப்போது மருதநாயகம் படத்தை கமல் மீண்டும் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். இன்றைய தேதியில் 100 கோடி பட்ஜெட் தேவை என்கிறார் கமல்.

21. கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சஃபையர் திரையரங்கில் 600 நாட்கள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் “ஏக் துஜே கலியே” என்ற பெயரில் எடுக்கப்பட்டு 350 நாள் ஓடியது.

சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன். இந்த சாதனையை இதுவரை வேறு நடிகர்களின் படங்களும் செய்யவில்லை.

22. உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன்தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று தான் உடல்தானம் செய்வதாக பதிவு செய்தார்.

23. இந்தியசினிமாவிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100 வது படமான ராஜபார்வையில்தான்.

படம் பார்க்கும் எவராலும் இதை கண்டுபிடிக்கவே மடியாது. தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில்தான்.

24. கமலுக்கு மேக்கப்சென்ஸ் அதிகம், மேக்கப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்துள்ளார்.

அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது. இந்தியன் படத்துக்காக ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து இந்தியன் தாத்தாவாக மேக்கப்பில் உருவம் மாறினார் கமல். பின்னர் அவ்வை சண்முகி, தசாவதாரம் படங்களில் நடிக்கும்போதும் ஹாலிவுட் மேக்கப் மேன்களை பயன்படுத்தி இருக்கிறார்.

25. கமலின் தந்தை சீனிவாசன் மறைந்து, இறுதிச் சடங்குகள் நடந்தபோது, ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா இருவரையும் அண்ணா நீங்களும் வாங்க என்று அழைத்த கமல், அவர்களையும் தன் தந்தைக்கு கொள்ளி வைக்கச் சொல்லி இருக்கிறார் கமல். என் தந்தையை நேசித்த நீங்கள் என் சகோதரர்களே என்று சொன்னாராம்.

1978 ல், வாணி கணபதி என்ற பரதநாட்டியக்கலைஞரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாகரத்துப் பெற்றார்.

பின்னர், சரிகா என்ற பாலிவுட் நடிகை உடன் சேர்ந்து வாழ்ந்த கமல், குழந்தை பிறந்த பிறகு சிவாஜி முன்னிலையில் தாலி கட்டி சரிகாவை மணமுடித்தார்.

கமல் – சரிகா தம்பதிக்கு, ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 2002 ல் சரிகாவுடனான விவாகம் ரத்து ஆனது. 2005 ஆம் ஆண்டிலிருந்து நடிகை கௌதமியுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்தத் திரையுலக உத்தமனின் நடிப்பு விஸ்வரூபம் இன்னும் தொடரத்தான் போகிறது. அடுத்து புதிதாக வருபவர்களுடன் தனித்து நின்று போட்டியிடத்தான் போகிறார். ஆனாலும், அமைதியான சத்தமில்லாத முத்தத்தால் அன்றே திரையுலகில் சத்தத்தை எழுப்பியவர், சத்தமில்லாமல் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் விளங்கி வருகிறார்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் தற்போது சாதித்துக் கொண்டிருப்பவர்களை அவருக்கு இவர்தான் வாரிசு என்று அடையாளப்படுத்திச் சொல்வார்கள்.

ஆனால், கமல்ஹாசன் என்ற திரைக் கலைஞனை அப்படி யாருடனும் ஒப்பிட முடியாது. திரையுலக சாதனைகளைப் பொறுத்தவரையில் இவர் யாருக்கும் வாரிசு இல்லை…வேறு யாரும் இவருக்கு வாரிசாக வரப் போவதுமில்லை…!

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com