கேரளாவை சேர்ந்தவர் சாம் ஆப்ரஹாம், இவர் மனைவி சோபியா சாம் (33), இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறான்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்துள்ளனர், இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்ரஹாம் தனது வீட்டில் சடலமாக கிடந்தார்.

மாரடைப்பில் ஆப்ரஹாம் இறந்துவிட்டதாக நாடகமாடிய சோபியா, கேரளாவுக்கு சென்று சடங்குகளை செய்தார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனையில், ஆப்ரஹாமின் ரத்தம் மற்றும் கல்லீரலில் சையனைடு விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.

ssssirakesariஇதனையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தியதில், பத்து மாதங்கள் கழித்து சோபியாவும், அருண் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

திருமணத்துக்கு முன்னரே அருணுடன் பழகி வந்த சோபியா, திருமணத்துக்கு பின்னரும் அந்த உறவை தொடர்ந்துள்ளார்.

இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஆப்ரஹாமை திட்டம்போட்டு கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆப்ரஹாம் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, ரயில்நிலையத்தில் வைத்து அருண் ஆப்ரஹாமை கொல்ல முயன்றுள்ளார்.

இதில் கழுத்தில் காயங்களுடன் தப்பித்த ஆப்ரஹாம், உறவினர்களிடம் இனிமேல் கேரளா வந்தால் சவப்பெட்டியில் வரலாம் என்றும், தாத்தாவுக்கு அருகிலேயே தன்னை புதைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாராம்.

மேலும் சோபியாவின் நடவடிக்கைகள் குறித்து கூறியும், அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்த வழக்கு மெல்போர்ன் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், சோபியாவுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அருணுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரஹாமின் மகன், சோபியாவின் சகோதரியின் மேற்பார்வையில் விடப்பட்டுள்ளார்.