ilakkiyainfo

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: இலங்கை தமிழர்களை மோதி அரசு ஒதுக்குகிறதா?

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: இலங்கை தமிழர்களை மோதி அரசு ஒதுக்குகிறதா?
December 10
21:58 2019

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை இரவு நிறைவேறியது.

இந்திய அரசமைப்புச் சட்டம் தனது குடிமக்களிடையே மதப் பாகுபாடு காட்டுவதில்லை. அப்படி இருக்கும்போது மத அடிப்படையில் சிலருக்கு குடியுரிமை கிடைக்கவோ, மறுக்கவோ வகை செய்யும் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையில் தங்கள் எதிர்ப்பை கடுமையாகப் பதிவு செய்துள்ளன.

மத அடிப்படையில் குடியுரிமையில் முன்னுரிமையோ, பாகுபாடோ காட்டப்படுவது குறித்த விவாதம் ஒருபுறம் இருந்தாலும், அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இடம் பெயர்ந்தவர்கள் என்ற பட்டியலில், இலங்கையின் சிங்கள – பௌத்த பேரின வாதத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறி அகதிகளாக இந்தியாவில் இருக்கும், இந்துக்களாக அடையாளம் காணப்படும் இலங்கைத் தமிழர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டது மத ரீதியிலான பாதிப்புதானா? என்றும் இந்த மசோதா குறித்து எப்படிப் பார்க்கிறார் என்றும் இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவரான மறவன்புலவு க.சச்சிதானந்தனிடம் கேட்டது பிபிசி தமிழ்.

தெற்கில் இருக்கும் இந்துக்களைப் பற்றி கவலை இல்லையோ?

“வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு தெற்கிலே இருக்கும் இந்துக்களைப் பற்றி கவலை இல்லையோ என்று ஒரு ஆதங்கம் இருக்கிறது” என்று தொடங்கினார் அவர்.

_110064719_gettyimages-1148668459கனடாவின் ஒன்டாரியோவில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் நடத்தும் சமயத்திருவிழா.

“1958ம் ஆண்டு கொழும்பு அருகில் உள்ள பாணந்துறை முருகன் கோயிலில் இந்து பிராமண குருக்கள் ஒருவரை உயிரோடு கோயிலுக்குள் வைத்து சிங்கள பௌத்தர்கள் கொளுத்திய நேரத்தில்தான் முதல் கலவரமே வெடித்தது. அந்தக் கோயிலின் அறங்காவலர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு சித்தப்பா முறை.

அந்த சம்பவமே தமது மனதில் அடித்தள மாற்றத்தை கொண்டுவந்தது என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்” என்று தெரிவித்தார் சச்சிதானந்தன்.

“1983 கலவரத்தில் திருகோணமலை கோட்டை வாயிலில் இருந்த ஒரு கோயிலின் பிள்ளையார் சிலையைப் பெயர்த்துச் சென்று அரசுப் படையினர் கடலில் போட்டனர். அந்த இடத்தில் சிங்களத்தில் ‘கண தெய்யோ நாண்ட கியா’ என்று எழுதி வைத்தார்கள். இதற்கு ‘கணபதிக் கடவுள் கடலில் குளிக்கப் போய்விட்டார்’ என்று பொருள்” என்று மேலும் அவர் தெரிவித்தார்.

“மசோதா இந்துக்களை புண்படுத்துகிறது”

2019ல் ராவணன் தாய்க்கு இறுதிக் கிரியை செய்த இடம் என்று நம்பப்படும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா நீரூற்றுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோயிலை சீரமைக்க முயற்சி நடந்தபோது புத்த பிக்குகள் தடுத்தார்கள் என்றும், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

_110064718_maravanpulavuமறவன்புலவு க.சச்சிதானந்தன்

விடுதலைக்குப் பிந்திய சுமார் 70 ஆண்டுகாலத்தில் இலங்கையில் இந்துக்கள் மீது கொடுமை நடப்பதால்தான் 12 லட்சம் இந்துக்கள் உலகம் முழுவதும் 40 நாடுகளில் குடிபெயர்ந்து வாழ்கிறார்கள். அப்படிச் சென்ற நாடுகளில் இந்தியா தவிர பிற நாடுகளில் எல்லாம் இலங்கை இந்துக்களுக்கு குடியுரிமை கொடுத்திருக்கிறார்கள். கனடாவிலே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நார்வேயிலே ஒரு தமிழர் மாநகர முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். குடிமகனாகி அந்தந்த நாட்டின் ஆட்சிப் பீடத்திலே கூட இருப்பதற்கான வாய்ப்பை அந்தந்த நாடுகள் கொடுத்திருக்கின்றன. 1983க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏறத்தாழ இரண்டரை லட்சம் இந்துக்கள் குடியுரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள்.

இவர்களையெல்லாம் புத்த சமயத்தவரால் துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட இந்துக்களாக நினைக்காத ஒரு சட்டத்தை இந்திய அரசு கொண்டுவருவது இலங்கை இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளது” என்கிறார் சச்சிதானந்தன்.

“பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இந்துக்கள் துன்புறுகிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்கிறார்கள். அவர்களில் 2014க்கு முன்பு இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்ற சட்டத்தை இலங்கை இந்துக்களுக்கும் வழங்கும் வகையில் மாற்றவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு அங்கே இயல்புநிலை திரும்பிவிடவில்லையா என்று கேட்டபோது, அதை மறுக்கிறார் சச்சிதானந்தன்.

“2019ல் கன்னியாவில், முல்லைத் தீவில், செம்மலையில் பிள்ளையார் கோயிலின் வழிபாட்டு உரிமையை புத்த பிக்குகள் கூடியிருந்து மறுக்கும் சூழ்நிலையில் சமாதானம் நிலவுகிறது என்று இந்தியாவில் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

செம்மலையில் இந்துக்கள் பொங்கல் விழா கொண்டாடினார்கள். நந்தி கொடி கட்டினார்கள். இவற்றை புத்த பிக்குகள் பிடுங்கி எறிந்தார்கள்.

இந்தியாவில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா குறித்து கருத்துத் தெரிவிக்கக்கூட அவகாசம் இல்லை.

உலக இந்துக்களுக்காக இருக்கிற விஸ்வ ஹிந்து பரிஷத்தோ, மற்ற அமைப்புகளோ தமிழ்நாட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களோ இதை எடுத்துச் சொல்லவேண்டும் என்று அழுத கண்ணீரோடு எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிடுகிறார் சச்சிதானந்தன்.

குடியுரிமை கேட்கிற இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை.

“இலங்கை தமிழர்களுக்கு பொருந்தாது”

_110065705_chandrahasanசந்திரஹாசன்

அதே நேரம், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் எஸ்.சி.சந்திரஹாசன் வேறுவிதமான நிலைப்பாடு கொண்டிருக்கிறார்.

“இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல உதவ வேண்டும்” என்கிறார் அவர்.

தங்கள் இடத்துக்கே திரும்பச் சென்று நாட்டை கட்டியெழுப்பும் கடமை அகதிகளுக்கு இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

உள்நாட்டுப் போரில் இலங்கையில் இருந்து வெளியேற நேர்ந்தவர்களில் சிறிய அளவு பௌத்தர்களும், கிறித்துவர்களும் இருந்தார்கள் என்றும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை மத வேறுபாடு அல்ல என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இந்துக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கும் தங்கள் பிரச்சனைக்கும் வேறுபாடு உண்டு என்கிறார் அவர். இதனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நோக்கம் இலங்கை தமிழர்களுக்குப் பொருந்தாது என்றும் கூறுகிறார். தங்களைப் பாதிக்காத விஷயம் என்பதால் இந்திய சட்டம் குறித்து பதில் சொல்ல விரும்பவில்லை என்கிறார் அவர்.
“மத ரீதியாக முஸ்லிம்கள், இன ரீதியாக தமிழர்கள் விலக்கப்படுகிறார்கள்”

இதனிடையே, இந்த மசோதா தாக்கல் ஆவதற்கு முன்பே “கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா? அவ்வாறெனில் விவரங்களைத் தெரிவிக்கவும். வழங்கப்படாதெனில் காரணங்களைக் கூறவும்” என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்து மூலமாக அளித்த பதிலில்

“இந்திய குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை ( naturalisation ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

_110064716_e8340cc6-744c-446b-9171-b0750538dd9d து.ரவிக்குமார்

இந்த பதில் மூலம், இலங்கை தமிழ் அகதிகளை அகதிகளாககூட அங்கீகரிக்காமல் அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்றே அமைச்சர் மறைமுகமாக குறிப்பிடுவதாக கூறும் ரவிக்குமார், அகதிகளுக்கான இரண்டு ஐ.நா. ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திடவில்லை என்கிறார்.

“அண்டை நாடுகளில் இருந்து மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை தருவது என்றால், மியான்மரும் அண்டை நாடுதான், இலங்கையும் அண்டை நாடுதான். இலங்கையில் இந்தியாவின் கொள்கை காரணமாகவே தமிழர்கள் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். மியான்மரில் இருந்து மதரீதியிலான துன்புறுத்தலுக்கு இலக்கான ரோஹிஞ்சா அகதிகள் இருக்கிறார்கள். பாகிஸ்தானில்கூட துன்புறுத்தலுக்கு இலக்கான அகமதியா முஸ்லிம்கள் இருக்கிறார்கள். எனவே மதரீதியாக முஸ்லிம்களையும், இன ரீதியாக தமிழர்களையும் விலக்கி வைக்கும் வகையிலேயே இந்த குடியுரிமை மசோதா அமைந்திருக்கிறது” என்கிறார் ரவிக்குமார்.

“மலையகத் தமிழ் அகதிகளின் பிரச்சனை கவனிக்கப்படவில்லை”

அகதிகள் உரிமைகளுக்காக வாதிடுகிறவரும், அகதிகள் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நூல்கள் எழுதியவருமான டாக்டர் வி.சூரியநாராயணனிடம் இதுபற்றிக் கேட்டபோது,

“இலங்கை அகதிகள் என்று சொல்லும்போது அவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒன்று இலங்கையை தாயகமாக கொண்ட தமிழர்கள். மற்றொரு வகையினர் இலங்கையில் வாழ்ந்து வந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையகத் தமிழர்கள்.

1983 கலவரத்தின்போதும், அதற்குப் பிறகும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையகத் தமிழர்கள் 29,500 பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் அகதிகளில் இருந்து இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்கு இந்தியா என்னென்ன அளவுகோல்களை வைக்கிறதோ அவை அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும். ஆனால், இவர்களை குடியுரிமைக்கு உரியவர்களாக இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை” என்று கூறினார்.

_110078187_gettyimages-464103574 கீழ்புத்துப்பட்டு அகதிமுகாமில் இலங்கை தமிழ் அகதிக் குடும்பம் ஒன்று.

குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாதத்தில் இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இந்த வேறுபாட்டை குறிப்பிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுபற்றி மேலும் கூறிய அவர் “இந்தியாவில் நீண்டகாலம் வசித்துவரும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் அகதிகளைப் பொருத்தவரை அவர்கள் விரும்பினால் தங்கள் இலங்கை குடியுரிமையை திருப்பிக்கொடுத்துவிட்டு இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இயல்பாக்கம் பெற்றவர்கள் என்ற முறையில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை தரமுடியாது என்று இந்திய அரசு 1983-ம் ஆண்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றால்தான் அவர்கள் குடியுரிமை பெறுவதற்கு வழி பிறக்கும்” என்றார் அவர்.

இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளை குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவில் இணைக்காததற்கு காரணம் அங்கே இருப்பவை தியோகிரசி எனப்படும் மத ஆட்சிமுறை அல்ல என்பதுதான் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

இது பற்றிக் குறிப்பிட்ட சூரியநாராயணன் “கராறாகப் பார்த்தால் இலங்கையில் இருப்பது மத ஆட்சிமுறை அல்லதான். ஆனால், பௌத்தத்தை வளர்ப்பதும், பாதுகாப்பதும் அரசின் கடமை என்று அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் சொல்வதால் அதனை மதச்சார்பற்ற அரசு என்று பலரும் ஒப்புக்கொள்வதில்லை.

புத்த மதகுருமார்கள் அங்கே உத்வேகத்தோடு அரசியலில் பங்கேற்கிறார்கள் எனவே, இலங்கை மத ஆட்சிமுறை இல்லை என்று வாதிடுவதை முழுமையாக ஏற்கமுடியாது” என்று கூறினார் சூரியநாராயணன்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு சொந்த நாடு திரும்புவதே இலக்கு என்று சந்திரஹாசன் கூறுவது பற்றி கருத்து கேட்டபோது, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய தமிழர்களை இப்படி மீண்டும் இலங்கையில் குடியேறும்படி அழைக்கமுடியுமா என்று கேட்ட சூரியநாராயணன், இலங்கைக்கு திரும்பிச் சென்ற பல தமிழ் அகதிகள் மீண்டும் அங்கிருந்து வெளியேறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“பாதி அகதிகள் நாடு திரும்ப விரும்பவில்லை”

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் அகதி முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இது பற்றி பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவிக்கும்போது முகாம்களில் வசிக்கும் அகதிகளில் பாதிபேர் இலங்கை திரும்பிச் செல்ல விரும்புவதாகவும், மீதி பேர் இந்தியாவிலேயே குடியுரிமை பெற்று வாழ விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

10 வயதாக இருக்கும்போது 30 ஆண்டுகள் முன்பு குடும்பத்தோடு இந்தியா வந்த தாம் இந்தியப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு இங்கே வாழ்வதாக கூறிய அவர், இனி திரும்பிச் சென்று அங்கே உழைத்து, பழைய நிலைமைக்கு வருவதென்றால் ஒரு தலைமுறைக்கு மேலாகும் என்றார். தம்மைப் போலவே பல அகதிகளும் நினைப்பதாகவும் அவர் கூறினார்.

_110078189_srilankantamilrefugeesgobacktotheirhomefromindia2011ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பிய தமிழ் அகதிகள் சிலர்.

மனைவியின் குடும்பத்தில், தாமோ தமது குடும்பத்தில் மனைவியோ இடம் பெற்று ரேஷன் கார்டு பெறும் சூழ்நிலைகூட இல்லை என்று குறிப்பிட்ட அவர், அகதிகளுக்கு அரசு கொடுக்கும் சலுகைகள், உதவிகள்கூட வேண்டாம், இந்தியக் குடியுரிமை கிடைத்தால் போதும் என்றும் குறிப்பிட்டார். இந்திய குடியுரிமை கிடைத்தால், பாஸ்போர்ட் பெற்று இலங்கை சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டு வரமட்டுமே விரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஏன் அவரைப் போன்ற பலர் இலங்கை செல்ல விரும்பவில்லை என்று கேட்டபோது, இப்போது மீண்டும் இலங்கையில் ஆட்சிக்குவந்துள்ள அரசின்கீழ் ஜனநாயக உரிமையோடு வாழ முடியாது என்று குறிப்பிட்ட அவர், தாங்கள் விட்டு வந்த காணிகள் பலவற்றில் சிங்கள குடியேற்றம் நடந்துள்ளதாகவும், எனவே திரும்பிச் சென்றாலும் சிலருக்கு மட்டுமே அவர்களின் இடம் கிடைக்கும் என்றும் கூறினார்.

அத்துடன் வேலை இல்லாத திண்டாட்டம், விலைவாசி ஆகியவை இலங்கையில் அதிகம் என்று கூறிய அவர் தற்போது இந்தியாவில் வெங்காயம் விலை ரூ.100 எனில், இலங்கையில் அது ரூ.400 ஆக இருக்கும். என்றும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு திரும்பிச் சென்ற தமது சகோதரி அதுபற்றி வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com