ராசிபுரம்: குழந்தைகள் விற்பனை விவகாரம்- மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளங் குழந்தைகள் விற்கப்பட்டது தொடர்பாக மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை விற்பனை சம்பவம் விசுவரூபம் எடுத்துள்ளது.
இதுதொடர்பாக போலீசார் இதுவரை நர்சு அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஈரோடு நர்சு பர்வீன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பல இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் குழந்தை விற்பனை சம்பவத்தில் தொடர்புடைய ஈரோடு, திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் ஒரு பெண்ணின் பெயர் ஹசினா என்பது ஆகும்.
கைதான 4 பேரும் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு புரோக்கர்களாக செயல்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் குழந்தை விற்பனை சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரிடமும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் அவர்களும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கைதான அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரின் செல்போன்களில் உள்ள எண்களை ஆய்வு செய்து அதில் குழந்தை விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் யாராவது உள்ளார்களா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் குழந்தை பெற்று தர பெண்கள் பயன்படுத்தப்பட்டார்களா? என்பது குறித்தும் பெண்களின் கரு முட்டைகளை விற்பனை செய்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதனால் இந்த சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment