ilakkiyainfo

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)
February 11
01:00 2019

வெருகலாற்றுக் கரையில் பெண் போராளிகளும் நிறுத்தப்பட்டிருந்தனர். வன்னியிலிருந்து மாலதி படையணி பெண் போராளிகளும் தாக்குதலுக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.

ஆயுதமேந்திய பெண்களின் வாழ்க்கையில் இது மோசமான கறை படிந்த நாட்களாயிருந்தன. கிழக்கு மாகாணப் பெண் போராளிகள் பாதுகாப்புத் தேடித்  திக்குத்திசையற்று  அலறியடித்தபடி வீதிகளில்  ஓடியதும், அவர்களுடைய  காயங்களுக்கு  இலங்கை இராணுவத்தினர், முதலுதவியளித்து வீடுகளுக்கு அனுப்பிவைத்த கதைகளையும் நேரிலே கண்ட பொதுமக்கள் எம்மிடம் சொன்னபோது எதுவுமே பேசமுடியாமல் வாயடைத்து நின்றோம்.

2009இல் முள்ளிவாய்க்காலில் அதே நிலைமை எமக்கும் வந்தபோதுதான் அந்த வலியின் கொடூரத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

இனத்தின் விடுதலைக்காக என்ற நியாயத்திற்குள் புதையுண்டுபோன உண்மைகளுக்கு எந்த ஆராய்ச்சி மணியை அடித்து யாரிடம் நீதி கேட்க முடியும்?

CRqrBgMU8AA8v2z

உண்மையற்ற சமாதானமும் உருக்குலைந்த மக்கள் வாழ்வும்

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே 2002 பெப்ரவரியில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தானதன் பின்பு கிளிநொச்சி  நகரம் கொழும்புக்கு  நிகரான அரசியல் தலைநகரம் என அரசியல் ஆய்வாளர்கள் விளிக்கும்படியான நிகழ்வுகள் அங்கு நடந்தேறத் தொடங்கின.

இதன் முதற்கட்டமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும், அவரது துணைவியாரும் இங்கிலாந்திலிருந்து மாலைத்தீவுக்கு வந்து அங்கிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட “Maldive air taxi” மூலமாக இரணைமடு நீர்த்தேக்கத்தில் வந்து இறங்கினார்கள்.

அவர்களை வரவேற்பதற்காகத் தலைவர் பிரபாகரனும் துணைவியார் மதிவதனியும், இன்னும் இயக்கத்தின் பல முக்கியமான பிரமுகர்களும், தளபதிகளும் பொறுப்பாளர்களும் வந்திருந்தனர்.

ABRetrun1மகளிர் தளபதிகளான கேணல் விதுஷா, கேணல் துர்க்கா ஆகியோருடன் நானும் போயிருந்தேன்.

அன்று அனைவரது முகங்களிலும் விசேடமாகத் தயாரிக்கப்பட்டிருந்த ‘சபாரி’ உடையணிந்து இலகுவான மனநிலையுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த தலைவரைப் பார்த்த அனைவரது மனங்களிலும் பெருத்த நிம்மதியும் நம்பிக்கையும் நிரம்பியிருந்தது.

வானத்தில் பறக்கக்கூடியதும் நீரில் மிதக்கக்கூடியதுமான, சிறிய இலகு ரக விமானம் ஒன்று கிளிநொச்சி நகரின் மேலாகப் பறந்து வந்து இரணைமடுக் குளத்தைச் சுற்றித் தாழ்வாக வட்டமடித்து    அதன் நீர்ப்பரப்பில் இறங்கி, சிறுதூரம் நீந்திச் சென்று தன்னை நிலைப்படுத்தியது.

கடற்புலிகளின் சிறப்பு அணியினர் குளத்தின் நீர்ப்பரப்பில் விமானம் இறங்குவதற்கு பொருத்தமான இடத்தைச் சுட்டும் அடையாள மிதவைகளை ஏற்கனவே அமைத்திருந்தனர்.

அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசையும் நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தியும் காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்ரிக் படகில் சென்று அரசியல் ஆலோசகரையும் அவரது துணைவியையும் அழைத்து வந்தனர்.

அனுபவம் வாய்ந்த கடற்புலிப் போராளிகள் மிகவும் அவதானமாகப் படகினைச் செலுத்தி வந்தனர்.

சிறுநீரக நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு  உயிருக்குப் போராடிய நிலையில், ஆபத்தான கடல்வழிப் பயணத்தை மேற்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிச் சென்று, தனது சிறுநீரக அறுவைச் சிகிச்சையினை முடித்துக்கொண்டதன் பின்னர்,

ABReturn2

மீண்டும் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகக் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் வந்திறங்கிய அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் படகிலிருந்து  இறங்குவதற்கு  ஏதுவாகத் தலைவர்  பிரபாகரன் கைகொடுத்து உதவினார்.

நீண்ட காலம் பிரிந்திருந்த குடும்பம் மீண்டும் கூடிக்கொண்டதைப் போன்றிருந்த அச்சூழல் மகிழ்ச்சியான சுக, நல விசாரிப்புக்களால் நிரம்பியிருந்தது.

அங்கு வந்திருந்த அனைவருமே அன்ரன் பாலசிங்கத்திற்கும் அவரது துணைவியாருக்கும் ஏற்கனவே அறிமுகமும் நெருக்கமும் கொண்டவர்களாகவே இருந்தனர்.

ஒரேயொரு தடவை சந்தித்த போராளியைக்கூட நினைவில் வைத்திருந்து தோளிலே தட்டி நலம் விசாரிப்பது அவர்கள் இருவரதும் சிறப்பம்சமாக  இருந்த   காரணத்தால் பல சாதாரணப் போராளிகள்கூட அவர்கள்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர்.

நான் முதன்முதலாக அன்ரன் பாலசிங்கம் அவரது மனைவி அடேல் இருவரையும் 1993 இல் யாழ்ப்பாணத்தில் அவர்களுடைய வீட்டில் சந்தித்தேன்.

அப்போது நான் ‘சுதந்திரப் பறவைகள்’ பத்திரிகைக்கு ஒரு அரசியல் கட்டுரை எழுதியிருந்தேன்.

யாராவது பெரியவர்களிடம் கொடுத்து அதைத் திருத்தம் செய்ய வேண்டும் என எனது நண்பியான மலைமகளிடம் கூறியிருந்தேன். அவள்தான் என்னை முதன்முதலாக அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

மலைமகளை அவர் ஏற்கனவே அறிந்திருந்த காரணத்தால் எனது பெயரை விசாரித்தார். அப்போது எனது பெயர் சந்திரிகா.

அந்தப் பெயரைக் கேட்டதும் அவருக்குள் ஒரு சிரிப்பு பரவியது. “ம் . . . சந்திரிகா அம்மையார் என்ன விஷேசம்? என்ன வேலை செய்யிறிங்கள்?” என வினவினார்.

ஒரு நான் அதுவரையிலும் ஊடகங்கள் மூலமாக மட்டுமே அறிந்திருந்த இயக்கத்தின் முக்கியமான ஒரு நபருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்க ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டது.

அவரது துணைவியார் மிகவும் சுவையான தேனீரைப் பருகத் தந்து, புன்னகையுடன் எமக்கருகில் அமர்ந்துகொண்டார்.

“சாப்பிட்டு விட்டீர்களா? என்ன சாப்பிட்டீர்கள்?” என விசாரித்தார். வெள்ளையினப் பெண்மணியான அவர் தமிழ் மொழியைத் தன்னால் முடிந்தவரை அழகாக உச்சரித்துப் பேச முயல்வதை வியப்போடு அவதானித்தேன்.

பாலசிங்கம் அவர்கள் நான் கொண்டு சென்ற கட்டுரையைச் “சத்தமாக வாசி பிள்ளை” என்றார். நான் வாசித்தேன். கண்ணை மூடிக்கொண்டு முழுவதையும் பொறுமையாகக் கேட்ட பின்னர், “அந்தப் பந்தியை வெட்டு, இந்தப் பந்தியை கொஞ்சம் வடிவா யோசிச்சு திருப்பி எழுது.

பரவாயில்லை. இப்பிடித்தான் எழுதி எழுதிப் பழக வேணும். கெட்டிக்காரி. நிறையப் புத்தகங்களை எடுத்துப் படி. கொஞ்சமாக எழுதுறதுக்கும்  நிறைய வாசிக்க வேணும்.

என்ன ஐசே நான் சொல்லுறது விளங்குதே” என தனது வழக்கமான பாணியில் அதட்டினார். நான் வேகமாகத் தலையை ஆட்டிக்கொண்டேன்.

அன்ரன் பாலசிங்கம் மற்றும் அடேல் பாலசிங்கம் ஆகிய இருவருடனும் பெண் போராளிகள் பலரும் ஒருவிதமான தனிப்பட்ட உரிமையுடன் நெருங்கிப் பழகினார்கள் என்பதை என்னால் கூறமுடியும்.

அடேல் ஒரு வெள்ளையினப் பெண்மணியாக இருந்தபோதும் மிக எளிமையாகவும் இயல்பாகவும் அனைவருடனும் பழகி வந்தார். போர் நிறுத்த நடவடிக்கைகளின்  ஆரம்ப கட்டமாக  கிளிநொச்சியில்  சமாதானச் செயலகம் அமைக்கப்பட்டது.

போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டன. கிளிநொச்சியில் நடத்தப்பட்ட சர்வதேச ஊடகவியலாளர் மாநாடு, முஸ்லிம் மற்றும் மலையக   அரசியல்  தலைவர்கள் மற்றும் பலதரப்பட்ட அரசியல் சக்திகளுடனான சந்திப்பு எனப் புலிகளின் தலைமை தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட ஆரம்பித்தது.

யாழ்ப்பாண இடப்பெயர்வினைத் தந்திரோபாயப் பின்னடைவு என இயக்கம் கூறினாலும், அது புலிகள் இயக்கம் சந்தித்த மாபெரும் தோல்வியாகவே இருந்தது.

அதனைத் தொடர்ந்து வன்னியில் நடைபெற்ற உக்கிரமான சமர்களில் புலிகள் பெற்ற வெற்றிகளின் விளைவாகவே இத்தகையதொரு அரசியல்  சூழல் கனிந்தது  என்ற வகையில், வெற்றிப்  பெருமித உணர்வு புலிகளிடம் நிரம்பியிருந்தது.

இலங்கை நாட்டில் அரசியல் மற்றும் இராணுவ பலம் மிக்க இன்னொரு சக்தியாகச் செல்வாக்குப் பெற்றிருந்த புலிகள் இயக்கமானது, சர்வதேச அனுசரணையுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தை மேசையில் தனது பேரம் பேசும் வல்லமையை உச்சமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாயிருந்தது.

514055992002இல் போர் நிறுத்த உடன்படிக்கையில்   கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன், அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழ்ச்செல்வனிடம்  கூறிய விடயத்தை அவர் ஏனைய பொறுப்பாளர்களிடமும் தெரிவித்தார் “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது, இயக்கத்திற்கு ஆளணியைப் பெருக்க வேணும், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கிற மக்களுக்குப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் அவசியத்தைத் தெளிவாக எடுத்துச் சொல்லி இளைஞர் யுவதிகளைப் போராட்டத்திற்கு அணிதிரட்ட வேணும்” என அண்ணை சொல்லிப்போட்டார்.

இந்த இடைவெளியைப் பயன்படுத்தி   நாங்கள் தீவிரமாக வேலைசெய்து படைபலத்தைப் பெருக்க வேணும்.

ஆரம்ப காலத்தில எங்களிட்ட ஆயுதங்கள் இல்லை, ஆளணி இருந்தது. இப்போது இயக்கத்திடம் தேவையான அளவு ஆயுதங்கள் இருக்குது. ஆளணி தான் இல்லை, நாங்கள்தான் அந்த ஆளணியைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

சமாதானப் பேச்சுவார்த்தை என்பது வெளியுலகத்திற்குத்தானே தவிர எங்களுக்கு அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்” எனக் கூறினார்.

இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது, நீண்ட போருக்குப் பின்னரான அமைதியையும் ஆறுதலையும் மக்களுக்குக் கொடுத்திருந்தாலும் நிரந்தரச் சமாதானம் ஒன்று ஏற்படுவதற்கான அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கவில்லை.

ஏனெனில் அரசு, புலிகள் இந்த இரண்டு தரப்புமே எள்ளளவும் இதய சுத்தியுடன் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்பதைக் கடந்த கால அனுபவங்களின் மூலம் மக்கள், மிக நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.

எனவே அவ்வப்போது கிடைக்கின்ற இடைவெளியைப் பயன்படுத்தித் தமது இடர்ப்பாடு நிறைந்த வாழ்க்கை நிலையைக் கொஞ்சமேனும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய முழுமுயற்சியாக இருந்தது.

இடைவிடாது தொடர்ச்சியாக நடந்த போரினால் அழிந்துபோயிருந்த வீடுகள், கடைகள் என்பனவற்றை மக்களே தமது சொந்த முயற்சிகளினால் மீண்டும் கட்டியெழுப்பினார்கள்.

“திருப்பியும் எப்ப தொடங்கப் போறீங்கள்”, “தொடங்குவதற்கு முதல் எங்களுக்கும் சொல்லுங்கோ” “ஒரு ஐந்து வருடத்திற்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய மாதிரி  கலவையைப் போட்டுக்   கட்டினால் போதும்” என்கிற மனநிலையுடனேயே  மக்கள் சமாதான முயற்சிகளை அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.

பாங்கொக், ஜெனிவா, டோக்கியோ என அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் பெற்ற தலைநகரங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. சமாதானப் பேச்சுவார்த்தைகளை இரண்டு பிரதான கட்டங்களாக நடத்த வேண்டும் எனப் புலிகள் திட்டமிட்டிருந்தார்கள்.

முதலில் மக்களுடைய அன்றாடப் பிரச்சனைகள் பற்றிய விடயங்களில் இணக்கப்பாடுகளை எட்டுவதும் அவற்றை நடைமுறைப் படுத்துவதுமே!

அடிப்படை அரசியல் விடயங்களைப் பேசக்கூடிய முக்கியமான கட்டத்திற்குச் சமாதானப் பேச்சுவார்த்தையை நகர்த்திச் செல்லும் என்பதில் புலிகள் தீர்மானமாக இருந்தார்கள்.

ஆனால் அரசாங்கமோ மக்களின் அன்றாட பிரச்சனைகளைப் பேசுகின்ற அதே நேரத்தில் ஒரு அரசியல் தீர்வையும் எட்டிவிட வேண்டும் சமஷ்டி முறையிலமைந்த ஒரு தீர்வுத் திட்டத்தைப் பரிசீலிக்க முடியும் என்கிற கருத்து புலிகளின் தலைமைப் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.

புலிகளின்  இத்தகைய  சமிக்ஞையை ஒரு பிடியாக எடுத்துக்கொண்டு, மேற்குலகமும் இலங்கையரசும் புலிகளை வழிக்குக் கொண்டுவரும் தந்திரமான காய்நகர்த்தல்களை நுட்பமாக மேற்கொண்டனர்.

தனது கையை மீறிச் செல்லும் அரசியல் விடயங்களால் சர்வதேச ராஜதந்திர முற்றுகை சிக்கலுக்குள் தான் மாட்டப்படுவதாக உணர்ந்த தலைவர் தனது வழக்கமான இறுக்கத்துடன், இலங்கையரசுக்கும் மேற்குலகத்திற்கும் அதிருப்தி தரக்கூடிய முடிவுகளை எடுக்கத் தொடங்கினார்.

சமாதான கீதத்தின் சுருதி கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்கத் தொடங்கியது. இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்து வதற்கு ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு அமைய, சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் நோர்வே மத்தியஸ்தம் வகிக்க முன்வந்தது.

Erik-Solheim_1மேற்கு நாட்டுப்   பிரதிநிதிகளைக் கொண்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த வகையில் மூன்றாம் தரப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த சர்வதேச சமூகம், சமாதான செயல் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான ராஜதந்திரத்தின் அடிப்படையில் தமக்கேயுரித்தான நவீன அணுகுமுறைகளின்படி தமது நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்தினார்கள்.

அதாவது போரில்  ஈடுபட்ட இருதரப்புக்கும் நடுவே தூது செல்வது, அவர்களுடைய விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவது, பேச்சுவார்த்தை மேசையின் நடுவிலே அமர்ந்திருந்து அனுசரணையாளராகச் செயற்படுவது என்பதோடு மட்டும் நின்றுவிடாது, போரில் ஈடுபட்ட இரு தரப்பு மக்கள் மத்தியிலும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும்விதமான வேலைகளைச் செய்ய விழைந்தனர்.

உதாரணமாகச் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே வர்த்தக உறவுகளை ஏற்படுத்துவது, பெண்கள் அமைப்புகளிடையே தொடர்புகளைக் கட்டியெழுப்புவது, மாணவர்களிடையே கல்வித் தொடர்புகளை ஏற்படுத்துவது, எனப் பல்வேறுபட்ட வகையில் பிரிந்திருந்த  சகல சமூகங்களையும்   ஒன்றிணைப்பதற்கான   திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் ஏற்படக்கூடிய இன நல்லுறவும் சமூக இணைப்புகளும் பிரச்சனையின் தீவிரத் தன்மையைக் குறைத்துச் சமாதானத் தீர்வின் அவசியத்தை நோக்கி அனைத்துத் தரப்பினரையும் இழுத்துச்செல்லும் என்பதுதான் அதன் சூத்திரமாக இருந்தது.

தொடரும்…

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

அன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா?? : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com