கோத்தபாய ராஜபக்சவின்  பிரஜாவுரிமையை கைவிடும்  முயற்சி,  இலங்கையில்  அமெரிக்க தளம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உட்பட பல விடயங்கள் குறித்து தனது கருத்தினை  இலங்கைகான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் வெளியிட்டுள்ளார்

டெய்லி மிரரிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கேள்வி- இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களில் எவ்வளவு தூரம் ஐஎஸ் அமைப்பிற்கு தொடர்புள்ளது என அமெரிக்கா கருதுகின்றது? இலங்கை ஏன் இலக்குவைக்கப்பட்டது?

பதில்- முதலில் இந்த தாக்குதல்கள் அர்த்தமற்றவை என்பதை நான் தெரிவிக்கவேண்டும்.

இந்த தாக்குதல்கள் தீயவை,முன்னொரு போதும் இடம்பெறாதவை  தாக்குதல்கள் இடம்பெற்ற தருணத்திலிருந்து எங்கள் சிந்தனைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் குறித்தவையாக காணப்படுகின்றன.

முழு உலகமும் இந்த தாக்குதல்களால் மனமுடைந்துபோயுள்ளது.இந்த தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் , அவ்வாறான விசாரணைகள் இடம்பெறுகின்றன இலங்கை அரசாங்கம் விசாரணைகளிற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அந்த ஒத்துழைப்பை வழங்குவது குறித்து அமெரிக்கா மகிழ்ச்சியடைந்துள்ளது

இந்த தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பு பகிரங்கமாக உரிமை கோரியது.

சர்வதேச அளவில் குழுக்கள் தீவிரவாதமயப்படுத்தப்படும் நிலை குறித்து நீங்கள் கருத்தில்கொள்ளவேண்டும். ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டும்,அல்லது வேறு எந்த அமைப்பினால் ஈர்க்கப்பட்டும் இது இடம்பெறுகின்றது.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் அனைவரும் இலங்கையர்கள் – இவர்களிற்கு உள்ள சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரணைகள் மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கின்றேன்.

ஆனால் இலங்கையை தளமாக கொண்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.

இந்த அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து  அரசாங்கமும் சமூகங்களும் மக்களும் வித்தியாசமாக சிந்திக்கவேண்டியுள்ளது

கேள்வி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அமெரிக்கா தானாக முன்வந்து உதவிகளை வழங்கியதா?

பதில்- இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளை தொடர்ந்தே நாங்கள் உதவி வழங்கினோம்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கைக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்கினார்.

இலங்கை அரசாங்கம் கோரியது  நாங்கள் வழங்கினோம்

கேள்வி- அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடுவது குறித்த விடயம் குறித்து இலங்கையில் விவாதங்கள் இடம்பெறுகின்றன-அமெரிக்க பிரஜையொருவர் இனிமேலும் அந்த நாட்டின் பிரஜையில்லை என அமெரிக்கா எந்த கட்டத்தில் தீர்மானிக்கும்?

பதில்- நீங்கள் பின்பற்றவேண்டிய நிர்வாக நடைமுறைகள் உள்ளன.அந்த நடைமுறைகளை பின்பற்றப்பட்டதும் அந்த பிரஜை அமெரிக்க பிரஜையில்லை என்ற நிலையேற்படும்.

குறிப்பிட்ட நபர் சிறந்தமனோநிலையில் உள்ளார்- அவர் அந்த முடிவை எடுக்க விரும்புகின்றார் என்பதை  தீர்மானிக்க நீண்ட நடைமுறைகள் உள்ளன.

அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து தூதரக அதிகாரியுடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.அது பல கட்டங்களாக இடம்பெறும்.

அதன் பின்னர் அந்த நபர் தூதரகத்திற்கு சமூகமளித்து சட்டஆவணத்தில் கைச்சாத்திடுவார்.

பிரஜாவுரிமையை துறப்பதற்கான சத்தியபிரமாணத்தை உரத்தகுரலில்  தூதரக அதிகாரிக்கு வாசிக்கவேண்டும் அதன் பின்னர் தூதரகம் அந்த ஆவணத்தை இறுதி ஆய்விற்காக வோசிங்டனிற்கு அனுப்பும்.அவர்கள் பிரஜாவுரிமை கைவிடப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்யலாம்.அது உறுதியானால் சத்தியப்பிரமாணம் செய்த நாளி;ல் இருந்து அது நடைமுறைக்கு வரும்.

அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடுவது என்பது நிர்வாக நடவடிக்கை,அது மிக தெளிவானது.நீங்கள் உங்கள் வரியை செலுத்தியிருந்தால் உங்களிற்கு எதிராக குற்றவியல் வழக்குகள் இல்லாத பட்சத்தில் அது முன்னெடுக்கப்படும்

கேள்வி- சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடாபில் அமெரிக்க பிரஜையொருவர் கலிபோர்னியா நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்தார்- அமெரிக்க தூதரகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இது தெரியுமா தொடர்ந்து கண்காணிக்கின்றீர்களா?

பதில்– பகிரங்கமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் நாங்கள் இது குறித்து அறிந்துள்ளோம்.நாங்கள் இந்த வழக்கை கண்காணிக்கவில்லை.நீதிமன்ற முறையில் உரிய விதத்தில்  உரிய நடவடிக்கைகள் இடம்பெறும்.

கேள்வி- அமெரிக்க பிரஜைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் காணப்பட்டால் அதன் காரணமாக அந்த நபர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடுவதை அமெரிக்க அரசாங்கம் தடுக்கலாமா?

பதில் தீர்வு காணப்படவேண்டிய இரு விடயங்கள் உள்ளன.

நாங்கள் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் குறித்து வித்தியாசத்தை பேணுகின்றோம்.

அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடும் விவகாரத்தில் சிவில் வழக்குகள் தாக்கம் செலுத்தாது.

அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடுவது என்பது நிர்வாக நடவடிக்கை,அது மிக தெளிவானது.நீங்கள் உங்கள் வரியை செலுத்தியிருந்தால் உங்களிற்கு எதிராக குற்றவியல் வழக்குகள் இல்லாத பட்சத்தில் அது முன்னெடுக்கப்படும்.

கேள்வி- பத்திரிகையாளர்களை கடத்திய -அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குழுவின் பொறுப்பாளராக செயற்பட்ட இலங்கையின் இராணுவ அதிகாரி புலத்வத்தே மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.இவ்வாறான நியமனங்கள் இலங்கைக்கு அமெரிக்கா பயங்கரவாத உதவிகளை வழங்குவதை கட்டுப்படுத்துமா?

பதில்- இது உண்மையானால் -இந்த நியமனம்  கடும் ஏமாற்றத்தை அளிக்கும்.

இந்த நபரிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதையும், கடந்தகால மனித உரிமைகளிற்கு தீர்வை காண்பதாக இந்த நாடு உறுதியளித்துள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளும்போது  இந்த நியமனம் ஏமாற்றத்தை அளிக்கும்.

இது நல்லிணக்கம் குறித்த விடயம் மாத்திரமல்ல,இது பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பானது . இதனை மதிக்கவேண்டும்.

கேள்வி- இலங்கையின் பூகோள அரசியல் அமைவிடம் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

இலங்கை கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை- முக்கிய கடல்வழிப்பாதைகள் இலங்கையின் பாதையில் உள்ளன.

பல நூறு வருடங்களாக இது வர்த்தகத்திற்கான பாதையாக காணப்படுவதுடன் கிழக்காசியாவை ஏனைய நாடுகளுடன் இணைத்துள்ளது.பல நாடுகளுடன் பொருளாதாரம் இணைக்கப்படுவதன் காரணமாக இது முக்கியமானது.

இலங்கை குறித்த எங்கள் கவனங்கள் இந்த விடயங்கள் தொடர்பானவையல்ல.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு- அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு சர்வதேச அளவில் நாங்கள் ஜனநாயக நாடுகளுடன் நட்பை கொண்டுள்ளோம்.

சர்வதேச அளவில் எங்கள் நாடுகள் அனைத்திற்கும் நன்மையளிக்க கூடிய விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட ஒழுங்குமுறைகளை பேணுவது குறித்து  ஆர்வமாக உள்ளோம்- அனைவருக்கும் சுதந்திரமான சமமான வாய்ப்பு அவசியம்.

நாங்கள் சர்வதேச ஸ்திரதன்மை பாதுகாப்பு குறித்தும் ஆர்வமாக உள்ளோம்.

நாங்கள் இலங்கை குறித்து பொதுவான நலன்களை கொண்டுள்ளோம்.

இலங்கையின் அமைவிடத்திற்கு அப்பால் நாங்கள் பலபல விடயங்கள் குறித்து அக்கறையாக உள்ளோம். மனித உரிமை மற்றும் கௌரவம் குறித்தும் நாங்கள் அக்கறையை கொண்டுள்ளோம்.

கேள்வி- இலங்கைக்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் இடையிலான உத்தேச உடன்படிக்கை குறித்த உண்மை என்ன?

பதில்- இலங்கை அரசாங்கத்துடன் வருகைதரும் படையினர் உடன்படிக்கை குறித்து நாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுளோம்.

1995 இல் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை தரமுயர்த்தும் ஒரு நடவடிக்கையே இது.

இது பெருமளவிற்கு நிர்வாக விநியோக நடைமுறைகள் தொடர்பானது.இலங்கைக்கு வருகை தரும் படையினர் இலங்கை படையினருடன் இணைந்து கூட்டு ஒத்திகையில் ஈடுபடுவது போன்ற விடயங்கள் குறித்து நாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தீர்மானத்திற்கு வருவோம்.

இலங்கையில் அமெரிக்காவின் நிரந்தர தளம் குறித்து ஊடகங்களில் பேசப்படுவது எனக்கு தெரியும்.இந்த உடன்படிக்கைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இது ஒத்திகைகளிற்காக அமெரிக்க படையினர் இலங்கையின் அழைப்பின் பேரில் வருகைதருவது தொடர்பானது.

கேள்வி- இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது என்பது உண்மையா?

பதில்-நாடுகள் பல நட்புநாடுகளையும் சகாக்களையும் கொண்டிருக்கவேண்டும் என்ற அடிப்படையில் அமெரிக்கா இலங்கை உட்பட நாடுகளின் நட்புறவை அணுகுகின்றது.

நாங்கள் சீனாவுடன் உறவுகளை கொண்டுள்ளோம் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் நட்புறை சீனாவுடன் பேணப்போகின்றன என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இந்த உறவுகள் எத்தகைய தன்மையை கொண்டிருக்கின்றன என்பதே எங்கள் கேள்வி?இந்த உறவுகளில் இறைமை குறித்த பரஸ்பர மதிப்பு பேணப்படுமா?உறவுகள் பரஸ்பரம் நன்மையளிப்பதாக அமையுமா?இவை வெளிப்படையான உறவுகளா?சமமானவையா என்பதே எங்கள் அக்கறைக்குரிய விடயம்