சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 184 இடங்களில் வருமான வரி சோதனை
ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் கர்நாடகா, தில்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உள்ள இடங்களிலும் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
நமது எம்ஜிஆர் அலுவலகம்
சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடாக இருந்த நமது எம்.ஜி.ஆர். இதழின் அலுவலகம், சசிகலாவின் உறவினரான விவேக் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், டிடிவி தினகரனின் மன்னார்குடி இல்லம்,. மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனின் இல்லம், டிடிவி தினகரன் பிரிவு அ.தி.மு.கவின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனைகள் நடந்து வருகின்றன.
ஜெயா டிவி அலுவலகம்
மேலும், சுரானா நிறுவன அலுவலகம், மிடாஸ் டிஸ்டில்லரிஸ் அலுவலகம், திருச்சி கே.கே. நகரில் உள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாளின் இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனைகள் நடந்துவருகின்றன.
விவேக் இல்லத்திலும் வருமான வரி சோதனை நடைப்பெறுகிறது.
விவேக் ஜெயராமன் இல்லத்திலும் வருமான வரி சோதனை நடைப்பெறுகிறது
ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை, அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டிவியும் அதிகாரபூர்வ நாளிதழாக நமது எம்.ஜி.ஆரும் இருந்து வந்தன. ஆனால், அவற்றின் கட்டுப்பாடு சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து வந்தது.
தற்போது சசிகலாவிற்கும், ஆட்சியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டுவிட்ட நிலையில் முதலமைச்சருக்கு எதிர் நிலையில் ஜெயா டிவியும் நமது எம்.ஜி.ஆரும் செயல்பட்டு வருகின்றன.
இவற்றின் நிர்வாகத்தை 28 வயதாகும் விவேக் ஜெயராமன் கவனித்து வருகிறார்.
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சென்னையில் உள்ள தனது வீட்டில் வரிமான வரி சோதனை நடைபெறவில்லை என்றும், இந்த சோதனைக்கு எல்லாம் தான் அஞ்சப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment