சவுதியில் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த பணிப்பெண் : சடலமாக அனுப்பிவைக்கப்பட்ட சோகம் : மஸ்கெலியாவில் தாயை பிரிந்து கதறும் பிள்ளைகள்! (படங்கள்)
மலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற ஹட்டன் – மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்ட பெண்மணி ஒருவரின் சடலம் 5 மாதங்களுக்கு பிறகு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி (41) என்ற மூன்று பிள்ளைகளின் தாய், தனது பிள்ளைகளை விட்டு, குடும்ப வறுமைக்காக சவுதி சென்றுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சவுதியின் றியாத் நகரில் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய இவர் அங்கு சித்திரவதைக்குள்ளானதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சவுதி அரேபியா றியாத் ஒலேய்யா பபா என்ற தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், உறுவினர்கள் சுட்டிக்காட்டினர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி இவர் உயிரிழந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து உறவினர்கள், குறித்த பெண்ணை அனுப்பிவைத்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றோடு தொடர்புகளை ஏற்படுத்தி சடலத்தை உடனடியாக கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.
சடலத்தை உடனடியான நாட்டுக்கு எடுத்துவர பல்வேறுப்பட்ட இடங்களில் உதவிகளை நாடியுள்ளனர்.
இந்நிலையில் 5 மாதங்கள் கடந்து இம்மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு நேற்று (27) இரவு கொழும்பில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று பிள்ளைகளின் தாய், சவுதி அரேபியா றியாத் ஒலேய்யா பபா என்ற தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எனினும் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், சடலம் மீண்டும் மரண பரிசோதனைக்கு கொழும்பில் வைத்து உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பில் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின்படி உயிரிழந்த பெண்ணின் இடுப்பு பகுதி மற்றும் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாலேயே குறித்த பெண் உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மலையக தோட்டப் பகுதியிலிருந்து குடும்ப பிரச்சினை மற்றும் வறுமையை கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கென செல்லும் பெண்களின் நிலை இவ்வாறு அமைவது சோதனைக்குறியது.
எனவே மலையக பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்கள் இவ்வாறான சம்பவங்களை அறிந்து, வெளிநாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்வதை தடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் எமது குடும்பத்தின் உறவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது குறித்த பெண்ணின் உறவினர்கள் ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளனர்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment