சூசையின் மனைவியை நடுக்கடலில் வெட்டி வீசியிருக்க முடியும்!!: சரணடைந்தவர்கள் உயிர்தப்பியமைக்கு இவரே சான்று!!
• வடக்கு மற்றும் கிழக்கில் பல்லாயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளின் கழுத்தில் சயனைட் பட்டியை அணிவித்த பிரபாகரனிடம் சயனைட் இருக்கவில்லை.
• விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாக்க அமெரிக்க முயற்சித்தது
• பொட்டு அம்மான் உயிரிழந்துள்ளமையை கண்ட பொதுமக்கள் உள்ளனர். ஆனால் அவரது சடலம் கிடைக்கவில்லை
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பாதுகாக்கும் அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைய செய்யப்பட்டது.
அதிலிருந்து முன்னேற்றம் கண்டு புலிகளின் அனைத்து மட்டத்திலான உறுப்பினர்களும் உயிரிழக்கும் வரை போர் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
சரணடைந்தவர்கள் அனைவரும் உயிர் தப்பினார்கள். வெள்ளைக்கொடியுடன் புலிகள் இயக்கத்தில் எந்தவொரு தலைவரும் வரவில்லை என வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின் முன்னாள் கட்டளையதிகாரியும் 53 ஆவது படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
சரணடைந்தவர்களை இராணுவம் படுகொலை செய்திருந்தால் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் மனைவி இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார்.
இராணுவம் நினைத்திருந்தால் அவரை நடுக்கடலில் வெட்டி வீசியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய வில்லை. எனவே எரிக் சொல்ஹெய்ம் என்பவர் பக்கச்சார்பான மோசமான மனிதர்.
வேறு நபர்களின் நோக்கங்களுக்காக இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மற்றுமொரு சதிகாரர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் 53 ஆவது படையணியின் தளபதியாக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன செயற்பட்டிருந்தார்.
புதுக்குடியிருப்பிலிருந்து முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் நோக்கி இறுதிக்கட்ட போர் நகர்த்தப்படும் போது 53 ஆவது படையணி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இறுதிக்கட்ட போர், அதற்கு பின்னரான போர்க் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தும் வகையில் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வி வருமாறு,
போரை முடிவிற்கு கொண்டு வந்த படைத் தளபதிகளில் ஒருவர் என்ற வகையில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?
ப : நாட்டில் மிகவும் துரதிர்ஷ்டமான காலப்பகுதியாகவே கடந்த கால போர் காணப்பட்டது. ஒவ்வொரு நாளும் மரண ஓலங்களே கேட்டன.
உயிரிழந்தவர்கள் படையினராகவும் இருக்கலாம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாகவும் இருக்கலாம். ஆனால் அனைவருமே இந்த நாட்டின் தமிழ், சிங்கள இளைஞர்கள். மூன்று தசாப்த காலம் நீடித்த அந்த போரில் தினமும் மரணங்களை தவிர வேறு எதுவும் நாட்டிற்கு கிடைக்கவில்லை.
விடுதலைப் புலிகள் தமது பிள்ளைகளை போருக்கு அழைத்து சென்று விடுவார்கள் என்ற அச்சநிலை வடக்கின் பெற்றோருக்கு காணப்பட்டது.
மறுபுறம் தென்னிலங்கையிலும் பெற்றோர் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அச்சப்பட்டனர். இதனால் தான் பல பாடசாலைகளில் பெற்றோர் காவலிருந்தனர். இவ்வாறான மிகவும் மோசமான அச்சம் நிறைந்த சூழலில் இலங்கையின் எதிர்காலமே சூன்யமாகும் வகையிலேயே கடந்த காலப்போர் நீண்டிருந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து இலங்கைக்கு அமைதியை பெற்றுக் கொடுக்க எம்மால் முடிந்தது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியிலிருந்து அனைத்து இன மக்களின் மத்தியிலும் நம்பிக்கை மலர்ந்தது. அன்றிருந்து இன்று வரை எவ்விதமான பயங்கரவாத நடவடிக்கைகளும் நாட்டில் ஏற்படவில்லை.
சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதற்கு சிங்கள மற்றும் தமிழ் சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களே காரணமாகின்றனர். எனது 35 வருட இராணுவ சேவைக் காலத்தில் 25 வருடங்களுக்கும் மேலாக வடக்கு மற்றும் கிழக்கிலேயே பணியாற்றியுள்ளேன்.
அந்த வகையில் அங்கு வாழும் தமிழர்களின் உணர்வுகளை என்னால் உணர முடிந்துள்ளது. அந்த அப்பாவிகளின் பிள்ளைகள் துப்பாக்கியை கையிலெடுக்க சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் தவறான வழிநடத்தல்களே காரணமாகியது.
பிற்காலத்தில் இது பெரும் போராக வெடித்த போது அதனை கட்டுப்படுத்த போராட வேண்டிய நிலை எமக்கு எற்பட்டது.
போரில் சிங்களம், தமிழ் என்ற பேதம் இல்லை. தென்னிலங்கையிலும் சிங்கள பயங்கரவாத செயற்பாடுகள் காணப்பட்ட போது அதனையும் நாங்கள் அழித்தோம்.
இதன் போதும் கூட சிங்கள இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதே போன்று தான் வடக்கு மற்றும் கிழக்கிலும் போரில் பல்லாயிரம் தமிழ், இளைஞர் யுவதிகள் உயிரிழந்தனர். விடுதலைப் புலிகள் கூட தமக்கு எதிராக செயற்பட்ட எத்தனையோ தமிழ் இளைஞர்கள் மற்றும் தலைவர்கள் என படுகொலை செய்தனர்.
இது போதாது என்று இந்திய இராணுவம் இலங்கை வந்து இளைஞர்களை கொலை செய்ய தொடங்கியது. உயிரிழந்தவர்கள் தமிழர்களா, சிங்களவர்களா என்பது பிரச்சினை இல்லை.
அவர்கள் இலங்கையர்கள் என்ற பார்வையே மிகவும் முக்கியமானது. இவ்வாறு பல குழப்பங்களுக்குள் சிக்கியிருந்த போரை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டை புதிய பாதையில் வழி நடத்த ஒத்துழைப்பு வழங்கினோம்.
இறுதிக்கட்ட போரில் சுமார் 6 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்தனர். மேலும் 6 ஆயிரம் வரையிலான விடுதலைப் புலி உறுப்பினர்களை அகதி முகாம்களில் மக்களோடு மக்களாக இருக்கையில் கைது செய்தோம்.
இவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தினோமே தவிர யாரையும் கொலை செய்யவில்லை. மாறாக அவர்களுக்கு வாழ்வதற்கான சூழலை கொடுத்தோம். எனது படையணி மாத்திரம் 4 ஆயிரம் வீடுகளை வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைத்துக் கொடுத்துள்ளது.
ஆனால் காயத்தை ஆறவிடாமல் நோண்டும் யாசகனை போன்று இரண்டு இனங்களிலும் உள்ள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் பகைமையை தோற்றுவித்து வருகின்றனர்.
35 வருடகாலமாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பணிபுரிந்த இராணுவ அதிகாரி என்ற வகையில் அந்த மக்கள் தனி ஈழம் கோருகின்றனர் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு தேவை தமிழீழம் அல்ல. பாதுகாப்புடனும் மகிழ்ச்சியாகவும் சுய கௌரவத்துடனும் வாழக்கூடிய சூழலே அந்த மக்களுக்கு தேவைப்படுகின்றது.
இதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்காது சுய அரசியல் தேவைகளுக்காக தமிழ் மக்களை குழப்பியமை பெரும் போருக்கு வித்திட்டது.
அவ்வாறானதொரு தூண்டுதல் மீண்டும் ஏற்படக்கூடாது. அதிகாரத்தை பகிர்ந்து பிரதேசங்களை பிரித்துக்கொள்ளும் அளவிற்கு இலங்கை இந்தியா அல்ல.
இதுவொரு சிறிய நாடு. அதிகாரத்தை பகிர்ந்து நல்லிணக்கத்தை எவ்வாறு ஏற்படுத்த முடியும்? சாத்தியமற்ற விடயத்திற்கு மல்லுக்கு நிற்கக் கூடாது.
புதிய அரசியலமைப்பு விவகாரமும் அதனை போன்று ஒன்றுதான். காணி மற்றும் பொலிஸ் உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்படும் போது அவர்கள் சுயமாக வாழ ஆரம்பிப்பார்கள்.
இதன்போது உத்தியோகபூர்வமற்ற வகையில் நாடு பிளவு பட்டு இருக்கும். எனவே தான் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் புதிய அரசியலமைப்பிற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றேன்.
போரின் இறுதி தருணங்கள் பல்வேறு சர்ச்சைகளுக்கும் மர்மங்களுக்கும் வித் திட்டுள்ளது. அந்த வகையில் இறுதிக்கட்ட போரின் போது உங்களுக்கு கட்டளை வழங்கி யது யார்? அப்போதைய இராணுவ தளபதியாக பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாட்டில் இருக்கவில்லை என்பதால் தான் இந்த கேள்வியை நான் கேட்கின்றேன்?
ப : இறுதிக்கட்ட போர் தீர்க்கமான நிலைமையில் காணப்பட்ட போது அப்போதைய இராணுவ தளபதி சீனாவில் முக்கிய கடமையொன்றின் நிமித்தம் சென்றிருந்தார்.
ஆனால் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு முறை எம்முடன் தொடர்பில் இருந்து தேவையான கட்டளைகளை எமக்கு தொடர்ந்தும் வழங்கினார். எவ்வாறு இறுதிக்கட்ட போரை முன்னெடுப்பது போன்ற விடயங்களை எம்முடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார்.
எனவே எமக்கு யார் கட்டளை வழங்கினார்கள் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அப்போதைய இராணுவ தளபதி முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடனும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவுடனும் கலந்துரையாடிய பின்னரே எம்முடன் தொடர்பு கொண்டு கள நிலைமைகளை ஆராய்ந்து நெறிப்படுத்தினார்.
எம்மை வேறு யாரும் வழி நடத்தவில்லை. இறுதிக்கட்ட போரில் ஒட்டுமொத்த இராணுவத்தையும் வழிநடத்தியவர் அப்போதைய இராணுவ தளபதி தான்.
வன்னி பாதுகாப்பு படைகளின் 53 ஆவது படைய ணியே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உடலை கண்டு பிடித்தது. அந்த படையணிக்கு நீங்களே தலைமை தாங்கினீர்கள். அந்த வகையில் அவர் எவ்வாறு உயிரிழந்திருந்தார் என்பதை உங்களால் கூற முடியுமா ?
ப : பிரபாகரனின் உடலை கண்டுபிடித்த போது அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் ஒரு கருத்தை முன் வைத்தேன். அதாவது இலங்கை வரலாற்றில் மிகவும் கொடூரமான மனிதன் இராணுவத்தின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார் என குறிப்பிட்டேன்.
பிரபாகரனின் உடலை கண்டுபிடித்த போது அவரது அடையாள அட்டையும், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றுமே கிடைத்தன.
இதைத்தவிர வேறு ஒன்றும் அவரிடம் இருக்க வில்லை. உடலை கண்டுபிடித்த போது முதலில் தொலைபேசியில் அறிவித்தோம். பின்னர் களநிலைமை அறிக்கையை எழுத்து மூலமாக அறியப்படுத்தினோம்.
இந்த அறிக்கை பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்திய முதலாவது ஆவணமாகும். இதில் முழுவிபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவலையான விடயமும் உள்ளது.
“அதாவது வடக்கு மற்றும் கிழக்கில் பல்லாயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளின் கழுத்தில் சயனைட் பட்டியை அணிவித்த பிரபாகரனிடம் சயனைட் இருக்கவில்லை.”
தலையில் துப்பாக்கி ரவை தாக்கி உயிரிழந்து கிடந்தார். ஆனால் அவருடன் இருந்த சிலர் சயனைட் உட்கொண்டு உயிரிழந்த நிலையில் உடல்களை கைப்பற்றியிருந்தோம்.
மனிதாபிமான நடவடிக்கையாக அடையா ளப்படுத்தி இறுதிக்கட்ட போரை முன்னெ டுத்திருந்தீர்கள். அவ்வாறானால் சர்வ தேசம் இராணுவத்தின் மீது போர்க் குற்றங்களை சுமத்துவதற்கு காரணம் என்ன ?
ப : உண்மையில் இதுதான் மிகவும் மோசமான நிலைமையாகும். எமக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தும் சர்வதேச நாடுகள் உலகில் எந்தளவு போர்க்குற்றங்களை செய்துள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
ஈராக்கை பாருங்கள், சதாம் ஹுசைன் அந்த நாட்டை ஆட்சி செய்தார். கடின ஆட்சி முறைமை என்றாலும் மக்களுக்கு வாழ்வதற்கு சுதந்திரம் இருந்தது. ஆனால் இன்று அந்த மக்கள் நிம்மதியாக வாழ முடியாதுள்ளனர்.
லிபியாவின் கடாபி அந்த நாட்டை எந்தளவு வளமாக ஆட்சி செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்று அந்த நாட்டின் நிலைமையை பாருங்கள்.
சிரியாவின் நிலைமையும் அதே தான். ஆப்கானிஸ்தானில் எடுப்பதற்கு ஒன்றுமே இல்லாத நிலையே காணப்படுகின்றது. எமக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் சர்வதேசம் மேற்கூறிய நாடுகளின் அழிவிற்கும் காரணமாகியுள்ளது.
போரில் சிக்கி பேரழிவை சந்தித்த இலங்கை இன்று அமைதிக் காற்றை சுவாசிக்கின்றது. ஆனால் நாங்கள் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றோம். இதிலும் மிகவும் மோசமான நிலைமை எதுவென்றால் சர்வதேசத்தின் தாளத்திற்கு நாட்டின் தலைவர்களும் ஆடுவதாகும்.
இறுதிக்கட்ட போரில் குற்றங்களே இடம்பெறவில்லை என்று நீங்கள் கூறு கின்றீர்கள். ஆனால் அப்போதைய இரா ணுவ தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆதாரம் உள்ளதாக கூறு கின்றாரே?
ப : அந்த விடயம் தொடர்பில் நான் கருத்து கூற விரும்பவில்லை. பிரச்சினையுடன் தொடர்புபட்ட இருவருமே எனது இராணுவ தளபதிகள். இராணுவ ஒழுக்கம் உள்ள அதிகாரிகள் என்ற வகையில் அவர்களின் கருத்துக்கள் குறித்து விளக்கமளிக்க விரும்பவில்லை. தனிப்பட்ட கோப தாபங்களில் இராணுவத்தை பலியாக்கக் கூடாது. இந்த முறை ஜெனிவாவிலும் இந்த விடயம் பேசப்பட்டது. இதனால் நாட்டிற்கு பாரிய இழுக்கு ஏற்பட்டுள்ளது.
எத்தகைய முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும் இராணுவத்தை பாதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள கூடிய விடயமல்ல.
அதே போன்று குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ள ஜகத் ஜயசூரிய இறுதிக்கட்ட போரில் நேரடியாக தொடர்புபட்டு செயற்படவில்லை. மாறாக இராணுவத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதே அவருக்கு வழங்கப்பட்ட பணியாக காணப்பட்டது.
இராணுவத்திற்கு தேவையான உணவு மற்றும் காயமடைந்த வீரர்களை கொண்டு செல்வது உள்ளிட்ட உதவிகளையே ஜெனரல் ஜகத் ஜயசூரிய வழங்கினார்.
எனவே போர்க்குற்றம் செய்யக்கூடிய சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு முரணாவையாகும்.
சர்ச்சைக்குரிய ஜோசப் சித்திரவதை முகாம் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் கட் டுப்பாட்டில் இருந்ததாக அவருக்கு எதிராக சர்வதேசத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதே?
ப : வன்னி பாதுகாப்பு கட்டளை தலைமையக கட்டுப்பாட்டிற்குள் எவ்விதமாக சித்திரவதை முகாம்களும் இருக்கவில்லை. ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு பின்னர் வன்னி கட்டளை தளபதியாக நானே செயற்பட்டேன். இவர்கள் கூறுவது போன்று சித்திரவதை முகாம்கள் காணப்பட்டிருந்தால் எனக்கு தெரிய வந்திருக்கும். ஆகவே அவ்வாறு ஒன்று இருக்க வில்லை என்பதே உண்மையாகும்.
“எளிய” என்ற அமைப்பின் நோக்கம் என்ன?
ப : நாட்டை துண்டாடும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற உத்தேச புதிய அரசியலமைப்பை தோல்வியடைச் செய்வதே “எளிய” அமைப்பின் நோக்கமாகும். புரட்சி என்று செய்வது எமது நோக்கம் அல்ல.
மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றோம். பொதுமக்களுக்கு உண்மைகளை மறைத்து புதிய அரசியலமைப்பு விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே உண்மைகளை நாட்டிற்கு வெளிச்சப்படுத்துவதே “எளிய” அமைப்பின் பணியாக காணப்படுகின்றது. இது அரசியல் விடயம் அல்ல. அரசியலுக்கு வர வேண்டிய தேவையும் எமக்கு இல்லை.
தொடர்ந்தும் நாட்டிற்கு சேவையாற்ற வேண்டியது எமது கடமையாகும். இராணுவ அதிகாரி என்ற வகையில் இந்த அமைப்பில் இணைந்து மக்களை தெளிவுபடுத்தி வருகின்றேன்.
அதேபோன்று பல துறைசார் நிபுணர்கள் எம்முடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவும் எம்முடன் இணைந்து செயற்படுகின்றார். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவாரா என்று தெரியவில்லை.
மனிதாபிமான நடவடிக்கையில் சர்வதே சத்தின் செயற்பாடுகள் எவ்வாறு காணப் பட்டன?
ப : சர்வதேசத்திடமிருந்து எவ்விதமான ஒத்துழைப்புகளையும் நாங்கள் எதிர்பார்க்க வில்லை. பிரபாகரன் இறுதியில் பிடித்து வைத்திருந்தது எமது நாட்டு மக்களை. அவர்களை மீட்டெடுக்கும் போராட்டத்தையே மனிதாபிமான நடவடிக்கையாக முன்னெடுத்திருந்தோம்.
பல இலட்சம் மக்களை மீட்டெடுத்தோம். ஐ.நா. புகைப்பட ஆதாரங்கள் புலிகள் பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதை உறுதிப்படுத்தின.
ஆனால் போர் வலயத்திற்குள் சிக்குண்டிருந்த அனைத்து மக்களையும் மீட்டெடுத்தோம். மெனிக்பாம் முகாம் உள்ளிட்ட பல முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து தேவையான அனைத்து உதவிகளையும் இராணுவம் செய்தது.
இதன்போது சர்வதேச அமைப்புகள் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கின. இதனை தவிர இறுதிக்கட்ட போரில் சர்வதேசம் எமக்கு எவ்விதமான ஒத்துழைப்புகளையும் வழங்கவில்லை.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாக்க அமெரிக்க முயற்சித்த தாக “ரோட் டு நந்திக்கடல்” என்ற நூலில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்?
ப : புலிகளின் தலைவர் பிரபாகரனை மூன்றாம் தரப்பிடம் சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்திற்கு அமெரிக்கா பாரியளவில் அழுத்தங்களை கொடுத்தது.
இதன் போது சர்வதேசம் தொடர்பில் எமக்கிருந்த நம்பிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இராணுவத்திடம் சரணடைவதற்கு பிரபாகரனுக்கு வாய்ப்பளிக்க முடியும். ஆனால் மூன்றாம் தரப்பின் பிரசன்னம் ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக அப்போது அறிவிக்கப்பட்டது.
ஆனால் அமெரிக்கா அச்சுறுத்தும் வகையில் மூன்றாம் தரப்பிடம் பிரபாகரனை சரணடைவதற்கு வாய்ப்பு அளிக்குமாறு குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் ஏற்படக்கூடிய அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கு தயாரான நிலையிலேயே இறுதிக்கட்ட போரை முன்னெடுத்தோம். சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வு பெற்று வாழ்கின்றனர். இவர்கள் யாரையும் நாங்கள் கொலை செய்யவில்லை.
உதாரணமாக விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் மனைவி கடலில் சிறிய படகில் தப்பித்து செல்லும் போது கைது செய்யப்பட்டார்.
அப்போது நினைத்திருந்தால் அவரை படுகொலை செய்து கடலில் போட்டிருக்க முடியும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. அவரை உரிய வகையில் கைது செய்து சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று தான் தமிழ்ச்செல்வனின் மனைவியும். இன்றும் அவர் உயிருடன் உள்ளார். அமெரிக்காவின் தேவை மூன்றாம் தரப்பிடம் சரணடைய செய்வதாகும். அதற்கான வாய்ப்பை நாங்கள் வழங்கவில்லை.
அப்படியானால் வெள்ளைக் கொடியுடன் யாரும் வரவில்லை என்றா கூறுகின்றீர்கள்?
ப : வெள்ளைக் கொடியுடன் வந்தவர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு தற்போதும் உயிர்வாழ்கின்றனர். ஆனால் சர்ச்சையை வெளிப்படுத்தும் வகையில் கூறப்பட்ட வெள்ளைக்கொடி விவகாரம் நானறிய இடம்பெறவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் யாரும் வெள்ளைக்கொடியுடன் வரவில்லை என்பதே உண்மையாகும்.
புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடி யுடன் சரணடைய விரும்பியமை குறித்து நோர் வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடகம் ஒன் றுக்கு கருத்து தெரிவித்திருந்தார்?
ப : நந்திக்கடல் போர்க்களத்தில் எரிக் சொல்ஹெய்ம் இருக்கவில்லை. அங்கிருந்தது நான். எனவே வெள்ளைக்கொடியுடன் வந்தார்களா இல்லையா என்பது எனக்கே தெரியும்.
எரிக் சொல்ஹெய்மிற்கு தெரிவதற்கான வாய்ப்பே இல்லை. எரிக் சொல்ஹெய்ம் என்பவர் பக்கச்சார்பான மோசமான மனிதர். வேறு நபர்களின் நோக்கங்களுக்காக இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மற்றுமொரு சதிகாரரே எரிக் சொல்ஹெய்ம் என்பவர். அவரது பெயரை சொல்லவே நாங்கள் விரும்ப வில்லை.
இறுதிக்கட்ட போரின் போது புலிகளின் தலைவர்கள் பலர் கடல் வழியாக தப்பித்து சென்றதாக கூறப்படுகின்றது. அதன் உண்மைத்தன்மை என்ன ?
ப : தப்பித்து செல்வதற்கான வாய்ப்புகள் யாருக்கும் இருக்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது கடினமான அமைப்பாகும். அனைத்து தலைவர்களின் சடலங்களையும் இராணுவம் கைப்பற்றியது.
ஆனால் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளராக இருந்த பொட்டு அம்மானின் சடலம் மாத்திரம் இராணுவத்திற்கு கிடைக்கவில்லை.
பொட்டு அம்மான் உயிரிழந்துள்ளமையை கண்ட பொதுமக்கள் உள்ளனர். ஆனால் அவரது சடலம் கிடைக்கவில்லை. பொட்டு அம்மான் தப்பித்து உயிருடன் இருப்பாராயின் போர் முடிவடைந்து 7 வருடங்களாகியும் ஏன் வெளியில் வரவில்லை? உயிருடன் இல்லை என்பதாலேயே பொட்டு அம்மான் வெளியில் வரவில்லை.
படகில் தப்பித்து சென்றதாக கூறப்படுவதில் உண்மையில்லை. சில சந்தர்ப்பங்களில் சாதாரண மட்ட புலி உறுப்பினர்கள் சிறியளவில் தப்பித்து சென்றிருக்கலாம். ஆனால் உயர் மட்டத்தினர் யாரும் அவ்வாறு தப்பித்து செல்ல வாய்ப்பு இல்லை.
நேர்காணல் : லியோ நிரோஷ தர்ஷன்
There are no comments at the moment, do you want to add one?
Write a comment