ilakkiyainfo

ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை)

ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன்  (கட்டுரை)
August 21
00:10 2019

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் களம், சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.

சில நாள்களுக்கு முன்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பெரும் மாநாட்டில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னுடைய தம்பியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷ களம் காண்பார் என்று, மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்திருந்தார். இது, பலரும் எதிர்பார்த்த அறிவிப்புத்தான்.

ராஜபக்‌ஷ குடும்பத்தைத் தாண்டி, வேறு நபரைத் தெரிவு செய்வதில், ராஜபக்‌ஷ குடும்பம் தயாராகவில்லை என்பதை, இது சுட்டி நிற்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய கட்சி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிறங்குவார் என்பதை அறிவிப்பதில், பெரும் இழுபறி நிலையைச் சந்தித்து நிற்கிறது.

வழமை போலவே, ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி தனித்துக் களம் காண்பதைவிட, பெரும் கூட்டணியாகக் களம் காணும் தந்திரோபாயத்தையே முன்வைத்திருக்கிறார்.

ஆனால், அத்தகைய கூட்டணியொன்றின் அமைப்பு தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில அதிருப்திகள் பலமாக ஏற்பட்டிருப்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

saji-800x445

குறித்த கூட்டணிக்கு, கொள்கையளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாக இருந்தாலும், சஜித் பிரேமதாஸ தரப்பு, குறித்த கூட்டணியானது ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிகளான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, பழனி திகாம்பரம், மனோ கணேசன் உள்ளிட்டவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி மீதான கட்டுப்பாட்டை, எவ்வளவு தூரம் விரும்பப் போகிறார்கள் என்ற கேள்வி, தொக்கி நிற்பதைக் காணலாம்.   

கூட்டணிப் பிரச்சினை ஒருபுறமிருக்க, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இழுபறிநிலை தொடர்வதைக் காணலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலான ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாஸதான் என்ற பிரசாரத்தை, சஜித் பிரேமதாஸ தரப்பு, கடுமையாக முன்னெடுத்து வருகிறது. இது சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக்குவதற்கான அழுத்தத்தை கட்சித் தலைமை மீது, கடுமையாக ஏற்படுத்தி வருகிறது.

மறுபுறத்தில், கரு ஜயசூரியவின் பெயரும் அவ்வப்போது பேசப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், ‘உயிர்த்தெழுந்த ஞாயிறு’ தாக்குதல்களைத் தொடர்ந்து, அரசாங்கம் மீது ஏற்பட்ட அதிருப்தி அலை காரணமாக் தனது ஜனாதிபதித் தேர்தல் இலட்சியங்களை, அவர் கைவிட்டுவிட்டதை உணரக் கூடியதாகவுள்ளது.

_107131516_73a8204a-465a-4a09-8987-6ddbd4675d6d

இன்னொருபுறத்தில், மைத்திரிபால சிறிசேனவையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளாத விடயங்களாக மாறியுள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.  

ஆகவே, இந்தச் சூழலில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர் சஜித் பிரேமதாஸ என்று அமைவதற்கான வாய்ப்புகளே, தற்போது தென்படுகிறது.

இந்த நிலையில், இந்த இருவருக்கிடையிலான போட்டியில், தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நிலை என்ன என்பது தொடர்பில், நாம் சிந்திக்க வேண்டியதாகவுள்ளது.

2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில், சிறுபான்மையினரின் நிலைப்பாடு என்பது, அத்தனை பிரச்சினைக்கு உரியதாகவோ, சிக்கலானதாகவோ இருக்கவில்லை.

அன்று மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், முஸ்லிம்கள் கடும் வெறுப்பையும் வன்முறையையும் சந்தித்திருந்தார்கள்.

அத்துடன், தமிழர்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை தொடர்பில், எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மறுபுறத்தில், ராஜபக்‌ஷ குடும்ப ஆட்சிக்கு எதிராகச் சிங்கள மக்களிடையேயும் கணிசமானளவு எதிர்ப்பலை ஏற்பட்டிருந்தது. ஆகவே, அந்த எதிர்ப்பலையுடன் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதைவுறாது பேணப்பட்டன.

_105685643_14490a4f-b53f-4ff1-8bfa-bf01bb1b65f1

அதுபோலவே, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக, ஏனைய கட்சிகள் பொதுவேட்பாளராக, மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தமையால், கட்சி ரீதியாக வாக்குகள் சிதைவடையாது, மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றிருந்தார்.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, ‘சிறுபான்மையினர், தன்னைத் தோற்கடித்துவிட்டார்கள்’ என்ற தொனியில், மஹிந்த கருத்து தெரிவித்திருந்தமை, இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. ஆனால், அதில் உண்மை இல்லை.

அன்றைய கால அமைவு, சூழல், சிறுபான்மை இனத்தவரின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றி இருந்ததேயன்றி, சிறுபான்மையினர் ஒன்றிணைவதால் மட்டும், ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத் தீர்மானித்துவிட முடியாது.

இலங்கையில் சிறுபான்மையினரின் வாக்குவங்கி என்பது, ஏறத்தாழ 25 சதவீதம் எனலாம். இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழரின் ஒட்டுமொத்த இனவிகிதாசாரத்தைச் சேர்த்தாலும், அது ஏறத்தாழ 15 சதவீதமாகவே அமைகின்றது. இத்தோடு, முஸ்லிம் மக்களைச் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக ஏறத்தாழ 25 சதவீதமாகவே அமையும்.   

50 சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகளைப் பெறுபவர், வெற்றியடைவார் என்ற ரீதியில் அமையும் தேர்தலொன்றில், ஏறத்தாழ 75 சதவீதமான இனவாரி வாக்கு வங்கியைக் கொண்டு, பெரும்பான்மை இனமே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி என்பதுதான் வௌ்ளிடைமலை.

அந்தப் பெரும்பான்மை, ஏறத்தாழ இருசம கூறுகள் அளவுக்குப் பிரிந்து நிற்கும் போது மட்டும்தான், 2015 இல் நடந்ததைப் போல, சிறுபான்மையினர் தீர்மானிக்கும் சக்திகளாக மாறுகிறனர். இந்த அடிப்படையில் நாம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை அணுகுவது அவசியமாகும்.

_108276611_gota06

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காகக் கடும் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ, சஜித் பிரேமதாஸ ஆகியோரின் பரப்புரைகளையும் பிரசாரத் தந்திரோபாயத்தையும் நாம் அவதானிக்கும் போது, அவை ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியை மய்யப்படுத்தியதாக அமைவதை, உணரலாம்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், கூட்டணி என்பதை அவர்கள் பெரிதாகக் கருதவில்லை. ராஜபக்‌ஷ என்ற ஆளுமையும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத வாக்குவங்கியும் தான், அவர்களது அரசியல் மூலதனம்.   

இதற்கு மேலதிகமாக, தற்போது ஆட்சியிலுள்ள ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ மீது, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தி அலையும் உயிர்த்தெழுந்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச அலையும் அவர்களுக்குப் பெருஞ்சாதகமாக இருக்கிறது.

 சிறுபான்மையினர் வாக்குவங்கியின் ஆதரவு என்று பார்த்தால், மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிக்கும் தமிழர்கள், முஸ்லிம்கள் கூட கோட்டாபயவை ஆதரிப்பார்களா என்ற கேள்வி, நிச்சயமாக நிலவுகிறது.

ஆகவே, சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்ற எடுகோளிலேயே, அவர்களது தேர்தல்த் தந்திரோபாயத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவை, அவர்களுக்கு இருக்கிறது.

ஏறத்தாழ 75 சதவீதமான சிங்கள வாக்குகளில், மூன்றில் இரண்டுக்கு அதிகமாகக் கைப்பற்றும் பட்சத்தில், இந்தத் தேர்தலை வெற்றிகொள்ள முடியும் என்பது அவர்களது கணக்காக இருக்கும்.

கிடைக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளெல்லாம், ‘போனஸ்’ ஆகத்தான் கருதப்பட முடியுமேயன்றி, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தையும் சிறுபான்மையினர் நலனையும் ஒரே நேரத்தில் சுவீகரிக்க முடியாது.

ஆகவே, ராஜபக்‌ஷவின் தேர்தல் தந்திரோபாயம் என்பது, மிக வௌிப்படையானதாக இருக்கும் நிலையில், அதற்கு மாற்று என்ன, மாற்றாக நிற்கப்போகும் ஐக்கிய தேசியக் கட்சியின் அல்லது அதன் தலைமையில் அமையும் கூட்டணியின் தந்திரோபாயம், அணுகுமுறை என்ன என்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகிறது.

ஐ.தே.க, எந்த வகையான மாற்றைத் தரப்போகிறார்கள்? அது 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கவருமா என்பதுதான், இங்கு முக்கிய கேள்வி.

ஐ.தே.க அல்லது அதன் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளராகக் கூடிய வாய்ப்பு, அதிகம் உள்ளவராகக் கருதப்படும் சஜித் பிரேமதாஸவின் ஆரம்பப் பிரசாரப் போக்கைக் கவனிக்கும் போது, அது ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியை மய்யப்படுத்தியதாக இருப்பதை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

அண்மையில், அவர் ஆற்றிய உரையொன்றில், “இலங்கை முழுவதும் 1,000 விகாரைகள் அமைக்கப்படும், புனரமைக்கப்படும்” என்று பேசியிருந்தார்.

விகாரைகள் அமைப்பது, புனரமைப்பது என்பது ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் அடிப்படைகளில் ஒன்று.

விகாரைகளுக்குப் பக்தர்கள் வருகிறார்களோ இல்லையோ, நாடெங்கிலும் மூலை முடுக்கெங்கும் விகாரைகளும் புத்தர் சிலைகளும் எழுப்பப்படுவதானது, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் அடையாள அரசியலைப் பொறுத்த வரையில் முக்கியமானதாகிறது.

மறுபுறத்தில், சிறுபான்மையினர் பிரச்சினைகள் பற்றி, சஜித் இத்தனை நாள்களில் அதிகமாகவும் அர்த்தம் மிக்கதாகவும் பேசியதில்லை என்பதையும், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில், சஜித் ஒருவகையான ‘கள்ள மௌனம்’ சாதித்தமையைக் காணலாம்.

இனப்பிரச்சினை அரசியலைப் பேசாத சஜித், பொருளாதார ரீதியிலான அணுகுமுறையை, அரசியலில் கையாண்டார். இது இனப்பிரச்சினை பற்றிய அவரது அமைதியை, அழகாக மறைக்கத் துணைபோனது.

வீடமைப்பு, சமூக உதவிகள் எனப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தும் அணுகுமுறையையே சஜித் கையாண்டார்.

இதுகூட, அவர் புதிதாக உருவாக்கிக் கொண்டதல்ல; அவரது தந்தையார் பிரேமதாஸ முன்னெடுத்த திட்டங்களின் தொடர்ச்சியைத் தான், சஜித் முன்னெடுத்து வருகிறார்.

ஆகவே, இனப்பிரச்சினை, சிறுபான்மையினர் நலன் தொடர்பில், சஜித்தினுடைய நிலைப்பாடு என்னவென்பது, இன்னமும் கேள்விக்குறியாகவே நிற்கிறது.

மறுபுறத்தில், தேர்தல் வெற்றிக்காக ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை சஜித்தும் ஐக்கிய தேசியக் கட்சியும் முன்னிறுத்துமானால், அது கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குப் பலமான மாற்றாக அமையாது.

ஏனெனில், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அரசியலில் ராஜபக்‌ஷக்களை எவராலும் தோற்கடிக்கமுடியாது; அதில் அவர்களே ராஜாக்கள்.   

ஆகவே, அவர்களுடைய விளையாட்டை, அவர்கள் பாணியில் விளையாடி அவர்களைத் தோற்கடிக்க நினைப்பது, அரசியல் சிறுபிள்ளைத்தனம்.

சஜித்தும் ஐ.தே.கட்சியும், ராஜபக்‌ஷக்களின் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத மய்ய அரசியல் அணுகுமுறையையே கையாளப் போகிறார்கள் என்றால், மறுபுறத்தில் தங்களுடையது என்று, அவர்கள் கருதும் சிறுபான்மையினரின் வாக்குவங்கியை இழக்கப்போகிறார்கள்.

‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே, சஜித்தும் ஐ.தே. கட்சியும் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது என்றால், வெறுமனே சிறுபான்மையினத் தலைமைகளைக் கூட்டணியில் வைத்திருப்பதால் மட்டும், அல்லது அவர்களின் ஆதரவைப் பெறுவதால் மட்டும், சிறுபான்மையின மக்கள் அவர்களுக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று நம்பினால், அந்த நம்பிக்கை வீணானதாகும்.

ஏற்கெனவே, 2015 ஆம் ஆண்டு, வழங்கிய வாக்குறுதிகளே நிறைவேற்றாத பட்சத்தில், தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் கடும் அதிருப்தியிலுள்ள வேளையில், மீண்டும் ‘இரு பிசாசில் எந்தப் பிசாசு நல்ல பிசாசு’ என்று தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலைத்தான், சிறுபான்மையினர் மீண்டும் சந்திக்கப்போகிறார்கள் என்று தோன்றுகிறது.

இந்தப் பிசாசு விளையாட்டில் அதிருப்தி கொள்ளும் சிறுபான்மையின மக்கள், இந்தத் தேர்தலில் 2015 ஆம் ஆண்டைப் போன்றதான எழுச்சியை, மீண்டும் காட்டாது விட்டால், அது சஜித்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமே வீழ்ச்சியாக அமையும்.

ஆகவே, ராஜபக்‌ஷக்களை எதிர்க்க, அவர்களுடைய வழியையே அப்படியே பின்பற்றாது, சரியான மாற்றை உருவாக்க வேண்டிய கடப்பாடு சஜித்துக்கும் ஐ.தே.கக்கும், அதன் கூட்டணியில் இடம்பெறப்போகிறவர்களுக்கும் இருக்கிறது.

 அது, சரி வரச் செய்யப்படாவிட்டால், இன்னொரு ராஜபக்‌ஷ யுகம், வெகு தொலைவில் இல்லை என்பதை, இந்தத் தலைமைகள் உணரவேண்டும்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com