ilakkiyainfo

ஜம்மு – காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும்!! – தெ. ஞாலசீர்த்தி (கட்டுரை)

ஜம்மு – காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும்!! – தெ. ஞாலசீர்த்தி (கட்டுரை)
August 09
03:32 2019

உரிமைப் போராட்டங்கள், காலக்கெடு வைத்து நடத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள், விடுதலைப் போராட்டங்களை முன்னரிலும் பார்க்க வேகமாக முன்தள்ள உந்தும்.

உரிமைக்கான குரல்கள், ஏன் எழுகின்றது என்பதை, அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை.

அதனாலேயே காலப்பொருத்தமற்ற, அபத்தமான அதேவேளை, ஆபத்தான முடிவுகளை அது எடுக்கிறது. இவ்வாறான முடிவுகள், பலத்தின் குறியீடல்ல; பலவீனத்தின் குறியீடு.

திங்கட்கிழமை (05) இந்திய மத்திய அரசாங்கம், ஜம்மு – காஷ்மிர் மாநிலத்துக்கு அரசமைப்பு ரீதியாக, இருந்து வந்த தன்னாட்சி அதிகாரத்தை, இரத்துச் செய்துள்ளது.

ஜம்மு – காஷ்மிர் மாநிலத்துக்கு இவ்வதிகாரத்தை வழங்கும் அரசமைப்பின் 370ஆவது சட்டப் பிரிவை, இரத்துச் செய்வதாக பா.ஜ.கவின் தலைவரும் உள்துறை அமைச்சருமாகிய அமித் ஷா, நாடாளுமன்றில் அறிவித்தார்; இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையை, குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.

நீண்டகாலமாக, சுயாட்சிக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடி வரும் காஷ்மிர் மக்களுக்கு, இது புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சனிக்கிழமை (03) முதல் ஜம்மு – காஷ்மிரில் ஊடரங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான சிறப்பு இராணுவத்தினர், அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (04) முதல் ஜம்மு – காஷ்மிரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியிலேயே 370ஆவது சட்டப்பிரிவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

D3CR9Y5UgAAc4gT

திங்கட்கிழமை (05) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் பேசிய அமித் ஷா, இரண்டு முக்கியமான விடயங்களைத் தெரிவித்தார்.

முதலாவது, ஜம்மு – காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசமைப்பின் 370ஆவது சட்டப்பிரிவை இரத்துச் செய்வது.

இரண்டாவது, ஜம்மு – காஷ்மிர் என்ற மாநிலம் இனிமேல் இல்லை. மாறாக, ஜம்மு – காஷ்மிர் மாநிலத்தின் லடாக் பகுதியைச் சட்டமன்றம் இல்லாத தனியான யூனியன் பிரதேசமாகவும் இதர, ஜம்மு – காஷ்மிர் பகுதியை, சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது.

இவை இரண்டும், சட்ட ரீதியாகவும் உரிமை ரீதியாகவும் பாரிய சிக்கல்களைக் கொண்ட முடிவுகள்.

இந்திய அரசமைப்பின் 370ஆவது பிரிவானது, ஜம்மு – காஷ்மிர் மாநிலத்துக்குத் தன்னாட்சி அதிகாரத்தை வழங்குகிறது. காஷ்மிர் மாநிலத்துக்குத் தனியான அரசமைப்பை வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.

இச்சட்டப் பிரிவின்படி, அயலுறவுகள், பாதுகாப்பு, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளைத் தவிர்த்து, பிற துறைகளில் இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களும் உத்தரவுகளும் இம்மாநிலத்தில் நேரடியாகச் செல்லுபடியாகாது.

மத்திய அரசாங்கம் நிறைவேற்றும் சட்டங்களை, மாநிலங்கள் அவை ஏற்று, அங்கிகரித்தால் மட்டுமே, அவை ஜம்மு – காஷ்மிரில் செல்லுபடியாகும். அதேவேளை, மத்திய அரசுக்கு, காஷ்மிரில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் இல்லை.

இந்தப் பின்புலத்தில், இரண்டு விடயங்களை நோக்க வேண்டியுள்ளது.

முதலாவது, ஜம்மு – காஷ்மிர் சிறப்பு அந்தஸ்தைப் பெற்ற கதை;

இரண்டாவது, மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின், சட்டரீதியான செல்லுபடியான தன்மை பற்றியது.

காஷ்மிரின் கதை

பிரித்தானியக் கொலனியாதிக்கத்திடம் இருந்த இந்தியா, (பிரிட்டிஷ் இந்தியா) 1947ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் சுதந்திரமடைந்தபோது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிளவுற்றன.

இந்தக் காலத்தில், ‘பிரிட்டிஷ் இந்தியா’ முழுவதுமிருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களின் எதிர்காலங்கள் பற்றிய கேள்வி எழுந்தது.

இதைத் தீர்க்கும் முகமாக, பிரித்தானியக் கொலனியாதிக்கவாதிகள், இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை, அந்தந்தச் சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்தார்கள்.

_105744649_gettyimages-613463104

அரசர் ஹரிசிங்

இம்முடிவு எட்டப்பட்டபோது, காஷ்மிர் சமஸ்தானத்துக்கு ‘ டோக்ரா’ வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் என்பவர், மன்னராக இருந்தார்.

ஜம்முவும் காஷ்மிரும் எப்போதும் இணைந்த ஒன்றாக இருந்ததில்லை. பிரித்தானியர் இந்தியாவைக் கைப்பற்றி, ஆட்சிசெய்தபோது, ஜம்மு அரசரின் கீழும், காஷ்மிர் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்தது.

1846ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த முதலாவது அங்கிலோ-சீக்கியப் போரின் பின்னணியில், 1846 மார்ச் 16ஆம் திகதி, எட்டப்பட்ட ‘அமிர்தசரஸ் உடன்படிக்கை’யின் விளைவால், ஜம்முவின் மன்னராக இருந்த குலாப் சிங், ‘டோக்ரா’ கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து, 75 ஆயிரம் ரூபாய்க்கு காஷ்மிரை விலைக்கு வாங்கினார்.

மலைச் சிகரங்களும் பள்ளத்தாக்குப் பகுதிகளும் சூழ்ந்த அந்த நிலப்பரப்புடன், அதில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களையும் டோக்ராக்களிடம் விற்றுக் காசாக்கியது கிழக்கிந்திய கம்பெனி. இவ்வாறுதான், டோக்ரா வம்சத்தினர், ஜம்மு – காஷ்மிரின் அரசர்களாகினர்.

1947இல் இந்தியா, பாகிஸ்தான் ஆகியன சுதந்திரமடைந்தபோது, காஷ்மிர் சமஸ்தானத்துக்கு மன்னராக இருந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங், இந்துவாக இருந்தபோதும், அங்கு வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் ஆவர். காஷ்மிர் யாருடனும் சேராமல், தனிநாடாக இருக்கும் என, ஹரிசிங் அறிவித்தார்.

இது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. எப்படியாவது, காஷ்மிரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என, இரு நாடுகளும் போட்டியிட்டன.

இந்தியா சுதந்திரமடைவதற்கு வெகுகாலம் முதலே (1932 முதல்), காஷ்மிர் தனி நாடாகவே இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, ஷேக் அப்துல்லா, தலைமையில் அமைக்கப்பட்ட ‘அனைத்து ஜம்மு – காஷ்மிர் தேசிய மாநாடு’ என்ற கட்சி, போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில், முஸ்லிம் மத உணர்வைப் பயன்படுத்திச் செல்வாக்குத் தேட முயன்ற இக்கட்சி, பின்னர் மத வேறுபாடின்றிப் போராட ஆரம்பித்தது. 1944இல், ‘புதிய காஷ்மிர்’ என்ற பெயரில் ஒரு கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டது.

அதில், ‘காஷ்மிர், பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும்; சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம், அதற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைதல் வேண்டும்; கேந்திர தொழிற்சாலைகள் தேசிய மயமாக்கப்படுவதோடு, ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படும்; தெரிவதற்கும் தெரியப்படுவதற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை’ போன்ற திட்டங்களை, அந்தப் பிரகடனம் கொண்டிருந்தது.

பாகிஸ்தான் பிரதமர் முஹமது அலி ஜின்னா, தொடக்கம் முதலே, ஷேக் அப்துல்லாவைத் தனது செல்வாக்குக்குள் கொண்டுவர முயன்றார். காஷ்மிரைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள, ஷேக் அப்துல்லாவைப் பயன்படுத்த எண்ணினார்.

“எல்லா மதத்தினரும் சமமாகவும் இணக்கமாகவும் வாழுகின்ற சுதந்திர தனி நாடாகவே, காஷ்மிர் இருக்க விரும்புகிறது. இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அது சேர விரும்பவில்லை” என, வெளிப்படையாக ஷேக் அப்துல்லா அறிவித்தார்.

இதற்கு மக்கள் ஆதரவைத் திரட்டினார்; இதன் விளைவாகவே, 1947ஆம் ஆண்டு ஓகஸ்டில், காஷ்மிர் தனி நாடாகவே இருக்கும் என, மன்னர் ஹரிசிங் அறிவித்தார்.

இந்து மன்னரின் செயற்பாடுகளால், அதிருப்தியடைந்த முஸ்லிம்களில் ஒருபகுதியினர், அரசருக்கு எதிராகக் கலகத்தைத் தொடங்கினர். இது, ‘பூஞ் கிளர்ச்சி’ எனப்படுகிறது. இதன் விளைவால், காஷ்மிரின் மேற்குபகுதியின் கட்டுப்பாட்டை மன்னர் இழந்தார்.

1947ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி, பாகிஸ்தானின் ‘பஸ்டுன்’ பழங்குடிகள், காஷ்மிருக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. மன்னர் ஹரிசிங்கின் இராணுவம் பலவீனமான நிலையில் இருந்ததால், இப்பழங்குடிகள் வேகமாக முன்னேறி, காஷ்மிரைச் சூறையாடி, தலைநகர் சிறீநகரைக் கைப்பற்றின.

மன்னர் ஹரிசிங், இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இந்திய இராணுவ உதவியைப் பெறுவதாயின், இந்தியாவுடன் காஷ்மிரைத் தற்காலிகமாக இணைக்கும்படி, இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுன் பேட்டன் கேட்டுக்கொண்டார்.

1947 ஒக்டோபர் 26இல் காஷ்மிரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். இதில் பாதுகாப்பு, வெளியுறவு, தொடர்பாடல் ஆகிய மூன்று விடயங்களை மட்டும், இந்தியா தீர்மானிப்பதென்றும் ஏனையவற்றில் சுதந்திரமாக முடிவெடுக்க, காஷ்மிருக்கு அதிகாரம் உண்டு என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்திய இராணுவம் சிறீநகருக்கு அனுப்பப்பட்டது. 1948 மே மாதம் பாகிஸ்தான் எல்லைகளைக் காப்பதற்காக பாகிஸ்தான் இராணுவம் தலையிட்டது. இதுவே, முதலாவது இந்திய- பாகிஸ்தான் போராகியது.

ஐ.நாவின் தலையீட்டுடன், 1948 டிசெம்பர் 21ஆம் திகதி, போர் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி, நடைமுறைக்கு வந்த இந்தியாவின் அரசமைப்பின் 370ஆவது சட்டப்பிரிவு, ஜம்மு – காஷ்மிருக்குச் சிறப்பு அதிகாரத்தை வழங்கியது.

அரங்கேறியுள்ள அரசமைப்புச் சதி

இப்போது, மத்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளானவை, சட்டரீதியாகச் செல்லுபடியாகாதவை.

அந்தவகையில், இதை ‘அரசமைப்புச் சதி’ என்றே அழைக்கவேண்டியுள்ளது. ஜனாதிபதியின் ஆணை மூலம், சிறப்பு அதிகாரத்தை இரத்துச் செய்தமையானது, இந்தியாவின் சமஷ்டி ஆட்சித் தத்துவத்தையும் ஜனநாயகத்தையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.

இப்போது முன்வைக்கப்படும் வாதம் யாதெனில், அரசமைப்பின் 370ஆவது சட்டப்பிரிவானது, தற்காலிக சட்டப்பிரிவாகும். எனவே, அதை இலகுவாக இல்லாமலாக்க முடியும் என்பதாகும்.
இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், அதை இல்லாமல் ஆக்கும் அதிகாரம், அரசமைப்பின் பிரகாரம், ஜம்மு – காஷ்மிரின் அரசமைப்புச் சபைக்கே உள்ளது.

அதேவேளை, ஜனாதிபதியால் விடுக்கப்படும் எந்தவோர் ஆணைக்குமான உடன்நிகழ்வை (concurrence) ஜம்மு – காஷ்மிர் அரசாங்கம் வழங்க இயலுமான போதும், ஜம்மு – காஷ்மிர் சட்டமன்றம் மீண்டும் கூடுகிறபோது, உடன்நிகழ்வை வழங்கும் அதிகாரம், அரசாங்கத்துக்கு இல்லாமல் போவதோடு, ஜனாதிபதியின் ஆணையும் இரத்தாகிறது.

அதேவேளை, இந்த 370ஆவது சட்டப்பிரிவைத் திருத்துவதற்கான அல்லது முழுமையாக இல்லாமல் செய்வதற்கான அதிகாரம், ஜனாதிபதிக்கு உள்ளபோதும் (370(3) இன் பிரகாரம்), ஜனாதிபதி இதைச் தன்னிச்சையாகச் செய்ய முடியாது.

இவ்வாறானதொரு திருத்தத்தை மேற்கொள்ளும்படி, ஜம்மு – காஷ்மிரின் அரசமைப்புச் சபை முன்மொழிந்தால் மட்டுமே, இதை ஜனாதிபதியால் செய்யவியலும்.

ஜம்மு – காஷ்மிரின் அரசமைப்புச் சபை, ஜம்மு – காஷ்மிருக்கான அரசமைப்பை, 1956இல் உருவாக்கியதன் பின்னர், 1957 ஜனவரி 26ஆம் திகதி, தனது இறுதி அமர்வை நடத்தி, அரசமைப்புச் சபையைச் செயலிழக்கச் செய்தது. இதில், முக்கியமான செய்தி பொதிந்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சபை, 1950இல் இறுதியாகக் கூடும் போதும் எதுவித தீர்மானங்களோ அல்லது அடுத்த கூட்டத்துக்கான திகதி குறித்த தீர்மானமோ இன்றி முடிந்தது. ஆனால், ஜம்மு – காஷ்மிரின் அரசமைப்புச் சபையானது, தனது இறுதி அமர்வில், ஒரு தீர்மானத்துடன் முடிவுக்கு வந்தது.

அத்தீர்மானம் யாதெனில், ‘இந்த அரசமைப்புச் சபையானது, 1956ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதியாகிய இன்று கலைக்கப்படுகிறது’. இதன் மூலம், அரசமைப்புச் சபையானது, இந்தியாவுடனான இணைப்பை, நிரந்தரமானதாகவும் இப்போது உள்ள வடிவிலேயே எப்போதும் தொடர்வதையும் உறுதிப்படுத்தியது. இதை, இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

இதை விரிவாகவும் ஆழமாகவும் சட்டநுணுக்கங்களின் அடிப்படையிலும் ஏ.ஜி. நூராணி தனது ‘Article 370: A Constitutional History of Jammu and Kashmir’ என்ற நூலில் விளக்குகிறார். இன்றைய காலத்தில், கட்டாயம் படிக்கப்பட வேண்டிய நூல்.

இதேவேளை, ஜம்மு – காஷ்மிரை, யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கு, மோடியின் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையும் அரசமைப்பு ரீதியாகத் தவறானது.

இந்திய அரசமைப்பின் மூன்றாவது பிரிவானது, ‘நாடாளுமன்றம், ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவது அல்லது, எல்லைகளை மறுவரையறை செய்வது போன்றன தொடர்பில், கலந்துரையாட முன்னர், குறித்த சட்டவரைபானது, ஜனாதிபதியால் குறித்த மாநிலத்தின் சட்டமன்றுக்கு அனுப்பப்பட்டு, அதன் அங்கிகாரம் பெறப்பட வேண்டும்’ என்பதாக அமைந்துள்ளது. ஜம்மு – காஷ்மிர் விடயத்தில், இது நடைபெறவில்லை.

எனவே, இந்திய மத்திய அரசாங்கம் ஜம்மு – காஷ்மிர் தொடர்பில் எடுத்துள்ள நிலைப்பாடுகள், அரசமைப்புக்கு முரணானவை.

இவ்விடயத்தில், அமித் ஷா முன்வைக்கும் வாதம் யாதெனில், ஜம்மு – காஷ்மிரில் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி நிலவுவதால், சட்டமன்றத்தின் சார்பிலான முடிவுகளை, நாடாளுமன்றம் எடுக்கலாம் என்பதாகும். இது மிகவும் ஆபத்தானது.

நாளை, தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவந்து விட்டு, தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும் எல்லைகளை மறுவரையறை செய்யவும் முடியும் என்பது, எவ்வளவு ஆபத்தானது என்று சிந்தித்துப் பாருங்கள்.

தனது சொந்த மக்களையே வஞ்சித்து, அடக்கி, ஒடுக்கி இராணுவத்தையும் அராஜகத்தையும் ஏவும் ஒரு நாடு, தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என நம்பச் சொல்பவர்களை என்னவென்பது?

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com