ilakkiyainfo

‘ஜெயலலிதா லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்துள்ளார்களா?’ (ஜெ. வழக்கு விசாரணை – 21)

‘ஜெயலலிதா லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்துள்ளார்களா?’ (ஜெ. வழக்கு விசாரணை – 21)
April 28
22:01 2015

 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது. அரசுத் தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன்பு வாசித்து வருகிறார் பவானிசிங்.

ராஜாராமின் வாக்குமூலம்…
பெயர்: ராஜாராம்
தந்தை பெயர்: சண்முகா கோனார்
இருப்பிடம்: 109, போரூர், சென்னை.
வயது: 45

18.8.1999 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குமூலம்:

நான் போரூரில் ‘கார்த்திக் ரியல் எஸ்டேட்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் பிசினஸ் நடத்தி வந்தேன். வாலாஜாபாத்தில் 500 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய, 1994 ஆம் ஆண்டு 6 அல்லது 7 ஆவது மாதத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ், மாலைமலர், இந்து, தினமலர் போன்ற பத்திரிகைகளில் தொலைபேசி எண்களோடு விளம்பரம் கொடுத்தோம்.

இதைப் பார்த்து பலர்  நிலத்தை வாங்க முன்வந்தார்கள். பத்திரிகைகளில் விளம்பரம் வந்த இரண்டாவது நாள், ராதாகிருஷ்ணன் என்பவர் நிலத்தில் மண்வளம், நிலத்தடி நீரின் அளவை ஆய்வுசெய்ய வந்தார். அவரிடம் நிலத்தைக் காட்டச் சொல்லி என் மேனேஜர் கண்ணன் என்னிடம் கூறினார்.

நான் அவரை கூட்டிச் சென்று நிலத்தைக் காட்டினேன். அதன் பிறகுதான் அவர் அரசு ஊழியர் என்பது எனக்குத் தெரியவந்தது. வாலாஜாபாத் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியில் உள்ள நிலத்தை 2 நாட்கள் ஆய்வுசெய்த பிறகு, எங்களை டெலிபோன் மூலமாக மெட்டல் கிங் அலுவலகத்திற்கு வரச் சொன்னார்.

நான், என் மேனேஜர் கண்ணன், என் நண்பர் சண்முகம் மூன்று பேரும் சென்றோம். அங்கு ராதாகிருஷ்ணன் இருந்தார்.

எங்களிடம் சுதாகரன் என்பவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. பிறகுதான், அவர் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் என்பது தெரியவந்தது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு ஏக்கர் ரூ.10,000 வீதம் 500 ஏக்கரை சுதாகரனுக்கு விற்க ஒப்புக்கொண்டோம். சுதாகரன் முன்கூட்டியே எங்களிடம் ரூ.3,00,000 கொடுத்தார்.

ராதாகிருஷ்ணனின் வாக்குமூலம்

பெயர்: ராதாகிருஷ்ணன்
தந்தை பெயர்: சண்முகம்
பதவி: தோட்டக்கலைத் துறை அலுவலர், சேப்பாக்கம், சென்னை.
வயது: 46

வாக்குமூலம்:

நான் பி.எஸ்.சி பட்டம் பெற்றிருக்கிறேன். ஜூலை 1978 ஆம் ஆண்டு துணை வேளாண் அலுவலராக அய்யம்பேட்டையில் சேர்ந்தேன். 1979 முதல் 1982 வரை புதுக்கோட்டையில் தோட்டக்கலை அலுவலராக பணியாற்றினேன்.

பிறகு 1982 ல் சென்னைக்கு மாற்றலாகினேன். பிறகு 1989 ஆம் ஆண்டு தோட்டக்கலை அலுவலராக காஞ்சிபுரத்தில் பணியாற்றினேன்.

பிறகு 1991ல் மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டு, 1993 ல் சென்னை தரமணி தோட்டக்கலை பயிற்சி மையத்திற்கு மாற்றப்பட்டேன்.

அதே வருடத்தில் இணை இயக்குநராக சேர்ந்த கலியபெருமாள் என்னிடம், ஆயிரம் ரூபாயைக் கொடுத்து   பெரியகுளம் ஆராய்ச்சி மையத்தில் இருந்து 200 எலுமிச்சைக் கன்றுகளை ஜெயலலிதாவிற்குச் சொந்தமான ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் கொடுக்கச் சொன்னார். கொடுத்து வந்தேன்.

அதன் பிறகு திருநெல்வேலி நிலங்களைப் பார்க்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். நான், சுதாகரன், பதிவாளர் ராஜகோபால் 3 பேரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருநெல்வேலிக்குப் புறப்பட்டோம்.

அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு திருநெல்வேலியை அடைந்தோம். திருநெல்வேலியில் இருந்து காரில் சுதாகரன் கிளம்பி சென்றுவிட்டார்.

நானும்   ராஜகோபாலும் அங்கு உள்ள ப்ளூ ஸ்டார் லாட்ஜில், ரூம் நம்பர் 104 மற்றும் 105 ல் தங்கினோம்.

பிறகு சிவா என்பவர் எங்களை கயத்தாறு, வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். ராஜகோபால் ஸ்ரீவைகுண்டம் சப் -ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் தங்கிவிட்டார்.

நான் மட்டும் சிவாவோடு மீரான்குளம், சேரன்குளம் மற்றும் வெல்லகுளம் நிலங்களைப் பார்த்தேன். அங்கு ஆய்வு செய்தபோது மண் சிவப்பு நிறத்திலும் நிலத்தடி நீர் 20 அடியிலும் இருந்ததைக் கண்டறிந்து கூறினேன்.

அதன் பிறகு சுதாகரன் அந்த நிலத்தை வாங்குவதாக முடிவுசெய்தார். நாங்கள் மீண்டும் அதே நாள் மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பினோம். நாங்கள் ப்ளூ ஸ்டார் லார்ஜில் தங்கி இருந்த ரூம்களுக்கு கிருஷ்ணன் என்பவர் வாடகை கொடுத்தார்.

அதன் பிறகு ஒரு வாரம் கழித்து ஜெயராமன், நான், வேளாண் பொறியியல் துறை உதவி இயக்குநர் செல்வகுமார் ஆகியோர் திருநெல்வேலி பயணித்தோம்.

மீண்டும் ப்ளூ ஸ்டார் ஓட்டலிலேயே தங்கினோம். அந்த நிலங்களுக்கு சென்று புவியியல் ஆய்வுகளை மேற்கொண்டோம். என்னை திருநெல்வேலியிலேயே தங்க சுதாகரன் கூறினார்.

நிலங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதால் ராஜகோபால், மற்றும் சிவா திருநெல்வேலி வந்தார்கள். நான் ஸ்ரீவைகுண்டம் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றேன்.

அங்கு 6 பேர் 5 1/2 ஏக்கரை விற்பனை செய்ய வந்தார்கள். அங்கு துணை பதிவாளர் ஜானகி, விண்ணப்பதாரர்களின் விலை, சந்தை மதிப்பைவிட குறைந்து இருந்ததால் பதிவு ஆவணங்களைக் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

5 1/2 ஏக்கர் நிலத்தை ‘ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிட்டட்’  பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. ஆவணங்களைப் பெறுவதில் சில சிக்கல் இருந்தது என்பதால், சிவா என்ற ஒரே பெயரில் ஆவணங்களைப் பதிவுசெய்ய முடிவு செய்யப்பட்டது. பிறகு 20 நாட்கள் கழித்து 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.

1994 ஆம் ஆண்டு ஜூலையில் நானும், ராஜகோபாலும் திருநெல்வேலி சென்றோம்.  53 பேரிடமிருந்து ஒரு ஏக்கர் ரூ.2000 வீதம் ஸ்ரீவைகுண்டம் துணை பதிவாளர் அலுவலகத்தில் 1,190 ஏக்கர் நிலத்தை சிவா வாங்கி கொடுத்தார். இப்படி மொத்தம் 1,350 ஏக்கர் நிலம் சுதாகரன் இயக்குநராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸுக்காக வாங்கப்பட்டது.
kumarasamy karnataka
‘ஜெயலலிதா லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்துள்ளார்களா?’

பவானிசிங்: ராதாகிருஷ்ணனை எழுத்துபூர்வமாக நிலத்தைப் பார்வையிட சொல்லவில்லை. வாய்மொழியாக உத்தரவிட்டதாக அவர் குறுக்கு விசாரணையில் கூறி இருக்கிறார்.

நீதிபதி: இப்படி நிலம் ஆய்வு செய்ததையெல்லாம் பேச வேண்டாம் முக்கிய குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி மட்டும் பேசுங்கள்.

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: சரி… நிலங்கள் வாங்குவதற்கு ஜெயலலிதாவின் பணம் நேரடியாக எங்காவது பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா? இதற்கு என்ன ஆதாரம்   இருக்கிறது என்று காட்டுங்கள்.

ஊழல் வழியில் பணம் சம்பாதித்தார் என்றால், எந்த வகையில் ஊழல் செய்தார்? அதனால், அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது? அதற்காக வழக்கு தொடுக்கப்பட்டதா? அவர் லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்து அவர் மீது வழக்கு போட்டிருக்கிறார்களா?

பவானிசிங்: தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சரியாக ஆய்வு செய்யவில்லை. எனக்கு போதிய ஆவணங்கள் கொடுக்கவில்லை.

நீதிபதி: பிறகு எப்படி ஜெயலலிதாவிடம் இருந்து பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறுகிறீர்கள்? ஜெயலலிதா 66 கோடி சொத்து சேர்த்ததாக எப்படி வழக்கு போட்டீர்கள்?

தனி நீதிபதி வழங்கிய 1000 பக்கம் தீர்ப்பில் பணப்பரிவர்த்தனை பற்றி ஒரு வரிகூட இடம்பெறாதது ஏன்? சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜெயலலிதாவின் பினாமி என எதை வைத்து கூறுகிறீர்கள்? 1972 லேயே ஜெயலலிதா 1 லட்சம் சொத்திற்கான வருமானவரியை முறையாக செலுத்தி உள்ளார்.

அப்படி இருக்கையில் 1972 ஆம் ஆண்டு அவர் பெற்ற 1 லட்சம் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாதது ஏன்?

பவானிசிங்: இதற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் விரைவில் கொடுக்கிறேன். ஜெயலலிதாவிடம் இருந்து நேரடியாக பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை. ஆனால், சசிகலாவுக்கு, ஜெயலலிதா பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்திருந்தார். சசிகலா மூலமாக நிலங்கள் வாங்க பணப்பரிமாற்றம் நடைபெற்றது.

நீதிபதி: ஏன் சசிகலாவின் சொந்த பணத்தில் இருந்து கொடுத்திருக்க மாட்டாரா?

பவானிசிங்: சசிகலா உட்பட சுதாகரன், இளவரசி யாருக்கும் வருமானம் கிடையாது.

நீதிபதி: மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் சொத்து மதிப்பு எவ்வளவு?

குமார் (ஜெ. தரப்பு வழக்கறிஞர்): ரூ.1,63,00,000. அந்த கம்பெனியின் கட்டட மதிப்பை மிகைப்படுத்தி காட்டி இருக்கிறார்கள். கம்பெனிகளுக்கு நிலம் வாங்கியது அனைத்தும் டிடி மூலமாக நடைபெற்றுள்ளது. ஒவ்வொன்றுக்கும் வருமானவரித் துறையில் காட்டி வருமானவரித் துறையில் வரியும் கட்டி இருக்கிறோம்.

பவானிசிங்: வருமானவரி அந்தந்த காலகட்டத்தில் கட்டாமல் ஆறேழு வருடங்கள் கழித்து கட்டி இருக்கிறார்கள்?

குமார்: 7 வருடங்கள் கழித்து வருமானவரி கட்டி இருந்தாலும், அந்தந்த காலகட்டத்தின் ஆவணங்களை சமர்பித்துதான் வரி கட்டப்பட்டுள்ளது. புதிய ஆவணங்களைக் காட்டி வரி கட்டவில்லை.

நரசிம்மராவ் லஞ்சம் கொடுத்தார், வாங்கவில்லை…

நீதிபதி: இதுபோன்று ஊழல் வழக்குகளில் தலைவர்களுடைய வழக்கு ஏதாவது இருக்கிறதா? (பவானிசிங்கைப் பார்த்து) உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் ஊழல் வழக்கின் தீர்ப்பு நகலை இருந்தால் கொடுங்கள்?

பவானிசிங்: இல்லை.

சதீஷ்கிரிஜி (பவானிசிங்கின் தற்காலிக உதவியாளர்): இதேபோன்று முன்னாள் பாரத பிரதமர் நரசிம்மராவ் வழக்கும் இருக்கிறது?

நீதிபதி: இல்லை. அது நரசிம்மராவ் லஞ்சம் கொடுத்த வழக்கு, நரசிம்மராவ் லஞ்சம் வாங்கிய வழக்கு அல்ல. இங்கிலாந்து, அமெரிக்காவிலும் ஊழல் தடுப்பு சட்டங்கள் இருக்கிறது. அந்த நீதிமன்ற வழக்குகள் ஏதாவது மேற்கோள் காட்ட இருக்கிறீர்களா?

சதீஷ் கிரிஜி: இல்லை.

66 கோடி எங்கு இருக்கிறது?

நீதிபதி: மெடோ அக்ரோ ஃபார்ம்ஸில் இருந்து நிலங்களை வாங்க ரூ.9,10,000 சுதாகரன் எடுத்துள்ளார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) என்ன ஆதாரம் இருக்கிறது?

சம்பந்தம்: வங்கி ஆவணங்கள் இருக்கிறது. (துலாவினார்)

குமார்: கம்பெனிகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தம் இல்லை. ஏ1-ஐத் தவிர மற்றவர்கள்தான் கம்பெனிகளில் பங்குகள் வாங்கினார்கள்.

நீதிபதி: 1994ல் 66 கோடி என்பது சின்ன தொகை கிடையாது. பெரிய தொகை. இவ்வளவு தொகை எப்படி சம்பாதிக்க முடிந்தது? இந்தத் தொகையை எப்படி கண்டுபிடித்தீர்கள்?

இந்தத் தொகை கட்டடங்களாக உள்ளது என்றால், சென்னையில் உள்ளதா? மும்பையில் உள்ளதா? எங்குள்ளது? பணமாக உள்ளது என்றால், பணம் எங்குள்ளது? ஜெயலலிதா 1964 ல் இருந்து சினிமா துறையில் நடித்துள்ளார். அவர் எப்போது அரசியலுக்கு வந்தார்?

மணிசங்கர் (ஜெ. தரப்பு வழக்கறிஞர்): 1982ல் அரசியலுக்கு வந்தார்.

பவானிசிங்: இத்தொகை ஏ1 முதல் ஏ4 அனைவருடைய பணம்.

நீதிபதி: சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும் பொது ஊழியர்கள் கிடையாது. அவர்களுடைய பணத்தை ஏன் இதில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

திருடிய பணத்திற்கு வருமான வரி கட்டினால் போதுமா?
bavani singh200
பவானிசிங்: நமது எம்.ஜி.ஆர் நாளிதழுக்கு ரூ.14 கோடி சந்தா வசூலித்தது சட்ட விரோதமான செயல்.

நீதிபதி: தமிழக அரசியல்வாதிகள் வித்தியாசமானவார்களாக இருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் சொத்து எவ்வளவு இருக்கிறது? தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளுக்கு என்று தனியாக சேனல்கள், இதழ்கள் நடத்துகிறார்கள். அதற்காக சந்தாக்களை வசூலித்து வருகிறார்கள்.

பவானிசிங்: டெபாசிட் வசூலிக்க வேண்டும் என்றால், முறையாக பர்மிஷன் வாங்க வேண்டும்.

நீதிபதி: ஆங்கில இதழ்களில்கூட சந்தாதாரர்களாக வேண்டும் என்பதற்காக விளம்பரங்களைக் கொடுக்கிறார்கள். சில ஃபைனான்ஸ் கம்பெனிகள் மாதம் ரூ.2000 வீதம் சீட்டு சேர்க்கிறார்களே… இது சட்டத்திற்கு சரியானதுதானா?

பவானிசிங்: இதுவும் சட்டவிரோதமான செயல்.

நீதிபதி: வருமானத்திற்கும் சொத்துமதிப்புக்கும் இடையே எத்தனை சதவிகிதம் இருக்கிறது?

பவானிசிங்: தெரியவில்லை. கீழமை நீதிமன்றத்தில் இதுபற்றி பேசவில்லை.

மணிசங்கர்: ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி என நான்கு பேருடைய சொத்துகளுக்கும் வருமானவரித் துறையில் கணக்குகள் காட்டி வருமானவரி கட்டி இருக்கிறோம்.

பவானிசிங்: திருடிய பணத்திற்கு வருமானவரி கட்டினால், அது நேர்மையான வழியில் சம்பாதித்த பணம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

நீதிபதி: ஊழல் தடுப்பு சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?

குமார்: 1964ல் அமலுக்கு வந்தது.

நீதிபதி: ஊழல் தடுப்பு சட்டம் 1947 ல் அமலுக்கு வரவில்லையா?

குமார்: இல்லை, இல்லை. 1964 ல்தான் அமலுக்கு வந்தது.

வழக்கு விசாரணை தொடரும்…

– வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com