தொடர்மாடியிலுள்ள வீடொன்றுக்குள் தந்திரமாக புகுந்து கத்தியை காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிட முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கொட்டாஞ்சேனை சென். லூசியஸ் ஒழுங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த விசித்திர சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-

அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தொடர்மாடி வீட்டிலுள்ள ஐந்து வயது சிறுவன் பாடசாலைவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

சிறுவனுக்குப் பின்னால் வாட்ட சாட்டமாக உடையணிந்து வந்த பெண்ணொருவர் தொடர்மாடிக்குள் பிரவேசித்துள்ளார். தொடர்மாடியின் பாதுகாவலர் அவரை யார் என்று வினவியபோது சிறுவனின் ஆசிரியர் என அவர் தெரிவித்ததுடன் சிறுவனின் பாடசாலைப் பையையும் வாங்கியுள்ளார்.

சிறுவனுடன் பின்னால் சென்ற அந்தப் பெண் அம்மா வீட்டிலுள்ளாரா என்று கேட்டவண்ணம் சென்றுள்ளார். தொடர்மாடியின் மேல்மாடியில் சிறுவனைக் கண்டதும் தாயார் வீட்டின் முன் கேட்டினை திறந்தபோது குறித்த பெண்ணிடம் நீங்கள் யார் என்று தாயார் வினவியுள்ளார்.

சிறுவனின் ஆசிரியர் எனக் கூறியவாறு உள்ளே நுழைந்த பெண் சிறுவனின் பாடசாலை பையினை திறந்து பார்க்குமாறு தயாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து தயார் பாடசாலைப் பையினை திறந்து பார்த்தபோது கத்தியொன்றை தனது கைப்பைக்குள் இருந்து எடுத்த பெண் தாயாரை அச்சுறுத்தியதுடன் முன்கதவையும் மூடியுள்ளார்.

வந்த பெண் கொள்ளையடிப்பதற்காகவே வந்துள்ளதை தெரிந்து கொண்ட தாயார் அந்தப் பெண்ணுடன் மல்லுக்கட்டியுள்ளார்.

இதனால் கையில் கத்தி வெட்டுக்கு இலக்காகியதுடன் அவர் சத்தமிடவே அருகிலுள்ள வீட்டார்கள் ஒன்றுகூடியதுடன் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அயல்வீட்டார் கூடியதையடுத்து கத்தியை இடுப்பிற்குள் செருகிய அந்தப் பெண் சும்மா பார்வையிடுவதற்காகவே தான் வீட்டுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்ததுடன் அவரிடமிருந்து கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையின் போது இவர் சிங்களப் பெண் என்றும் நன்றாக ஆங்கிலம், தமிழ், சிங்கள மொழியில் பேசத்தெரிந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இவருக்கு எதிராக ஆறுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் உள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

அழகான ஆடைகளை அணிந்து வரும் இந்தப் பெண் இவ்வாறு பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.