ilakkiyainfo

தமிழரசுக் கட்சியின் சீரழிவும் தோல்வியும்- புருஜோத்தமன் (கட்டுரை)

தமிழரசுக் கட்சியின் சீரழிவும் தோல்வியும்- புருஜோத்தமன் (கட்டுரை)
August 29
16:53 2020
​தேர்தல் அரசியல் என்பது ‘பரமபத’ (ஏணியும் பாம்பும்) விளையாட்டுப் போன்றது. வெற்றிகளை நினைத்த மாத்திரத்தில் அடைந்துவிட முடியாது.

எதிர்க்கட்சிகளும் எதிர்த்தரப்புகளும் தோல்விகளைப் பரிசளிப்பதற்காகப் ‘பாம்பு’களாகக் காத்துக் கொண்டிருக்கும்.

இப்படியான அச்சுறுத்தலுள்ள தேர்தல் அரசியல் களத்தில் இம்முறை, சொந்தக் கட்சிக்குள்ளேயே ‘பரமபதம்’ ஆடி, தமிழரசுக் கட்சி தோற்றுப் போயிருக்கின்றது.

கட்சியின் தலைவர், செயலாளர் தொடங்கி, கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரும், இந்தப் பொதுத் தேர்தலில் படுமோசமாகத் தோற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்  29ஆம் திகதி சனிக்கிழமை, வவுனியாவில் நடைபெற இருக்கின்றது.

தேர்தல் தோல்வி, தேசியபட்டியல் உறுப்பினர் நியமனச் சர்ச்சை, சொந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவே நிகழ்த்தப்பட்ட பிரசாரங்கள் உள்ளிட்ட விடயங்கள், மத்திய குழுக் கூட்டத்தில் சூடான வாதங்களுக்கு வித்திடும்.

அத்தோடு, இனிவரும் காலங்களில் தமிழரசுக் கட்சி, யாரின் அதிகார வளையத்துக்குள் சென்று சேரப்போகின்றது என்பதற்கான சில ஏற்பாடுகளையும் செய்யக்கூடும்.

தமிழ்த் தேசிய அரசியலில், ஒரு கட்சிக்குரிய கட்டமைப்பு சார் அடையாளத்தைத் தமிழரசுக் கட்சி ஓரளவுக்கு பேணி வந்திருக்கின்றது.

தொகுதிக் கிளை தொடக்கம் மாவட்டக் கிளை, வாலிபர் முன்னணி, மத்திய குழு, வேட்பாளர் நியமனக் குழு, அரசியல் குழு என்றெல்லாம் அந்தக் கட்சி தன்னுடைய கட்டமைப்பைப் பேணுகின்றது.

ஆனால், அந்தக் கட்சி உண்மையிலேயே கட்சிக்குரிய கட்டமைப்பு மற்றும் அதன் அதிகார வரம்புகள் தொடர்பில், தெளிவான வரையறைகளைக் கொண்டிருக்கின்றதா என்றால், “இல்லை” என்பதே பதில் ஆகும்.

ஓர் அரசியல் கட்சியின் எந்தவொரு தீர்மானத்தையும் கட்சிக்குள் ஜனநாயக முறைப்படி விவாதிக்கப்பட்டே எடுக்கப்பட வேண்டும். ஒரு தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர், அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு ஒழுகுவதுதான் அடிப்படைப் பண்பு.

ஆனால், தமிழரசுக் கட்சியையும் அதன் தீர்மானங்களையும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பொது வெளியில் விமர்சித்த அளவுக்கு, யாரும் இதுவரை விமர்சித்து இருக்கவில்லை.

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த அன்று இரவு, யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி முக்கியஸ்தர்களாகத் தங்களை முன்னிறுத்தும் நபர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கட்சியின் வெற்றி வேட்பாளர் சிவஞானம் சிறீதரன், கட்சியின் துணைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உள்ளிட்டவர்களை நோக்கி நடத்திய தூசண வசைகளை, நூற்றுக்கணக்கான ‘பேஸ்புக்’ நேரடிக் காட்சிகள் ஒளிபரப்பின.

தேர்தல் தோல்வி உள்ளிட்ட கட்சியின் பின்னடைவுகளுக்கான காரணங்களை, நியாயமான முறையில் தேடுவதற்கான புத்தியுள்ள தொண்டர்களையும் தலைவர்களையும் கொண்டிருக்காத கட்சியொன்று, என்றைக்குமே மீண்டெழாது.

ஆனால், தேர்தல் காலத்திலும், அதன் பின்னரும் பொதுவெளியில் ரவுடிக் கூட்டங்களால் நிரம்பி இருக்கின்ற கட்சிக்குரிய காட்சிகளைத் தமிழரசுக் கட்சி பிரதிபலித்தது.

(அதற்கான ஆதாரங்களை, அந்தக் கட்சியின் வேட்பாளர்களே சேகரித்து, கட்சியின் தலைமையிடம் கையளித்திருப்பதாகத் தெரிகின்றது.) இப்படியான நிலைமைகளை, தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையும் கட்டி வளர்த்திருக்கின்றது என்பதே, அதன் இன்றைய நிலைக்கு நல்ல உதாரணங்களாகும்.

பங்காளிக் கட்சிகளைக் கிஞ்சித்தும் மதிக்காது, கூட்டமைப்புக்குள் தனியாவர்த்தனம் நடத்துவதிலேயே தமிழரசுக் கட்சி, கடந்த 11 ஆண்டுகளாகக் கவனம் செலுத்தி வந்திருக்கின்றது.

அந்தத் தனியாவர்த்தனம் என்பது, ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற மனநிலையை ஒத்ததாகும். அதுதான், அந்தக் கட்சியின் அனைத்துக் கட்டமைப்புகளுக்கு உள்ளேயும் விரவிப் படர்ந்திருக்கின்றது.

உட்கட்சி ஜனநாயகம் என்பதற்கும், கட்சியின் தீர்மானங்களைப் பொதுவெளியில் கேள்விக்கு உட்படுத்தும் நிலைக்குமான வித்தியாசங்களைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தொடங்கி, அடிமட்டத் தொண்டன் வரை கற்றுத் தெளிய வேண்டியிருக்கின்றது.

இவ்வாறான நிலைகள் தொடர்பில் விமர்சனத்தை முன்வைத்ததும், “எங்களின் சொந்தக் கட்சி விவகாரங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம்.

அதுபற்றி மற்றவர்கள் (மக்கள், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட தரப்புகள்) கவலை கொள்ளத் தேவையில்லை” என்கிற வார்த்தைகளைத் உதிர்த்துக் கொண்டு, தமிழரசுக் கட்சிக்காரர்கள் வருவார்கள்.

ஓர் அரசியல் கட்சி என்பது, மக்களுக்கானது என்கிற அடிப்படையை, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்களை ஆதாரமாகக் கொள்ளாத யாரும், எந்தத் தரப்பும் எந்தக் கட்சியும் மேலெழ முடியாது.

அப்படியான நிலையில், ஒரு கட்சியின் தோல்வி என்பது, பல நேரங்களில் அந்தக் கட்சியை நம்பி வாக்களித்த மக்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தையும் தோற்கடித்துவிடும்.

இப்படியான நிலையில், தமிழரசுக் கட்சி போன்ற ஒரு கட்சிக்கான கடப்பாடு என்பது, ஒவ்வொரு தமிழ் மகனிடமும் மகளிடமும் பதில் சொல்லியாக வேண்டிய அளவுக்கு இருக்கின்றது. இந்தக் கடப்பாட்டை, அடிப்படையில் இருந்து தமிழரசுக் கட்சி பேண வேண்டும்.

இத்தகைய கடப்பாட்டை, ஓர் அரசியல் கட்சி,  ஓர் அரசியல் நெறியாகப் பேணாது, ‘தண்டல்காரன்’ மனநிலையைப் பேணிக் கொண்டிருப்பதானது, அந்தக் கட்சியை மண்ணோடு மண்ணாகச் சேர்த்து, அழித்துவிடும்.

இம்முறை தேர்தலில், கூட்டமைப்பின் தோல்வி என்பது, பெரும்பாலும் தமிழரசுக் கட்சியாலேயே நிகழ்த்திருக்கின்றது.

கட்சியின் தலைவர் தொடங்கி, அடிமட்டத் தொண்டன் வரை, கட்சியின் வெற்றிக்காக உழைத்ததைக் காட்டிலும், சொந்தக் கட்சிக்கு உள்ளேயே மற்ற வேட்பாளர்களைத் தோற்கடிப்பதிலேயே ஆர்வம் காட்டினார்கள்.  

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் போன்ற, தமிழ் மக்களின் அடர்த்தி 97 சதவீதத்துக்கும் அதிகமுள்ள மாவட்டத்தில் போட்டியிட்டு, கட்சியின் தலைவர் வெற்றிபெற முடியவில்லை என்பது, தமிழரசுக் கட்சியின் மோசமான தோல்வியின் நிலையைக் காட்டுகின்றது.

மாவை சேனாதிராஜா, இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டுமா இல்லையா என்பதெல்லாம், விவாதிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், அவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதும் அவரின் வெற்றி குறித்து, அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.

கட்சியொன்றின் தலைமை தோற்பது என்பது, தம்முடைய தோல்வியாகவே அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆனால், தமிழரசுக் கட்சிக்குள், இவ்வாறான நிலையொன்று எந்தவொரு தருணத்திலும் உருவாக்கப்படவும் இல்லை; பேணப்படவும் இல்லை. குழும மனநிலை மேழுந்திருந்தது.

தேர்தல் காலத்தில், கட்சித் தலைவருக்குரிய பண்புகளை அதிக தருணங்களில் மறந்து, விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகக் குழும மனநிலைக்குள் சிக்கிக் கொண்டு, மாவையும் செயற்பட ஆரம்பித்தார்.

சொந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவே, கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளிப்படையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று, அதிக தடவைகள் மாவையிடம் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, அவர் கருத்தில் எடுக்கவில்லை. மாறாக, அவ்வாறான செயற்பாடுகளை அவர் ஊக்குவித்தார்.

குறிப்பாக, கட்சியின் பொருளாளரான கனகசபாபதியும் யாழ்ப்பாண மாவட்ட வாலிபர் முன்னணி முக்கியஸ்தர் கலையமுதனும் (மாவையின் மகன்) எம்.ஏ. சுமந்திரன், சிறீதரன் போன்றவர்களுக்கு எதிராக, வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றிருந்தது. 

இந்த விடயம் தொடர்பில், அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் சிறீதரனால், மாவைக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் போன்று நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உண்டு.

தமிழரசுக் கட்சியின் தோல்விக்கான காரணங்களை ஆராயும் நோக்கில், குழுவொன்றை அமைப்பது தொடர்பில், மாவை கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிகின்றது.

அத்தோடு, தேர்தல் காலத்தில் சொந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் தொடர்பில், ஒளி, ஒலி ஆதாரங்கள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளமை குறித்து, அரசியல் குழுக் கூட்டத்தில் சிறீதரன் பிரஸ்தாபித்துள்ளார்.

இந்தப் பின்னணியில், சுமந்திரனும் மாவையும் கூட, தங்களுடைய அறிக்கைகளை மத்திய குழுவில் சமர்ப்பிக்கவுள்ளனர். ஓர் அரசியல் கட்சியாக, அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதும் ஆராய்வதும் மாத்திரம், நிலைமைகளைச் சரி செய்யும் என்றில்லை.

மாறாக, விடயங்களை அதன் உண்மைத் தன்மைகளின் போக்கில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதுதான், எதிர்காலத் தோல்விகளைத் தவிர்ப்பதற்கான வழியாக இருக்க முடியும்.

இதனை விடுத்து, “பார்ப்போம் தம்பி” என்கிற மனநிலை என்பது, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன’ நிலையை ஏற்படுத்தி விடும். சொந்தத் தோல்வியில் இருந்தாவது, மாவை அதனைக் கற்றுக் கொள்ள வேண்டும்; அடுத்த கட்டங்களைக் குறித்துச் சிந்திக்க வேண்டும்.

வவுனியாவில் நடைபெறவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், உண்மையான விடயங்கள் குறித்துக் கரிசனை கொள்வதைக் காட்டிலும், கட்சிக்குள் யாருக்கு ஆதரவுத் தளம் அதிகம் இருக்கின்றது என்பதை, நிரூபிக்கும் காட்சிகளை அரங்கேற்றப் போகின்றது.

ஏனெனில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவுக்குள் யாருக்கு அதிக ஆதரவு இருக்கின்றது என்பது குறித்து, குழுக்களைச் சேர்க்கும் நடவடிக்கைகள் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றன.

தேர்தலில் வென்றவர்கள் ஓரணியிலும் தேர்தலில் தோல்வியுற்று ‘அடிபட்ட பாம்பு’களாகக் காத்திருப்பவர்கள் மற்ற அணியிலும், கிட்டத்தட்ட இணைந்திருப்பதாகத் தெரிகின்றது. அது, கட்சியைச் சீரமைப்பதற்கான காட்சிகளாகத் தெரியவில்லை. மாறாக, இன்னும் இன்னும் சீரழிப்பதற்கான காட்சிகளாகவே விரிகின்றன.

-புருஜோத்தமன் தங்கமயில்-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com