Site icon ilakkiyainfo

தமிழர்கள் சிலரால் புகழாரம் சூட்டப்படும் மங்களவின் முகம்

கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த இலங்கைத்தீவின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை ஒற்றையாட்சி முறையை நியாயப்படுத்திக் கொண்டு வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்தவரான மங்கள சமரவீர யார்?

இவருடை மறைவு தொடர்பாக சில தமிழர் பாராளுமன்ற உறுப்பினர்களும் வேறு சிலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் பதிவுகளை வெளியிடுகின்றனர். ஜனநாயகவாதி, எனவும் இனவாதமற்றரென்றும் அந்தப் பதிவுகள் கூறுகின்றன.

ஆனால் இவர் சிங்கள பௌத்த தேசிவாதத்துக்கே தனது அரசியல் அறிவையும் சர்வதேசத் தொடர்புகளையும் பயன்படுத்தியிருந்தார் என்பது கண்கூடு. ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாறு இவருடைய அரசியல் அநீதிகளை மறந்துவிடாது-

இதனை இவ்வாறு பட்டியலிடலாம்—

2002 ஆம் ஆண்டு நோர்வேயின் மத்தியத்தத்துடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தை குழப்பமடைவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் இவருடைய பின்னணி தென்னிலங்கையில் பிரதானமாக இருந்தது.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது.

இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுமென அன்று பலரும் பலமாகவே நம்பினர்.

இதனால்; ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளதாக இனவாதப் பிரச்சாரம் ஒன்றை இவர் அவசர அவசரமாக முன்னெடுத்திருந்தார்.

குறிப்பாக தமிழ்நெற் இணையத்தளத்தில் அன்று வெளியான நேர்வேயின் ஏற்பாடு தொடர்பான செய்தியையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய நகர்வுகள் குறித்து வெளியான செய்திக் கட்டுரை ஒன்றையும் காண்பித்துக் கொழும்பு கலதாரி ஹோட்டேலில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் புரளி ஒன்றை கிளப்பியவர் இவர்தான்.

அல்கய்தா இயக்கத்தைவிட புலிகள் மிக மோசமான பயங்கரவாதிகள் என்று இவர் 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் இவர் வர்ணித்திருந்தார்.

2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையினால் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நஷ்டஈடுவழங்கவும் அழிந்துபோன பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பவும் சர்வதேச ஆதரவுடன் சுனாமிப் பொதுக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கும் முயற்சி இடம்பெற்றது.

சந்திரிகா அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடத் தயாராக இருந்தபோது, பௌத்தகுருமார் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது. இதற்குப் பக்கபலமாக இவர் செயற்பட்டிருந்தார். பொதுக் கட்டமைப்புக்கு நிதி வழங்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறியதற்கும் இவரே காரணம்.

அமெரிக்காவுடனான இவருடை நெருங்கிய நட்பு அதற்குக் பாரிய ஒத்துழைப்பாக இருந்தது.

அதாவது அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு எவ்வாறு அமெரிக்கா நிதி வழங்க முடியுமென்ற சிந்தனையைக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அஸ்லிவில்சிடம் மறைமுகமாகத் தூண்டிவிட்டவர் இவர் தான்.

மகிந்தவின் ஆட்சியில் 2006 ஆம் ஆண்டு இவர் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது தமிழ் இளைஞர்கள் கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்படுவதாகவும் படை உயர் அதிகாரிகள் சிலர் கப்பம் பெறுவதாகவும் வெளிநாடுகளில் துணிவோடு கூறியிருந்தார்.

ஆனால் அது தமிழ் மக்களின் அன்பினால் அல்ல- இன்று ஜனாதிபதியாகவுள்ள அன்றைய பாதுகாப்புச் செயலாளருடன் முரண்பட்ட நிலையில், இவர் வெள்ளை வான் கடத்தல்கள் பற்றி அன்று வெளிவிவகார அமைச்சராக இருந்து கொண்டே பேசியிருந்தார்.

அத்துடன் கலாநிதி பாலித கோகண்ண வெளியுறவு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதால் இவர் மகிந்தவுடன் தர்க்கப்பட்டிருந்தமையும் வெள்ளை வான் கடத்தல் பற்றி இவர் பேசுவதற்கான மற்றொரு காரணமாக அமைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த மகிந்த அவரை வெளியுறவு அமைச்சுப் பதவியில் இருந்து இரவோடு இரவாக விலக்கினார்.

2007 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தில் தனித்துச் செயற்பட்டபோது தமிழ் மக்களுக்காக இவர் நீலிக் கண்ணீர் வடித்தர்.

அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.

ஈழத்தமிழர் அரசியல் வரலாறு எழுதப்படும்போது அல்லது ஏற்கனவே பலாராலும் இவர் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளை நோக்கினால், கிட்டத்தட்ட பண்டாரநாயக்கா, ஜே.ஆர் ஜயவர்த்தன போன்ற தலைவர்களின் செயற்பாடுகளை ஒத்தாகவே இருக்கும்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என்ற பெயரில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தைப் பதவியில் அமர்த்தியதில் இவருக்கே பெரும் பங்கு.

இதன் பயனாக———

1) ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஈழத்தமிழர் விவகாரம் இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகச் சுருக்கப்பட்டது. தமிழர்கள் அல்லது வடக்குக் கிழக்கு என்ற சொல்லே இல்லாமல் இலங்கை பற்றிய சர்வதேச அறிக்கைகள் வெளிவந்தன.

2) முப்பது வருடங்களுக்கும் மேலாக வடக்குக் கிழக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு வந்த தமிழர்களின் பாரம்பரியக் காணிகள், கொழும்பை மையமாகக் கொண்ட அரச திணைக்களங்களினால் சட்ட ரீதியாக அபகரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
—-(உதாரணம் தொல்பொருள், வனஇலாக, காணி ஆகிய திணைக்களங்கள் மற்றும் ஆணைக்குழுக்கள்) –

3) இன அழிப்பு என்ற பேச்சை இல்லாமல் செய்ய காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகம் வடக்குக் கிழக்கில் திறக்கப்பட்டது.

4) தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பதைத் தவிர்த்துப் புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சியும் அவற்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உள்ளடக்கியமையும்.

—-தன்னுடைய இந்த அரசியல் முயற்சிகளினால், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் ஏற்படவிருந்த அபகீர்த்தியை இல்லாமல் செய்ததகவும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி கூறுவதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதுமாத்திரமல்ல ராஜபக்ச குடும்பம் இதனை மறந்துவிடக்கூடாதெனவும் அவர் பாராளுமன்றத்தில் பகிரங்கமாகவே சொல்லியிருந்தார்

ஆக இவர் தன்னுடைய சிங்கள பௌத்த தேசியத்துக்கு விசுவாசமாகவும், சிறந்த அரசியல் செயற்பாட்டாளராகவும் விளங்கியிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் சந்திரிகா, மகிந்த, மைத்திரி ஆகிய மூவரும் இவருடைய அயராத முயற்சியினாலேயே ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடிந்தது.

இவர் பல அரசியல் மாற்றங்களை செய்திருந்தார். அமெரிக்கப் பென்ரகனின் நெருங்கிய நண்பர் என்பதால், அந்த உறவின் மூலமே ஆட்சி மாற்றங்களை இவரால் செய்ய முடிந்தது.

அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ளாத முறையில் சீனாவுடன் புதிய சமாந்தர அரசியல். பொருளாதார உறவை வகுத்த சிங்கள இராஜதந்திரிகளில் இவர் முக்கியமானவர்.

ஈழத் தமிழர் அரசியல் விடுதலை பற்றிய விவகாரங்கள், சர்வதேச அரங்கில் பேசுபொருளாகக்கூட இருக்கவே கூடாதென்ற, ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனைக்கு இவர் 2015 ஆம் ஆண்டு செயல் வடிவம் கொடுத்திருந்தார்.

அதன் நற்பயன்களையே இன்று கோட்டாபய ராஜபக்ச அனுபவிக்கின்றார். ஆகவே மனம் உருகி அழ வேண்டியவர்கள் ராஜபக்ச குடும்பமும். சிங்கள மக்களுமே. சிங்கள அரசியல் வரலாற்றில் இவருக்கென்று தனியொரு இடம் உண்டு என்றால் அது மிகையாகாது.

-கொழும்பான்-

Exit mobile version