தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட போதும், அதுபற்றி சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

நேற்று புதுடெல்லியில் நடந்த சந்திப்புக்குப் பின்னர், கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கோத்தாபய ராஜபக்ச,

“பிரதமர் நரேந்திர மோடியும் நானும் இன்று காலை பல விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். இந்தக் கலந்துரையாடல்கள் மிகவும் இயல்பான மற்றும் உறுதியளிக்கும் வகையிலானதாக இருந்தன.

இதன்போது, எங்கள் இரு நாடுகளின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

புலனாய்வுத்துறை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எமது திறன்களை மேம்படுத்துவதில் இந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு உதவியுள்ளது. இது தொடர்பாக அவரது ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

எமது புலனாய்வு அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக 50 மில்லியன் டொலர்களை வழங்கியதற்கு, இந்தியப் பிரதமருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

கடந்த  ஏப்ரல் மாதத்தில், எங்களுக்கு கிடைத்த அண்மைய அனுபவத்தில் இருந்து,  எங்கள் உத்திகளை மீளாய்வு செய்ய  வேண்டியிருக்கிறது.

modi-gotaஇந்தியாவுடன் சிறிலங்கா நெருக்கமாக இணைந்து செயல்படும்.

இந்திய கடல் சமாதான வலயமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, சிறிலங்காவும் இந்தியாவும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பன போன்ற விடயங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

உலகில் வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா உருவாகும் போது, சிறிலங்கா எவ்வாறு பயனடைய முடியும் என்பது குறித்து  நான் இந்தியப் பிரதமருடன் விவாதித்தேன்.

முதல் பயணத்தின் போது நான் முன்மொழிந்த பல முயற்சிகளுக்கு நேர்மறையான பதிலளித்த இந்தியப் பிரதமர் மோடிக்கு எனது நன்றி.

நீண்டகாலமாக நீடிக்கும் மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கான முதற்படியாக,  சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சொந்தமான அனைத்து படகுகளையும் விடுவிப்பதாக இந்தியப் பிரதமருக்கு உறுதியளித்துள்ளேன்” என்றும் அவர் கூறினார்.