Site icon ilakkiyainfo

தமிழ்க் கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைவது சாத்தியம் (கட்டுரை)

கடந்தவாரம் சில நாட்கள்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களது மக்களுக்கு விளக்கமளிக்கும் விஜயங்களும் மு.கா. முக்கியஸ்தர்களின் விளக்கமளிப்புக்  கூட்டங்களும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை அடியொற்றியதாகவே காணப்பட்டமை யாவரும் அறிந்ததே!

தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றும் காலம் நெருங்கிவிட்டதாக நூல் வெளியீட்டு வைபவமொன்றில் மு.கா. தலைவர் கூறியதன் பின்னர் பரஸ்பரம் பகிரங்கமாக இணைந்து கருத்துகளை பரிமாற்றிக் கொண்ட சந்திப்பொன்று கல்முனை மாநகர சபை வளாகத்தில் இடம்பெற்றதை அறிய முடிந்தது.

உண்மையில் சந்திப்பின் பெறுபேறு தமிழ் முஸ்லிம் முக்கியஸ்தர்கள் இணைந்து பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்திற்று. பேரின நிகழ்ச்சி நிரலின் அந்தரத்தையும் அந்தரங்கத்தையும் அமைச்சர் பதவிகளோடிருக்கையில் அறிந்துகொள்ள முடியாது என்பதும் தெரிந்ததே.

கல்முனை சந்திப்பு ஒரு புதிய வெளிச்சத்தையும் பரிணாமத்தையும் பரிமாணத்தையும் தோற்றுவிக்கும் என்றிருந்தால் சிறந்தது என்று சிரேஷ்ட புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பயங்கரவாதம் இல்லாத இன்றைய காலகட்டத்தில் தமிழ் மிதவாதம் முஸ்லிம் மிதவாதத்தை அரவணைத்துச் செல்வதையே விரும்புகிறது. கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்க இணங்கிச் செல்லாமையையிட்டு ஒருவகை ஆத்திரத்தோடு தமிழ்க் கூட்டமைப்பு இருந்திருக்குமானாலும் சமகாலத்தில் அவற்றை மறந்து தணிந்து ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான அழைப்பினையே விடுத்தவண்ணமுள்ளது.

பேரின நிகழ்ச்சி நிரலில் இருந்து தமிழ் பேசும் மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்களும் விடுபட வேண்டும் என்பதை வலியுறுத்துவதில் மட்டக்களப்பு, அம்பாறை கூட்டங்கள் பயன்படுத்தப்பட்டதை அறிந்து கொண்டுள்ளோம். மு.கா. தோற்றம் பெற்ற காலகட்டத்தில் இருந்து தொட்டம் தொட்டமாகவும் பட்டும் படாதவகையிலும் கிட்டியும் கிட்டாத வகையிலுமே பேரின நிகழ்ச்சி நிரலோடு இருந்து வருகிறது.

தமிழ்க் கூட்டமைப்பின் அழைப்பையேற்று ஏன் ஒருதடவை இணைந்து அரசியல் செய்து பார்க்க முடியாது. அதற்காக கல்முனைச் சந்திப்பு ஒரு அத்திவாரக் கல்லாக அமையலாம் தானே என்று அங்கலாய்க்கின்றனர் ஆர்வலர்கள்.

அமிர்தலிங்கத்தின் ஆரீடம்

மாபெரும் வெற்றியை ஐ.தே.க. வுக்கு பெற்றுக் கொடுத்த 1977 ஜூலை பொதுத் தேர்தலில் காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் இருந்து தெரிவான அமிர்தலிங்கம் 1983 அக்டோபர் 22 இல் எம்.பி. பதவியை காலி செய்தார்.

1989இல் போட்டியிடுவதற்கான களம் வடக்கில் கிடையாமல் போன தருணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்துக்காக போட்டியிட்ட அன்னார் 17926 விருப்பு வாக்குகளைப் பெற்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பட்டியலில் நான்காமிடத்துக்கு வந்து தோல்வி கண்டார்.

விடயம் என்னவென்றால் அன்றைய காலகட்டத்தில் 1989இல் முதன்முதலாக பொதுத்தேர்தலுக்கு களமிறங்கிய மு.கா.வினதும் மு.கா. தலைவரதும் எழுச்சியையும் எழுச்சி ஊர்வலத்தையும் கண்டு வியப்படைந்த அன்னார், இந்த மக்கள் எழுச்சி அடுத்த பத்தாண்டுகளுக்கு கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும் என்றார்.

அவர் கூறியதுபோன்றே பத்தாண்டுகளுக்கு பின்னர் 1999/2000 காலப்பகுதியிலிருந்து எழுச்சி கர்த்தாவின் மறைவைத் தொடர்ந்து பின்னல்களும் பிளவுகளும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. நிலைமைகள் களைதெறியப்பட்டு முழு மூச்சிலும் முழு வீச்சிலும் திட்டமிடல்களை செய்யக் கூடிய காலம் கனிந்திருப்பதாக பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

வாக்குப் பலம் வார்த்தைப் பலம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மு.கா. ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு எந்தளவுக்கு மு.கா. தலைவரின் கீழான முக்கியஸ்தர்கள் தயார் நிலையில் இருப்பரோ தெரியவில்லை. மு.கா. சமகாலத்தில் வடக்கு, கிழக்கு சிந்தனைகளுக்கு அப்பால் தென்னிலங்கைச் சிந்தனைகளுடனும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது.

அதன் நாடியோட்டத்தைப் பார்க்கையில் முஸ்லிம் தேசியம் என்ற பார்வையை விடவும் முஸ்லிம் தேசியக் கட்சி என்ற கட்சிக்கே முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகின்றமையால் மு.கா.வின் தென்னிலங்கை சிந்தனையாளர்களையும் தேசியம் தொடர்பான சிந்தனையாளர்களாக மாற்றமடையச் செய்ய வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கும் தமிழ்க் கூட்டமைப்போடு இணைந்து பணியாற்றும் தர்மத்தையும் தார்மீகத்தையும் உண்டுபண்ணுதல் போன்ற செயற்பாடுகளுக்கும் வாக்குப்பலம் மாத்திரமன்றி வார்த்தைப் பலமும் அத்தியாவசியமாக தேவைப்படலாம்.

இனத்துவ அரசியல்

இனத்துவ அரசியலுக்கு அப்பால் சென்று முற்றிலும் மாறுபட்ட சமூக, கலாசார கருத்துகளுடன் முஸ்லிம் அரசியலை திசை திருப்பிச் செல்ல எடுக்கப்பட்ட மர்ஹும் அஷ்ரப்பின் முயற்சி, அவரின் உயிருக்கு உலையாக மாறியமை உலகும் ஊரும் அறிந்ததே.

அதனை மீள இனத்துவ அரசியலுக்கு திருப்பிவந்த மு.கா. தலைவர் ஹக்கீம் அந்தப் பணியை சரியாக செய்யாவிடில் தனது பணியில் இருந்து நிரந்தரமாகவே பின்வாங்கியவராக கருதப்படக்கூடும். மு.கா. மு.கா.வாக செயற்பட்டால் உண்மையான முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் யார் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

தேர்தல்களும் விமர்சனங்களும்

தேர்தல்களுக்குத் தேர்தல் தனது தனித்துவத்தை பறிகொடுத்து தேசியக் கட்சிகளுடன் இணைந்தும் தனியாகவும் போட்டியிட்டு வந்த மு.கா. சமீபகாலங்களில் தனியாக தேர்தலில் போட்டியிட்டுவருகின்ற போதிலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தீர்மானிக்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ள வேட்பாளரான ஜனாதிபதியுடன் அல்லது எதிரணி வேட்பாளருடன் அந்தக் கட்சி கண்டடையக் கூடிய உடன்பாடுகளை அடியொற்றியதாகவே பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான விதிமுறைகளை காணமுடியும்.

எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்தும் வடக்கு, கிழக்குக்கு வெளியே உடன்பாடுகள் கண்டடையக் கூடிய கட்சியுடன் இணைந்தும் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகின்றது.

எப்படியிருந்த போதிலும் தனித்துப் போட்டியிட்டு பேரம்பேசுவதன் மூலம் அரசுகளுடன் இணைவதைவிடவும் பெரிய கட்சி ஒன்றுடன் இணைந்து போட்டிபோட்டு பெற்றுக் கொண்ட ஆசனங்களுடன் அரசுகளுடன் இணைவதை அநேகமானோர் எதிர்க்கின்றனர், விமர்சிக்கின்றனர். அத்தகைய நடவடிக்கை ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகளை அடியொற்றியதாக இருந்தாலும் கூட விருப்பத்துக்குரிய விடயமாக அரசியல் அரங்கில் பேசப்படுவதில்லை.

தங்களது எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பிராந்திய மக்கள் சாதகமாக உள்ளனர் என்பதை தங்களது நிரந்தரமான ஜாதகம் என்று எண்ணத் தேவையில்லை. பாதகமாக கிளர்ந்தௌக்கூடிய சந்தர்ப்பங்களும் அரசியலில் ஏற்படாதிருக்கும் என்று கூறமுடியாது.

இன்னுமொருவரது தாவுகையை வேவுபார்த்து அதற்கேற்றவாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் அடிப்படைக் காவுகையை கைதுறக்க நேரிடுகிறது என்பதை சம்பந்தப்பட்டோர் பதிவில் கொள்ள வேண்டும்.

அடுக்கடுக்காக தடுமாறும் கருத்துகளுக்குள்ளாகியுள்ள மு.கா.வும் தலைமையும் நன்குணர்ந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அமர்ந்து அமர்க்களமாக யோசிக்க வேண்டியுள்ளதை தலைமையின் சமகால, சமீபகால உரைகளில் இருந்து உணர முடிகிறது.

அந்த வகையில் இலங்கையில் முஸ்லிம் அரசியலை மு.கா.வால் எப்படி முன்னெடுத்துச் செல்லலாம் என்பது தொடர்பில் கொள்கை வேலைத்திட்டங்களை தயாரிக்க வேண்டிய மீள்கடப்பாடுக்குள்ளாகியுள்ளது. அந்தக் கட்சி என்றால் மிகையாகாது.

யதார்த்தம் என்னவென்றால் சமகால முஸ்லிம் இளைஞர் சமுதாயத்துக்கு முஸ்லிம் அரசியல் தொடர்பாக கற்றுக் கொள்வதற்குள்ள ஒரே பாடம் எவரேனுடனும் இணைந்து அல்லது இணையாமல் தேர்தல்கள் மூலம் எம்.பி.க்களாகி ஆட்சியாளர்களிடம் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வது மாத்திரமே என்பதாகும்.

செய்வதறியாத தத்தளிப்பு

முஸ்லிம் அரசியல் வரலாற்றின் ஏடுகளை புரட்டிப் பார்த்தால் அதிகமான பதிவுகள் வேதனைக்குரியதாகவே காணப்படுகின்றன. அல்குர்ஆன் ஹதீஸ் என்ற தாரக மந்திரத்தோடு தனது பயணத்தை ஆரம்பித்த மு.கா. ஒரு புனிதப் பயணத்துக்காகவே மக்களை களமிறக்கியது.

இஸ்லாமிய ஷரிஆ முறைப்படி கட்சியை நகர்த்த முடியாமல் போனாலும் அடிப்படை சித்தாந்தங்களின் படியாக முன்னுக்குப் பின் முரணாகாத வகையிலாவது நகர்வுகளை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதையிட்டு பலர் கவலைப்படுகின்றனர்.

பிறரை தாஜா பண்ணுவதற்காக கூஜாதூக்கும் அரசியலில் இருந்து மக்களை பிரித்தெடுத்து விடுதலை வேட்கையை புகட்டியவர்கள் செய்வதறியாது தத்தளிக்கின்றனர்.

சில்லறை வியாபாரம் – மொத்த வியாபாரம்

அபிவிருத்தி என்ற மாயையை வைத்துக் கொண்டு எமது கண்களைக் குத்த வேண்டாம் என்று முகவர்த்துவ அரசியலுக்கு முழுக்குப் போட வைத்த மறைந்த தலைவர் அஷ்ரப் , முகவர்கள் என்று வர்ணிக்கப்பட்டோரிடமிருந்து முஸ்லிம் மக்களைப் பிரித்தெடுப்பதற்காக சில்லறை வியாபாரத்தைப் பற்றி யோசிக்காமல் மொத்த வியாபாரத்தைப் பற்றி சிந்தியுங்கள் என்று மேடைக்கு மேடை முழங்கினார்.

சில்லறை சில்லறையாகவும் தனித்தனியாகவும் முஸ்லிம் வாக்குகளை கூறுபோட்டு தனித்தனியாக பதவிகளை பெற்றுக் கொள்வதைப் பற்றி சிந்திக்காமல் முஸ்லிம் வாக்குகளை மொத்தமாக ஒரே கூரையின் கீழும் ஒரே கூடைக்குள்ளும் இட்டு மொத்தமாக பேரம் பேசி கொடுப்போம் என்று சூளுரைத்தார்.

இன்று அதே மொத்த வியாபாரம் சில்லறை வியாபாரமாக சிலாகிக்கப்படுவதையும் மாறிச் செல்வதையும் புரிந்துகொள்ள முடியாமாலில்லை. எவர் எவ்வளவுதான் கூறினாலும் முஸ்லிம் அரசியல் பதமாகியுள்ள விதம் மீண்டும் பழைய ஓடு பாதைக்குள் திரும்புவதும் திரும்புவதும் கஷ்டமானதொன்றாகவே புலப்படுகின்றது.

பஷீர் சேகுதாவூத்


ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றதன் பின்னரும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மு.கா. மு.கா.வாக இருக்க வேண்டுமானால் அரசுடன் இருக்க முடியாது.

அரசுடன் இருக்க வேண்டுமானால் மு.கா. மு.கா. வாக இருக்க முடியாது என்று   அறிக்கையிட்டிருந்ததுடன்  தான் அரசை விட்டு விலகத் தயார் ஏனையோர் தயாரா? என்றுகேள்வி எழுப்பியிருந்ததால் உண்மையில் அவரது உள்ளுணர்வுகள், நகர்வுகள் எது என்று தெரியாவிடினும் சிறந்த தருணத்தையும் வெளிப்படையாக கூறினார்.

அமைச்சர் பதவியில் யாருக்கு அதீத விருப்பம் என்பதை புடம் போட்டுக்காட்டிய அன்றைய செய்திக்குறிப்பில் மு.கா. மு.கா.வாக இருக்க வேண்டுமானால் அந்தக் கட்சி எந்த அரசுகளுடனும் இருக்க முடியாத அடிப்படை அம்சம் துலங்குகிறது.

அந்தவகையில் முஸ்லிம் அரசியலை அசலாக செய்ய நினைக்கின்ற எந்த முஸ்லிம் அரசியல்வாதியாலும் பேரின அரசுகளுடன் இணைந்திருக்க முடியாது என்பதை ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாராளுமன்றத்தில்

இதேவேளை ஜனாதிபதி அரசாங்கம் மு.கா.வுக்கு உரிய இடமளித்து போஷிக்கவில்லை என்றும் ஒரு முக்கிய பங்காளிக் கட்சியாக கருத்திற் கொள்ளவேயில்லை என்று கூறப்படுகின்ற தருணத்தில் பாராளுமன்றத்தில் அது ஒரு கட்சியாக இல்லை என்று தர்க்கிக்கின்றனர்.

போதாக்குறைக்கு ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நான்கு கட்சிகளே அங்கம் வகிக்கின்றன.

அதில் மு.கா. இடம்பெறவில்லை என்றும் கூறினார். குறிப்பாக அமைச்சர் பதவியை கொடுத்து அதிகாரமில்லை. கட்சி என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் என்றடிப்படையில் முன் ஆசனத்தைக் கொடுத்துவிட்டு கட்சி என்ற அடிப்படையில் பிரத்தியேக அந்தஸ்து கிடையாது என்று நிலையியற் கட்டளையின் கீழ் விளக்கமளிக்கப்படுகிறது.

வழக்கமாக ரவூப் ஹக்கீம் விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடிக்கின்ற ரணில், சடுதியாக பிழைபிடிக்க முனைந்தமை பெரும்பான்மை நிகழ்ச்சி நிரல் மீது நாட்டங் கொண்டுள்ளமை புலப்படுவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Exit mobile version