ilakkiyainfo

தமிழ்ப் பகுதிகளை விட்டு படையினரை வெளியேற்றம் செய்யக் கூடிய சக்தி தமிழ்க் கட்சிகள் மத்தியில் உண்டா?- நிலாந்தன் (கட்டுரை)

தமிழ்ப் பகுதிகளை விட்டு படையினரை வெளியேற்றம்  செய்யக் கூடிய சக்தி தமிழ்க் கட்சிகள் மத்தியில் உண்டா?- நிலாந்தன் (கட்டுரை)
June 08
22:25 2015

புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில்…. “வட மாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார்.

போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும், இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அவர் கூறுவதன் அடிப்படையில் யோசித்தால் தமிழ் பகுதிகளில் படைமய நீக்கம் செய்வதே இப்பிரச்சினைகளுக்கெல்லாம் இறுதித்தீர்வாக அமைய முடியும் என்று தெரிகின்றது.

வட மாகாண முதலமைச்சர் கூறி வருவது போல பிரச்சினைகள் எல்லாவற்றுக்குமான மூலகாரணம் படைமயப்பட்ட ஒரு சூழல்தான்.

எனவே, படைமயநீக்கம்தான் இது போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம் மூலத்தீர்வாக அமைய முடியும். ஆனால், அவ்வாறு படைமயநீக்கத்தைப் பற்றிச் சிந்திக்கும் போது நான்கு முக்கிய கேள்விகள் எழும்.

ArmyInJaffna_CIமுதலாவது கேள்வி – தமிழ்ப் பகுதிகளை படைமயநீக்கம் செய்யக் கூடிய சக்தி அல்லது அதற்கு வேண்டிய ஒரு நிகழ்ச்சி நிரல் அல்லது இவை எல்லாவற்றுக்கும் அவசியமான ஓர் அரசியல் திடசித்தம் தமிழ்க் கட்சிகள் மத்தியில் உண்டா?

இரண்டாவது கேள்வி – படைமயநீக்கம் ஒன்றை செய்யத்தேவையான அரசியல் பலம் மைத்திரிபால சிறிசேனவிடம் உண்டா?

மூன்றாவது கேள்வி – படைமயநீக்கம் ஒன்றைச் செய்வதற்குரிய அரசியல் திடசித்தம் அவரிடம் உண்டா?

நான்காவது கேள்வி – படைமயநீக்கத்தை ஊக்குவிக்கத்தக்க ஒரு பிராந்திய மற்றும் அனைத்துலக அரசியல் சூழல் தற்பொழுது உண்டா?

இந்நான்கு கேள்விகளுக்கும் உரிய பதில்களை முதலில் பார்க்கலாம்.

தமிழ் பகுதிகளைப் படைமயநீக்கம் செய்யத் தேவையான ஓர் அரசியல் திடசித்தமோ அல்லது அதற்கு வேண்டிய நிகழ்ச்சி நிரலோ கூட்டமைப்பிடம் இருக்கிறதா?

ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வைக் கோரும் கட்சியானது முழுமையான படைமயநீக்கத்தைக் கோர முடியாது.

ஏனெனில், இலங்கையின் ஐக்கியத்தைப் பேணுவதற்கு வடக்குக் கிழக்கில் படைப் பிரசன்னம் அவசியமானது என்று தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் கூறிவருகிறார்கள்.

எனவே, ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வைப் பற்றிச் சிந்திக்கும்போது இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளில் நிலைகொண்டிருப்பதைப் போல படையினர் தமிழ் பகுதிகளிலும் நிலைகொண்டிருப்பதை ஏற்கத்தான் வேண்டும்.

இப்படிப் பார்த்தால் படைப் பிரசன்னத்தின் அடர்த்தியைக் குறைப்பது பற்றித்தான் உரையாட முடியுமே தவிர முழுமையான படைமயநீக்கம் பற்றி உரையாட முடியாது. இது முதலாவது.

இரண்டாவது – படைமயநீக்கத்தைச் செய்வதற்குரிய அரசியற்பலம் மைத்திரிபால சிறிசேனவிடம் உண்டா என்பது.

Rajapaksha-brothersஇப்போதிருக்கும் அரசு மிகவும் பலவீனமான ஒரு கூட்டு. ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு இது. நாட்டுக்கு வெளியே உள்ள சக்திமிக்க தரப்புக்களால் பின்னிருந்து பாதுகாக்கப்படும் ஓர் அரசு இது.

படைமயநீக்கம் என்ற விவகாரத்தைப் பற்றி அவர்களால் உரையாட முடியாது. அப்படி உரையாடத் தொடங்கினால் அதை ராஜபக்‌ஷ சகோதரர்கள் தமக்குச் சாதகமாகத் திருப்புவார்கள்.

ரத்தம் சிந்திப் பெற்றுக்கொடுத்த ஒரு வெற்றியை சிறிசேன தமிழர்களிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார் என்று அவர்கள் பிரச்சாரம் செய்வார்கள்.

எனவே, ராஜபக்‌ஷ அணியைப் பலப்படுத்தக் கூடிய எந்த ஒரு நகர்வையும் மைத்திரி முன்னெடுக்கமாட்டார். குறிப்பாக வரவிருக்கும் பொதுத்தேர்தல் வரையிலும் படைமயநீக்கத்தைப் பற்றிக் கதைக்கவே முடியாது. இது இரண்டாவது.

JAFFNAFP927இனி மூன்றாவது – படைமயநீக்கத்தைச் செய்யத் தேவையான அரசியல் திடசித்தம் மைத்திரியிடம் உண்டா?

ஆட்சி மற்றத்தின் பின் தமிழ் பகுதிகளில், பொது இடங்களில் படைப்பிரசன்னம் ஒப்பீட்டளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ஆட்செறிவுக் குறைப்பு அல்ல.

அதோடு சிவில் நிர்வாக செயற்பாடுகளில் படைத்தரப்பின் நேரடியான தலையீடும் ஒப்பீட்டளவில் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதன் அர்த்தம் எல்லாவற்றின் மீதான கண்காணிப்பும் குறைக்கப்பட்டிருக்கின்றது என்பதல்ல. மேலும், ஆட்சி மாற்றத்தின் பின் படையினர் வசமிருந்த தனியார் காணிகள் சிறிய அளவில் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

உயர் பாதுகாப்பு வலயங்களிலும் இவ்வாறு சிறிய அளவில் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம் சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணிகள் உரிய மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை

இவ்வாறு ஆங்காங்கே தெட்டம் தெட்டமாக சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி விடுவிப்புக்களை படைமயக்குறைப்பு அல்லது படைமய நீக்கம் என்று கருத முடியாது.

அதைப் போலவே ஆட்சி மாற்றத்தின் பின் சிவில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் அதிகரித்து வருகிறது. ஆனால், இதன் அர்த்தம் படைமயநீக்கம் நிகழ்ந்து வருகிறது என்பதல்ல.

கடந்த சில மாதங்களாக தமிழ் பகுதிகளில் நிகழ்ந்துவரும் தெட்டம் தெட்டமான மாற்றங்கள் யாவும் மேலோட்டமானவை. மேலும், கூராகச் சொன்னால் அவை வரப்போகும் தேர்தலை நோக்கிச் செய்யப்படுபவை.

ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளான கூட்டமைப்பின் வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக இவ்வாறு மேலோட்டமாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

ஆனால், படைமயநீக்கம் எனப்படுவது ஒரு திட்டவட்டமான அரசியல் தீர்மானம்.

அது ஒரு கொள்கை மாற்றம். அப்படி ஒரு தீர்மானத்தை எடுக்குமளவிற்கு மைத்திரி சக்திமிக்கவர் அல்ல. அவர் ஒரு ஆட்சிமாற்றத்தின் கருவியே. அவர் மிகவும் எளிமையாகத் தோன்றுகிறார். எளிமையாகவும் நடந்துகொள்கிறார்.

சாதாரண குடிமகன் ஒருவனைப் போல சப்பாத்துக் கடைக்குள் போய் தனக்கு வேண்டிய காலணிகளை வாங்கிக் கொண்டு போகிறார்.

v6c4v64cvசில வாரங்களுக்கு முன் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த முன்னாள் அரசியல் பத்தி எழுத்தாளரான குவாட்றி ஸ்மாயில் சொன்னார், “மைத்திரிபால சிறிசேன ஏனைய தலைவர்களைவிட வித்தியாசமானவர்” என்று.

அண்மையில் இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜாங்கச் செயலரான ஜோன் கெரியைச் சந்தித்தபோது கூட்டமைப்பின்  தலைமைப்பீடமும்   மைத்திரிக்கு நற்சான்றிதழ் வழங்கியதாகக் கூறப்படுகின்றது.

இங்கு பிரச்சினை ஒரு சிங்களத் தலைவரின் தனிப்பட்ட சுபாவம் அல்ல. பொதுவெளியில் அரசியலில் அவர் எத்தகைய ஒரு கட்டமைப்பின் பிரதிநிதியாக இருக்கிறார் என்பதே.

இலங்கைத் தீவின் ஆட்சிக் கட்டமைப்பானது சிங்கள பௌத்த மேலாண்மைவாதத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன அந்தக் கட்டமைப்பின் கைதிதான். தனிப்பட்ட முறையில் அவர் எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் அவர் தலைமை தாங்கும் கட்டமைப்பை மீறி அவரால் சிந்திக்கவோ செயற்படவோ முடியாது. அக்கட்டமைப்பில் ஏற்படாத எந்தவோர் மாற்றமும் மேலோட்டமானதே.

வடக்குக் கிழக்கில் நிறுவப்பட்டிருக்கும் படைக்கட்டமைப்பானது மேற்படி சிங்கள பௌத்த அரசக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் ஒரு யுத்த எந்திரம்தான்.

அந்த யுத்த எந்திரத்தை தமிழ் பகுதிகளில் இருந்து அகற்ற மைத்திரி முன்வருவாரா? அதற்கு வேண்டிய அரசியல் திடசித்தம் அவரிடம் உண்டா? இது மூன்றாவது.

நான்காவது – படைமயநீக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு பிராந்திய மற்றும் அனைத்துலகச் சூழல் தற்பொழுது உண்டா? நிச்சயமாக இல்லை.

ஆட்சி மாற்றத்தைப் பாதுகாத்துப் பலப்படுத்துவதே இப்பொழுது வெளிச்சக்திகளின் பிரதான நிகழ்ச்சி நிரலாகக் காணப்படுகின்றது.

படை மயநீக்கத்தைப் பற்றி உரையாடினால் அது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை பலவீனப்படுத்திவிடும் என்று தெற்கில் உள்ள மஹிந்த தலைமையிலான சிங்களக் கடும்போக்குவாதிகள் எதிர்ப்புக் காட்டுவார்கள்.

அவர்கள் மட்டுமல்ல மைத்திரியோடு நிற்கும் கடும்போக்குவாதிகளும் அதற்கு உடன்படப் போவதில்லை. இவை எல்லாம் சேர்ந்து மஹிந்தவுக்குச் சாதகமான ஒரு அலையைத் தோற்றுவிக்கக் கூடும். அதாவது, ஆட்சிமாற்றத்தை ஸ்திரமிழக்கச் செய்யக் கூடும்.

ஆட்சி மாற்றத்தை பலப்படுத்த விளையும் அனைத்துலக சமூகமானது படைமயநீக்கத்தைப் பற்றி இப்போதைக்கு வாயைத் திறக்காது.

வரப்போகும் தேர்தலில் மாற்றத்தின் அடுத்தகட்ட வெற்றியை உறுதிப்படுத்திய பின்னரும் கூட அவர்கள் வாயைத் திறப்பார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. இது நாலாவது.

மேற்கண்ட நான்கு கேள்விகளுக்குமான பதில்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியும்.

“தமிழ்ப் பகுதிகளை இராணுவ மயநீக்கம் செய்வதற்கு உள்நாட்டிலும் சாதகமான நிலைமைகள் இல்லை. நாட்டுக்கு வெளியிலும் சாதகமான நிலைமைகள் இல்லை. “

இத்தகையதோர் அரசியல் சூழலில் படைமயநீக்கம் நிகழும் வரையிலும் சனச்செறிவு குறைந்த கிராமங்களின் தெருக்களில் தனியாகச் செல்லும் பெண்களை எப்படிப் பாதுகாப்பது? குழுச் சண்டைகள் வாள்வெட்டில் முடிவதை எப்படித் தடுப்பது?

இந்த இடத்தில் ஈழத்தமிழர்களுக்குஉஒரே ஒரு சாத்தியமான தெரிவுதான் உண்டு. தமிழ் சமூகத்துக்குள்ளேயே கவசங்களாக அமையவல்ல உள்ளூர் கட்டமைப்புக்களையும் செயற்பாட்டு இயக்கங்களையும் உருவாக்குவதுதான். அது ஒரு கூட்டுப் பொறிமுறை.

அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள், படைப்பாளிகள், கல்விமான்கள், ஊடகவிலாளர்கள், மத நிறுவனங்கள் போன்ற இதில் தொடர்புடைய எல்லாத் தரப்பினரும் இணைந்து பங்காற்றும் ஒரு கூட்டுப் பொறிமுறை அது.

அதாவது, மேலிருந்து கீழ் நோக்கி பெருப்பிக்கப்படும் சிவில் வெளிகளை விடவும் கீழிந்து மேல்நோக்கி பெருப்பிக்கப்படும் சிவில் வெளிகளே நிரந்தரமானவை.

அத்தகைய சிவில் ஜனநாயக வெளிகளே படைமயப்பட்ட ஒரு சமூகத்திற்குப் பொருத்தமான ஒரு பரிகாரமும் ஆகும். அது அதன் வளர்ச்சிப் போக்கில் படை மயநீக்கத்தையும் செய்யும்.

முதலமைச்சர் கூறுவது போல குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு வெளித்தரப்புக்களே மூலகாரணமாக இருந்தாலும் கூட வெளித்தரப்புக்களால் கையாளப்படும் அளவிற்கு ஒரு தலைமுறை மூத்தவர்களின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா என்ற கேள்வியும் இங்கு முக்கியம்.

வித்தியாவுக்குக் கற்பித்த ஓர் ஆசிரியரின் அஞ்லிக் குறிப்பை இணையத்தளங்கள் பிரசுரித்திருந்தன. அதைப்போலவே குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆசிரியர்களையும் பேச வைக்கவேண்டும்.

அவர்கள் கல்வியைத் தொடர்ந்தார்களா அல்லது இடைவிலகினார்களா என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் எமது பாடசாலைகளிலேயே கல்வி கற்றிருக்கிறார்கள்.

எமது கோயில்கள், சனசமூக நிலையங்கள், விளையாட்டுச் சங்கங்கள் போன்ற இன்னோரன்ன சமூக நிறுவனங்களுக்குள் வந்துபோயிருக்கிறார்கள். அல்லது இவை எவற்றுக்குள்ளும் வராமல் வேறு திசைகளில் போயிருக்கிறார்கள்.

இவர்களில் அனைவரும் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. இச்சமூகத்திற்குப் புறத்தியானவர்கள் அல்ல. இவர்களுடைய பெற்றோர்களும் உறவினர்களும் இப்பொழுதும் அதே சமூகத்தில்தான் வாழ்கிறார்கள்.

அதாவது, பொழிவாகச்சொன்னால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஏதோ ஒருவீதமளவிற்கு இந்தச் சமூகத்தின் உற்பத்திகளே. எமது கல்விமுறையின் உற்பத்திகளே. எமது மத நிறுவனங்களின் உற்பத்திகளே.

இப்படிப் பார்த்தால் வெளித்தரப்புக்களை மாத்திரம் குற்றம் சாட்டமுடியாது. முழுத் தமிழ்ச்சமூகமும் ஏதோ ஒரு வீதமளவிற்கு குற்றப்பழியை ஏற்கத்தான் வேண்டும்.

புங்குடுதீவுச் சம்பவத்தின் பின்னர் அது தொடர்பாக யாழ். சிவில் சமூக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கு கடந்த முழு நிலா நாளன்று யாழ். மறைக்கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.

மருத்துவர்களும், மதகுருக்களும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ஒரு கத்தோலிக்க மதகுரு சொன்னார், “நாங்கள் எல்லாருமே இதற்குப் பொறுப்பு, என்பாவமே என்பாவமே என் பெரும்பெரும்பாவமே என்று அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வோம்” என்று.

தமிழ் மக்கள் இக்கூட்டுப்பொறுப்பை ஏற்கப் பின்னடிப்பார்களாக இருந்தால் இன்னுமின்னும் வித்தியாக்களை இழக்கவேண்டிவரும்.

வித்தியா கொல்லப்பட்ட சில வாரங்களுக்குள்ளேயே அதே தீவுப் பகுதியில் நாரந்தனையிலும், வன்னிப் பகுதியில் பரந்தனிலும் மேலும் இரு சம்பவங்கள் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

படைமயநீக்கம் எனப்படுவது ஒரு தேநீர் விருந்தைப் போன்றதல்ல. படைமயநீக்கத்துக்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும்   ஒரு சூழலில் மேலிருந்து கீழ்நோக்கிவரும் சட்டங்கள் மற்றும் அரசியல் தீர்மானங்களுக்காக தமிழ் மக்கள் இன்னுமின்னும் காத்திருக்கப் போகிறார்களா?

அல்லது கீழிருந்து மேல் நோக்கி சிவில் நிறுவனங்களைக் கட்டி எழுப்புவதன் மூலம் சிவில் ஜனநாயக வெளியைப் பலப்படுத்தி தமக்கேயான ஓர் உள்ளூர் சமூக பண்பாட்டு பாதுகாப்புப் பொறிமுறையை உருவாக்கப் போகிறார்களா?

இங்கு ஒரு சுவாரசியமான முரணைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஒருபுறம் தமிழர்கள் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கிறார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசும் உட்பட புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சில நிறுவனங்கள் இது தொடர்பாக மாபெரும் கையெழுத்துவேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளன.

ஒருபுறம் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கும் ஒரு மக்கள் கூட்டம் இன்னொருபுறம் தனது சமூகத்திற்குள் நிகழும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஏதோ ஒரு வகையிலான உள்ளகப் பொறிமுறை ஒன்றை கட்டி எழுப்ப வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும், புத்திஜீவிகளும், கருத்துருவாக்கிகளும், மதகுருக்களும், ஊடகங்களும், படைப்பாளிகளும் இது விடயத்தில் கூட்டாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

இல்லை என்றால் இது போன்ற கட்டுரைகளை எழுதி முடிக்கும் போது யாவும் கற்பனை என்று முடிக்கவேண்டியிருக்கும். அதேசமயம், எங்கேயோ ஒரு ஆளரவமற்ற தெருவில் யாரோ ஒரு தனித்துச் செல்லும் பெண்பிள்ளை தூக்கிச் செல்லப்படுவதையும் தடுக்க முடியாமல் இருக்கும்.

 -நிலாந்தன் –

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com