ilakkiyainfo

3 தருணங்களில் கதறியழுதார் கருணாநிதி!’ – நெருக்கடி நிலைகளை விவரிக்கும் உதவியாளர் நித்யா

3 தருணங்களில் கதறியழுதார் கருணாநிதி!’ – நெருக்கடி நிலைகளை விவரிக்கும் உதவியாளர் நித்யா
August 07
20:40 2019

ஜெயலலிதா அம்மையார் முடியாமல் இருக்கிறார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றுகிறது’ எனக் கூறினேன்.

இதை எதிர்பார்க்காதவர், ` இப்படியெல்லாம் பேசாதே… அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், விரைவில் குணமாகிவிடுவார்’ எனக் கண்டித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைந்து இன்றோடு ஓராண்டு கடந்துவிட்டது. இன்று முரசொலி அலுவலகத்தில் அவரது முழு உருவச் சிலையைத் திறந்துவைக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

முதலாம் ஆண்டு நினைவுதினத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடம் வரையில் அமைதிப் பேரணியை நடத்தியிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் வலம் வந்தவர் கருணாநிதி. 13 முறை எம்.எல்.ஏ-வாகவும் ஐந்து முறை தமிழக முதல்வராகவும் பதவி வகித்தவர், தன்னுடைய இறுதிக்காலத்தில் வயது மூப்பினால் வரக் கூடிய நோய்களால் அவதிப்பட்டார்.

தன்னுடைய நெருங்கிய நண்பர்களை அடையாளம் கண்டுகொள்வதிலும் அவருக்குச் சிரமம் ஏற்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், கடந்தாண்டு இதே நாளில் தனது பயணத்தை முடித்துக் கொண்டார்.

nithi-1
அமைதிப் பேரணி

`அண்ணா சமாதியில் அவருக்கொரு இடம் வேண்டும்’ என்ற கோரிக்கையைக்கூட, சட்டரீதியாகப் போராடியே வென்றார் ஸ்டாலின்.

ஏறத்தாழ 10 ஆண்டுகளாக கருணாநிதியின் உதவியாளராக இருந்தவர் நித்யா. கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதி சமாதியில் இரவு முழுக்க அவர் தலைவைத்துப் படுத்தது வைரலானது.

` தி.மு.க முன்னாள் தலைவர் இறந்து ஓராண்டாகிவிட்டது. அவர் இல்லாத நாள்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்றோம் நித்யாவிடம்.

nithi-2
உதவியாளர் நித்யா

“ அவர் என்னைத் தவறவிட்டுவிட்டார் என்றுதான் சொல்வேன். அவர்தான் என்னை வளர்த்தார். அவர் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறேன்.

அறிவாலயப் பணியிலிருந்து முதல்முறையாக அவருக்கு உதவியாளராகச் செல்லும்போது அச்சம் ஏற்பட்டது. பெரிய வீடு, பெரிய தலைவர் என்ற பயம் என்னைச் சூழ்ந்திருந்தது.

மற்றவர்கள் என்னை எப்படிப் பார்ப்பார்கள் என்ற பயமும் இருந்தது. அவர் காட்டிய அன்புதான் எனக்குள் இருந்த அச்சத்தைப் போக்கியது.

2003-ம் ஆண்டு காலகட்டத்தில் அறிவாலயப் பணிக்காக வந்தேன். அவருடன் வெளியூர் பயணங்களுக்குச் சென்றிருக்கிறேன். 2009 முதல் அவருடன் பணியாற்றி வந்தேன்.

ஒவ்வொரு நாளும் அவரிடம் கற்றுக்கொள்வதற்கு எதாவது ஒரு அனுபவப் பாடம் கிடைக்கும். அவருடனான அன்பு குறித்து வெளிப்படையாகப் பேச முடியாது.

அதைப் பற்றிப் பேசினால் விளம்பரத்துக்காகப் பேசுகிறேன் என நினைப்பார்கள். நானும் அதைப் பற்றிப் பேசுவதற்கு விரும்புவதில்லை.

எங்கள் அய்யா மீது நான் காட்டிய அன்பைவிட, அவர் என் மீது காட்டிய அன்பை மறக்க முடியாது. கடந்த ஓராண்டு காலமாக நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போதுதான், எங்கள் அய்யாவால் எப்படியெல்லாம் நான் பாதுகாக்கப்பட்டேன் என்பது புரிகிறது. இப்போதும் எங்கள் அய்யாதான் என்னைக் காப்பாற்றி வருகிறார்”.

அரசியலில் தீவிரமாக வலம் வந்தவரை மூப்புநோய் முடக்கிப்போட்டது. அதை அவர் எப்படி எடுத்துக்கொண்டார்?

“ வயதாக வயதாக இயற்கை உபாதைகள் வரத்தான் செய்யும். அது அவரை முடக்கிப் போட்டுவிட்டதாக மட்டும் சொல்லாதீர்கள். அவருக்கு மனஅழுத்தம் இருந்தது உண்மைதான்.

ஒரு பெரிய பொறுப்பில் இருந்தவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும்போது மனஅழுத்தம் வரத்தான் செய்யும். எங்கள் அய்யாவைப் பொறுத்தவரையில் இயக்கத்துக்காகவும் மக்களுக்காகவும் உண்மையாக வாழ்ந்தவர்.

அவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். ஊர் உலகம் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். தனக்கென எதையும் அவர் சேர்த்துக்கொள்ளவில்லை.

சொந்தமாகத் தனக்கென எந்தவொரு பொருளையும் அவர் வைத்துக்கொண்டதில்லை. பெரியார், அண்ணா ஆகியோரது கொள்கைகளில் கடைசிவரையில் உறுதியாக இருந்தார்.”

2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டார் என்கிறார்களே?

nithi-3சமாதியில் ஸ்டாலின், துரைமுருகன்

“ ஆமாம். 2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என நம்பினார். அந்த நம்பிக்கை நிறைவேறாததால் சற்று மன வருத்தத்தில் இருந்தார்.

ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்வைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். தட்டுத் தடுமாறி உடல்நலிவோடு அவர் பதவியேற்றார்.

இந்தக் காட்சியைப் பற்றி மறுநாள் அய்யாவிடம் பேசும்போது, `ஜெயலலிதா அம்மையார் முடியாமல் இருக்கிறார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றுகிறது’ எனக் கூறினேன்.

இதை எதிர்பார்க்காதவர், ` இப்படியெல்லாம் பேசாதே… அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், விரைவில் குணமாகிவிடுவார்’ எனக் கண்டித்தார்.

பிறகு, ` நீ என்னை நல்லா பார்த்துக்கோ…5 வருஷத்துக்கு அப்புறம் நான் முதல்வராக வருவேன்’ என்றார். தேர்தலில் தோற்றுப் போனாலும் அவர் முடங்கிப் போய்விடவில்லை. இயற்கைதான் அவரை முடக்கிப் போட்டது.”

கோபாலபுர இல்லத்தின் முதல் மாடியில் ஓராண்டு காலத்துக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார் கருணாநிதி. அந்தநேரத்தில் அவரை ஆறுதல்படுத்திய நிகழ்வுகளைச் சொல்ல முடியுமா?

NITHI-4

“ அவரைக் கவலைப்படாமல் பார்த்துக்கொண்டோம். அவர் என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டே இருப்பார். அவருக்குப் பிடித்தமான திரைப்படங்களைப் போட்டுக் காட்டுவேன்.

அதிலும், சோகமான படங்களைப் போட்டுக் காட்ட மாட்டேன். மனஅழுத்தம் போக்கக்கூடிய படங்களை விரும்பிப் பார்த்தார்.

அதேபோல், அவர் எதற்கும் ஆசைப்பட்டது கிடையாது. மக்கள் பணியையும் கழகப் பணியையும்தான் விரும்பிச் செய்தார். அதிகநேரம் கட்சிக்காகச் செலவிட்டார்.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தபோது தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தார். அந்த உற்சாகமே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

அண்ணா மறைவுக்குப் பிறகு அவருக்குத்தான் அதிகக் கூட்டம் கூடியது. இந்த மண்ணின் மீதும் மக்கள் மீதும் உயிரையே வைத்திருந்தார். அவர் உண்மையாக இருந்தார். சிலர் இறந்த பிறகு புகழ் குறையத் தொடங்கும். ஆனால், எங்கள் அய்யாவின் புகழ் போகப் போகத்தான் கூடும்”.

2ஜி வழக்கு உட்பட நெருக்கடியான சூழல்களை அவர் எப்படி எதிர்கொண்டார்?
NITHI-5
தயாளு அம்மாள்

“ 2ஜி விவகாரத்தைப் பெரியம்மா (தயாளு அம்மையார்) எதிர்கொண்டார். அவர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற இருந்தது. இதைக் கேள்விப்பட்டவர் மிகுந்த வேதனையில் இருந்தார்.

லிப்ட்டில் வரும்போது, தொடையைத் தட்டி ஓவென அழுதார் அய்யா. அவரின் அம்மா பெயரைச் சொல்லியபடியே, `தயாளு உன்னை எப்படிக் காப்பாத்தப் போறேன்’ எனக் கதறியழுதார்.

அவர் அப்படி அழுது நான் பார்த்ததில்லை. அதேபோல், டெல்லி திகார் சிறையில் கனிமொழியைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, மறுநாள் காலையில் டைனிங் டேபிளுக்கு வந்தவர், ` என் பொண்ணு ஜெயில்ல இருக்கா. நான் சாப்பிடணுமா?’ எனக் கூறி ஓவென அழுதார்.

அவரது உடன்பிறந்த அக்கா மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவர் இறந்த சமயத்தில் அய்யாவும் உடல்நலமில்லாமல் இருந்தார்.

எனவே, அவர் அக்கா இறந்ததைச் சொல்லாமல் வைத்திருந்தோம். அப்போது கலைஞர் டி.வி-யில் சண்முக சுந்தரத்தம்மாள் இறந்ததாக ஸ்க்ரோலிங் ஓடிக்கொண்டிருந்தது.

அதைப் பார்த்தவர், ` நியூஸ்ல என்னடா ஓடுது’ எனக் கேட்டு கதறியழுதார். வீரபாண்டி ஆறுமுகம் இறந்தபோது அவர் அழுததை அனைவரும் பார்த்தார்கள். சில அசாதாரணமான சூழல்கள் வரும்போது, அவர் வேதனைப்பட்டதை நேரில் பார்த்ததைப் பாவமான ஒன்றாகக் கருதுகிறேன்”.

கருணாநிதி என்றாலே கம்பீரமான குரல்தான் நினைவுக்கு வரும். தொண்டையில் துளையிட்டதால் அவருடைய பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டது. அதை அவர் எப்படி எடுத்துக்கொண்டார்?
NITHI-6

“ அந்த நேரங்களில் அவரிடமிருந்து சத்தமான குரல் வெளிப்படாது. உதடுகள் மட்டுமே அசையும். அவருடன் நிறைய நேரம் பேசியிருக்கிறேன்.

அவர் நல்லநிலையில் இருந்தபோது இருந்த பாசத்தைவிட, உடல்நலம் குன்றிய நேரத்தில் நன்றாகப் பார்த்துக்கொண்டேன்.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தபோது, தொண்டர்களைப் பார்த்துக் கையை அசைத்தார். அதுதான் அவருடைய பலம்.

`கலைஞர் வாழ்க’ என்ற முழக்கமே அவருக்குப் போதுமானது. எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. அவர் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

கோபாலபுர இல்லத்தின் ஹாலில் உட்காந்திருந்தார். அவர் அழைப்பது போலச் சத்தம் கேட்டது. அவர் அழுது கொண்டிருந்தார். `அய்யா… என்னய்யா…’ எனப் பதறியடியே கேட்டேன்.

` நான் உனக்கு என்னடா பண்ணேன். இவ்வளவு அன்பா இருக்கே’ எனக் கையைத் தூக்கிக் காட்டியபடியே அழுதார். மிகுந்த வேதனையாக இருந்தது”.

அவருக்குப் பிடித்தமான விஷயங்களைப் பட்டியலிட முடியுமா?
NITHI-7

“ உழைப்பதைப் பெரிதும் விரும்புவார். காலையில் எழுந்ததும், `முரசொலி வந்திருச்சா?’ எனக் கேட்பார்.

அதன்பிறகு காபி சாப்பிடுவார். பிறகு யோகா செய்வார், சில காலம் பிஸியோ பயிற்சிகளை எடுத்துவந்தார்.

அதன்பிறகு எழுதுவார். தொண்டர்களின் திருமணத்துக்கு பத்து நிமிடம் தாமதாகப் போவதைக்கூட விரும்பமாட்டார்.

தொண்டர்கள் காத்திருக்கக் கூடாது என நினைப்பார். முரசொலி அலுவலகம் சென்ற பிறகு அறிவாலயத்துக்குச் செல்வார்.

100 ரூபாய் நிதி கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். பழங்களில் மாதுளம் பழமும் மலைவாழைப் பழமும் விரும்பிச் சாப்பிடுவார்.

விரால் மீன் குழம்பு அவருக்கு மிகவும் பிடித்தமானது. கேரட், பீட்ரூட், கீரை வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வார். இனிப்பில் கேசரியை விரும்பிச் சாப்பிடுவார். சில பிஸ்கட்டு வகைகளும் அவரது ஃபேவரிட்டாக இருந்தன.”

இன்று அவரது நினைவுநாள். உங்களது இன்றைய நிகழ்ச்சிகளைக் கூறமுடியுமா?

NITHI-8

“ தினம்தோறும் காலை அய்யா வீட்டுக்கு வருவது, மாலையில் செல்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

இன்று தலைமைக் கழகம் சார்பில் நடக்கும் பேரணியில் கலந்துகொண்டேன். தலைவர் வீட்டில் நடக்கும் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பேன்.

அவர் விரும்பிச் சாப்பிட்ட உணவுகளைப் படையலாக வைக்க இருக்கிறேன். `நித்யா நம்மை மறக்கவில்லை’ என அவர் நினைக்க வேண்டும் என்பதற்காகச் செய்கிறேன். அவருடைய நினைவில் இருந்து எந்தக் காலத்திலும் என்னால் வெளியே வர முடியாது.

இந்த நினைவுநாளில் அவருக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், `ஓய்வெடுத்தது போதும் அய்யா…எனக்காக எழுந்துவாருங்கள்.

இயக்கத்தைக் காப்பாற்ற அண்ணன் இருக்கிறார். அந்தப் பணியில் எந்த தொய்வும் இல்லாமல் மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.

எனக்குப் பணம், காசு எதுவும் தேவையில்லை. என்னைக் காப்பாற்றுவதற்காகத் தயவுசெய்து எழுந்து வாருங்கள்.

நீங்கள் இல்லாமல் திருமணம் செய்யவும் ஆசைப்பட மாட்டேன், நண்பர்களோடும் சுற்ற மாட்டேன். உங்கள் அன்பு இல்லாமல் என்னால் வாழ முடியாது. என்னை நித்யா என நீங்கள் அழைத்தால் போதும்” எனக் கலங்கியவாறு பேசிமுடித்தார் நித்யா.

கலைஞரின் எமோஷனல் தருணங்களை அவரது உதவியாளர் நித்யா சொல்லக் கேட்டோம். ஆனால், கலைஞர் கோபப்பட்ட தருணம் ஒன்றும் உண்டு.

1991. தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட பின் பரபரப்பாக இருந்த பிப்ரவரி 2-ம் தேதி காலை…. கலைஞர் கருணாநிதியைப் பேட்டி காண, கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம்.

அரை மணி நேரமே பேட்டிக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், அத்தனை கேள்விகளுக்கும் செம்ம சூடான பதில்களைக் கொடுத்தார் கருணாநிதி.

“சந்திரசேகர், ராஜீவ் காந்தி, ஜெயலலிதா ஆகிய மூன்று பேரும் ஜனநாயகத்துக்கு விரோதமாக – பதவி வெறி ஒன்றையே மனத்தில் கொண்டு ஆட்சியைக் கலைக்கும் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்று அந்தப் பேட்டியில்தான் கோபமாக அவர் சொன்னார்.

” இது மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்!” என்று கலைஞர் கர்ஜித்த அந்தப் பேட்டி இன்று APPAPPO ஆப்பில் வெளியாகியுள்ளது. இன்றே ட்ரெண்டிங்! -> http://bit.ly/Kalaignar1991

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com