தினகரன் மட்டுமே நல்லவர் மற்றவர்கள் எல்லோரும் ஊழல்வாதிகளாக இருப்பதால் தேசிய கண்ணோட்டத்தோடு இருக்கும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,

“விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உள்ள ஒரு தேசியவாதியாக தமிழகத்தின் தற்போதைய நிலையை நான் ஆய்வு செய்து பார்த்துள்ளேன்.

தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் ஊழல் கட்சிகள். ஆனால் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றம் கட்சிக்கு தேசிய ஒற்றுமை உணர்வு உள்ளது.

எனவே தமிழக மக்கள் அனைவரும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இந்த முறை வாக்களிக்கவேண்டும். தினகரன் மட்டுமே நல்லவர். மற்றவர்கள் ஊழல்வாதிகள்.” என்று பதிவிட்டிருக்கிறார்.

தமிழக அரசியல், இந்திய அரசியல், உலக அரசியல் என ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை குறித்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டும், பா.ஜ.க.வின் பல்வேறு நிலைபாடுகளுக்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி இது போன்ற கருத்தை தெரிவித்திருப்பதால் தமிழக அரசியல் களத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.