ilakkiyainfo

திராவிடப்பொழில்: ஆய்வுப் புலத்துக்குள் தமிழை முன்நகர்த்தல்

திராவிடப்பொழில்: ஆய்வுப் புலத்துக்குள் தமிழை முன்நகர்த்தல்
January 31
08:07 2021
பண்பாட்டு ரீதியாக, நாம் மிகப்பாரிய நெருக்கடியில் இருக்கிறோம். எமது அடையாளங்களைத் தக்க வைக்கவும் மொழியைப் பேணவும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும், நாம் அரும்பாடுபட வேண்டி இருக்கிறது.

நாம், இதைச் சரிவரச் செய்வதற்கு, அறிவியல் ரீதியான அணுகுமுறை தேவைப்படுகிறது.

‘கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த இனம்’ என்ற, வெற்றுப் பெருமைகளில் விளையும் பயன் எதுவுமல்ல.

எமது மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றையும், அறிவியல் ரீதியான சிந்தனைப் பரப்புக்குள் கொண்டு சேர்ப்பது முக்கியமானது.

எமக்கான வரலாற்றை, வெறுமனே கட்டுக்கதைகளில் இருந்து உருவாக்கிவிட முடியாது.

“ஒடுக்கப்படுகின்ற இருப்புக்காகப் போராடுகின்ற ஓர் இனக்குழு செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு, வரலாற்றைக் கற்பனைகளில் கட்டமைப்பது, நமது வரலாற்றையும் பண்பாட்டையும் மொழியையும் ஆய்வியல் ரீதியாக, நாம், நிறுவ வேண்டிய தேவை எழுந்துள்ளது.”

இவ்வாறு நிறுவுவதானது, எமது இருப்பு, அடையாளம், வரலாறு குறித்த பொய்ப்பிரசாரங்களுக்கும் அவதூறுகளுக்கும் சிறந்த பதிலாக இருக்க முடியும்.

இதை மிக நீண்டகாலமாக நாம் செய்யத் தவறியிருக்கிறோம். அதைச் செய்யும் பழக்கமோ, பாரம்பரியமோ எம்மிடம் இல்லை. அதற்கு வழியமைப்பனவாய், எமது பல்கலைக்கழகங்களும் இருந்தது கிடையாது. இது எமது ஆய்வுக் குறைபாட்டின் விளைவிலானது.

இன்று, ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்களில் பிரதானமானது, எமது இருப்பு தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள வினாக்களாகும்.

அக்கேள்விகளுக்கு நாம், இன்றுவரை அறிவியல் ரீதியாகவும் ஆய்வறிவியலின் அடிப்படையிலும் பதிலளிக்கவில்லை என்ற உண்மையை, ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

எமது ஆய்வுகளின் எல்லை விரியவில்லை. மொழி, பண்பாடு தொடர்பான ஆய்வுகளும் தொல்லியல் ஆய்வுகளும் பல்கலைக்கழகங்களுக்குள் மட்டுப்பட்டு விடுகின்றன.

சில நேரங்களில் அரிதாகச் சில புத்தகங்கள் வெளிவருகின்றன. ஆனால், அவை உலகளலவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அமைவதில்லை.

இன்னொருபுறம் ஆய்வுமுறைகளைப் பின்பற்றாது கருதுகோள்களும் முன்முடிவுகளும் ஆய்வுமுடிவுகளாக முன்வைக்கப்படுகின்றன.

இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஆய்வறிவியல் ரீதியாக அமையாதவற்றை இலகுவில் புறந்தள்ளிவிட முடியும். அவ்வாறு நிகழுகின்றபோது, நாம் வரலாற்றவர்களாக மாறி விடுவோம்.

இன்று, வரலாற்று ரீதியில் ஈழத்தமிழரின் இருப்பை ஆய்வுரீதியாக நிறுவ, மிகப்பெரிய சவாலாக இருப்பவை, எம்மிடம் எஞ்சியிருக்கும் சொற்ப சான்றுகள் மட்டுமே! நாம், வரலாற்றைப் பதியாத, வரலாற்றைக் கொண்டவர்கள்.

எனவே, புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாம், எமது வரலாற்றைப் பாரப்படுத்தக் கூடாது.

வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் இதைப் பின்வருமாறு அழகாகச் சொல்லுவார்; “இராமாயணத்தில் இடம் பெறும் அயோத்தி நகர் குறித்தும், மகாபாரதத்தில் இடம்பெறும் அஸ்தினாபுரம், இந்திரபிரஸ்தம் குறித்தும் அருமையான வருணனைகள் இருநூல்களிலும் இடம் பெற்றுள்ளன.

இவ்விரு இடங்களிலும் நிகழ்ந்த அகழ்வாய்வுகள், அக்காலத்தில், சாதாரண குடிமக்களாக அங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. மயன் என்பவனால் கட்டப்பட்ட சிறப்பான மாளிகைகளைத் தேடுவது வீண்வேலையாகவே முடியும்”.

எமது வரலாற்றையும் பண்பாட்டையும் நாம், ஆய்வறிவியல் ரீதியில் முன்னகர்த்த எமது ஆய்வுகள் விரிவடைய வேண்டும். அதற்கான களம் இன்று எம்மிடம் இல்லை;

அதை ஊக்குவிக்கும் களமாக, எமது பல்கலைக்கழகங்களும் திகழவில்லை. சர்வதேச ரீதியில் ஆய்வுகளும் வாதவிவாதங்களும் நடக்கிற அரங்குகளும் சூழலும் நமக்கு அந்நியமானதாகவே இருக்கின்றன.

உலகத் தரம் வாய்ந்த ஆய்விதழ்களில் எமது ஆய்வுகள் பிரசுரமாவது மிகக்குறைவு. அவ்வாய்விதழ்களில் பிரசுரமாவதற்கான படிநிலை மிகக்கடினமானது.

அகன்று ஆழமான ஆய்வறிவியல் படிநிலைகளின் பின்னரே, ஆய்வுக்கட்டுரைகள் அங்கு பிரசுரிக்க அனுமதிக்கப்படுகின்றன. எமது ஆய்வுகளும் இவ்வகையான உலகத் தரம் வாய்ந்த ஆய்விதழ்களை நோக்கிப் பயணப்பட வேண்டும்.

அண்மையில் ‘திராவிடப் பொழில்’ என்ற ஆய்விதழை வாசிக்கக் கிடைத்தது. மக்களையும் மண்ணையும் அறிவுலகையும் இணைக்கும் பாலமாக அதேவேளை தமிழ், திராவிட, சமூகநீதி ஆய்வுப்புலத்தை உலக தரத்தில் உயர்த்தும் நோக்கத்துடன் இந்த ஆய்விதழ் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விதழ் செய்ய விளைகின்ற முக்கியமான பணி,  உலகளாவிய ஆய்வுத்தரத்தில் எமது ஆய்வுகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்டுவர முனைகிறது. இது நல்லதொரு தொடக்கம். இலங்கையில் உள்ள ஆய்வாளர்கள், இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

‘திராவிடப் பொழில் இன் முதலாவது இதழ் மூன்று ஆங்கிலக் கட்டுரைகள், மூன்று தமிழ்க் கட்டுரைகள் என ஆறு கட்டுரைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் தேடிப் படிக்கலாம்.

தமிழ் தொடர்பாக, ஏற்கெனவே இரண்டு ஆய்விதழ்கள் வெளிவருகின்றன. முதலாவது, International journal for Dravidian Linguistics (திராவிட மொழிக்கான சர்வதேச ஆய்விதழ்). இது திராவிட மொழியியல் சார்ந்த விடயங்களுக்கான, ஆங்கிலத்தில் அமைந்த ஆய்விதழ்.

இரண்டாவது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்படுகின்ற தமிழியல், (Journal for Tamil Studies).  இது தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வெளியிடப்படும் ஆய்விதழ்.

இவ்விரண்டின் தொடர்ச்சியாகவும் தமிழை மட்டும் மையப்படுத்தாமல் விரிந்த தளத்திலே எமது பண்பாட்டு, வரலாற்று அடிப்படைகளை நோக்கியதாக ‘திராவிடப்பொழில்’ அமைந்திருப்பது மகிழ்ச்சி.

சமூகங்கள்  எவ்வாறு பல்வேறு காலகட்டங்களிலும் பரிணாமம் பெற்று, மாற்றமடைந்து வளர்ந்து வந்திருக்கிறதோ அதேபோலவே, மொழியும் பண்பாடும் நீண்ட வரலாற்றுக் காலகட்டங்களில், சமூகத் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைப் பெற்று, வளர்ந்து வந்திருக்கிறது.

மொழியும் பண்பாடும் மாற்றத்துக்கு உட்படக் கூடாது என்று முன்வைக்கப்படும் தூய்மைவாதம் சமூக வரலாற்றுப் போக்கையும் அதன் தேவைகளையும் புரிய மறுக்கும் அபத்தவாதிகளின் வரட்டு வாதமேயாகும்.

அதன் கூறுகளை, இன்றும் பொதுவெளியில் காண்கிறோம். இதனாலேயே நாம், அறிவியல் நோக்கில் முன்செல்ல வேண்டியது கட்டாயமாகிறது.

ஓர் உதாரணத்துடன், இன்று நாம் எதிர்நோக்கும் சவாலை விளக்கிட முனைகிறேன். எமது வரலாறு பற்றிய முடிந்த முடிவொன்று எம்மிடம் உண்டு.

‘பாடசாலைகளில் கற்பிக்கப்படும் வரலாறு தவறானது. அது தமிழர்களை தவறாகச் சித்திரிக்கிறது’. இந்தக்கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இதைச் சரிசெய்ய நாம் எவ்வகையான முயற்சிகளை எடுத்துள்ளோம்?

சொல்லப்படுகின்ற வரலாற்றை, ஆய்வறிவியல் ரீதியாகக் கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறோமா?

சரியான வரலாறு என்று, நாம் கருதுவதைப் பற்றி, ஆய்வுரீதியில் பொதுவெளியில் முன்வைத்திருக்கிறோமா?

இலங்கை வரலாற்றை, இனவாத கண்ணோட்டத்தோடு பார்க்காமல், நேர்மையான ஆய்வறிவியல் நோக்கில், பல சிங்கள வரலாற்றாசிரியர்கள் அணுகியிருக்கிறார்கள்.

குறிப்பாக பேராசிரியர் ஜ. சிரிவீர, பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

உலகறிந்த மானிடவியலாளரான பேராசிரியர் கணநாத் ஒபயசேகரவின் எழுத்துகள் இலங்கை வரலாற்றுவரைவியல் குறித்த நேர்மையான சித்திரத்தை வழங்குகின்றன.

கண்டியின் கடைசி மன்னான ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன், பிரித்தானியரின் வசதிக்கமையவே கொடுமையானவாகக் காட்டப்பட்டான் என்பதையும் பிரித்தானியரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் பகுதியாகவே, சிங்கள மக்களைக் கொடுங்கோல் தமிழ் மன்னன் வதைத்தான் என்ற கதையாடல் முனைப்புப் பெற்றது என்பதை, பேராசிரியர் கணநாத் சொல்லியே நாம் தெரிந்துகொள்கிறோம்.

இவ்விடத்தில் வரலாற்று ஆய்வியல் பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது. எந்த ஒரு சமூகமும், வரலாற்று உணர்வின்றி இருக்காது; எல்லாச் சமூகங்களுக்கும், ஒரே சீரான வரலாற்று உணர்வைக் கொண்டிருக்காது; இவற்றையும்  நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்களின் வரலாறு பற்றிய புரிதல், மக்கள் வரலாற்றிலிருந்தே தொடங்குகிறது. மக்களின் வரலாற்றுக்கும் கல்விப்புல வரலாற்றுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகம். இவ்விடைவெளியை அதிகரிக்கும் பணியை, பல்கலைக்கழகங்கள் ஒருபுறமும் தேசியவாதம் மறுபுறமும் செய்கிறது.

தேசியம், ஒற்றைப் பரிமாணத்தில் வரலாற்றைக் கட்டமைக்க முனைகிறது. ஒற்றுமை என்கிற ஒற்றைச் சொல்லை மையப்படுத்தி, அதைச் சாதிக்க நினைக்கிறது.

ஆனால், எந்த ஒரு சமூகத்துக்கும் ஒற்றை வரலாறு கிடையாது. ஒரே சீரான வரலாறும் எந்தச் சமூகத்துக்கும் கிடையாது. இதைச் செரிமானப்படுத்திக் கொள்வது கடினமாயினும் அதுதான் உண்மை!

ஆய்வறிவியல் நோக்கில் வரலாற்றை அணுகும்போது, இவை மிகத் தெளிவாகப் புலப்படும்.

புதிய தலைமுறை ஆய்வாளர்கள், இவ்விடயங்களைக் கருத்தில் எடுக்க வேண்டும். தங்கள் ஆய்வுகளை, வெறுமனே பட்டங்களுக்கும் பதவிகளுக்காகவும் மேற்கொள்ளாமல் சமூகப் பயன்விளைவிக்கும் நோக்கில் மேற்கொள்ளல் வேண்டும். சமூகத்துக்கு அவர்கள் செய்கின்ற கடப்பாடு அதுவே.

ஈழத்தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். எமது அடையாளங்களை தேச எல்லைகளைக் கடந்து கடத்தவும் கலந்துபேசவும் வேண்டியுள்ளது.

இதைச் சரிவரச் செய்வதற்கு வரலாற்றை எழுதுதலும் பண்பாட்டு அடையாளங்களை அறிவுப்புல நோக்கில் பதிதலும் அதை உலக ஆய்வறிவியல் சமூகத்துக்கு எட்டும்படி செய்வதும் அவசியம். அதற்கான ஒரு வாய்ப்பை, ‘திராவிடப் பொழில்’ என்ற இந்த ஆய்விதழ் வழங்கியிருக்கிறது.

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com