Site icon ilakkiyainfo

தீயில் கருகிப் போன 298 உயிர்களின் கனவுகள்… உலகை உலுக்கிய மற்றுமொரு மலேசிய விமானம் (சிறப்பு கட்டுரை)

வியாழக்கிழமை சர்வதேச நேரப்படி பிற்பகல் 1.25 மணிக்கு விமானத்ததுடனான தொடர்பு துண்டிப்பு அனை­வ­ரையும் மீண்டும் பதை­ப­தைக்க வைத்­துள்­ளது மற்­று­மொரு மலே­சிய விமானம்.

பல கன­வு­க­ளோடு பய­ணித்த மொத்தம் 298 பேரைச் சுமந்து சென்ற இந்த விமானம் உக்ரைனில் வீழ்ந்து நொறுங்­கி­ அத்­தனை பேரையும் பலி­யெ­டுத்­தி­ருக்­கி­றது. இதற்கு யார் பொறுப்பு? ஏன் இத்­த­கை­ய­தொரு சம்­பவம் நிகழ்ந்­தது? என்ற பல கேள்­வி­க­ளுக்கு விடை­தேட புறப்­பட்­டாலும் மாண்டவர்களை நாம் மீட்டு விடப்­போ­வ­தில்லை என்­பது மட்டும் உண்மை.

நடந்­தது என்ன?

இலங்கை நேரப்­படி நேற்றுமுன்­தினம் இரவு 9 மணி­ய­ளவில் அனைத்து ஊட­கங்­க­ளிலும் வெளி­யா­கி­யி­ருந்த தக­வல்­களின் அடிப்­ப­டையில், மலே­சிய ஏயார் லைன்ஸ் நிறு­வ­னத்­திற்குச் சொந்­த­மான போயிங் 777 ரக எம்.எச்.17 பய­ணிகள் விமானம், கிழக்கு உக்ரைன் பகு­தியில் வெடித்துச் சித­றி­யதில் 298 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.

ஆனால், அந்த விமானம் தரை­யி­லி­ருந்து வான் இலக்கை தாக்கும் ஏவு­கணை மூலம் வீழ்த்­தப்­பட்­டுள்­ள­தாக உக்ரைன் உள்­துறை அமைச்­சகம் தெரிவிக்கிறது.

மோதல் பகு­தியில் விமானம்

விமானம் நொறுங்கி விழுந்த இடம், கிழக்கு உக்­ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நக­ருக்கு அருகில் உள்­ளது. அந்த பகுதி, கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கும், உக்ரைன் இரா­ணு­வத்­துக்கும் இடையே மோதல் நடை­பெற்று வரும் பகு­தி­யாகும்.

மேலும், அப்­ப­குதி ரஷ்­யா­வுக்கு அருகே உள்­ளது. எனவே, ரஷ்ய எல்­லைக்குள் நுழை­வ­தற்கு 40 கி.மீ. தூரத்­துக்கு முன்பே இச்­சம்­பவம் நடந்­துள்­ளது.

எனவே, அந்த விமா­னத்தை கிழக்கு உக்­ரைனில் உள்ள ரஷ்ய ஆத­ரவு கிளர்ச்­சி­யா­ளர்­கள்தான் சுட்டு வீழ்த்­தி­ய­தாக உக்ரைன் நாட்டு உள்­துறை அமைச்­சக ஆலோ­சகர் தெரி­விக்கிறார்.

தரை­யி­லி­ருந்து பாய்ந்து சென்று வானி­லுள்ள இலக்கை தாக்கும் ஏவு­கணை உத­வியால் இவ் விமா­னத்தை கிளர்ச்­சி­யா­ளர்கள் சுட்டு வீழ்த்­தி­ய­தா­கவும் அவர் இதன்­போது குறிப்­பிட்டார்.

கொடூ­ர­மான `பக்’ ஏவு­கணை

இந்த ஏவு­க­ணையின் பெயர் ‘பக்’ என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. நேட்டோ படை­களால் மிகவும் கொடூ­ர­மா­ன­தாக வர்­ணிக்­கப்­ப­டு­வ­துதான் இந்த பக் ஏவு­கணை. இது, 22 ஆயிரம் மீற்றர் உயரம் வரை சென்று இலக்கை தாக்கும் திற­னு­டை­யது.

1970 ஆம் ஆண்­டு­களில் ஒருங்­கி­ணைந்த சோவியத் ரஷ்­யாவால் இந்த ஏவு­கணை உரு­வாக்­கப்­பட்­டது. இதன்­பி­றகு பல வகை­க­ளிலும் இந்த ஏவு­கணை உரு­மாற்­றப்­பட்­டது, மதிப்பு கூட்­டப்­பட்­டது.

பல நாடு­க­ளுக்கும் இந்த வகை ஏவு­க­ணையை ரஷ்யா ஏற்­று­மதி செய்­துள்­ளது. உக்ரைன் பிரி­வி­னை­வா­தி­க­ளி  டமும் இந்த ஏவு­கணை உள்­ளதாம்.இந்த ஏவு­க­ணையை பொறுத்­த­வரை 60 முதல் 90 சத­வீதம் இலக்கை சரி­யாக குறி­வைத்து தாக்கும் வல்­ல­மை­மிக்­கது.

ராடார் உதவி தேவை

சர்­வ­தேச நாடுகள் பயன்­ப­டுத்தும் ஏவு­க­ணை­களில் மிகவும் சக்­தி­வாய்ந்­தது இந்த பக் வகை ஏவு­க­ணை­யாகும். ராடார் உதவி கொண்டே இந்த ஏவு­க­ணையால் தாக்க முடியும். இதை ஒரே நபரால் செயற்­ப­டுத்­தி­விட முடி­யாது. துப்­பாக்கியால் சுடு­வதை போல காலையில் குறி­வைத்து மாலையில் சரி­யாக சுட்­டு­விடவும் முடி­யாது. இதற்­காக சிறப்பு பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது. இலக்கை சரி­யாக தாக்­கு­வ­தற்கு சரி­யான பயிற்சி தேவை.

ரோயல் யுனைட்டட் இன்ஸ்ட்­டி­டி­யூட்டின் இயக்­குநர் ஜோனாதன் இயல் இது­தொ­டர்பில் கூறு­கையில், “உக்ரைன் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளிடம் இந்த ஏவு­கணை இருந்­தாலும், அதை பயன்­ப­டுத்த போதிய நிபு­ணத்­து­வமோ, சக கரு­வி­களின் உத­வி­களோ அவர்­க­ளுக்கு கிடை­யாது. ஒரு பொத்­தானை அழுத்­தினால் முடிந்­து­போகும் விடயம் இது­வல்ல.

ராடாரை எப்­படி பயன்­ப­டுத்த வேண்டும், இலக்கை எப்­படி நிர்­ண­யிக்க வேண்டும் உள்­ளிட்ட பல திற­மைகள் இதற்கு தேவை. சாதா­ரண கிளர்ச்­சி­யா­ளர்­களால் இதை செய்­தி­ருக்க முடி­யாது.

விமானம் சுடப்­பட்­டது உண்­மை­யாக இருந்தால் அது ஏதா­வது ஒரு நாட்டு படை­களால் மட்­டுமே முடியும். கிளர்ச்­சி­யா­ளர்­களால் அதை செய்ய முடி­யாது” என்று உறு­தி­யாகத் தெரி­வித்தார்.

கிளர்ச்­சி­யாளர்கள் மீது குற்­றச்­சாட்டு  ஆதா­ரத்தை வெளி­யிட்­டது உக்ரைன்

இத­னி­டையே, இவ்­வி­டயம் தொடர்­பாக தொலை­பேசி உரை­யாடல் மூல­மான ஆதா­ர­மொன்றை உக்ரைன் வெளி­யிட்­டுள்­ளது.

அதில் ஒரு தொலை­பேசி உரை­யா­டலில் புரட்சிப் படையின் தள­ப­தி­யான இகோர் பெஸ்லர், ரஷ்ய இரா­ணு­வத்தின் உளவுப் பிரிவு அதி­கா­ரி­யொ­ரு­வ­ரிடம் தங்­க­ளது வீரர்கள் ஒரு விமா­னத்தை சுட்டு வீழ்த்­தி­யுள்­ள­தாக கூறு­கிறார். 2ஆவது தொலை­பேசி உரை­யா­டலில், இரண்டு புரட்சிப் படை­யினர் பேசிக் கொள்வ­தாக உள்­ளது.

ஒருவர் விமானம் விழுந்த இடத்­தி­லி­ருந்து பேசு­கிறார். அந்த நபர் கூறு­கையில், ரொக்கெட் தாக்­குதல், சம்­பவ இடத்­தி­லி­ருந்து 25 கிலோ­மீற்றர் தொலை­வி­லி­ருந்து நடந்­த­தாக கூறு­கிறார்.

மேலும் அவர், நான் விமானம் விழுந்த இடத்தில் இருக்­கிறேன். விமானம் சித­றிக்­கி­டக்­கி­றது. சில­ரு­டைய அடை­யாள ஆவ­ணங்­களைப் பார்த்தேன். அதில் ஒருவர் தாம்ப்சன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் படித்து வந்த இந்­தோ­னே­சியர் என்று கூறு­கிறார்.

இருப்­பினும், இந்த தொலை­பேசி உரை­யா­டல்­களில் இடம் பெற்­ற­வர்கள் உண்­மை­யி­லேயே உக்ரைன் கூறு­வ­தைப்­போன்று ரஷ்ய ஆத­ரவுப் படை­யி­னர்­தானா என்­பதில் சந்­தேகம் நில­வி­வ­ரு­கி­றது.

உக்ரைன் இரா­ணு­வமே காரணம்– கிளர்­ச்சி­யாளர்கள்

இந்­நி­லையில், உக்ரைன் இரா­ணு­வத்­தி­னரே விமா­னத்தை சுட்டு வீழ்த்தி விட்டு தங்கள் மீது பழி போடு­வ­தாக தங்கள் மீதான குற்­றச்­சாட்டை கிளர்ச்­சி­யா­ளர்கள் மறுத்­துள்­ளனர்.

உக்­ரைனை ரஷ்­யா­வுடன் இணைக்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி வரும் கிளர்ச்­சி­யாளர் படை­களின் தலைவர் அலெக்­சாண்டர் போரோடாய் இது­குறித்து கூறு­கையில், “மலே­சிய விமானம் உக்ரைன் எல்­லை­யில்தான் சுட்டு வீழ்த்­தப்­பட்­டுள்­ளது. எனவே, உக்ரைன் இரா­ணு­வம்தான் விமா­னத்தை வீழ்த்­தி­யுள்­ளது என்­பது உறுதி” என்றார்.

`சுட்­டுத்­தள்­ளப்­பட்ட தக­வலில் உறு­தி­யில்லை’

இந்த பர­ப­ரப்­புக்கு மத்­தியில் மலே­சிய விமானம் சுட்­டுத்­தள்­ளப்­பட்­ட­தாக உக்ரைன் அதி­கா­ரிகள் கூறு­கி­றார்கள். ஆனால், அது இன்னும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்று மலே­சிய பிர­தமர் நஜிப் ரசாக் தெரி­வித்­துள்ளார்.

மாறாக, விமானம் சுட்டுத் தள்­ளப்­பட்­டது உறு­தி­யானால் குற்­ற­வா­ளிகள் நீதிக்கு முன்பு நிறுத்­தப்­ப­டு­வார்கள். இது­கு­றித்து விசா­ரணை நடத்­து­வ­தாக உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ போரோ­ஷென்கோ எனக்கு உறு­தி­ய­ளித்­துள்ளார். இது­ தொ­டர்­பாக நான் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­வுடன் பேசி­யுள்ளேன்” என்றார்.

ஆபத்­தான பாதையில் பயணம் ஏன்?

ஆசிய கண்­டத்­தி­லி­ருந்து ஐரோப்பா மற்றும் அமெ­ரிக்க நாடு­க­ளுக்கு விமானம் மூலம் செல்ல வேண்­டு­மாயின், உக்ரைன் வான் எல்லை வழி­யாக பறந்து செல்­வது தூரம் குறைந்த பாதை­யாக கரு­தப்­ப­டு­கி­றது.

உக்ரைன் கிளர்ச்­சி­யா­ளர்கள் பல்­வேறு உள்­நாட்டு விமா­னங்­களை இப்­ப­கு­தியில் ஏற்­க­னவே சுட்­டு­வீழ்த்­தி­யி­ருந்­ததால், இந்த பாதையை சர்­வ­தேச விமான சேவை நிறு­வ­னங்கள் தவிர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்­க­ளுக்கு முன்­பே­ எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில், ஆபத்து நிறைந்த பாதை என்­பதை அறிந்­தி­ருந்தும் 298 உயிர்கள் பலி­யாக கார­ண­மாக இருந்த மலே­சியன் எயார்லைன்ஸ் விமானம் அவ்­வ­ழி­யாக சென்­றது ஏன்? என இந்த விபத்தில் பலி­யா­ன­வர்­களின் உற­வி­னர்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர்.

இதுதொடர்­பாக கருத்து தெரி­வித்த விமானப் போக்­கு­வ­ரத்து பாது­காப்பு துறை பிர­பல பேரா­சி­ரி­யர்­களில் ஒரு­வ­ரான நார்மன் ஷேங்க்ஸ், “உக்ரைன் கிளர்ச்­சி­யா­ளர்­களின் ஆதிக்கம் மேலோங்­கி­யுள்ள கிழக்கு உக்ரைன் பகு­திக்கு மேலே உள்ள வான் எல்­லையில் பறப்­பதை தவிர்க்க வேண்டும் என்றே அனைத்து நாடு­க­ளுக்கும் அறி­வு­றுத்தல் குறிப்பு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

உலகின் அனைத்து விமான நிறு­வ­னங்­களும் எரி­பொருள் மற்றும் நேரத்தை சிக்­க­னப்­ப­டுத்தும் பாதை­களை தேர்ந்­தெ­டுப்­ப­தையே விரும்­பு­கின்­றன. கிழக்கு உக்­ரைனின் வான் வெளியின் மீது பறப்­பது ஆபத்து நிறைந்­தது; அவ்­வ­ழியே பறக்க வேண்டாம் என்று பிரத்­தி­யே­க­மாக எச்­ச­ரித்­தி­ருந்தால் அவ்­வ­ழியே பறப்­பதை விமா­னங்கள் தவிர்த்­தி­ருக்கும்.

மேலும், நேற்­று­முன்­தினம் அப்­ப­குதி வழி­யாக பறந்­தது இரா­ணுவ விமானம் அல்ல பய­ணிகள் விமானம் என்­பதை அறிந்த பின்­னரே அதை ஏவு­க­ணையின் மூலம் தாக்கி வீழ்த்­தி­யுள்­ளனர்.

30 ஆயிரம் அடி­க­ளுக்கு உட்­பட்ட உய­ரத்தில் அந்த விமானம் பறந்த நிலையில் அதன் உருவ அமைப்பை வைத்தே, அது இரா­ணுவ விமானம் அல்ல; பய­ணிகள் விமானம் தான் என்­பதை கிளர்ச்­சி­யா­ளர்கள் உறு­திப்­ப­டுத்தி இருக்­கக்­கூடும். பய­ணிகள் விமானம் என்று தெரிந்த பின்­னரும் அந்த விமா­னத்தை சுட்டு வீழ்த்­தி­யுள்­ளனர்” என்றார்.

கறுப்பு பெட்டி சிக்­கி­யது

இந்­நி­லையில், விபத்­துக்­குள்­ளான விமா­னத்தின் கறுப்­பு­ப் பெட்டி சிக்­கி­யுள்­ளது. அந்த பெட்­டியை தாங்கள் கண்­டு­பி­டித்­துள்­ள­தா­கவும் அது தங்கள் வசம் இருப்­ப­தா­கவும் கிளர்ச்­சி­யா­ளர்கள் அறி­வித்­துள்­ளனர்.

அந்த கறுப்பு பெட்­டியை ஆராய்ந்தால் விமானம் விபத்துக் குள்­ளா­னதா? ஏவு­கணை மூலம் தாக்­கப்­பட்­டதா? அல்­லது சுட்டு வீழ்த்­தப்­பட்­டதா? என்று தெரி­ய­வரும்.

உயி­ரி­ழந்தோர் விபரம்

ஆனால், எது எவ்­வா­றா­னாலும் இந்த சம்­ப­வத்தில் 3 குழந்­தைகள் உள்­ள­டங்­க­லாக 280 பய­ணிகள் மற்றும் 15 விமான ஊழி­யர்கள் என மொத்தம் 298 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

பய­ணி­களில் 154 பேர் நெதர்­லாந்து பிர­ஜைகள். 43 பேர் மலே­சி­யர்கள், அவுஸ்­தி­ரே­லி­யர்கள் 27 பேர், இந்­தோ­னே­சி­யாவைச் சேர்ந்­த­வர்கள் 12 பேர். பிரித்­தா­னி­யர்கள் 9, ஜேர்­ம­னி­யர்கள் 3, பிலிப்பைன்ஸ் நாட்­ட­வர்கள் 3, கனே­டியர் ஒருவர், 4 பேர் பெல்­ஜி­யத்தைச் சேர்ந்­த­வர்கள் என சர்­வ­தேச ஊட­கங்கள் தகவல் வெளி­யிட்­டுள்­ளன. இதில், பெல்­ஜியம் நாட்டைச் சேர்ந்­த­வர்கள் எவரும் அந்த விமா­னத்தில் பய­ணிக்­க­வில்லை என அந்­நாட்டின் வெளி­வி­வ­கா­ரத்­துறை அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

தமிழ்ப் பெண் ஊழியர் ஏஞ்­செலின்

மேலும், இந்த விமா­னத்தில் பணி­யாற்­றிய ஊழி­யர்­களில் ஒருவர் தமிழ்ப் பெண் என்றும் தெரி­ய­வந்­துள்­ளது. அவ­ரது பெயர், ஏஞ்­செலின் பிர­மிளா ராஜேந்­திரன் (வயது 30).

விமானப் பணிப்­பெண்­ணாக வேண்டும் என்ற கனவு நன­வாகி மலே­சியன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தில் இணைந்து பணி­யாற்­றிய நிலையில் அவர் உயி­ரி­ழந்­துள்ளார். இந்த செய்தி கேள்­வி­யுற்­ற­தி­லி­ருந்து, “சிறு வய­தி­லி­ருந்தே விமா­னத்தில் பறக்க வேண்டும் என்­பதை கன­வாகக் கொண்­டி­ருந்த நிலையில், அந்த கனவே அவரை கருகச் செய்து விட்­டதே” என அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும், உற­வு­க­ளும் கதறி அழு­கி­றார்கள். இது­போன்று, பலரின் கன­வு­களும் இன்று கரு­கி­போய்­விட்­டன.

மனதை உருக்­கிய பேஸ்புக் பதிவு

இத­னி­டையே, மேற்­படி விமா­னத்தில் பய­ணித்த கோர்பேன் என்ற இளை­ஞரின் பேஸ்புக் பதிவு பலரின் மன­தையும் உருக்­கி­யுள்­ளது.

தான் பய­ணிக்கும் விமானம் விபத்­துக்­குள்­ளாகப் போகி­றது என்­பதை அறி­யா­ம­லேயே, விமானம் புறப்­பட சற்­று­முன்னர் அந்த விமா­னத்தை புகைப்­ப­ட­மெ­டுத்து அதில், “இந்த விமானம் கடத்­தப்­பட்டால் இது தான் அதன் உண்­மை­யான புகைப்­படம்” என நகைச்­சுவை உணர்­வுடன் பேஸ்­புக்கில் கருத்தை பகிர்ந்­தி­ருந்தார்.

2014 ஆம் ஆண்டு மலே­சிய விமான நிலை­யத்­திற்கு கறுப்பு ஆண்டு என்று கூறும் வகையில் அடுத்­த­டுத்து சிறிய இடை­வெளியில் இரு­வேறு துயர சம்­பவங்கள் நிகழ்ந்­தா­கி­விட்­டன.

ஞாப­க­மி­ருக்­கி­றதா?

2014 ஆம் ஆண்டு மலே­சியத் தலை­நகர் கோலா­லம்­பூ­ரி­லி­ருந்து சீனத் தலை­நகர் பீஜிங்­கிற்கு கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி புறப்­பட்ட மலே­சிய விமானம் அனை­வ­ருக்கும் ஞாபகம் இருக்­கலாம்.

அதி­காலைவேளை தாய்­லாந்து வளை­கு­டாவை கடக்கும் போது இவ்­வி­மானம் கட்­டுப்­பாட்டு அறை­யு­ட­னான தொடர்பை இழந்து, கட­லுக்கு மேலே 36,000 அடிகள் உய­ரத்தில் 239 பய­ணி­க­ளுடன் மாய­மா­னது.

தொழில்­நுட்ப வசதிகள் பல்கிப் பெருகி, செவ்வாய்க் கிரகத்­தி­லேயே குடியேறுவதற்கான ஆயத்தங்களை மனிதன் மேற்கொண்டிருக்கும் நிலையில், இந்த விமானத்திற்கு என்ன நடந்தது என்பது மட்டும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 227 பயணிகளும், 12 விமானப் பணியாளர்களும் உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்றதன் அடிப்படையில் மலேசிய அரசு அவர்கள் அனைவரையும் இறந்தவர்களாக கருதி மிகவும் வருத்தத்துடன் அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று வருவார்கள் நாளை வருவார்கள் என எதிர்பார்ப்பிலிருந்த 239 பேரினதும் உறவினர்கள், தங்கள் தவிப்பை கண்களிலிருந்து வெளியேறிய கண்ணீரின் மூலம் உலகத்திற்கு வெளிக்காட்டினார்கள்.

இந்த சோகம் மறைவதற்குள் மற்றுமொரு மலேசிய விமானம் தொடர்பான செய்தி இன்று அனைவரையும் பேரிடியாக தாக்கியுள்ளது.

298 அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுதொடர்பிலான விசாரணைகள் அனைத்து தரப்பிலிருந்தும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உலகத் தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர். ஆனால், இவை எல்லாவற்றையும் விட இனியும் இதுபோன்றதொரு சம்பவம் நிகழாமல் தடுப்பதே அனைவரது கடமையுமாகும்.

Exit mobile version