“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலே  அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர்  செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திகளும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் முடக்கப்பட்டது.  நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கு நிலையான அபிவிருத்திகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.

யாழ்பாணத்திற்கு இன்று விஜயத்தை மேற்கொண்டு ஊடகவியலாளர்களுக்க கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியமைத்தனர். வழங்கப்பட்ட  வாக்குறுதிகளும் வெறும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றது.

30 வருட காலம் யுத்தம் இடம் பெற்ற வடக்கில் யுத்தத்திற்கான எவ்வித  சுவடுகளும் காணப்பட கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தெற்கினை விடய வடக்கிற்கே  அதிகமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தார்.

ஆனால் தேசிய அரசாங்கம் 3வருட காலத்தில் எவ்வித அபிவிருத்திகளின் நிலைபேறான திட்டங்களையும்  முன்னெடுக்கவில்லை.

வடக்கிற்கு அபிவிருத்திகளை மேற்கொள்வதாக மக்கள் தெரிவு செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  பெயரளவிலே  எதிரணியாக செயற்படுகின்றனர்.  அரசாங்கத்தின் பங்காளியாகவே செயற்படுகின்றனர்.

அரசாங்கத்தின் குறைப்பாடுகளை இவர்கள் இதுவரை காலமும் சுட்டிக்காட்டவில்லை.  அரசாங்கத்திற்கு  ஆதரவாகவே  அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.

வடக்கிற்கு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதை  தடுக்கும் செயற்திட்டங்களை முன்னெடுக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  அதற்கு ஆதரவாகவே செயற்பட்டனர்.

வடக்கில் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனையே பிரதானமாக காணப்படுகின்றது. மறுபுறம் விவசாயத்துறை இன்று பௌதீக காரணிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆனால் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் சரி தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எவ்வித  அக்கறையும் மேற்கொள்ளவில்லை. கடந்த அரசாங்கத்தில் பட்டதாரிகளுக்கு கல்வி தகைமைகளுக்க ஏற்ப தொழில்வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்று பட்டதாரிகள் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறாமல்  சாதாரண நபர் போல் வறுமையின் காரணமாக கிடைத்த தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கிற்கு அரசியலமைப்பு மாத்திரமே தற்போதைய தீர்வு என்று எதிர்  கட்சி தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிடுவது பொருத்தமற்றதாகவே காணப்படுகின்றது.

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணண்பதை விடுத்து முறையற்ற விதமாக அரசியலை பயன்படுத்துவது பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்க இழைக்கப்படும் துரோகமாகவே காணப்படுகின்றது.

வடக்கு மக்கள் அரசியல் தீர்வினை ஒரு போதும் கோரி நிற்கவில்லை என்று கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெளிப்படுத்தினர்.

தெற்கினை போன்று வடக்கிலும் இன்று குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றது. வடக்கில் போதை பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்ட விடயம் ஏற்றுக் கொள்ளக் கூடியது.

ஆனால் அவர் குறிப்பிட்ட விதமே அரசியலமைப்பிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் முரணானது. தெற்கில் இருந்து அரசியல்வாதிகளின் செல்வாக்குடனே வடக்கிற்கு  போதைபொருட்கள் கைமாற்றப்படுகின்றது  என்று  இவர் குறிப்பிட்டமை தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி  வடக்கின் அமைதியினை உறுதிப்படுத்த வேண்டும் 30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த  ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் இவ்வாறான பிரச்சினைகள் ஏதும் இடம் பெறவில்லை.

ஆனால் இன்று தேசிய அரசாங்கத்தின் 3 வருட ஆட்சியில் வடக்கு மக்களின் வாழ்க்கை மிகவும் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது.

ஆகவே நிலைபேறான அபிவிருத்தியை வடக்கிற்கு செயற்படுத்த வேண்டுமாயின் ஆட்சி மாற்றம்  அவசியமானதாகவே காணப்படுகின்றது.

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதற்கு  முயற்சிகளை மேற்கொள்ளாமல் விரைவில் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்த வேண்டும். அப்போது மக்கள் தங்களது பதிலடியினை நன்கு வெளிப்படுத்துவார்கள்” . என தெரிவித்தார்.