ஆளும் தரப்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகிய மூவர் வேட்பாளர் பட்டியலில்  பிரதானமாக உள்ளனர்.

ஆனால் அவர்களில் யார் வந்தாலும் எங்களுக்கு சவால் இல்லை. நாம்  தான் வெற்றிபெறுவோம் என்று  முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு  என்று வரும் போது அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணலாம்.  குறிப்பாக இந்தியாவின் காஷ்மீரில் நடந்த நிலைமையை  கருத்தில் கொண்டே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவற்றை புரிந்து கொண்டே அரசியல் தீர்வு திட்டத்தை தேட வேண்டும்.  ஆனால்  13 ஆவது  திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டு  இரண்டு வருடங்களில்  அரசியல் தீர்வை காண்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை காப்பாற்றுவதை மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்கின்றது. வேறு எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

தீர்வையும் பெறவில்லை. அபிவிருத்தியையும் பெறவில்லை. ரிஷாட் பதியுதீன் போன்றோர் தங்கள் மக்களுக்கும் சேவையாற்றிக் கொண்டு அவர்களும் பிரயோசனத்தை எடுத்துக்கொண்டு செயற்படுகின்றனர்.

ஆனால் கூட்டமைப்பு என்ன செய்கின்றது. கூட்டமைப்பு எவ்வித அர்த்தமும் இல்லாத பணியை செய்கின்றது என்றும்  மஹிந்த ராஜபக்ஷ  குறிப்பிட்டார்.

மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ளக்கூடிய, மக்களையும் நாட்டையும் நேசிக்கின்ற பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய அனைத்து இன மக்களுக்கும் ஒரே முறையில் சேவையாற்றுகின்ற அனைத்து மத மக்களையும் மதிக்கின்ற ஒரு தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக  நான் பெயரிடுவேன் என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தீர்வு  திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவேன். இதற்கு எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்படும். அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை காண முடியும்.  அதற்கான சக்தியும் பலமும் எம்மிடம் இருப்பதாக நான் கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீரகேசரிக்கு  வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.   

அச்செவ்வியின் முழு விபரம் வருமாறு ,

கேள்வி: பத்து வருடங்களுக்கு முன் இந்நாட்டில் நீங்கள் யுத்தத்தை நிறைவு செய்து அமைதியை கொண்டு வந்தீர்கள்.

ஆனால் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: இந்த இடத்தில் அரசாங்கத்தின் இயலாமையே வெளிப்பட்டது. நாங்கள் பத்து வருடங்கள் இந்த நாட்டில் அச்சமும் பயமும் இன்றி வாழ்ந்து வந்தோம்.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி அந்த அச்சமும் பயமும் இல்லாத சூழல் மாறிவிட்டது. மரணப்பயத்தை விட பயங்கரமான ஒரு அச்சநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

முழு நாட்டு மக்கள் மத்தியில் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.  இதற்கு முதலாவது காரணமாக புலனாய்வுத்துறையை செயலிழக்க செய்தமையே காணப்படுகின்றது.

அரசாங்கத்தின் கவனயீனம் இங்கு முக்கியமாக காணப்படுகின்றது. வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக கிடைத்த புலனாய்வு தகவல்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனயீனமாக செயற்பட்டுள்ளது.

விசேடமாக வெளிநாடுகளிடம் இருந்து கிடைத்த தகவல்கள் தொடர்பாக கூட அரசாங்கம் கவனயீனமாகவே செயற்பட்டுள்ளது.

அந்த தகவல்களை ஒருபக்கம் வைத்து விட்டு செயற்பட்டுள்ளனர். அதனால்தான் இந்த நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டது. ஆகவே அரசாங்கமே இதற்கு முழுமையான பொறுப்பை கூற வேண்டும்.

கேள்வி:இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தற்போது யார் யாரோ பொறுப்பு என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் பக்கம் இருந்து இதனை பார்க்கின்றீர்களா?

பதில் : அரசாங்கத்தின் கவனயீனம் காரணமாகவே இந்தளவு மக்கள் அதிகமாக உயிரிழந்துள்ளனர் என்பதை கூறுகின்றேன்.

மக்கள் இன்னும் கூட உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். காயமடைந்த மக்கள் வைத்தியசாலையில் உயிரிழந்துகொண்டிருக்கின்றனர்.

அவர்கள் தொடர்பாக கூட அரசாங்கம் தேடிப்பார்ப்பதாக தெரியவில்லை. அவர்களின் குடும்பங்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாக தெரியவில்லை. அந்தப்பக்கதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதில் சிங்கள தமிழ் என அனைத்து இன மக்களும் உயிரிழந்தனர். அரசாங் கமே இதற்கு இடமளித்தது.

எனவே அரசாங்கம் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். பிரதமர் கூட இதற்கு அரசாங் கம் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமாக கூறியிருந்தார்.

கேள்வி: உங்களுக்கு இந்த தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தனவா? நீங்கள் எவ்வாறு இந்த தாக்குதல் குறித்து அறிந்து கொண்டீர்கள்?

பதில்: இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதன் பின்னரே எனக்கு தகவல் கிடைத்தது. அன்று நான் நுவரெலியாவில் இருந்தேன். அங்கு கோயிலுக்கு சென்றிருந்தேன்.

முஸ்லிம் மக்களை சந்தித்திருந்தேன். தமிழ், சிங்கள மக்களையும் சந்தித்தேன். வைத்தியசாலைக்கு இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக உதவிகள் சேகரிக்க சென்றிருந்தேன்.

அவ்வாறு அன்று பல விடயங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அந்தவகையில் முன்னதாக இதுதொடர்பில் எந்த தகவல்களும் கிடைத்திருக்கவில்லை.

கேள்வி:நாட்டின் தற்போதைய பாதுகா ப்பு தொடர்பில் உங்களது கருத்து என்ன?

பதில்: மக்களுக்கு பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடைய  முடியவில்லை. பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது.

மக்கள் இன்றும் கூட அச்சத்திலேயே இருக்கின்றனர். இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றதும் முழு பிரதேசமும் செயலிழந்து விடும்.

எனவே மக்கள் அச்சம் அடைவார்கள். அண்மையில் கூட ஒரு ஞாயிற்று கிழமை தினத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து மக்கள் அச்சத்தில் உறைந்துபோனார்கள்.

பாடசாலைகள் கூட அன்றைய தினத்தில் இயங்கவில்லை. எனவே இந்த மக்கள் அச்சத்தில் இருக்கின்ற நிலைமையை நாங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பான முயற்சிகள் தற்போது எந்த மட்டத்தில் உள்ளன?

பதில்: இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. நான் அண்மையில் ஜனாதிபதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன்.

ஜனாதிபதி நாடு திரும்பியதும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவேன். தொடர்ந்து எமது எதிர்கால பயணம் எவ்வாறு அமையும் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி:சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா?

பதில்: அதில் எந்த பிரச்சினைகளும் இல்லை. அதில் இருதரப்பினரும் ஒன்றிணைவதில் ஒரு சிலருக்கு விருப்பம் இன்றி இருக்கலாம்.

அதிகமானவர்களின் எதிர்பார்ப்பு ஒன்றிணைய வேண்டும் என்பதாகவே இருக்கின்றது. காரணம் எமது இரண்டு தரப்புக்கும் இடையில் பாரிய பிரச்சினை எதுவும் இல்லை. இரண்டு தரப்பினரதும் கொள்கைகள் கூடியளவு ஒற்றுமையானதாகவே காணப்படுகின்றன.

கேள்வி: ஜனாதிபதியுடனான உங்களது அண்மைய சந்திப்பின் போது, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பேசப்பட்டதா?

பதில்: அதில் வேட்பாளர்கள் தொடர்பில் பேசப்படவில்லை. ஏனைய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. எனினும் விசேட விடயங்கள் எதுவும் ஆராயப்படவில்லை.

கேள்வி: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முக்கிய அறிவிப்பை நாட்டுக்கு வெளியிடப் போகின்றீர்கள். அதுதொடர்பில் சற்று விளக்க முடியுமா?

பதில்: அந்த மாநாட்டில் முதலாவதாக நான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பேன். உத்தியோகபூர்வமாக கட்சியின் தலைமை பதவியை ஏற்பேன். கட்சி தற்போது சிறப்பாக கட்டியெழுப் பப்பட்டுள்ளது. அதற்காகவே நாம் கட்சியின் சம்மேளனத்தை நடத்துகின்றோம்.

கேள்வி:இந்த மாநாட்டில் நீங்கள் உங்கள் கட்யின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க உள்ளீர்கள் தானே?

பதில்: ஆம் நான் எமது ஜனாதிபதி வேட்பாளரையும் ஞாயிற்றுக்கிழமை பெயரிடுவேன்.

கேள்வி:ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சற்று கூறலாமே?

பதில்: வேலைசெய்யக் கூடிய ஒரு வரை ஜனாதிபதி  வேட்பாளராக களமிறக்குவேன். மக்களுடன் உணர்வுபூர்வமாக இருக்க கூடியவரை அறிவிப்பேன்.

மக்களுடன் இணைந்து பணியாற்றக் கூடியவராக அவர் இருப்பார். மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ளக்கூடிய, மக்களையும் நாட்டையும் நேசிக்கின்ற பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய அனைத்து இன மக்களுக்கும் ஒரே முறையில் சேவையாற்றுகின்ற அனைத்து மத மக்களையும் மதிக்கின்ற ஒரு தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக  நான் பெயரிடுவேன்.

கேள்வி: வேட்பாளர் குறித்து பேசும் போது உங்கள் தரப்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் பெயர் பேசப்படுகின்றது. அதுதொடர்பில்..?

பதில்: ஆம் அவர் ஒரு சிறந்த வேட்பாளர். என்னிடம் பல வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயரும் இருக்கின்றது. வேறு பல பெயர்களும் உள்ளன. அதில் சிறந்தவரை நான் பெயரிடுவேன்.

கேள்வி:ஏனையவர்களின் பெயர்களை கூற முடியுமா?

பதில்: (சிரிக்கிறார்..) உண்மையில் என்னிடம் ஐந்து பேர்கள் உள்ளன. அவை அனைத்தையும் நான் பரிசீலனைக்கு உட்படுத்தினேன்.

கேள்வி: நீங்கள் தேசியத் தலைவர். உங்களால் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வியூகம் அமைக்க முடியும். எனினும் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு தமிழ் முஸ்லிம் வாக்குகளை பெற முடியாது என்ற கருத்து நிலவுகின்றது. இதனை எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?

 

பதில்: அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. உண்மையில் புதிய அரசியலமைப்பு திருத்தம் காரணமாக அரசாங்கத்தில் பிரதமருக்கு அதிகமான அதிகாரங்கள் உள்ளன. நான்தான் பிரதமர்  வேட்பாளராக இருக்கின்றேன்.

எனவே நாம் இருவரும் இணைந்துதான் பணியாற்ற வேண்டியிருக்கும். தமிழ் முஸ்லிம் மக்களுடன் கோத்தபாயவுக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை.

உண்மையில் இவர்போன்று ஒருவர் வருவதற்காக தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். காரணம் தமிழ் மக்களுக்கு அமைதியாக வாழும் சூழலை கோத்தபாய ராஜபக் ஷதான் ஏற்படுத்தி கொடுத்தார்.

முஸ்லிம் மக்களுக்கும் அவர் சேவையாற்றி இருக்கின்றார். ஆனால் தவறான கருத்து பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. அதை நாம் திருத்தி அமைப்போம். அதனை நாம் சிறப்பாக கையாள்வோம்.

கேள்வி:ஆளும் கட்சியில் சஜித் பிரேமதாசவின் பெயரும் பேசப்படுகின்றது. இதில் யார் வந்தால் சவாலாக இருக்கும்?

பதில்: ஆளுந்தரப்பிலும் பலர் வேட்பாளராக தம்மை காட்டிக்கொண்டு வருக்கின்றனர். எனக்கு தெரிந்தவகை யில் ஆறு பேர்களின் பெயர்கள் பேசப்படுகின் றன.

அதில் மூவர் பிரதானமாக இருக்கின்றனர். சபாநாயகர் கருஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் பிரதானமாக உள்ளனர்.

ஆனால் என்னை பொறுத்தவரையில் இந்த மூவரும்  எமக்கு  சவாலே இல்லை.  மூவர் பற்றியும்  நாங்கள் கவலை கொள்ளவில்லை.

இவர்களில் யார் வந்தாலும் நாங்கள் வெற்றியடைவோம்.  அதுதான் நாட்டின் இன்றைய நிலையாகும். மக்களுக்கு உணவில்லை.

உணவில்லாத யுகம் உள்ளது.  மக்கள் கடன் பட்டுவருகின்றனர். அனைத்தையும்  அடகு  வைத்து அவை வங்கிகளுக்கு சொந்தமாகிவிடுகின்றன. விவசாயிகளுக்கு  தமது உற்பத்திகளை  விற்க முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.

பொருட்களின் விலைகள் வானை நோக்கி செல்கின்றன. அபிவிருத்தி இல்லை.  நாடு கடன்பட்டுவருகின்றது. இந்த நான்கு வருடங்களும் மக்கள்  பாரிய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

நாட்டுக்கு எந்த வேலையும் செய்யப்படாது நான்கு வருடங்கள் கடந்துள்ளன. வடக்கு– கிழக்கை பாருங்கள். வடக்கு–  கிழக்கில் நான்கு வருடங்களில் என்ன நடந்தது.  நான் செய்த வேலைகளும்  நிறுத்தப்பட்டுள்ளன.

கேள்வி: 2015 ஆம் ஆண்டு உங்கள் தரப்பு 19ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனால் தற்போது அதனை எதிர்க்கின்றீர்கள் ஏன்?

பதில்: நான் அப்போது எம்.பி.யாக இருக்கவில்லை. எனவே நான் அதனை ஆதரிக்கவில்லை. ஆனால் எனது தரப்பினர் அதனை ஆதரித்தனர்.

உடனடியாக 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கையிலேயே எமது தரப்பினர் 19ஐ ஆதரித்தனர்.

20ஆவது திருத்தம் வந்திருந்தால் நிலைமை மாற்றமாக இருந்திருக்கும். ஆனால் 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்படவில்லை. அதனால்தான் இன்று நாட்டில் அதிகார மையங்கள் தோற்றம் பெற்றுள்ளன.

பிரதமர், ஜனாதிபதி என இரண்டு மையங்கள் தோற்றம் பெற்றுள்ளன. எனவே முரண்பாடுகள் அதிகரித்தன.

அதனை தவிர்க்க முடியாமல் போனது. ஜனாதிபதி சொல்வதை பிரதமர் சொல்லமாட்டார். பிரதமர் சொல்வதை ஜனாதிபதி சொல்லமாட்டார். இவர்கள் இருவரினதும் அதிகார  போட்டி காரணமாக நாடு பின்னடைவை நோக்கி பயணிக்கின்றது. ஸ்த்திரமற்ற ஒரு அரசாங்கம் நிலவுகின்றது.

கேள்வி: 19 திருத்தப்பட வேண்டுமா?

பதில்: கட்டாயமாக திருத்தப்பட வேண்டும்.

கேள்வி: 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததும் நீங்கள் வடக்கு கிழக்கை அபிவிருந்தி செய்தீர்கள். யாழ்ப்பாணத்துக்கு ரயில் சென்றது. ஆனால் உங்களினால் வடக்கு – கிழக்கு மக்களின் மனதை வெற்றிகொள்ள முடியவில்லையே?

பதில்: அதற்கு காரணம் இருக்கின்றது. அதாவது நாங்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவே கஸ்டப்பட்டோம்.

மாறாக மக்கள் மனதை வெல்ல வேலை செய்திருந்தால் மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்றி இருக்க முடியாது.

நாங்கள் அடிப்படை தேவைகளான வீதிகள், மின்சாரம், குடிநீர், போன்றவற்றை பெற்றுக்கொடுத்தோம்.

15 இலட்சம் நில கண்ணிவெடிகளை அகற்றினோம். இவ்வாறு நிலக் கண்ணிவெடிகளை அகற்ற 15 வருடங்கள் செல்லும் என கூறப்பட்டது.

ஆனால் அதை நாம் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். மக்களை மீள்குடியேற்றினோம். வீடுகளை பெற்றுக்கொடுத்தோம்.

அபிவிருத்தியை துரிதமாக முன்னெடுத்தோம். உண்மையில் மக்கள் மத்தியில் பிரச்சினை இருந்தது. யுத்தத்தினால் ஏற்பட்ட ஒரு பிரச்சினை இருந்தது. இதுவொரு பொதுவான நிலைமையாகும். அதனை செய்ய நாம் முயற்சிக்கவில்லை.

மறுபுறம் தமிழ் அரசியல்வாதிகள் எங்களிடம் மக்களுக்காக பயன்பெற முயற்சிக்கவில்லை. ஒரு அரசியல் தீர்வு வேண்டுமாக இருந்தால் என்னிடமே தீர்வை பெற்றிருக்க வேண்டும். பெரும்பான்மை மக்களின் அதிக ஆதரவை பெற்றுள்ள கட்சியிடமே தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.

கேள்வி: தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு திட்டம் தொடர்பான எதிர்கால திட்டம் என்ன?

பதில்: தற்போது இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் புதிய அரசியலமைப்பு வேண்டும் என்று கூறுகின்றனர். சிலர் சமஷ்டி முறைமை வேண்டும் என்று கூறுகின்றனர்.

சிலர் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட தீர்வு கிடைத்தால் போதும் என்கின்றனர். ஆனால் தீர்வான நாட்டை பிரிப்பதாக அமைந்துவிடக் கூடாது.

தற்போது இந்தியாவில் காஷ்மீரில் நடந்த நிலைமையை பாருங்கள். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை புரிந்து கொண்டே அரசியல் தீர்வு திட்டத்தை தேட வேண்டும்.

கேள்வி: அரசியல் தீர்வு திட்டத்துக்காக நீங்கள் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்?

பதில்: நான் தமிழ் மக்களுடனேயே பேச்சுவார்த்தை நடத்துவேன். தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே இருக்கின்றேன்.

கேள்வி: நீங்கள் 2005ஆம் ஆண்டு நீங்கள் சர்வகட்சி மாநாட்டை நடத்தியிருந்தீர்கள். அதுபோன்று ஏதாவது அனுகுமுறையை முன்னெடுப்பீர்களா?

பதில்: நிச்சயமாக நான் அதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். யாருடைய தேவைக்காகவும் ஆடாமல் மக்களை நேசித்து செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வைத்தேட வேண்டும். ஆனால் ஒரு சிலர் தமது தேவைகளையே நிறைவேற்றிக்கொண்டு வருகின்றனர்.

தமிழ் பிரதிநிதிகள் ஐ.தே.க.வுடன் இணைந்து தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என எண்ணினர். மறுபுறம் பிரச்சினையை நீடித்துக்கொள்ளவும் விரும்பினர்.

இது அவர்களின் அரசிலுக்கு சிறந்த விடயமாக காணப்பட்டது. அபிவிருத்தியில்லை. தொழிலில்லை. இதைப்பேசிக்கொண்டே காலத்தை கடத்துகின்றேன்.  தனிநாடு, தனி நிர்வாகம் என பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இதனை ஒரு அரசியல் சுலோகமாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதனை விடுத்து மக்களின் பிரச்சினைகளை மறந்து விடுகின்றனர்.

கேள்வி: நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்களால் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமா?

பதில்: நான் இதனைத் தெளிவாக குறிப்பிடுகின்றேன். நான் அதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவேன். இதற்கு எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்படும்.

அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை காண முடியும். அனைத்து தரப்பினர் என்று கூறும் போது இது சாத்தியமற்று போகலாம். ஒருசிலர் எல்லாவற்றையும் எதிர்ப்பார்கள். அதிகமானவர்களின் விருப்பத்துடன் தீர்வைக் காண முடியும். அதற்கான சக்தியும் பலமும் எம்மிடம் இருப்பதாக நான் கருதுகிறேன்.

கேள்வி: கடந்த காலங்களில் இந்தியாவுடன் விரிசல்கள் காணப்பட்டதாக பேசப்பட்டது. இப்போது அதன் நிலைமை என்ன?

பதில்: எமக்கு இந்தியாவுடன் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. தேர்தல் காலத்தில் நீர்மூழ்கி கப்பல் குறித்து பேசப்பட்டது.

ஆனால் தற்போது சீனாவின் நீர்மூழ்கி கப்பல் வந்து சென்றுவிட்டது. தற்போது துறைமுகத்தையும் கொடுத்துவிட்டனர். கொழும்பையும் கொடுத்துவிட்டனர். அப்படியானால் தற்போதுதான்  பிரச்சினை அதிகரிக்க வேண்டும்.

கேள்வி: கடந்த நான்கரை வருடகாலமாக கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் நீங்கள் கடும் விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றீர்கள். அது பற்றி கூறமுடியுமா?

பதில்: அரசாங்கத்தை காப்பாற்றுவதை மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்கின்றது. வேறு எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. தீர்வையும் பெறவில்லை.

அபிவிருத்தியையும் பெறவில்லை.  மக்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. வடக்கு கிழக்கிற்கு வீதியை, பாடசாலையை, இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவில்லை.

எதையுமே மக்களுக்கு பெற்றுக்கொடுக்காமல் அரசாங்கத்தை ஆதரித்தனர்.  நீங்கள் இப்போது ரிஷாத் பதியுதீனைப் பாருங்கள். அவர்கள் தங்கள் மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டு அவர்களும் பிரயோஜனத்தை எடுத்துக்கொண்டு செயற்படுகின்றனர்.

ஆனால் கூட்டமைப்பு என்ன செய்கின்றது. கூட்டமைப்பு எவ்வித அர்த்தமும் இல்லாத பணியை செய்கின்றது. அவர்களால் தீர்வையும் பெறமுடியவில்லை.

அபிவிருத்தியையும் செய்யமுடியவில்லை. மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்கவும் இல்லை. அவர்கள் தமக்கு பலவற்றை பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

நான் ஆரம்பித்த அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் செயலிழந்து காணப்படுகின்றன. இதனை நான் சம்பந்தனுக்கு கூறினேன். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தததும் இவற்றை மீண்டும் தொடருவேன்.

கேள்வி: ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து பேசப்பட்டது. பிரபாகரனை பற்றி உங்களுடைய மதிப்பீடு என்ன?

பதில்: பிரபாகரன் ஒரு நோக்கத்தை அடிப்படையாக கொண்டு போரிட்டார். இவர்கள் அதற்காக போராடவில்லை.

பிரபாகரனுக்கு ஒரு விடயம் தேவைப்பட்டிருந்தது. பிரபாகரனிடம் ஒரு ஒழுக்கம் காணப்பட்டது.  அதனை நான் பார்க்கின்றேன்.

அடிக்க வேண்டும் என்றால் அடிப்பார் இல்லையென்றால் அடிக்காமல் விடுவார். ஒரு ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது.

அவர் வந்த மார்க்கம் தவறானது. ஆனால் நான் மேற்கூறிய விடயங்கள் அவரிடம் காணப்பட்டன. ஆனால் தற்போது இடம்பெற்ற தாக்குதல்கள் அவ்வாறு இருந்தது இல்லை. எந்நேரத்திலும் தாக்குதல் நடத்துவார்கள். அவர்கள் அதற்காக இறக்கவும் தயாராக இருக்கின்றனர்.

கேள்வி:  நீங்கள் 12 ஆயிரம் புலி போராளிகளை விடுதலை செய்தீர்கள். ஆனால் அவர்கள் இன்று வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதுதொடர்பில் கவனம் செலுத்தினீர்களா?

பதில்: எமது காலத்தில் அவர்களுக்கான ஒரு வேலைத்திட்டம் காணப்பட்டது. அவர்களை நாம் விடுவித்ததுடன் தொழிற்பயிற்சி வழங்கினோம்.

அதன் பின்னர் அந்த பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைக்கவும் வர்த்தக நிலையங்களை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தோம்.

சில தொழிற்சாலைகளையும் அமைத்தோம். பொலிஸ் சேவையில் இணைத்தோம். ஆனால் அந்த வேலைத் திட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்டன.

அதனால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது. தெற்கிலும் இன்று தொழில் பிரச்சினை காணப்படுகின்றது. நான்கரை இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளனர். பட்டதாரிகள் தொழில் இன்றி இருக்கின்றனர்.

கேள்வி: 51 நாள் அரசாங்கத்தை ஏன் உங்களால் நீடிக்க முடியாமல் போனது?

பதில்: அந்த அரசாங்கம் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கம். தேர்தலின் பின்னர் நிலையான அரசாங்கத்தை உருவாக்க முயற்சித்தோம், ஆனால் நாம் நினைத்தவாறு அது நடக்கவில்லை.

கேள்வி: இறுதியாக தமிழ் மக்களுக்கு என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: தெற்கு மக்களுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ் பேசும் மக்களை அழைக்கின்றேன்.

இதுவே எனது கோரிக்கையாக இருக்கின்றது. அதுவே அரசியல் மற்றும் பொருளாதார தீர்வுகளை பெறுவதற்கு ஒரே மார்க்கமாக இருக்கும்.

பிரபாகரன் வந்த மார்க்கம் தவறானது. ஆனால் ஒரு ஒழுக்கமும் கட்டுப்பாடும் நோக்கமும் அவரிடம் இருந்தது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவேன்.

நேர்காணல் – ரொபட் அன்டனி – வீரகேசரிக்கு