நிறவெறிக்கு எதிராக இனம் கடந்த போராட்டம்: அமெரிக்காவில் குடும்பம் குடும்பமாக குவிந்த மக்கள்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு எதிராக தொடங்கிய போராட்டம் 12வது நாளாகத் தொடர்கிறது.
இந்நிலையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் பத்தாயிரக்கணக்கான மக்கள் இனம், நிறம் கடந்து ஒன்றுகூடி இனவெறிக்கு எதிராகவும், போலீஸ் வன்முறைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேப்பிடோல், லிங்கன் நினைவகம், லஃபாயெட்டி பூங்கா ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். இந்த இடங்களில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகைக்கு செல்லும் பாதைகளை போலீசார் மறித்துவைத்தனர்.
பல்வேறு இனங்கள், நிறங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர். பலர் குடும்பம் குடும்பமாக, குழந்தைகளோடு வந்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் உறுதியான மன எழுச்சி நிலவியதாகவும், இசைக்கருவிகள் இசைக்கப்பட்டதாகவும் ‘நீதி இல்லையேல் அமைதி இல்லை’ என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப் பட்டதாகவும் தெரிவிக்கிறார் பிபிசி செய்தியாளர் ஹீலியர் சியூங்.
உணவு, தண்ணீர், கிருமி நாசினி ஆகியவை விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இதனிடையே, ஜார்ஜ் ஃப்ளாய்ட் பிறந்த வட கரோலினாவில் அவருக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிராகவும், அதற்குக் காரணமாக இருந்தது எனக் கருதப்படும் இனவெறிக்கு எதிராகவும் நடக்கும் போராட்டம் அமெரிக்க எல்லையைக் கடந்து பல நாடுகளுக்கும் பரவி வருகிறது.
பிரிட்டனில்….
‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ (கருப்பின உயிர்களுக்கும் மதிப்புண்டு) என்ற பெயரில் நடக்கும் கருப்பின உரிமை இயக்கத்துக்கு ஆதரவாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றை தீவிரமாக்கும் என்ற அச்சத்தில் மக்கள் ஒன்றுகூடவேண்டாம் என்று அரசாங்கம் விடுத்த வேண்டுகோளையும் மீறி இந்தப் போராட்டம் நடந்தது.
ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் ஆகிய பெருநகரங்களில் நடந்த போராட்டங்களில் ஆஸ்திரேலியாவின் தொல்குடிகள் நடத்தப்படும் விதம் குறித்த விமர்சனங்கள் எதிரொலித்தன.
யார் இந்த ஃப்ளாய்ட்?
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கடந்த மே மாதம் 25-ம் தேதி ஆயுதம் ஏதும் வைத்திராத கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆண் போலீஸ் காவலில் இறந்தார். ஃப்ளாய்ட் இறந்த பிறகு, வெள்ளையினத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி டெரக் சாவின் என்பவர் கீழே தள்ளப்பட்ட ஃப்ளாயிட் கழுத்தில் முட்டிபோட்டு கிட்டத்தட்ட 9 நிமிடங்கள் அழுத்துவதைக் காட்டும் வீடியோ வெளியானது.
சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் அங்கிருந்த வேறு மூன்று போலீஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலைக்கு உதவியதாகவும், தூண்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment