நீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாம் மதம் மதத்துக்கு மாறினாரா??

இந்தப் படத்தில் இருப்பவர் நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல. இந்தப் படத்தை எடுத்தவர்தான் நீல் ஆம்ஸ்ட்ராங். தனக்குப் பின் நிலவில் இறங்கிய எட்வின் பஸ் ஆல்ட்ரினை அவர் பிடித்த படம் இது.
(இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன.
அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி “Myth Buster” எனும் பெயரில், பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் நான்காம் பாகம் இது.)
நீங்கள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களைக் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்காணும் இரு தகவல்களையோ, இரண்டில் ஒன்றையோ கட்டாயம் ஒரு முறையேனும் கடந்து வந்திருப்பீர்கள்.
“நிலவில் கால் பதித்த முதல் மனிதரான, அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட் ராங் நிலவில் இறங்கிய தருணத்தில் ஒரு வினோதமான ஒலியைக் கேட்டார்.
அந்த ஒலி என்னவென்று அப்போது அவருக்குத் தெரியவில்லை. எகிப்துக்கு அவர் ஒரு முறை சுற்றுலா சென்றிருந்தபோது அதே ஒலியை அவர் மீண்டும் கேட்டார். அது மசூதியில் ‘பாங்கு’ சொல்லும் ஒலி. அதன்பின் அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார்.”
“அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூரியனில் இருந்து வரும் ஒலியைப் பதிவு செய்தது. அதன்மூலம் ‘ஓம்’ என்பதுதான் சூரியனின் ஒலி என்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.”
இந்த இரண்டு தகவல்களுமே தவறானவை மட்டுமல்ல அறிவியலுக்கு முரணானவையும் கூட.
nasa
சூரியன் அல்லது விண்வெளியில் என்ன ஒலி கேட்கிறது என நாசாவின் பெயரால் இதைப்போல பல போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
ஒலி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பயணிக்க வேண்டுமானால், ஓர் ஊடகம் தேவை. அது காற்றாகவோ, நீராகவோ, ஏதாவது ஒரு திடப்பொருளாகவோ இருக்கலாம்.
இயக்க அலைகள் (mechanical waves) வகைப்பாட்டைச் சேர்ந்த ஒலி அலைகள் ஊடுருவிப் பயணிக்க பருப்பொருள் (matter) ஒன்று கட்டாயம் தேவை.
ஆனால், விண்வெளியில் ஒலி அலைகளைச் சுமந்து செல்ல எந்த பருப்பொருளும் இல்லை. விண்வெளியில் வெற்றிடம் மட்டுமே உள்ளது என்பதால் அதில் ஒலி அலைகளால் ஊடுருவிப் பயணிக்க முடியாது.
— Kiran Bedi (@thekiranbedi) January 4, 2020
ஓய்வுபெற்ற இந்திய காவல் பணிகள் (ஐபிஎஸ்) அதிகாரியும், புதுவை துணை நிலை ஆளுநருமான கிரண் பேடியும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாசா பதிவு செய்த சூரியனில் ஒலிக்கும் ‘ஓம்’ எனும் ஒலி என்று கூறி ஒரு காணொளியை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
அதைப் பலரும் சமூக ஊடகங்களில் எள்ளி நகையாடினர். அது ஒரு போலிச் செய்தி என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
சூரியனின் ஒலி எப்படி இருக்கும்?
சூரியனில் உண்டாகும் அதிர்வுகள் ஏற்படுத்தும் ஒலியை நாசாவின் ஹீலியோபிசிக்ஸ் சயின்ஸ் டிவிசன் (Heliophysics Science Division) வெளியிட்டுள்ளது.
நாசாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஒலியின் இணைப்பு கீழே உள்ளது.
ஆனால், இந்த ஒலி நேரடியாகப் பதிவு செய்யப்பட்டது அல்ல. பின்பு எவ்வாறு சூரிய அதிர்வுகளின் ஒலி எப்படி இருக்கும் என்று நாசா கண்டறிந்தது?
சூரியனின் உள்புறத்தின் உள்ளேயே இந்த அதிர்வுகள் பயணிக்கும் பாதையை நோக்கிய நாசா அறிவியலாளர்கள் அதை ஒலியாக மாற்றியுள்ளனர் என்று நாசா கூறுகிறது.
ஆர்ம்ஸ்ட்ராங் கேட்ட பாங்குச் சத்தம்?
சரி. மீண்டும் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கதைக்கு வருவோம்.
மனிதகுல வரலாற்றில் மிகவும் பிரபலமான மனிதர்களில் ஒருவரான நீல் ஆம்ஸ்ட்ராங் குறித்த செய்திகளும் அவரைப் போலவே பிரபலமாகின்றன.
நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தது 1969இல். இந்த வரலாற்று நிகழ்வு நடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1983இல் கிறித்தவ அமைப்பு ஒன்றைச் சேர்ந்த பில் பார்ஷல் என்பவருக்கு, ஆர்ம்ஸ்ட்ராங்கின் நிர்வாக உதவியாளர் விவியன் வைட் என்பவர் எழுதிய கடிதத்தில் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் ‘ஆசன்’ (பாங்கு சொல்லும் ஒலி) சொல்வதைக் கேட்டதாகவும், அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார் என்றும் பரவும் செய்தி போலியானது என்று தெரிவித்துள்ளார்.
யார் மனதையும் புண்படுத்தவோ, எந்த மதத்தையும் அவமதிக்கவோ விரும்பாத அதே சூழலில் தாம் மதம் மாறியதாக கூறப்படும் செய்திகள் தவறானவை என்று ஆம்ஸ்ட்ராங் கூறுகிறார் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து, மலேசியா, இந்தோனீசியா மற்றும் பிற நாடுகளின் ஊடகங்கள் உறுதிசெய்யாமல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவியன் வைட், அதை ‘திறமையற்ற இதழியல்’ என்றும் விமர்சித்துள்ளார்.
எனவே இந்தக் கதை சமூக ஊடகங்களும், இணையதளமும் கண்டுபிடிக்கப்படும் முன்னரே பரப்பப்பட்ட புரளிதான்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment