நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்தல்!

நைஜீரியாவிலுள்ள வடமேற்கு மாநிலமான ஜம்ஃபாராவிலுள்ள அரச நடுநிலைப் பாடசாலையிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இனந்தெரியாத ஆயுதக் கும்பலில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு பகுதியினர், அருகிலுள்ள இராணுவச் சாவடி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த, மறுபுறம் பாடசாலைக்குள் பல மணி நேரம் இருந்த ஆயுதக் குழுவினர் அங்கிருந்த மாணவிகளை கடத்திச் சென்றனர்.
பாடசாலை பதிவேட்டின்படி, 317 மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையில் ஆயுதக் கும்பல் நீண்ட நேரம் இருந்த நிலையில், உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.
பொலிஸ் ஆணையர் அபுது யாரோ ஊடகங்களிடம் கூறுகையில், ‘ ஜங்கேபே நகரில் உள்ள அரச பெண்கள் அறிவியல் மேல்நிலைப் பாடசாலையில் இருந்து 317 சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தல்காரர்களைக் கண்டுபிடித்து மாணவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. அவர்கள் அண்டை காடுகளுக்கு மாற்றப்பட்டார்களா என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்’ என கூறினார்.
ஆயுதக் கும்பல் அதிகாலை 1:45 மணியளவில் சுமார் 20 மோட்டார் சைக்கிள்களில் வந்ததாகவும், அவர்கள் அதிகாலை 3 மணி வரை செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இராணுவ சோதனைச் சாவடி பாடசாலையிலிருந்து நான்கு நிமிடங்கள் தொலைவில் உள்ளது என கூறப்படுகின்றது.
ஜனாதிபதி முஹம்மது புஹாரி சமீபத்திய கடத்தலை மனிதாபிமானமற்றது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு போகோ ஹராம் பயங்கரவாதிகளால் 276 பாடசாலை மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இன்னும் கண்டறியப்படவில்லை.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment