ilakkiyainfo

பசறையை உலுக்கிய ஆசிரியை சரஸ்வதியின் கொலையும், விசாரணையும் …: பூசாரியின் பரிகாரம

பசறையை உலுக்கிய ஆசிரியை சரஸ்வதியின் கொலையும், விசாரணையும் …: பூசாரியின் பரிகாரம
September 20
09:13 2014

 

தேடல்கள் தோல்வியில் முடியும் போது ஏற்படும் வலி, அது சார்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும். பல சமயங்களில் அப்படிப்பட்ட வலிகள் தீரா வடுக்களாகவே  உள்ளங்களை ஆட்கொண்டுவிடும். இதுவும் அப்படியான ஒரு சம்பவம் தான்.

அ.சரஸ்வதி. 40 வயதுடைய ஒரு ஆசிரியை. பதுளை மாவட்டத்தின் பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோணகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர். ஆறு வயதான ஒரு மகனுக்கு தாயும் கூட.

கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு கற்பிக்க சென்ற சரஸ்வதி மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. பாடசாலையிலும் அயல் பிரதேசங்களிலும் விசாரித்தும் பலனில்லை.

அன்று இரவு முழுவதும் காத்திருந்தும் பிரயோசனம் இல்லை. பயம் மனதை ஆட்கொண்டிருக்க, சரஸ்வதிக்கு என்ன ஆனது என்ற கேள்வி இதயத்துடிப்பாய் துடிக்க நாட்காட்டியோ முதலாம் திகதியை மறந்துவிட்டது.

சரஸ்வதியின் தொலைபேசிக்கு எத்தனையோ அழைப்புக்களை நிமிடத்துக்கு ஒருமுறை கொடுத்தும் கூட அந்த தொலைபேசியோ ‘ நீங்கள் அழைத்த தொலைபேசி  இலக்கம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து சிறிது நேரத்தில் முயற்சிக்கவும்’ என்ற பயமுறுத்தும் பதிலையே கொடுத்தது.

இந் நிலையில் தான் சரஸ்வதியின் கணவரான எம்.ராமசாமி பசறை பொலிஸ் நிலையத்துக்கு செல்கின்றார். ராமசாமியை பற்றி சொல்வதென்றால், தனது பிள்ளைக்கு அன்பான அப்பா, மனைவிக்கு பொருத்தமான கணவன்.

தேயிலை ஆராய்ச்சி நிலையம் ஒன்றில் பணி புரிபவர். எதிர்ப்பார்ப்புக்கள், தேடல்களை சுமந்தவராய் பசறை பொலிஸ் நிலையம் சென்ற அவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்கின்றார்.

ஆம், தமது மனைவியை நேற்று(கடந்த முதலாம் திகதி ) முதல் காணவில்லை. பாடசாலை போனவர் வீட்டுக்கு திரும்பவில்லை. என அதில் குறிப்பிடப்பட்டது.

இந் நிலையில் தான் முறைப்பாட்டு புத்தகம் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.எம்.ரத்னாயக்கவின் கவனத்துக்கு வருகின்றது. ஊவாவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்தன கலப்பதி, உதவி பொலிஸ் அத்தியட்சர்  ஏ.டீ.பிரேமதிலக   ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அம் மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகளின்  மேற்பார்வையின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ரீ.எம்.ரத்னாயக்கவின் ஆலோசனையிலும் நேரடி கட்டுப்பாட்டிலும் விசாரணைகள் ஆரம்பமாகின.

ஆரம்பகட்ட விசாரணைகளில் பொலிஸாருக்கு ஆசிரியை சரஸ்வதி குறித்து பெரிதாக தகவல்களை வெளிக்கொண்டுவர முடியவில்லை. எனினும் பொலிஸார் மனம் தளரவில்லை.

பல கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். பொலிஸாரின் விசாரணை முதலாம் திகதி காலை சரஸ்வதி பாடசாலைக்கு சென்றது முதல் இருந்து ஆரம்பமானது.

சரஸ்வதி பாடசாலைக்கு சென்ற அன்றைய தினம் கற்பித்தல் நடவடிக்கைகளில் பாடசாலை முடியும் வரை ஈடுபட்டுள்ளமைக்கு அங்குள்ள பதிவுப்புத்தகம் பொலிஸாருக்கு சாட்சி சொன்னது.

இந் நிலையில் முதலாம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரேயே ஆசிரியை காணாமல் போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு பொலிஸார் வருகின்றனர்.

இந் நிலையில் ஆசிரியை வழமையாக பயணிக்கும் பயணப்பாதை, அவர் பழகுபவர்கள் மற்றும் அவரிடத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர், ஆசிரியை தோழிகள் என பலரிடம் பொலிஸார் தகவல்களை சேகரிக்கலாயினர்.

இந் நிலையில் தான் பொலிஸாருக்கு மற்றொரு ஊகத்துக்கு அல்லது அனுமானத்துக்குரிய தகவல் கிடைத்தது. சரஸ்வதி ஆசிரியையிடம் கல்வி பயின்ற இரு மாணவர்கள் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு வழங்கிய தகவலில் அல்லது சாட்சியத்தில் தெரியவந்தது.

அதாவது சரஸ்வதி ஆசிரியை பாடசாலை விட்டு பசறை பஸ் நிலையம் வரை சென்றுள்ளமையே அந்த தகவலாகும். அதாவது கோணகலை தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து பசறை பஸ் தரிப்பு நிலையத்திற்கு ஆசிரியை சென்றுள்ளார்.

இதன் பின்னரே அவர் காணாமல் போயுள்ளார் என்ற உறுதியான அனுமானத்துக்கு மாணவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் பொலிஸார் வருகின்றனர்.

polce-1
பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

பசறை பஸ் தரிப்பு நிலையம் அல்லது அதனை அண்மித்த இடமொன்றில் வைத்து ஆசிரியை காணாமல் போயிருப்பாரானால் அவர் கடத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவராகவே எங்கேனும் சென்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.

ஏனெனில் ஆசிரியை சரஸ்வதி பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹ எல்ல, 3 ஆம் கட்டை பகுதியின் பிளானிவத்தை தோட்ட கோணகலை பாடசாலையானது அவரது வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர்கள் இருக்கும்.

பசறை நகரோ கோணகலைக்கு நேர் எதிர் திசையில் உள்ளது. பசறை நகர் பகுதிக்கு கோணகலை பகுதியில் இருந்து செல்வதானால் 9 ஆம் கட்டையை கடந்தே செல்ல வேண்டும்.

அந்த ஆசிரியை தனது வீட்டுப்பகுதியை கடந்தே கடந்த முதலாம் திகதி சென்றுள்ளமை தெரியவரவே கண்டிப்பாக அவராகவே எங்கேனும் சென்றிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு பொலிஸார் வருகின்றனர்.

இந் நிலையிலேயே விசாரணைகளுக்கு அறிவியல் ரீதியிலான சான்றுகளை பயன்படுத்தும்  தீர்மானத்துக்கு வரும் பொலிஸார் தமது விசாரணை திட்டம் தொடர்பில் பதுளை நீதிவான் நீதிமன்றின் நீதிபதி மகேஷிகா பிரியதர்ஷினிக்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

ஏனெனில் தமக்கு ஆசிரியை சரஸ்வதியின் தொலைபேசி வலைப்பின்னலை பரிசோதிக்க வேண்டியிருப்பதாக அவர்கள் நீதிவானிடம் அனுமதி கோரவே அந்த அறிக்கையை சமர்பித்தனர்.

நீதிவானும் அனுமதியளிக்கவே ராமசாமியிடம் இருந்து பொலிஸார் ஏற்கனவே பெற்றுக்கொண்ட அவரது மனைவி சரஸ்வதியின் தொலை பேசி இலக்கத்தை ஆராய பொலிஸ்குழு தயாரானது.

தொலைபேசி இலக்கத்தை வலையமைப்பின் உதவியுடன் ஆராய்வதில் பிரதானமக இரு நோக்கங்கள் பொலிஸாருக்கு இருந்தன. அதாவது ஆசிரியை எந்த பிரதேசத்தில் தற்போது உள்ளார் என்பதும் அவர் காணாமல் போவதற்கு முதல் சந்தேகத்துக்கு இடமான முறையில் எவருடனாவது உரையாடியுள்ளாரா என்பதுமே அவையாகும்.

குறித்த விடயங்களை வெளிப்படுத்திக் கொள்ள தொலைபேசி வலையமைப்பை சோதனையிட்ட பொலிஸாருக்கு அது தொடர்பில் பெரிதாக தகவல் கிடைக்கவில்லை. ஏனெனில் ஆசிரியையின் தொலைபேசி செயலிழந்து இருந்ததால் அவர் அப்போது இருக்குமிடத்தை கண்டறிவதில் சிக்கல் இருந்தது.

எவ்வாறாயினும் ஆசிரியை காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நேரமான பிற்பகல் 2.00 மணியை அண்மித்து அவர் நபர் ஒருவருடன் தொலைபேசியில் இறுதியாக கதைத்துள்ளமை தொடர்பில் பொலிஸாரின் அவதானம் சென்றது.

அது தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸார் பசறை, பொலிஸ் பிரிவில் மீதும் பிட்டிய பகுதியில் உள்ள நாக பூசைகளை நடத்திவரும் பூசாரி ஒருவருடனேயே அவர் இறுதியாக கதைத்துள்ளமை தெளிவானது.

சுபேந்திர குமார் என்ற அந்த பூசகருக்கு 28 வயது மட்டுமே. திருமணமாகி இரு பிள்ளைகள் இருந்த நிலையில் மீதும் பிட்டியவில் தனது வீட்டிலேயே அந்த நாக பூஜைகளை அவர் நடத்தி வந்துள்ளார்.

எனினும் அவர் இரவு நேரங்களில் அங்கு தங்குவதில்லை. இரவு நேரங்களில் பசறை 9 ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள வீட்டிலேயே மனைவி பிள்ளைகளுடன் அந்த பூசாரி தங்கியிருந்துள்ளார்.

saraswathi-19 ஆம் பூசாரியின் வீடு ஆசிரியை சரஸ்வதியின் வீட்டை அண்மித்தே இருந்துள்ளது. பூசாரியின் பிள்ளைகள் கூட சரஸ்வதி ஆசிரியையுடனேயே பள்ளிக்கூடத்துக்கும் சென்று வந்துள்ளனர்.

இந்த தகவல்களை வைத்து பார்த்த பொலிஸார் பூசாரிக்கு ஆசிரியை ஏன் அந்த நேரத்தில் தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்ற கேள்வியை தொடுத்து விசாரித்தனர்.

அதற்கான பதிலை பெற்றுக்கொள்ள வாக்கு மூலம் ஒன்றை வழங்குமாறு கோரி பூசகரை பொலிஸார் பசறை பொலிஸ் நிலையம் அழைத்தனர். அது கைது செய்வதற்கான திட்டமல்ல. சாதாரண ஒரு அழைப்பு மட்டுமே. எனினும் அந்த அழைப்பே உண்மைகளை போட்டுடைத்தது எனலாம்.

பொலிஸாரின் அழைப்புக்கு செவி சாய்த்து வருவதாக தொலைபேசியை துண்டித்த பூசகர், பொலிஸ் நிலையம் செல்லவில்லை. பசறை வீதியில் பயணித்த பஸ் வண்டி ஒன்றின் முன்னால் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்து பதுளை வைத்தியசாலைக்கே சென்றார். இந்த சம்பவம் பொலிஸாரை கடுமையாக யோசிக்க வைத்தது.

சாதாரணமாக பொலிஸ் நிலையம் அழைத்ததற்கு பூசாரி ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? என தமக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொண்ட பொலிஸார் விசாரணை கோணத்தை புதிய கோணத்துக்கு திருப்பினர். ஆசிரியை தொடர்பில் பூசாரிக்கு கண்டிப்பாக தகவல் தெரியும் என நம்பிய விசாரணைக் குழு பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.

இனி மேலும் மறைப்பதில் பலனில்லை என்பதை அறிந்த பூசகர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றவாறே பொலிஸாருக்கு ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்கலானார். ‘

ஆசிரியை சரஸ்வதியை நான் தான் கொலை செய்தேன். மீதும் பிட்டி பூஜை வீட்டின் முன்னால் அவரை குழி தோண்டி புதைத்துள்ளேன். அவர் என்னுடன் பேசியவாறே பரிகார பூஜை ஒன்றுக்காக வந்தார்.

இதன் போதே கொலை செய்தேன்’ என அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் அவர் குறிப்பிட்டதை தொடர்ந்து பொலிஸாரால் மீதும்பிட்டிய பூசை வீட்டில் சடலம் புதைக்கப்பட்ட இடம் அடியாளம் காணப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சிகிச்சைகளுக்கு மத்தியிலேயே பூசகரை கைது செய்த பொலிஸார் அது தொடர்பில் பதுளை நீதிவான் மகேஷிகா பிரியதர்ஷினிக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

வைத்தியசாலைக்கு வந்து பூசகரை பார்வையிட்ட நீதிவான் அவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் அடையாளம் காணப்பட்ட அந்த இடத்தை கடந்த சனியன்று தோண்டுமாறும் தோண்டி சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, ஆசிரியையை அடையாளம் காணுமாறும் நீதிவான் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.

எனினும் சனியன்று பதுளை சட்ட வைத்திய அதிகாரியின் உதவியை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படவே சடலமானது கடந்த திங்களன்று (15) புதைக்குழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

சடலமானது கணவரால் அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை துணி ஒன்றினால் நெரித்து இந்த கொலை செய்யப்பட்டுள்ளமை நிரூபணமானது.

அத்துடன் கொலைக்கு முன்னர் ஆசிரியை பூசாரியால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளாரா என்பதை அறிய சடலத்தின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பசறை வரை ஆசிரியை பயணித்திருந்தமைக்கான நேரடி ஆதரங்களை திரட்டியிருந்த பொலிஸார் மீதும்பிட்டியில் உள்ள பூசகரின் வாசஸ்தலத்துக்கும் ஆசிரியை அன்றைய தினம் பிற்பகலில் குறிப்பிட்ட நேரத்தில் இறுதியாக வந்தமைக்கான நேரடி ஆதாரங்களையும் தேடி பதிவு செய்தனர். ஆசிரியை அங்கு வந்தமைக்கான ஆதாரம் பூசகரின் தாயினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கொலை தொடர்பில் இவ்வாறு தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த முதலாம் திகதி சரஸ்வதி ஆசிரியை பாடசாலை விட்டதும் நேராக பூசகர் ஒருவரை நாடி வந்துள்ளார். அதாவது தனது ஆறு வயது மகனுக்கு பரிகாரம் ஒன்றை செய்துகொள்வதற்காகவே அவர் அவ்வாறு பூசகரை நாடி வந்துள்ளார்.

பூஜை வழிபாடு விடயத்தில் கடும் நம்பிக்கை கொண்டுள்ள குறித்த ஆசிரியை தனது மகனுக்கு சுடு நீர் உடலில் கொட்டுண்டதால் ஏற்பட்ட காயத்துக்கு பரிகாரம் மேற்கொள்ளவே அங்கு சென்றுள்ளார்.

மகன் தொடர்பன குறித்த துரதிஷ்ட சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளதாக குறிப்பிடும் பொலிஸார் பூசகர் பக்கத்து வீடு என்பதால் ஆசிரியை எவ்வித அச்சமும் இன்றி அவரை நாடி நம்பிக்கையுடன் சென்றிருக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

இந் நிலையிலேயே பூசகர் ஆசிரியைக்கு சாந்தி பரிகாரத்துக்கு பதிலாக கொலை பரிகாரம் ஒன்றினை நடத்தியுள்ளார். கொலைக்கு பயன்படுத்திய துணியை பொலிஸார் மீட்டுள்ள நிலையில் ஆசிரியையின் நகை, பணம் என்பவற்றை இலக்கு வைத்து இந்த கொலை நடைபெற்றுள்ளதாக விசாரணைக் குழுவினர் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் ஆசிரியையின் கைப்பை, செயலிழக்கச் செய்யப்பட்ட தொலைபேசி உள்ளிட்டவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 10 நாட்கள் நீடித்த மர்மத்தை நீண்ட சூட்சுமமான விசாரணைகளில் பொலிஸார் போட்டுடைத்தனர்.

பல நாள் தேடலில் சரஸ்வதி ஆசிரியையை தேடிய முழு பசறை பிரதேசமும் சடலம் தோண்டி எடுக்கப்படும் போது மீதும்பிட்டியில் ஒன்றுகூடியதுடன் சடலம் எடுக்கப்பட்ட பின்னர் சந்தேக நபரின் பூஜை மையமான வீடு அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தேடல் தோல்வியின் விரக்தியும் படு பாதக செயல் தொடர்பில் ஏற்பட்ட ஆத்திரமும் பிரதேசத்தவர்களை இவ்வாறு தூண்டியது. எனினும் பொலிஸார் தலையிட்டதில் வன்முறைகள் பதிவாவது தடுக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட ஆசிரியை, பூசாரியால் தனது வீட்டின் அறை ஒன்றின் நிர்மாணத்துக்காக வெட்டப்பட்ட குழியொன்றில் மிக சூட்சுமமாக புதைக்கப்பட்டுள்ளார். அதாவது மிக ஆழமாக தோண்டப்பட்ட குழியில் சடலத்தை இட்டு அதன் மேலால் பொலித்தீன் பை ஒன்றை போட்டு அதனுள் யூரியாவும் தூவி இந்த சடலம் புதைக்கப்பட்டுள்ளது.

இது தனி நபரால் மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதற்கான ஆதாரங்களும் சடலம் புதைக்கப்பட்டிருந்த முறைமை, தடயங்கள், சந்தேக நபரின் வாக்கு மூலத்தை வைத்து பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

குற்றவாளிகள் தப்பிக்க முடிவதில்லை. தடயங்களை விட்டு வைப்பார்கள். என்றோ ஒரு நாள் அவர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்பதற்கான மற்றொரு உதாரணமே இந்த சம்பவம். தன்னிடம் பரிகரம் தேடி வந்தவரை கொலை செய்த இந்த இரக்கமற்ற அந்த கொடூர பூசாரியை இனி சட்டம் கவனித்துக்கொள்ளட்டும்.

அப்பாவித்தனமாக இந்த பூசாரியின் சதிக்குள் சிக்கிய சரஸ்வதி ஆசிரியையின் கதையும் இறுதியில் ‘ மழைக்கு சிங்கத்தின் குகைக்குள் ஒதுங்கிய ஆட்டின்’ கதையானது.

எம்.எப்.எம்.பஸீர்

பிரபாகரன் மீசையை மழித்த (வழித்த) ரகசியம் என்னவென்று  தெரியுமா?

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com