Site icon ilakkiyainfo

பிரபாகரனின் உடல்மொழி வாய்த்தது எப்படி? (வீடியோ)

 

ஓ.டி.டி.யில் வெளியானவுடனேயே தமிழ்கூறும் நல்லுலகு முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட திரைப்படம் ‘மேதகு’. ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றின் தொடக்க காலத்தைச் சித்திரிக்கிறது இந்தப் படம்.

மேதகு தமிழ்த் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் (இளம்பருவ கால) பிரபாகரனாக நடித்தவர் குட்டிமணி.

தினமணி இணையதளத்துக்காக குட்டிமணி அளித்த சிறப்பு நேர்காணல்:

மேதகு திரைப்படத்தில் நடிக்கக் கூடிய இந்த வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?

எனது நண்பர் பாரதியின் சின்னச் சின்ன குறும்படங்களில் நடித்து வந்தேன். பொதுவாகவே சினிமா மீது எனக்குக் காதல் இருந்தது. அப்போது மேதகு என்ற படத்திற்கு ஆடிஷன் நடப்பதாகக் கேள்விப்பட்டு, எதாவது சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கலாம்னு நினைத்து எனது போட்டோவை அனுப்பி வைத்தேன். அதற்கு அப்புறம்தான் அது தலைவரோட (பிரபாகரனோட) வாழ்க்கை வரலாறு படம்னு தெரிஞ்சுது. முதலில் போட்டோ சரியாக இல்லைனு என்னை தேர்வு செய்யவில்லை.

அதன் பிறகு, மேதகு படக்குழுவில் வேலை செய்த எனது நண்பர் அசாருதீன் மூலம் மீண்டும் எனது புகைப்படம் இயக்குநருக்குக் காட்டப்பட்டது. இயக்குநர் என்னை நேரில் வரச் சொல்லிருந்தார். எனக்கு தாடி அதிகமாக இருந்ததால், இயக்குநர் என்னை அழகு நிலையத்திற்கு அனுப்பி மீசை தாடியை ஷேவ் பண்ணிட்டு விடியோ கால் பண்ண சொன்னாரு. விடியோ காலில் என்னை பாத்துட்டு, தலைவர கூட்டிட்டு வாங்கன்னு சொன்னாரு. அதுல இருந்துதான் படத்துல நடிக்க தொடங்கினேன்.

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனா நடிக்க சொன்னபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

தலைவர கூட்டிட்டு வாங்கனு இயக்குநர் சொன்னதுல இருந்தே பயம் எனக்குள்ள இருந்தது. அந்த பயத்த ஆரோக்கியமான பயமாதான் கருதுகிறேன்.

அது எப்படிபட்ட பயம்னா ஒரு மாபெரும் போராளி, மாசற்ற ஒருவர், ஒரு மாபெரும் தலைவர், அவரோட கதாபாத்திரத்துல நடிச்சுருக்க நான், என்னோட சுய வாழ்வு மூலம் அவரோட பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட கூடாதுனு பயம் இருக்கு. ரொம்ப சரியானவனாதான் அந்த வாழ்வை வாழ்ந்துட்டு இருக்கேன், இன்னும் சரியானவனா இருக்கனும். அதுதான் அந்த பயத்திற்கான காரணம்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனா நடிக்கத் தேர்வான பிறகு, எது மாதிரியான பயிற்சி, ஒத்திகை மேற்கொண்டீர்கள்?

படம் ஆரம்பிக்க இரண்டு மாதத்திற்கு முன்னாடியே இயக்குநர் என்னை வரச் சொல்லிட்டாரு. காலை 2 மணிநேரம் ஜிம், அப்புறம் டயலாக், மொழிப் பயிற்சினு 24 மணி நேரத்தில அரைமணி நேரம் மட்டுமே ரெஸ்ட் இருந்துச்சு, அந்த அளவிற்கு 2 மாதங்கள் கடின உழைப்பு இருந்துச்சு. இவ்வளவு தூரம் வெற்றி அடைஞ்சுருக்குனா அது இயக்குநரோட அதிக தாக்கங்கள் என் மீது திணிக்கப்பட்டிருக்கு.

பிரபாகரனின் உடல்மொழியை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டீர்கள்? அவரைப் பார்த்தவர்கள் யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?

இதற்கு முழுக் காரணம் இயக்குநர்தான். இதற்கான முழு தகவல்களைத் திரட்டி, கொஞ்சம் அதிகமா சிரிச்சா, நடிச்சாகூட இப்படி இருக்காது, இவ்வளவுதான் இருக்கனும்னு பழக்கப்படுத்துனாரு. அதன் பிறகு என்னால் முடிந்த முயற்சிகளாக, தலைவரோட புகைப்படம், விடியோ பார்த்து அவர் இப்படிதான் பார்க்குறாரு, சிரிக்குறாரு, நிற்கிறாரு, நடப்பாருனு என்னால் முடிந்த அளவு உள்வாங்கிகிட்டேன்.

படம் வெளியாவதற்கு முன்பு, வெளியான பிறகு உங்கள் குடும்பத்தினரின் மனநிலை எப்படியிருந்தது?

படம் வருவதற்கு முன்பே, 2014 இல் இருந்து தலைவரை நேசிக்கிறேன். அதனால நான் தலைவரை நேசிக்கிறது, தலைவர் மீது எனக்குள்ள பற்று பத்தி நல்லாவே தெரியும். படத்துக்கு அப்புறம் என் அம்மா, அப்பா சொன்ன முதல் வார்த்தை, நீ மிகப் பெரிய தலைவரோட கதாபாத்திரத்துல நடிச்சுருக்க, சரியா நடிச்சுருக்கனு மக்கள் உன்னை கொண்டாடுறப்ப, எந்த இடத்துலயும் அவருக்கான பெயரை கெடுத்துறாம நடந்துக்கனும்னு சொன்னாங்க.

பிரபாகரன் கதாபாத்திரத்துல என்ன கத்துக்கிட்டீங்க? அல்லது இயக்குநர் சொன்னதை அப்படியே செய்தீர்களா?

கண்டிப்பா இயக்குநருக்குதான் அந்த பங்கு சேரும். சில விஷயங்களில், என்னால் எதுவும் தவறு நடந்துர கூடாதுனு, தலைவர் புகைப்படத்த பார்த்து, நின்று பாக்குறது, நடந்து பார்க்குறது, கண்ணாடி முன்னாடி நின்னு பேசி பார்க்குறது, அது மாதிரியான விஷயங்கள நானா செய்து பார்த்தேன்.

மேதகு படம் நடிக்கும்போது இருந்த மனநிலை, நடித்த பிறகு இருந்த மனநிலை?

ஆரோக்கியமான பயம் இருந்தது. தலைவர் கதாபாத்திரத்த சரியா செஞ்சுட்டோம், இதுக்கு அப்புறம் வாழ்நாள் பயணம் சரியானதாக அமைய வேண்டும்னு பயம் இருக்கு.

இயக்கத் தலைவரா? போராளியா நடிச்ச அனுபவம்?

அவரோட கதாபாத்திரத்த உள் வாங்கிட்டு நடிச்சேனே தவிர, தலைவரா என்னை நினைத்தது கிடையாது, அது சரியானதாகவும் இருக்காது.

மேதகு படம் வெளியான பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்க புதிய வாய்ப்புகள் வந்ததா?

அதுக்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டு இருக்கு. தமிழ் சார்ந்து, மண் சார்ந்து எனது படங்கள் இருக்கும். கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.

இலங்கைத் தமிழைப் பேசி நடிக்க சிரமங்கள் இருந்தனவா?

அப்படியெல்லாம் இல்ல. இலங்கை தமிழ்னு சொல்லுறதைவிட அது ஒரு ஸ்லேங்னுதான் சொல்லுவேன். மதுரை, திருநெல்வேலி ஸ்லேங் மாதிரிதான் இலங்கைத் தமிழ். இலங்கைத் தமிழ் மீது முன்னாடியே காதல் இருந்தது. அதுனால சுலபமா இரண்டு நாளுல கத்துக்க முடிஞ்சுது.

மேதகு திரைப்படம் மிகத் தீவிரமான அரசியல் களம் கொண்ட படம். முதல் திரைப்படமே முக்கியமான ஒன்றாக அமைந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இதை அரசியலுக்கு அப்பாற்பட்டு உணர்வுரீதியான படமாகவே நான் கருதுகிறேன். இது நான் நேசித்த தலைவரோட திரைப்படம் அவ்வளவுதான். நான் யோசித்தேன். நான் நேசித்த தலைவர என்னால முடிஞ்ச அளவு திரைல கொண்டுவர முயற்சித்தேன்.</p>

படத்துல நடிக்குறக்கு முன்னாடி குட்டிமணியோட செயல்பாடு?

நான் சின்ன வயதுல இருந்தே சினிமா மீது காதல். இயக்குநர் பாரதி இயக்கத்துல சின்ன சின்ன குறும்படம் பண்ணுனேன்.

அவர்தான் சினிமா மீதான காதலை எனக்கு கொண்டு வந்தாரு. நான் தாயின் கருவறைனு ஒரு அறக்கட்டளை வைத்து அதுல 37 ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைச்சுட்டு இருக்கேன்.

8 வருசமா இதை பண்ணிட்டு இருக்கேன். அதற்காக சிறந்த சமூக சேவகர்னு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மேதகு திரைப்படம் வெளியாகியது. ஓடிடி தளத்திலும்கூட திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது… பெரும் போராட்டத்திற்கு மத்தியில் படம் வெளியானாலும் நீங்கள் எதிர்பார்த்து நடைபெறாமல் போன விஷயம் ஏதாவது உள்ளதா?

படம் ஆரம்பிப்பதுக்கு முன்னாடி இருந்தே சிக்கல்கள் இருந்தன. படத்தோட ஷூட்டிங் லொகேஷன் செட் பண்ணி, 10 மணிக்கு ஷூட்டிங் போறப்ப 9.30 மணிக்கு வந்து ஷூட்டிங் எடுக்கக் கூடாதுனு சொல்லுவாங்க.

இது மாதிரி படம் எடுக்க அனுமதி தரமாட்டோம்னு சொல்லுவாங்க. உடனே உடனே லொகேஷன் மாத்திட்டே இருப்போம்.

பல ஓடிடி தளங்கள்ல கேட்டுருக்கோம், அவங்க, பெயரைக் காட்ட கூடாது, அரசு கொடிய காட்டக் கூடாதுனு சொல்லுவாங்க. சமரசமே ஆகாத தலைவர பற்றிப் படம் எடுக்கறப்ப சமரசமே ஆகக் கூடாதுனு சமரசம் பண்ணிக்கல.

இந்த இடத்துல பிஎஸ் வேல்யு டீம்க்குதான் நன்றி சொல்லனும். அவங்கதான் எந்த எதிர்ப்பும் இல்லாம ரிலீஸ் பண்ணி மக்களிடம் கொண்டு போயிருக்காங்க.

மேதகுவுக்கு வந்த மறக்க முடியாத பாராட்டு… வித்தியாசமான பாராட்டு..

நெறைய விதமான பாராட்டு வந்தது. அதுல பலர், இது உங்களுக்கு கிடைத்த வரம்னு சொல்லிருக்காங்க.

அதைவிட சந்தோஷம் எதுவும் இல்ல. நான் நேசித்த இயக்குநர் வெற்றிமாறன். தம்பி நல்லா நடிச்சுருக்கானு அவர் சொன்னது பெருசா இருந்தது.

யாருனே தெரியாதவர்களிடமிருந்து வந்த பாராட்டு?

பாராட்ட தாண்டி நெறைய பேர தலைவர பத்தி படிக்க வைச்சுருக்கு. தலைவர பத்தித் தெரியாதவங்க, தெரிஞ்சுக்க விருப்பமில்லாதவங்க இருந்தாங்க. இப்போ தலைவர பற்றிய தேடல் உருவாகி இருக்கு. அதைத்தான் பாராட்டா எடுத்துக்குறேன்.

ஈழப் பிரச்னை தொடர்பாக சமீப காலத்தில் வெளியான சர்ச்சைக்குரிய சில திரைப்படங்களைப் பார்த்தீர்களா? என்ன தோன்றியது?

அவங்களுக்கு வலி புரியாது. வர்த்தக ரீதி போதும்னுதான் படத்த பண்றாங்க. அது கவலையை உண்டாக்குகிறது. அவங்க வலிய காட்டலனாகூட பரவாயில்லை. தவறா காட்டாதீங்க. அதுதான் என் கோரிக்கை.

திரைப்படத்தின் இயக்குநர் கிட்டு பற்றி…

என் அப்பா, அம்மா இந்த உலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்துனாங்களோ, அதைவிட பிரம்மாண்ட அறிமுகத்த இயக்குநர் கிட்டு குடுத்துருக்காரு. அவர என் தாய் தந்தைக்கு நிகரா நினைக்குறேன்.

இயக்குநரின் ஆசை நிறைவேறிய திருப்தி இருக்கா?

அந்த கேள்விய அவரைத்தான் கேட்கனும், திருப்தி அடைந்திருப்பாருனு நம்புறேன்.

மேதகு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வருகின்றனவா… நீங்கள் தயாராகிறீர்களா?

மேதகு என்ற காவியம் வரக் காரணமே தமிழீழத் திரைக்களம்தான். அவங்க தான் இந்த படைப்பு உருவானதற்கு உந்துசக்தியா இருந்தவங்க.

தமிழீழத் திரைக்களத்திற்கு உலக தமிழர்கள் ஆதரவு தெரிவித்ததால்தான் இப்படி ஒரு படைப்பே வந்தது.

அவங்கதான் அதை அறிவிப்பாங்க. கண்டிப்பா அடுத்த பாகம் இருக்கும்னு நான் நம்புறேன், நீங்களும் நம்புங்க. இரண்டாவது பாகத்துலயும் நடிக்கிற பாக்கியம் எனக்கே கிடைக்கனும்னு தலைவர வேண்டிக்கிறேன். அவங்கதான் அதையும் அறிவிப்பாங்க.

இந்தத் திரைப்படத்துக்காகத்தான் தங்கள் பெயரைக் குட்டிமணி என மாற்றிக் கொண்டீர்களாமே?

சினிமாக்காக வச்சுகல. எனது இயற்பெயர் மணிகண்டன். 2014-ல நான் படித்த புத்தகம் மூலமாக போராளியோட தாக்கம் எனக்குள்ள ஏற்பட்டதனால என் பெயர் குட்டிமணினு வைக்கப்பட்டது. படத்துக்காக வைக்கப்பட்டது இல்லை. குட்டிமணிங்குற பெயரை எனது அண்ணன் புலேந்திரன் முருகானந்தம்தான் வைத்தாரு.

அரசியல் தளம் உங்களுக்கு எப்படி இருக்கு?

அரசியல தாண்டி மக்களுக்கான போராட்ட வடிவமாதான் என்னை அடையாளப்படுத்தியிருக்கேன். மண் சார்ந்து, மக்கள் சார்ந்த விஷயங்களுக்கு 2014 முதல் நிறைய போராட்டத்துல நான் கலந்துருக்கேன்

உங்களது அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும்?

சினிமா சார்ந்து இருக்கும். பாதையும், இலக்கும் ஒன்றுதான். ஆனால் வடிவம் மட்டுமே மாறும். சினிமா சார்ந்து மக்களுக்கு என்னால என்ன பண்ண முடியுமோ அதை சினிமாவில் காண்பீர்கள்.

Exit mobile version