பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோனின் மனைவி கர்ப்பமாக இருப்பது போல் சார்லி ஹெப்டோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ள விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக 39 வயதான இம்மானுவேல் மக்ரோன் சில தினங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டார்.
மக்ரோன் பாடசாலையில் பயின்றபோது இவருடைய ஆசிரியையான பிரிஜ்ஜிட் (64) என்பவர் மீது காதல் கொண்டார். இவர்களின் காதல் நிறைவேறியதை தொடர்ந்து கடந்த 2009- ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
மக்ரோனை விட அவரது மனைவி 24 வயது மூத்தவராக இருந்ததால் இவ்விவகாரம் தொடர்ச்சியாக பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.
இது குறித்து மக்ரோன் பதிலளித்தபோது, ‘என் மனைவியை விட நான் 24 வயது மூத்தவராக இருந்தால் இந்த உலகம் கேள்வி எழுப்பாது.
ஆனால், என் மனைவி என்னை விட 24 வயது மூத்தவராக இருப்பதால் பத்திரிகைகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இவற்றை பெண்களுக்கு எதிரான வன்கொடுமையாகவே நான் பார்க்கிறேன்’ என பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மிகவும் பிரபலமான சார்லி ஹெப்டோ பத்திரிகை சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மக்ரோனின் மனைவி கர்ப்பமாக இருப்பது போலவும், அவரது வயிற்றை மக்ரோன் தொட்டுக்கொண்டு இருப்பது போலவும் புகைப்படம் வெளியிட்டுள்ளது.
மேலும், 21-ஆம் நூற்றாண்டில் பல அற்புதமான சாதனைகளை செய்ய உள்ளதாக மக்ரோன் சபதம் எடுத்துள்ளார். ஒருவேளை, வயதான அவருடைய மனைவி கர்ப்பம் அடைந்தால் அதுவும் ஒரு அற்புதமான சாதனையாக இருக்கும்’ என கிண்டலாக செய்தி வெளியிட்டுள்ளது.