ilakkiyainfo

புதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது?- நிலாந்தன் (கட்டுரை)

புதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது?-  நிலாந்தன்  (கட்டுரை)
February 05
23:13 2018

புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

புதுக்குடியிருப்பில் ஒரு சுயேட்சைக் குழு வண்டில் சின்னத்தில் போட்டியிடுகிறது. இக்குழுவானது கூட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

எதிரணியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாலாங்கட்ட ஈழப் போர்க் காலத்தில் போர்ச் சூழலுக்குள் வளர்ந்த இளவயதினரே இதில் அதிகமாக உண்டு.

அதே சமயம் ஊர்ப் பெரியார்களுமுண்டு. ஒவ்வொரு வட்டாரத்திலும் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதனை அப்பகுதி மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்டே இக்குழு முடிவெடுத்திருக்கிறது.

நல்லூர் பிரதேச சபையில் போட்டியிடும்  ஐங்கரநேசனின் சுயேட்சைக் குழுவைப் போல கிளிநொச்சியில் போட்டியிடும் சந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவைப் போல காரைநகரில், வல்வெட்டித்துறையில் பேட்டியிடும் சுயேட்சைக் குழுக்களைப் போல புதுக்குடியிருப்பில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவும் ஒரு சவாலாக மேலெழுவதை அப்பகுதி வாசிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தனது ஏக போகத்திற்கு சவாலாக ஒரு சுயேட்சைக்குழு கிளம்பியிருக்கும் ஒரு பிரதேசத்தில் அதிக தொகைச் சனங்களைத் திரட்டி மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்துவது என்று கூட்டமைப்பு முடிவெடுத்திருக்கலாம். அதோடு கடைசி யுத்தம் நிகழ்ந்த ஒரு நிலப்பரப்பில் தனது பலம் எதுவென்பதை நிரூபித்துக் காட்ட அவர்கள் முற்பட்டிருக்கலாம்.

துணுக்காய், பாண்டியன்குளம், ஒட்டிசுட்டான், கரைதுறைப்பற்று ஆகிய நான்கு பிரதேச சபைகளை உள்ளடக்கிய பரந்த நிலப்பரப்பிலிருந்து சேர்க்கப்பட்ட பொதுமக்கள் சுமார் முப்பது பேருந்துகளில் இக்கூட்டத்திற்கென்று அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.

TNA-meeting-PTK-2-1024x576

மொத்தம் சுமார் 90 வாக்காளர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும், ஆதரவாளர்களும் இதிலடங்கும். கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு பேர் வரை அந்த மைதானத்தில் திரண்டதாகக் கணிக்கப்படுகிறது.

இத்தொகையானது முன்னைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் மிகக்குறைவானதேயென்று சுட்டிக்காட்டப்படுகிறது. இதற்கு முன்னைய தேர்தல்களில் இது போன்று ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்கள் யாவும் மாலதி கலையரங்கில் தான் நடாத்தப்படுவதுண்டு.

அக்கூட்டங்களில் சுமாராக ஆறாயிரம் பேர் வரையில் பங்குபற்றிய கூட்டங்களும் உண்டாம். ஆனால் இம்முறை அதைவிடக் குறைந்தளவு சனத்தொகையை எதிர்பார்த்து மாலதி கலையரங்கைவிட சிறிய சுனாமி நினைவு வாளகத்தை கூட்டமைப்பினர் தெரிவு செய்திருப்பதாகக் கருதப்படுகிறது.

எனினும் அதுவரையிலும் நடந்த ஏனைய எல்லாக் கட்சிகளுடையதும் பெருவெளிக் கூட்டங்களோடு ஒப்பிடுகையில் அதிலும் குறிப்பாக வீரசிங்கம் மண்டபத்தில்  தமிழ் மக்கள் பேரவைக்குச் சேர்ந்த சுமார் 700 பேர்களோடும் ஒப்பிடுகையில் அதிக தொகையினர் பங்கு பற்றிய ஒரு கூட்டமாக அது காணப்படுகிறது. அதே சமயம் அதிகம் சர்ச்சைக்குரிய ஒரு கூட்டமாகவும் அதுவே காணப்படுகிறது.

அதற்கு முன்னரும், பின்னரும் நடந்த அது போன்ற கூட்டங்கள் எதிலும் மைதானத்தின் வாசலில் வைத்து பொலிசார் மக்களை கைகளைத் தூக்கியபடி நிற்கவைத்து சோதனை செய்யவில்லை.

அது இறுதிக்கட்ட யுத்தம் நடந்த பகுதி என்பதினால் அங்கிருந்து வன்முறை கலந்த எதிர்ப்பு ஏதும் வரக்கூடும் என்று எதிர்பார்த்து அப்படியொரு சோதனை செய்யப்பட்டதா?

கடைசி யுத்தம் நிகழ்ந்த ஒரு நிலத்துண்டில் ஆகப்பெரிய ஆதரவுக் கூட்டமொன்றை திரட்டிக்காட்ட வேண்டும் என்று சிந்தித்த கூட்டமைப்பினர் அப் பிரதேச மக்களை அவமதித்துமிருக்கிறார்கள்.

பலத்தைக் காட்டுவதற்கு கடைசி யுத்தம் நிகழ்ந்த ஒரு நிலத்துண்டு தேவை. அதே சமயம் பாதுகாப்பு என்று வரும்பொழுது அந்த மக்களை அவமானகரமான விதத்தில் சோதனை செய்யவும் வேண்டும்.

தனது வாக்காளர்களை அல்லது ஆதரவாளர்களை அல்லது பார்வையாளர்களை பொலிசாரை வைத்து சோதனை செய்தமை என்பது அவர்களைக் கூட்டமைப்பு நம்பவில்லை என்பதைக் காட்டுகிறதா?

அல்லது கூட்டமைப்பினர் அதிகம் பயப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறதா? யாரிடமிருந்து யாரைப் பாதுகாப்பதற்காக யாரைச் சோதனை செய்வது?

ஆனால் இது விடயத்தில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் மத்தியில் ஏதும் குற்ற உணர்ச்சியோ அல்லது தயக்கமோ இருப்பதாகத் தெரியவில்லை.

சுமந்திரனை தமது பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைக்கும் எல்லாக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களும் அவரோடு கூட வரும் அதிரடிப்படையின் பிரசன்னத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றே பொருள்.

வவுனியாவில் கூட்டமைப்பினர் தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது அரங்கிற்கு நேரே முன்னால் துப்பாக்கியை ஏந்தியபடி ஓர் அதிரப்படைச் சிப்பாய் விறைப்பாக நிற்கும் காட்சி இப்பொழுது இணையப்பரப்பில் அதிகம் பகிரப்படுகிறது.

இது கூடப் பறவாயில்லை. முகநூலில் அதை நியாயப்படுத்தும் விதத்தில் குறிப்புக்கள் பிரசுரிக்கப்படுகின்றன. புலிகள் இயக்கத்தின் பிரமுகர்களும் மெய்க்காவலர்களோடு வலம் வந்தார்கள் என்பதனை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் அதிரடிப்படையும் புலிகள் இயக்க மெய்க்காவலர்களும் ஒன்றல்ல. அதிரடிப்படை எனப்படுவது ஓர் இனப்படுகொலையின் கருவி.

குறிப்பாகக் கிழக்கில் சிந்தப்பட்ட பெருமளவு குருதி அவர்களுடைய கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் புலிகள் இயக்க மெய்க்காவலர்கள் எனப்படுவோர் இனப்படுகொலைக்கு எதிரான கவசமாக மேலெழுந்த ஓர் ஆயுதப் போராட்டத்தைச் சேர்ந்த போராளிகளாகும். எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது.

sumanthiran-STF

சுமந்திரனுக்கு ஏன் அவருடைய சொந்த மக்களிடமிருந்தே பாதுகாப்புத் தேவைப்பட்டது? என்பதற்கும் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் ஏன் அவருக்கு பாதுகாப்புத் தேவைப்படுகிறது? என்பதற்கும் ஏனைய கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுக்கு குறிப்பாக சம்பந்தருக்கோ, விக்னேஸ்வரனுக்கோ ஏன் அது தேவைப்படவில்லை? என்பதற்கும் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அதே சமயம் புதுக்குடியிருப்புக் கூட்டம் தொடர்பில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் மத்தியில் ஏதும் குற்ற உணர்ச்சியோ அல்லது தயக்கமோ உறுத்தலோ இருக்காது என்பதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம்.

1. ஏற்கெனவே சம்பந்தர் கடந்த ஆண்டு ஜனாதிபதி கலந்து கொண்ட ஒரு விழாவில் (அது தீபாவளி விழாவாக இருக்க வேண்டும்) விருந்தினராகச் சென்ற போது ஜனாதிபதியின் பாதுகாப்புக் பிரிவினரால் சோதனையிடப்பட்டார்.

அது அப்பொழுது அவருக்கு வெட்கமாக இருக்கவில்லை. அது தொடர்பாகவும் அவருடைய ஆதரவாளர்கள் ஒரு விளக்கத்தைக் கூறக் கூடும்.

புலிகள் இயக்கத்தின் தலைவரைச் சந்திக்கப் போகும் போராளிகளும் சோதிக்கப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுவதுண்டு. அவர் கலந்து கொள்ளும் வைபவங்களில் கலந்து கொள்ளும் பலரும் சோதிக்கப்பட்டே உள்ளே விடப்படுவதுண்டு என்ற முன்னுதாரணத்தை அவர்கள் சுட்டிக்காட்டக் கூடும்.

2. சுமந்திரன் அதிரடிப்படையினர் சூழ வலம் வருவதை ஏற்றுக்கொள்ளலாம் என்றால் இது ஒரு பிரச்சினையில்லை.

3. கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் பலரும் தமது மெய்க்காவலர்களாக பொலிஸ்காரர்களை வைத்திருக்கிறார்கள். மாவை, சம்பந்தர் போன்றோர் மட்டுமல்ல விக்னேஸ்வரன், அனந்தி, சிறீதரன் போன்றோரும் இதற்கு விதிவிலக்கில்லை.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் தனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு தளர்த்தப்பட்டது தொடர்பில் பொலிஸ் உயர் மட்டத்திடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தமையை இங்கு சுட்டிக்காட்டலாம்.

இவ்வாறு இலங்கை அரச படைகளின் ஒரு பிரிவான பொலிசாரின் பாதுகாப்பை கோரிப் பெறலாம் என்றால் அதே பொலிசார் தேர்தல் கூட்டத்திற்கு வருபவர்களை வாசலில் வைத்து சோதனை செய்வதை கூட்டமைப்பு பிரமுகர்கள் ஒரு விவகாரமாகக் கருதமாட்டார்கள்தான்.

TNA-meeting-PTK-1024x576

இப்படியாக தமது வாக்காளர்களை பிரச்சாரக் கூட்டங்களுக்கு சோதித்து உள்ளே விடும் ஒரு நிலைக்கு தமிழ் அரசியல் தாழ்ந்து போய் விட்டது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலமை இதுதான். அரசியல்வாதிகள் இது தொடர்பில் வெட்கப்படாமல் இருக்கலாம். ஆனால் வாக்காளர்கள்?

இறுதிக்கட்டப் போரின் போது குண்டுகளால் பிளக்கப்பட்ட ஒரு நகரம் புதுக்குடியிருப்பு. இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் அதன் சாலைகள் வழியாகத்தான் நெரிந்து நெரிந்து நகர்ந்தார்கள்.

போரின் இறுதி நாட்களில் மாத்தளன், பொக்கனை, முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களிலிருந்து தப்பிச்சென்று படையினரைச் சரணடைந்த பொழுது அவர்கள் கைகளைத் தூக்கியபடிதான் சென்றார்கள்.

சில சமயங்களில் அவர்கள் தமது ஆடைகளை களையவும் நேரிட்டது. எட்டாண்டுகளின் பின் அதையொத்த ஓர் அனுபவம்-கைகளைத் தூக்கியபடி பிரச்சாரக் கூட்டத்திற்குள் நுழைவது-அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? இது தொடர்பில் அவர்களுக்கு மானப்பிரச்சினை ஏதுமில்லையா? தாம் சோதனையிடட்படப் போவது கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு முன்கூட்டியே தெரியாது என்று கூறப்படுகிறது.

ஆயின் சோதிக்கப்படும் போதாவது அதற்கு அவர்கள் ஏன் எதிப்புக் காட்டவில்லை? அவர்களுடைய சுய மரியாதை எங்கே போனது? கைகளை தூக்கியபடி தம்மைச் சோதிக்கக் கொடுப்பதே தமது தலை விதி என்று நினைக்கிறார்களா?

இது பற்றி தமது தலைவர்களிடம் குறிப்பாக தம்மை கூட்டத்துக்கு அழைத்து வந்த தலைவர்களிடம் தமது எதிர்ப்பைக் காட்டினார்களா?இப்படியொரு சோதனைக்குப் பின்னரும் அவர்கள் கூட்டமைப்புக்குத்தான் வாக்களிப்பார்களா?

ஆம் அவர்கள் வாக்களிப்பார்கள் என்று தான் கூட்டமைப்பினர் நம்புகிறார்கள். இது ஒரு விவகாரமாக அகிய பின்னரும் தலைவர்கள் அதற்காக குறைந்தபட்சம் மன்னிப்புக்கூடக் கேட்கவில்லை.

இவ்வளவிற்குப் பிறகும் அந்த மக்கள் வீட்டிற்கே வாக்களிப்பார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.அப்படி நம்பத்தக்க விதத்தில்தான் கடந்த சுமார் எட்டாண்டு கால தேர்தல் முடிவுகள் அமைத்திருக்கின்றன.

இம்முறையும் தேர்தல் முடிவுகள் அவ்வாறு அமையுமாக இருந்தால் அது கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியலுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையாக மட்டுமிருக்காது அதோடு தம்மை கைகளை உயரத்தூக்கியபடி நிற்க வைத்துச் சோதிக்கும் ஒர் அரசியலுக்கு அவர்களாக வழங்கிய ஓர் அங்கீகாரமாகவும் அது கருதப்படும்.

-நிலாந்தன்-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com