யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதிக்காக நீர் விநியோகக் குழாயில் குடிதண்ணீர் எடுப்பதில் இரு குடும்பங்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை நீடித்ததால், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இரு தரப்பினரும் இணக்கத்துக்கு வராததால், கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இரு குடும்பங்கள் சார்பில் 6 பெண்கள், இரு ஆண்கள் உட்பட 8 பேரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தினர்.

இரு தரப்பினரும் மோதிக்கொண்டால், இந்த விடயம் பாரதூர விளைவை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், அவர்களை இணக்கத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

நீதிவானின் அறிவுறுத்தலை ஏற்ற அவர்கள் இணக்கத்துக்குச் சென்றனர். அதனால் இரு தரப்பையும் சேர்ந்த 8 பேருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கி விடுவித்தது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த குடும்பங்கள் ஒன்றின் குடும்பத்தலைவர் ஒருவருக்கு எதிராக பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

குடிதண்ணீர் எடுப்பதில் நீடித்த முரண்பாட்டின் போது, அயலில் வசிக்கும்  பெண் ஒருவருக்கு சந்தேகநபர் தனது ஆடையைக் களைந்து தனது அந்தரங்க உறுப்பைக் காண்பித்து பாலியல் ரீதியான தொல்லையைக் கொடுத்தார் என்று பொலிஸார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை வரும் 16ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.