வாசோவா: போலந்தில் 8 கால் சிலந்தி வேடத்தில் நடமாடிய நாயை பார்த்து மக்கள் அலறி ஓடினர். போலந்து நாட்டை சேர்ந்த நகைச்சுவை நடிகர் சில்வஸ்டர் வார்டேகா. இவர் அப்பகுதியில் வினோதமாக ஏதாவது செய்து காமெடி செய்வது வழக்கம்.
சில்வஸ்டர், சிகா என்னும் செல்ல நாயை வளர்த்து வருகிறார். இந்த நாயை வைத்து சற்று வித்தியாசமாக காமெடி செய்ய நினைத்தார். தனது நாய்க்கு எட்டு கால் சிலந்தி உடை தைத்து அணிவித்தார். நாய், பார்ப்பதற்கு பிரமாண்ட சிலந்தி போல தெரிந்தது.
அந்த நாயுடன் நள்ளிரவில் தெருவில் நடந்து சென்றார். தனியாக நடந்து வருபவர்களை நோக்கி தனது நாயை ஓட விட்டார். ஏதோ ராட்சத சிலந்தி ஓடி வருவதாக நினைத்து மக்கள் அலறியடித்து ஓடினர்.
மேலும், ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் சுரங்கப் பாதையில், சிலந்தி வலையில் மனித உறுப்புகள் தொங்குவது போல செட்டப் செய்தார். அதை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைந்து நிற்கும் நேரத்தில் தனது சிலந்தி நாயை அவர்களை நோக்கி ஓட வைத்தார்.
நாயை பார்த்து மக்கள் மிரண்டு ஓடினர். நகரில் தனியாக நடந்து செல்லும் பெண்களையும் தனது சிலந்தி நாயால் மிரண்டு ஓட வைத்தார். மக்களை மிரள வைத்த இந்த காட்சிகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்து பல்வேறு இணைய தளங்களில் சில்வஸ்டர் வெளியிட்டுள்ளார்.
யூ- டியூப்பில் சிலந்தி நாயின் சேட்டைகளை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். பேஸ் புக்கிலும் பலர் சிலந்தி நாய்க்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.