Site icon ilakkiyainfo

மத்திய சென்னையைக் கலக்கும் ‘தயாநிதி 323’! வெட்டி விளையாடும் அளவுக்கு குட்டி, சுட்டியா?

மத்திய சென்னை தொகுதியில் 323 என்ற எண் இப்போது அனைவருக்கும் பரிச்சயம். அதென்னங்க 323?

போதைப் பாக்குக்கு 320ன்னு சொல்வாங்க, போலீஸ்காரங்க, வக்கீல்கள் 320னு (ஐ.பி.சி. 320) சொல்வாங்க. ஆனால், 323 என்றால் என்னன்னு மத்திய சென்னை தொகுதியைத் தவிர தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் உள்ள மக்களுக்கு அவ்வளாக தெரிய நியாயமில்லை!

323 பற்றி தெரிஞ்சக்கணுமா? அதற்காக நீங்க மத்திய சென்னை தொகுதிக்கு போய் தெரிந்து கொள்ளலாம். அல்லது, கீழே சொல்லப்போகும் விஷயத்தை படித்தாலே புரிந்து கொள்ளலாம்.

தி.மு.க.வில் கருணாநிதிக்குப் பின் அடுத்த தலைமைக்கு யார் பொருத்தமானவர்கள் என்பது தொடர்பாக மாறன் சகோதரர்களின் நாளிதழில் வந்த கருத்துக்கணிப்பால் கருணாநிதி குடும்பத்துக்கும், மாறன் குடும்பத்துக்கும் பெரும் பிரச்னை உருவானது. இதனால், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதற்குப் பின் அந்தத் துறைக்கு மாற்றப்பட்ட ஆ. ராசா 2-ஜி ஊழலில் வகையாக மாட்டிக்கொண்டார்.

இதனால்தான், 2-ஜி ஊழலை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்ததில் மாறன் சகோதரர்களின் மீடியா முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டது.

அதற்குப் பின் இரு குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சமாதானத்தால் கருணாநிதிக்கு இதயம் இனித்தது, கண்கள் பனித்தன. இதில் தயாநிதி மாறனுக்கு இரண்டு கண்களும் பனித்ததோ இல்லையோ, இதயம் நல்லாவே இனித்தது.

2-ஜி வழக்கில் ராஜாவும், கனிமொழியும் மாட்டிக்கொண்டதில் ஏக சந்தோஷமாக இருந்தார் அவர்.

இந்த நிலையில்தான் தயாநிதி மாறனுக்கு இனித்த இதயம், ‘டக் டக்’னு அடிக்கத் தொடங்கியது. அங்குதான் வருகிறது, 323!

தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது தனது வீட்டுக்கு 323 தொலைபேசி இணைப்புகளைக் கொடுத்திருந்தார். ஏதோ அஞ்சோ, பத்தோன்னா பரவாயில்லை… 323ன் லைன். அதுவும் உயர் சக்தி கொண்ட, மிகவும் வேகமாக இயங்கக்கூடிய லைன்கள்.

சரி இந்த 323 லைன்களை தயாநிமி மாறனின் வீட்டில் பயன்படுத்தினார்களா? அதுதாங்க இல்லை.

இந்த 323 லைன்களும் தயாநிதி மாறனின் வீட்டில் இருந்து கலாநிதி மாறனின் சொந்த நிறுவனமான சன் நெட்வொர்க் நிறுவனத்துக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து தங்கள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்த 323 இணைப்புகளையும் ஒளிபரப்புக்குப் பயன்படுத்தினார்கள்.

இதனால், பில் எக்கச்சக்கமா வந்திருக்குமேன்னு நினைக்கலாம். அதுதாங்க இல்ல. இந்த 323 லைன்களும், ‘யாருக்கும் தெரியாமல்’ பயன்படுத்தப்பட்டன. இதற்குரிய பல கோடி ரூபாய் பில் தொகை, காந்தி கணக்குதான்.

இதற்கிடையே, மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி ஊழியர்களுக்கு வழங்கிய பல சலுகைகளில் நிறுவனம் கை வைத்தது.

இதனால், வெறுப்படைந்த தொழிற்சங்கங்கள் கூக்குரலிட்டன. இதில் சென்னையில் உள்ள ஒரு தொழிற்சங்கத்தின் தலைவர் மதிவாணன் 323 இணைப்பு ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

ஆனால், தயாநிதி மாறன் அமைச்சராக இருந்ததாலும், தன் கட்சிக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தியும் ஊழலை மறைக்கப் பார்த்தார். இதை பொதுநல அமைப்புகள் விடுவதாக இல்லை. சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி ஆதாரங்கள் அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு, நீதிமன்றத்தை நாடினார்.

நீதிமன்றத்தின் பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீண்ட….. விசாரணைக்குப் பின், “ஆமா… ஊழல் நடந்தது வாஸ்தவம்தான்” என கூறிய சி.பி.ஐ., மாறன் சகோதரர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது.

இந்த ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த தொழிற்சங்கத் தலைவர் மதிவாணன் ஜூன் 2013-ம் ஆண்டோடு பதவிலியிருந்து ஓய்வுபெற்றார். ஆனால், அவரது ஓய்வுக்காலப் பலன்களைக் கொடுக்காமல் உயர் அதிகாரிகள் வேண்டுமென்றே இழுத்தடித்தார்கள். காரணம் என்ன?

சரியான காரணம் எதுவும் கிடையாது! மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்ததால் மாறனின் காங்கிரஸ் கனெக்ஷன் மூலம், மதிவாணனை பழிவாங்க செய்யப்பட்ட ஏற்பாடு.

இந்த ஊழல் விவகாரம்தான் இப்போது மத்திய சென்னை முழுவதும், ‘தயாநிதி 323’ என்ற பெயரில் நாடகமாக நடந்துகொண்டிருக்கிறது.

நாட்டுப்புறக் கலைக்குழுவினர் மூலம் அ.தி.மு.க.வினர் இந்த நாடகத்தை வீதி தோறும் நடத்துகிறார்கள். இதனால், மத்திய சென்னையைப் பொறுத்தவரை மக்களிடம் 323 என்ற எண்ணைச் சொன்னாலே, “அட நம்ம தயாநிதி மாறன்தானே!” என்று அடையாளம் தெரிந்து கொள்கிறார்கள்.

அந்த அளவுக்கு அ.தி.மு.க.வின் வீதி நாடகம் மத்திய சென்னையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வின் இந்தப் பிரசாரத்தை முறியடிக்க நமது ‘உடன்பிறப்பு 323’… சாரி.. தயாநிதி மாறன் ஏதாவது அதிரடி திட்டம் வைத்திருப்பாரே!

விடுவாரா அவர்? ‘டிஜிட்டை டிஜிட்டால் வெட்டும்’ அதிரடி ஆட்டத்தில் இறங்கியுள்ளார் அவர். அதன் பெயர், ‘3டி தயாநிதி’

‘3டி தயாநிதி’ என்ற பெயரில் தயாநிதி மாறனுக்கு வாக்குக் கேட்டு வீடு வீடாக துண்டுப் பிரசுரங்களை தி.மு.க.வினர் விநியோகம் செய்து வருகின்றனர். அதில், ‘கலைஞர் வேண்டுகோள்’ என்ற தலைப்பில் கருணாநிதியின் கடித நகல் இடம்பெற்றுள்ளது.

அதில் என்ன எழுதியிருக்கிறார் கருணாநிதி?

“தயாநிதி மாறன், என் மடியில் விளையாடிய மான்குட்டி… அண்ணா தட்டிக் கொடுத்த புலிக்குட்டி… அயராது உழைக்கும் படு சுட்டி” என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

மான்குட்டி, புலிக்குட்டி ஆகுமா, பூனைக்குட்டியாக மியாவ் சொல்லுமா என்பது… மத்திய சென்னை வாக்காளர்கள் அ.தி.மு.க. மேடை நாடகத்தை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் தங்கியுள்ளது!

அ.தி.மு.க. வியூகத்தை நம்ம குட்டி, வெட்டி விளையாடும் அளவுக்கு சுட்டியா என்பதை எட்டி நின்று வேடிக்கை பார்க்கலாம்.

 

Exit mobile version