ilakkiyainfo

‘மயிர்’ என்றால் தமிழகத்தில் கெட்ட வார்த்தை!

‘மயிர்’ என்றால் தமிழகத்தில் கெட்ட வார்த்தை!
December 09
19:48 2016

 

செ​ன்னையின் ஒரு பிரபல கடையில் வாடிக்கையாளர்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தார்கள். ஒரு இலங்கைப் பெண்மணி விற்பனையாளரை நோக்கி, ‘‘அண்ணே, மயிர்மாட்டி இருக்கா?’’ என்று கேட்க ஏனைய பெண்கள் அதிர்ச்சி அடைந்து வினோதமாக அவரைப் பார்த்தார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது கெட்ட வார்த்தை!’

‘ஒரு வீட்டுக்கு விருந்தினராகச் சென்றிருந்த இலங்கைப் பெண் பாத்ரூமில் இருந்து தலைவாரியபடியே வெளியே வந்து இந்த மயிரை எங்கே போடுவது? என்று கேட்க, கூடியிருந்த பெண்கள் அங்கிருக்கப் பிடிக்காமல் சிதறி ஓடினர். ஏனெனில் அது கெட்ட வார்த்தையாம்!’

ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பமொன்று தமிழ்நாட்டுக்கு விடுமுறையைக் கழிப்பதற்குச் சென்றிருந்தது.

இஸ்லாமியர்களுக்கு மெக்கா, மெதீனா தரிசனம் எப்படியோ, அப்படித்தான் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலிருக்கும் அறுபடை வீடுகளும். கூடவே, மதுரை மீனாட்சி அம்மன் தரிசனமும், பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்களின் இஷ்ட தெய்வம் அம்மன். முருகன் அவர்களின் வீட்டுச் செல்லப்பிள்ளை.

உரிமையுடன் கேட்டுப் பெறுவது முருகனிடம்தான். தமிழ்நாட்டின் பிரபலமான அனைத்துக் கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு வந்தது அந்தக் குடும்பம்.

அப்புறம் என்ன, ஷொப்பிங்தான்! ஏறாத கடைகள் இல்லை. வாங்காத பொருட்களில்லை. ஒரு பிரபல பல்பொருள் அங்காடிக்குள் அவர்கள் சென்றார்கள். கூட்டம் கும்மியடித்தது.

நெருக்கியடித்த கூட்டத்தின் மத்தியிலிருந்து விற்பனையாளரை நோக்கி ஒரு குரல் எழுந்தது, ‘‘அண்ணே! மயிர்மாட்டி இருக்கா?’’ குரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமில்லை, ஐரோப்பாவிலிருந்து சென்ற இலங்கைப் பெண்மணிதான்.

திடீரென களேபரமாக, கலவரமாக இருந்த அந்த இடம், இராணுவத் தளபதியொன்றின் கட்டளையைக் கேட்ட சிப்பாய்கள் போல அமைதியானது.

அங்கிருந்த அனைவரின் பார்வையும் அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பியது. கேட்கவே கூடாத ஒரு அருவருப்பான சொல்லைக் கேட்டுவிட்டது போன்ற உணர்வுடன் அவர்கள் பார்வை இருந்தது.

இலங்கைப் பெண்மணிக்கு எதுவும் தெரியவில்லை அல்லது அந்தச் சூழ்நிலையின் மாற்றம் அவருக்கு அப்போதும் புரிந்திருக்கவில்லை. மீண்டும் ஒருமுறை உரத்த குரலில் கேட்டாள், ‘மயிர்மாட்டி இருக்கா?”

சில பெண்கள் தாங்கள் ஏதோ மரியாதை இல்லாத ஒரு இடத்தில் இருக்கிறோமென்று நினைத்து, மெல்ல அங்கிருந்து நகர்ந்தனர். ஏனையவர்கள் தங்களுக்குள் இந்தப் பெண்ணைப் பார்த்து ஏளனமாக சிரித்தபடி மெல்லிய குரலில் பேசத் தொடங்கினர்.

மொத்தத்தில் செவ்வாய்க்கிரகத்திலிருந்து வந்த ஏலியனொன்று அம்மணமாய்த் தங்கள் அருகே நிற்பது போன்ற உடல்மொழியை அனைவரும் காட்டினர்.

அப்போதுதான் சூழ்நிலையின் விபரீதம் புரிந்தது இல்ஙகைப் பெண்ணுக்கு. அங்கு குறிவைக்கப்படுவது தானென்று தெரிந்துகொண்டார். நிலைமையின் தீவிரத்தை விற்பனையாளர் தணிய வைத்தார். பேச்சை வேறு திசையில் மாற்றும் விதமாக,

‘‘நீங்கள் கேட்டது எங்களிடம் இல்லை. வேறு எதுவும் தேவையா?’’ என்று கேட்டபடி வேறுபக்கம் திரும்பிவிட்டார். இலங்கைப் பெண்மணி மெல்ல வெளியே வந்துவிட்டார்.

அன்றிரவு அவர்கள் தங்கியிருந்த சென்னை நண்பரின் வீட்டம்மா ‘மயிர்’ என்பது எவ்வளவு கெட்ட சொல் என்பதைப் புரிய வைத்தார். இதேபோன்ற சம்பவம் என் நண்பருக்கும் நடந்தபோதுதான் எனக்குக் கவலையாக இருந்தது.

ஜெர்மனியில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழரான எனது நண்பர் ஒருவர் மனைவியுடன் சென்னைக்குச் சென்றிருந்தார்.

தாம்பரத்தில் வசிக்கும் தமிழ்நாட்டு நண்பர் வீட்டில்தான் தங்கினார். அமோக விருந்துபசாரம். வீட்டிலிருந்த பெண்களும், சுற்றுமுள்ள பெண்களும் இலங்கைப் பெண்ணைச் சுற்றியிருந்து கவனித்தனர்.

அப்போது குளியலறைக்குச் சென்றுவந்த இலங்கைப் பெண்மணி, தலை வாரிவிட்டு வெளியேவந்து கூடியிருந்த பெண்களிடம், ‘‘இந்தத் தலைமயிரை எங்கே போடுவது?’’ என்று கேட்டார்.

கொஞ்சம் உரக்கவே கேட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து இருந்த ஹாலில் அமர்ந்திருந்த ஆண்களுக்கும் அது கேட்டிருக்கலாம்.

அவ்வளவுதான், அங்கிருந்த அனைத்துப் பெண்களும் சிதறி ஓடினர். இலங்கைப் பெண்ணையும், வீட்டுப் பெண்ணையும் தவிர யாரும் இருக்கவில்லை.

இலங்கைப் பெண்ணுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. வீட்டுக்காரப் பெண்தான் இரகசியமாக, ‘‘தலைமயிர் என்று இங்கு யாரும் சொல்வதில்லை. முடியென்றுதான் சொல்வோம்’’ என்றார். அடிபட்ட காகம்போல சுருங்கிப் போனார் இலங்கைப் பெண்ணான என் நண்பரின் மனைவி!

இந்த இரண்டு சம்பவங்களிலும் இலங்கைப் பெண்கள் ‘மயிர்’ என்ற சொல்லைத் தமிழ்நாட்டில் பயன்படுத்தியதால், ஏதோ தீண்டத் தகாதவர்கள்போல, அந்தச் சூழ்நிலையில் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

‘மயிர்’ என்பது கெட்ட வார்த்தையா? இல்லை, சிலரால் அவ்வார்த்தை கெட்டதாக ஆக்கப்பட்டதா? இலங்கையில் மயிர் என்ற வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘மயிர்’ என்ற பேசுபவர்களை அங்கு யாரும் தப்பாகப் பார்ப்பதில்லை.

முதல் சம்பவத்தில் அந்தப் பெண் விற்பனையாளரிடம் கேட்ட ‘மயிர் மாட்டி’ என்பது ஒரு ஆபரணம்.

காதில் மாட்டும் கம்மலிலிருந்து தலைமுடிவரை வந்து மாட்டப்படும் ஒருவகை அணிகலன். பணமுள்ளவர்கள் தங்கத்திலும், மற்றவர்கள் வேறு விதங்களிலும் அதை அணிந்துகொள்வார்கள்.

இலங்கையில் எந்தவொரு ஆபரணக் கடைக்குச் சென்றும், ‘‘மயிர்மாட்டி இருக்கிறதா?’’ எனக் கேட்டால், அது கிடைக்கும்.

தமிழ்நாட்டில் அது எப்படிக் கெட்டதாக ஆகியது? மயிர் என்பதை ‘முடி’ என்ற சொல்லுக்கு மாற்றீடு செய்தது ஏன்?

இங்கு இன்னுமொரு விசயத்தையும் சொல்ல வேண்டும். இலங்கைத் தமிழர்கள் சவுரியை, ‘முடிமயிர்’ என்று சொல்வார்கள். இதில் முடியும் வருகிறது மயிரும் வருகிறது. நடு செண்டர் போல இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள்.

இங்கு வரும் முடி என்பதன் அர்த்தம் ‘முடிதல்’ என்னும் வினைச் சொல்லுக்கானது. குறைந்தளவு மயிர் உள்ளவர்கள், தேவையான மயிரைச் சேர்த்து முடிந்துகொள்வது என்பதால் முடிமயிராகியது.

இலங்கை, தமிழ்நாடு ஆகிய இரு நாடுகளிலும் வாழ்பவர்கள் ஒரே மொழி பேசும் தமிழர்கள். ஆனால், ஒரு நாட்டில் நல்ல சொல்லாக் கருதப்படுவது, மற்ற நாட்டில் கெட்ட சொல்லாகிவிடுகிறது.

பழந்தமிழை எடுத்தால், திருவள்ளுவரே தன் குறளொன்றில் மயிர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். அது தவறான சொல்லென்றால் நிச்சயமாகப் பயன்படுத்தியிருக்கவே மாட்டார். அந்தக் குறள் இதுதான்.

‘தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை’

இங்கு சிலர் ஒரு சப்பைக்கட்டுக் கட்டுவார்கள். தலையிலிருந்து நீங்கியதால்தான் அதை மயிர் என்று இழிநிலையில் வள்ளுவர் குறிப்பிடுவார் என்பார்கள்.

அதாவது தலையில் இருக்கும்போது அது முடியென்றும், தலையிலிருந்து உதிர்ந்ததும் அது மயிரென்றும் சொல்வதே சரி என்பார்கள். ஆனால் இதற்கும் குறளிலேயே பதில் சொல்வது போல வள்ளுவர் இன்னுமொரு குறளையும் கூறியிருக்கிறார்.

‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா

அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்’

இந்தக் குறளில் நீங்குவதற்கு முன்னரே அதை மயிரென்றுதான் குறிப்பிடுகிறார் வள்ளுவர். சரி, திருக்குறளை விட்டுவிடலாம். கம்பராமாயணத்தில்.

‘மன்னனே! அவனியை மகனுக்கு ஈந்துநீ

பன்னரும் தவம்புரி பருவம் ஈது’ எனக்

கன்ன மூலத்தினில் கழற வந்தென

மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்’

என்று கம்பரும் மயிர் என்னும் சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார். இந்த இடத்தில் கம்பரைப் பற்றி ஒரு சுவையான கதையொன்றையும் இங்கு நான் சொல்ல வேண்டும்.

கோயம்புத்தூருக்கு அருகேயிருந்த மாதம்பூர் வழியாகக் கம்பர் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அங்குள்ள ஒரு மரத்தடியில் வேலன் என்னும் நாவிதர் அமர்ந்திருந்தார்.

கத்தி கருத்தொக்கும்

கத்தரி பனங்கையொக்கும்

‘மயிருக்குத் தோலறுத்த மாதப்பூர் வேலா

உன் வயிற்றுப்பாட்டுக்கு என் வாய்ப்பாட்டா வழிசொல்லும்?’ என்று பாடியிருக்கிறார். இங்கு விசேஷம் என்னவென்றால், கம்பர் இந்தப் பாட்டிலும் மயிர் என்ற வார்த்தையையே பயன்படுத்தியிருக்கிறார்.

திருப்பாவை, சேக்கிழார் புராணம், பதிற்றுப்பத்து, அகநானுறு என்று பல பாடல் தொகுதிகளில் மயிர் என்னும் சொல் பல இடங்களில் வருகிறது.

எனவே, நல்ல தமிழுக்கு மயிர் ஒன்றும் அந்நியமல்ல. அது கெட்ட சொல்லும் கிடையாது. முடி என்ற சொல் அதற்கு சரியான மாற்றாக அமைந்ததா எனப் பார்த்தால், முடிந்துகொள்வதால், அதை முடி என்று அழைக்கிறோமா என்றால் இல்லையென்றுதான் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஆனால் முடியென்று அழைப்பதற்கு வேறொரு காரணம் இருக்கலாம்.

அரசர்கள் ஒரு நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கும்போது, பலவித காரணங்களுக்காகத் தங்கள் அரச பதவியைத் துறப்பார்கள். அப்படித் துறக்கும்போது, ஒரு தெய்வத்தின் சந்நதியில் தன் தலையில் உள்ள முடியை (கிரீடம்) நீக்கி, காவியுடை தரித்துத் துறவறம் பூண்டுகொள்வார்கள்.

ஒரு அரசனால் செய்யக்கூடிய மிகப் பெரிய தியாகமாக அது கருதப்பட்டு வந்தது. தெய்வத்தின் முன்னால் பெருந்தியாகத்தை அரசன் ஒருவன் செய்ய வேண்டுமென்றால், அவன் தன் அரியணையை இழக்கும் விதமாக தலைமுடியைக் காணிக்கையாக்குகிறான்.

இந்தத் தியாகத்தையே ஒரு சாதாரணக் குடிமகன் செய்வதென்றால், அவனிடம் இழப்பதற்கு தலைமுடி (கிரீடம்) இல்லை. அதனால் தன் தலையிலுள்ள மயிரை முடிக்குப் பதிலாக தெய்வத்துக்காகத் தியாகம் செய்கிறான்.

இதையும் முடியிறக்குதல் என்றே சொல்வார்கள். ஒரு கிரீடத்திற்குப் பதிலாகத் தலை மயிரைக் கொடுப்பதால், மயிரை முடியென்று அழைக்கும் வழக்கம் வந்திருக்கலாம்.

ஏதோவொரு காரணத்திற்காக, ‘மயிர்’ என்னும் தூய தமிழ்ச் சொல், இழிவாக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எந்தக் காரணமும் இல்லாமல் அதை இழிவாகவே நம் சந்ததியினருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நாளை வெட்டியெறிவதால், நகம்கூட கெட்டவார்த்தையாக மாறிவிடக்கூடும். அதைவிட, ஒரே மொழி பேசும் இரண்டு சகோதர இனத்தவர் ஒருவரை ஒருவர் வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து கொண்டு, கேலியாகப் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

-ராஜ்சிவா-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com