ilakkiyainfo

மர்மங்களின் கதை | அழைத்த சாமியார்… கூட்டுத் தற்கொலை செய்துகொண்ட மக்கள்: என்ன நடந்தது? -(பகுதி-2)

மர்மங்களின் கதை | அழைத்த சாமியார்… கூட்டுத் தற்கொலை செய்துகொண்ட மக்கள்: என்ன நடந்தது? -(பகுதி-2)
May 01
20:52 2021

1997-ம் ஆண்டு. மார்ச் மாதம், 26-ம் தேதி. கலிஃபோர்னியாவின் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. காவல்துறைக்கு மட்டுமல்லாமல் மொத்த உலகத்துக்குமே ஒரு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும் விஷயத்தை நோக்கியதாக அந்த அழைப்பு அமைந்திருந்தது.

காவல்துறையைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நபரின் பெயர் பின்னாளில் தெரியவந்தது. அவரின் பெயர் ரியோ டிஆஞ்சலோ. மார்ச் 25-ம் தேதி டிஆஞ்சலோவுக்கு ஒரு பார்சல் வந்தது.

பிரித்துப் பார்த்தார். பார்சலுக்குள் இரண்டு வீடியோ கேஸட்டுகள். கூடவே ஒரு கடிதம். அந்தக் கடிதத்தைப் படித்ததும் விபரீதத்தின் வீரியத்தை டிஆஞ்சலோ உணர்ந்துகொண்டார். பார்சலைப் பெற்றுக்கொள்ள, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணமும் அவரின் முகத்தில் அறைந்தது.
ரியோ டிஆஞ்சலோ

என்ன செய்வது எனத் தோன்றவில்லை. பதற்றம்கொண்டார். குழம்பினார். பின் யோசித்தார். வீடியோ கேஸட்டுகளை ஒளிபரப்பிப் பார்த்தார். கேஸட்டில் பலர் பேசினர். காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன.

டிஆஞ்சலோவுக்குக் கைகள் நடுங்கத் தொடங்கின. அடுத்த நாளே காவல்துறையைத் தொடர்புகொண்டார். மறுமுனையில் எடுத்த அதிகாரி, `என்ன உதவி வேண்டும்’ எனக் கேட்கிறார்.

“என் பெயரைச் சொல்ல விரும்பலை. ஆனா ஒரு முக்கியமான துப்பு கொடுக்கணும். யார்கிட்ட பேசணும்?”

அதிகாரி தன்னிடமே சொல்லச் சொல்கிறார். டிஆஞ்சலோ தன் குரலைச் சரி செய்துகொண்டு சொல்கிறார்.

“கூட்டமா தற்கொலை பண்ணியிருக்காங்க. என்கிட்ட முகவரி இருக்கு!”

கூட்டுத் தற்கொலை!

39 பேர் கூட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்த வீட்டிலும் ஒரு வழிபாட்டுக்குழு இருந்திருக்கிறது. அந்தக் குழுவின் பெயர் Heaven’s Gate. சொர்க்கத்தின் வாசல்!

ரியோ டிஆஞ்சலோவுக்கு வந்த பார்சலில் இருந்த கடிதம், ஊடகம் மற்றும் உலகத்துக்கான அறிக்கை.

`எங்களின் வேலைகளுக்காக நாங்கள் கடன் வாங்கியிருந்த உடல்களைவிட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது. பரிணாமத்தின் அடுத்தநிலையைப் பற்றி அறிவிக்க மட்டுமென இல்லாமல், எங்களைவிடக் குறைந்த பரிணாமத்துடன் இருந்து பார்த்து அனுபவங்கள் பெறவுமே இங்கு வந்தோம்.

மனிதநிலைக்கு அடுத்தகட்ட நிலையும் இதே போன்றுதான் இருக்கும். அங்கும் உடல்களுக்குள்தான் வாழ்கிறோம். ஆனால் அந்த உடல்கள் வெறும் கூடுகள்தான். வெறும் உடைகள். அவற்றுக்குள் தங்கியிருக்கும் ஆன்மாவே உண்மையான அடையாளம். அதைத் தக்கவைப்பதற்கு மட்டும்தான் உடல். அந்த உடலும் அழிந்தால் வேறு உடல் கொடுக்கப்படும்.

இவ்வுலகில் நல்வாழ்க்கை வாழ்வதால் மட்டுமே ஒருவரால் நாங்கள் இருக்கும் உலகுக்கு வந்துவிட முடியாது. அங்கிருந்து எங்களைப்போல் யாரேனும் வந்து இங்கு தகவல் கொடுத்தால் மட்டுமே இங்கிருப்பவர்கள் அவ்வுலகை அடைவதற்கான வாய்ப்பு உருவாகும்.’

Heaven’s Gate

சொர்கத்தின் வாசல்

மிரட்சி தரும் ஒரு விளக்கம். எல்லாவற்றையும் எழுதி அச்சிடப்பட்ட பிறகே தற்கொலைக்கான நடவடிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. 39 பேரும் கிளம்பிச் செல்வதற்கு முன்னதான தங்கள் சேதிகளை வீடியோ கேஸட்டுகளில் பதிவு செய்திருக்கின்றனர்.

`Heaven’s Gate’ என்ற வழிபாட்டுக்குழுவின் தலைவனும் தன் பங்குக்கு ஒரு வீடியோ கேஸட்டில் பேசியிருந்தான். குழுத் தலைவனின் பெயர் மார்ஷல் ஆப்பிள் ஒயிட். மார்ச் 22-ம் தேதி தொடங்கி மார்ச் 26-ம் தேதி வரை மொத்தம் ஐந்து நாள்கள்.

இடைவெளிவிட்டு மூன்று பகுதிகளாக தங்களின் மரணங்களை 39 பேரும் தழுவியிருக்கின்றனர். வழிபாட்டுக்குழுவின் தலைவனான ஆப்பிள் ஒயிட், இருவர் மிச்சமிருக்கையில் தற்கொலை செய்துகொண்டான்.

பாலிதீன் பைகளை கழுத்தில் கட்டிக்கொண்டு அந்த இருவரின் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. மற்ற அனைவரின் உடல்களிலுமிருந்து பிற அனைவரும் பாலிதீன் பைகளை முறையாக அப்புறப்படுத்தி அலங்கரித்திருக்கின்றனர். ரியோ டிஆஞ்சலோவை போன்ற பலருக்கு பார்சல்கள் அனுப்பப்பட்டிருந்தன.

Heaven’s Gate குழுவிலிருந்து பார்சல் அனுப்பப்பட்ட ரியோ டிஆஞ்சலோவும் அதே வழிபாட்டுக்குழுவில் சில நாள்கள் முன்புவரை இருந்தவர்தான்.

சில வாரங்கள் முன்பு வரை வழிபாட்டுக்குழுவின் நடைமுறைகளில் அவரும் ஈடுபட்டிருந்தார். ஏதோ ஒரு தயக்கத்தில் தனக்கு பூமியில் வேலை இன்னும் இருக்கிறது என்பது போன்ற உள்ளுணர்வில் வெளியே வந்தவர் அவர். தப்பியெல்லாம்கூட வரவில்லை. வழிபாட்டுக்குழு தலைவனான ஆப்பிள் ஒயிட்டின் ஆசியுடனேயே வெளியேறி வந்திருந்தார்.

ஒருவேளை வெளியே வராமல் இருந்திருந்தால், அந்த வீட்டில் கண்டெடுக்கப்படும் 40-வது உடலாக இருந்திருப்பார் ரியோ டி ஆஞ்சலோ.

1995-ம் ஆண்டின், ஜூலை 22-ம் நாள். வானம் மனிதர்களுக்கு ஒரு புதிய சேதியைத் தாங்கி வந்தது. நடு இரவில் அமர்ந்து வானில் தோன்றும் வால் நட்சத்திரங்களைக் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார் ஆலன் ஹேல்.

ஏற்கெனவே 200 வால் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அவற்றைச் சரிபார்க்கும் வேலை. எல்லா வால் நட்சத்திரங்களும் தன் போக்கை தனக்கான திசையில் பதிவு செய்து சென்றுகொண்டிருந்தன.

திடுமென ஒரு வெளிச்சம்! அடுத்ததாக தோன்ற வேண்டிய வால் நட்சத்திரப் பகுதியில் இல்லாமல் வேறொரு பகுதியில் வெளிச்சம் இருந்தது. பரபரப்படைந்த ஆலன் ஹேல், உன்னிப்பாக தொலைநோக்கியை கவனித்துக்கொண்டிருந்தார்.

அவருக்குச் சரியாகத் தெரியும். இரண்டு வாரங்களுக்கு முன்கூட அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறார். வெளிச்சம் ஏதும் இருக்கவில்லை. இது வேறொன்று. புதிய ஒன்று. மீண்டும் அந்தப் பகுதி பளிச்சிட்டது.

ஆலன் ஹேலின் நெடு நாளைய தவம் நிறைவேறியது.

அதே 1995-ம் ஆண்டு. ஜூலை 22.

அரிசோனா மாகாணத்தில் தாமஸ் பாப் என்றவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டுத் திரும்பியிருந்தார். ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை. அன்றைய வேலை அவருக்கு முடிந்தது.

ஆனாலும் வீட்டுக்குத் திரும்பவில்லை. ஏனெனில் அவருக்கு வானியல் மீது ஆர்வம். இரவு நேரங்களில் தாமஸ் பாப்பும் நண்பர்களும் சேர்ந்து வானத்தை ஆராய்வார்கள். அன்றும் அப்படித்தான். நண்பருடைய தொலைநோக்கியில் நேரம் பிரித்து நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இரவு 11 மணி. தாமஸ் பாப்புக்கான நேரம் வந்தது. தொலைநோக்கியின் வழியாக இரவு வானம் தாமஸ் பாப்புக்கு விரிந்தது. எல்லையற்ற பெருவெளியில் ஏதேவொரு மூலையில் வழக்கமாக இல்லாத வெளிச்சம் ஒன்று பாப்பின் கண்ணுக்குப் பட்டது. புலன்கள் கூர்மையடைந்து வெளிச்சத்தை கவனித்தார். வெளிச்சம் இருக்கிறது. ஆனால் மங்கலாக இருக்கிறது. அது என்ன வெளிச்சம் எனத் தெரியவில்லை.

வால் நட்சத்திரம்!

நண்பர்களிடம் வெளிச்சம் வரும் பகுதியைப் பார்க்கச் சொல்லிக் கேட்டார். அவர்களுக்கும் ஆச்சர்யம். தாமஸ் பாப்புக்கு அதிர்ஷ்டம் அடித்ததாகக் கூறினார்கள். ஜூலை 23-ம் தேதி சர்வதேச வானியல் மையம் புது வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இருவர் கண்டுபிடித்திருந்ததால், இரு பெயர்களின் பிற்பகுதிகளை வால்நட்சத்திரத்துக்கு பெயராகச் சூட்டப்பட்டது. வால் நட்சத்திரத்தின் பெயர் ஹேல் பாப். ஹேல் பாப், மனிதகுலத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான விஷயம். இதற்கு முன் ஹேல் பாப்பை பூமி பார்த்தது 4,200 வருடங்களுக்கு முன்.

அறிவார்ந்த மனிதகுலம் உருவான பிறகு, ஹேல் பாப்பைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது 1997-ம் ஆண்டில்தான். அடுத்து ஹேல் பாப்பை மனிதன் பார்க்கும் வாய்ப்பு 4385-ம் ஆண்டில்தான் கிடைக்கும்.

மனிதகுலம் இருக்குமா என்றுகூடத் தெரியாத காலம். மனித அறிவு அறிவியல் என்ற உச்சத்தை எட்டியிருந்த காலத்தில் ஹேல் பாப் பிரசன்னம் அளித்தது. 1997-ம் ஆண்டின் மார்ச் மாதம் 22-ம் தேதி, மிகக் குறைந்த தொலைவில் ஹேல் பாப் இருக்குமென அறிவிக்கப்பட்டது.

காணுதற்கரிய ஒரு வானியல் நிகழ்வு நடப்பதை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த காலத்தில், உலகின் ஒரு மூலையில் வேறொரு விஷயம் நடந்துகொண்டிருந்தது.


மார்ஷல் ஆப்பிள் ஒயிட்

கலிஃபோர்னியாவில் ஒரு வீட்டில் காணொலி எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. காணொலிக்காக ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பேசியவரின் பெயர் மார்ஷல் ஆப்பிள் ஒயிட். ஆப்பிள் ஒயிட் பேசி முடித்த பிறகு அந்த காணொலிக்கு `Final Exit’ எனப் பெயர் சூட்டப்பட்டது. ‘இறுதி விடைபெறல்’ என மொழிபெயர்க்கலாம்.

பூமியிலிருந்தும் மனித உடலிலிருந்தும் விடைபெறுவதற்கான அறிவிப்பைப் பேசி முடித்தார் ஆப்பிள் ஒயிட்.

பூமியைவிட்டு அகலுவதற்கான நேரம் வந்துவிட்ட அறிவிப்பு! மனிதனிலிருந்து அடுத்தநிலைக்குச் செல்ல வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?

அதற்கும் ஹெவன்ஸ் கேட் வழிபாட்டுக்குழு உத்திகள் வைத்திருக்கிறது. குறிப்பாக நான்கு வழிமுறைகள்.

1. பிரபஞ்சத்திலிருந்து ஒரு விண்கலம் வரும். அதில் உறுப்பினர்களின் உடல்கள் ஏற்றப்படும். கலத்துக்குள்ளேயே மனித உடல்களிலிருந்து அடுத்த பரிணாம நிலை உடல்களுக்கு அவர்கள் மாற்றப்படுவர்.

2. இயற்கையாகவோ செயற்கையாகவோ ஏதோவொரு வகையில் இறப்பு நிகழ வேண்டும். மரணம் நேர்ந்த பிறகு அவர்களின் ஆன்மாக்கள் மனித உடல்களைவிட்டு அகலும்.

3. சட்டத்தின் வழியாகவோ அரசினாலோ கொல்லப்பட்டு மரணம் நேர்ந்துவிடக் கூடாது.

4. சுயவிருப்பத்துடன் கண்ணியமான முறையில் உடலை ஆன்மா பிரிய வேண்டும்.

ஹெவன்ஸ் கேட் வழிபாட்டுக்குழுக்கான கொள்கைகள் இவைதாம். அவர்களுக்கு ஹேல் பாப் வால் நட்சத்திரம் விண்கலமாகத் தெரிந்தது. அதுவே அவர்களின் ரட்சிப்புக்கான வழியாகவும் போதிக்கப்பட்டது. போதித்தவன் ஆப்பிள் ஒயிட்.

அறிவியலை மறுதலித்தல்

பூமிக்கு மிக நெருக்கத்தில் ஹேல் பாப் வால் நட்சத்திரம் வரவிருந்த மார்ச் 22-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகமே அருமையான ஒரு வானியல் நிகழ்வை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தினத்தில், ஒரு சிறு கூட்டம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தீர்மானித்திருந்தது.

உயிர்கள் தங்களின் உடல்களை விலகி ஒருநாள் விண்கலம் ஒன்றிலேறி வேறொரு கிரகம் சென்று வேறு உடல்களுக்குள் செல்லும் என்பதே அடிப்படையில் ஆப்பிள் ஒயிட் பிரசாரம் செய்த நம்பிக்கையின் சாரம்.

அறிவியல் பேசிய உலகுக்கு, ஹேல் பாப் கொடுத்த அறிவியல் திறப்புகள் பரவசத்தை கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், அறிவியல் மறுத்த கும்பல் ஒன்று உலகின் மூலை ஒன்றில் இறக்கத் தொடங்கியிருந்தது.

அறிவியலை மறுப்பதிலிருந்துதான் உண்மையான மரணம் தொடங்குகிறது.

ஆர்.எஸ்.ஜெ

மர்மங்களின் கதை: ஹிட்லருக்கு மரியாதை கொடுக்க மறுத்த ஒரு வரலாற்று நாயகன்!! – பகுதி-1

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com