மெரினா கடற்கரையில் 14 பாஸ்போர்ட்டுகளை தொலைத்து விட்டு பரிதவிக்கும் வெளிநாட்டு இலங்கை தமிழர்கள்!!
இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து சென்ற தமிழர்கள் சென்னை மெரினா கடற்கரையில் 14 பாஸ்போர்ட்டுகளை தொலைத்து விட்டு, தவித்த நிலையில் உள்ளனர்.
திருமண நிகழ்ச்சி
சென்னை மதுரவாயலில் கடந்த 7–ந் தேதி அன்று இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் குடும்ப திருமண நிகழ்ச்சி நடந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியில் இலங்கை, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் இருந்து ஏராளமான பேர் வந்து கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்தவர்கள், சென்னையில் தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.
நேற்று முன்தினம் இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்தனர். பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில், மெரினா கடற்கரை புல் தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் புறப்பட்டுச் சென்று விட்டனர். அவர்கள் கொண்டு வந்த பை ஒன்றை புல்தரையில் தவறுதலாக விட்டுச்சென்று விட்டனர்.
பாஸ்போர்ட்டுகள் பறிபோனது
தவற விட்ட பையை யாரோ எடுத்துச் சென்று விட்டனர். அந்த பைக்குள் 14 பாஸ்போர்ட்டுகள், ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம், கேமரா மற்றும் வங்கி ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட்கார்டு ஆகியவை இருந்தன.
இலங்கை பாஸ்போர்ட்டுகள் 12, ஜெர்மனி பாஸ்போர்ட்டு ஒன்று, இங்கிலாந்து பாஸ்போர்ட்டு ஒன்றும் பையுடன் பறிபோய் விட்டது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த தம்பன் சின்னராஜா, ஜெர்மனியைச் சேர்ந்த கந்தையா கஜேந்திரன் ஆகியோர் அண்ணாசதுக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறர்கள்.
பாஸ்போர்ட்டுகளை பறிகொடுத்தவர்கள், சொந்த நாட்டுக்கு திரும்பி போக முடியாமல் தவித்த நிலையில் உள்ளனர்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment