எனது இலக்கு தப்பாது: ஆட்சிமாற்றம் நிச்சயம் என்கிறார் சந்திரிகா குமாரதுங்க
மிகத் தெளிவான அரசியல் திட்டம் தீட்டப்பட்டு ஆட்சி மாற்றத்தினை இலக்கு வைத்த தேர்தல் செயற்பாட்டினை பொது எதிரணி முன்னெடுத்துள்ளது.
ஒன்பது ஆண்டுகள் அமைதியின் பின்னர் நான் ஆட்சி மாற்றத்திற்கு இலக்குவைத்துள்ளேன். எனது இலக்கு தவறாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
பொது எதிரணியின் நிகழ்ச்சி நிரல் மிக தெளிவானது. திட்டமிட்டு அரசியல் மாற்றம் ஒன்றிற்கான ஒவ்வொரு அடியினையும் எடுத்து வைக்கின்றோம்.
எமது தேர்தல் பணிகள் மக்களை எம்பக்கம் ஈர்க்கும். அரசியல் பிரசார முயற்சிகள் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் இடம்பெறுகின்றது.
பண பலத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் மத்தியில் மாற்றத்தின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
இவ்முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். நான் எனது பதவியினை ஒப்படைத்து வெளியேறிய போதிலிருந்து இன்று வரையில் மஹிந்த ராஜபக் ஷ என்ற தனி நபரினால் பல அவமானங்கள் இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளேன்.
எனினும் இனிமேல் எனது அரசியல் பயணம் இவர்களுடன் அமைந்து விடக்கூடாது என்பதற்காகவே ஒன்பது ஆண்டுகள் மௌனித்து இருந்தேன்.
எனினும் எனது ஒன்பது ஆண்டுகள் மௌனம் கலைந்து மீண்டும் எனது இலக்கினை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டேன்.
இதுவரையில் நான் வைத்த இலக்கு தவறியதில்லை. நான் தோற்கும் எந்தவொரு முயற்சிக்கும் துணை போகவும் மாட்டேன். ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த நான் வைத்துள்ள குறி தவறாது.
அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ குடும்ப அரசாங்கத்தின் ஊழல் எல்லை தாண்டி விட்டது. நாம் நினைத்ததை விடவும் மோசமான வகையில் இவர்களின் ஊழலும் அடக்கு முறையும் உள்ளது.
அரசாங்கத்தில் இருந்து பலர் இன்று வெளியேறியுள்ளனர். சிறந்த தலைவர்கள் அனைவரும் எம்முடன் கைக்கோர்த்து விட்டனர்.
இன்னும் சிலர் அரசாங்கத்தில் இருக்கின்றனர். அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற முடியாதமைக்கு உயிர் பயமும் அராஜக செயற்பாடுகளுமே காரணம்.
மேலும் என்னை மனநோயாளி என சித்தரிக்கின்றனர். நான் சுகதேகியாக தெளிவான சிந்தனையில் செயற்படுகின்றேன். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவிற்கே இன்று மனநோய் பிடித்துள்ளது.
அவருக்கு பிடித்துள்ள மனநோய்க்கு உலகில் மருந்து இல்லை. அரசாங்கத்தை தீர்மானிப்பது மக்களே அவர்களையும் அரசாங்கத்திற்கு சவாலானவர்களையும் மனநோயாளிக்கும் கொள்கையில் அரசாங்கம் செயற்படுகின்றது.
அதை மாற்றியமைக்கும் அணியினையே நாம் உருவாக்கி வருகின்றோம்.
பதவியாசையில் திசை திரும்பிய தலைவர்களின் நிலைமை என்னவென்பதை உலக வரலாற்றில் காண்கின்றோம்.
எனினும் 3வது தடவை ஆட்சியினை தக்க வைத்திருக்க முடியும். ஆனால் பதவியாசை எனக்கு இருந்ததில்லை.
தற்போதும் என்னை அரசியலில் பிரவேசிக்க பல வற்புறுத்தல்கள் இருக்கின்றது. ஆனால் நான் வரலாற்று தவறினை செய்ய விரும்பவில்லை. எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாரை ஆதரிப்பது-? மு.கா.வுக்குள் பெரும் முரண்பாடு; அரச தரப்புடன் ஹக்கீம் நேற்றும் பேச்சு
17-12-2014
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் முடிவு எடுக்கும் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பல தடவைகள் கட்சியின் அரசியல் உயர்பீடம் கூடியபோதிலும் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
அரசாங்க தரப்பினருடன் நேற்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இன்று மீண்டும் அரசதரப்பினரை சந்தித்து பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேற்று முன்தினம் கண்டியில் ஒன்றுகூடிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் விரிவாக ஆராய்ந்திருந்தனர்.
இதனையடுத்து நேற்று அரச தரப்பினரை மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து பேசியபோதிலும் இச் சந்திப்பில் கட்சியின் செயலாளர் ஹசன் அலியோ அல்லது ஏனைய எம்.பி.க்களோ பங்குபற்றவில்லை.
இன்று நடைபெறும் சந்திப்பிலும் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றே தெரிகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஒருதரப்பினரும் எதிரணிவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மறுதரப்பினரும் உள்ளமையினாலேயே கட்சிக்குள் பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது.
கட்சியின் செயலாளர் ஹசன் அலி உட்பட பெரும்பான்மையான எம்.பி.க்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர்.
சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதன் மூலமே கட்சியை காப்பாற்ற முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிப்பதற்கு பல கோரிக்கைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள நிலையில் அது தொடர்பாக கலந்துரையாடலொன்று நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
குறிப்பிட்ட கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் டலஸ் அலகபெரும, அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த, அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான அநுர பிரியதர்ஷனயாப்பா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டனர்.
ஒன்றரை மணித்தியாலங்களாக நடைபெற்ற கலந்துரையாடலின்போது நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சர்களிடம் எடுத்து விளக்கினார்.
முஸ்லிம்களின் ஒரு சில பிரச்சினைகளுக்கு குறிப்பாக கருமலையூற்று பள்ளிவாசல் போன்றவற்றுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள பல முக்கிய பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வோ உறுதிகளோ வழங்கப்படாமலிருப்பது தொடர்பில் முஸ்லிம்கள் அதிருப்தியடைந்திருக்கிறார்கள் என்பதனை அமைச்சர் விளக்கினார்.
கலந்துரையாடலில் பங்கு கொண்ட அமைச்சர்கள் அரசின் நிலைப்பாட்டினையும் விளக்கினார். என்றாலும் எதுவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் கலந்தரையாடல் முற்றுப் பெற்றதாகத் தெரிய வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிலைப்பாடு தாமதாகவே உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment