வடகொரிய சிறையில் சடலங்களை புதைத்தேன்’ – துயர நினைவுகளை பகிரும் பெண்!!
தென் கொரியத் தலைநகர் சோலிலிருந்து 2 மணி நேர பயண தூரத்தில் உள்ள, பனியால் போர்த்தப்பட்ட நகரம் இது.
இங்கு வெப்பநிலை -10 டிகிரிக்கும் கீழே பதிவாகியிருக்கிறது, சாலையில் மக்கள் நடமாட்டமும் மிகவும் குறைவாகவே உள்ளது.
நாங்கள் தேடி வந்தவர் ஒரு குடியிருப்புப் பகுதியின் ஒற்றை அறை வீட்டில் வசிக்கிறார். அழைப்பு மணியை அழுத்தியவுடன் 48 வயது பெண்மணி ஒவர் கதவை திறந்தார். அச்சத்துடன் காணப்பட்ட அந்த பெண் எங்கள் அடையாள அட்டையை பார்த்து உறுதி செய்துக்கொண்டார்.
அமர்வதற்கு தரையில் ஒரு விரிப்பு போடப்பட்டிருந்தது. அதே அறையில் சமையலறையும் இருந்தது. கழிவறைக்கு செல்லும் கதவும் அருகிலேயே இருந்தது.
15 ஆண்டுகளுக்கு முன்னர் வடகொரியாவில் உள்ள ஒரு தொழிற்சாலையின் உரிமையாளராக இருந்தவர் மி ரியோங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின்சகோதரியின் குடும்பம் தென்கொரியாவுக்கு ஓடிவந்துவிட்டது, அவர்கள் தொலைகாட்சியில் ஒரு பேட்டியும் கொடுத்திருந்தார்கள்.
மி ரியோங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
உடனே இவரது குடும்பத்திற்கு பிரச்சனை தொடங்கியது. சிறையில் சில காலத்தை கழித்த இவர் பிறகு, சீனாவின் தேவாலயங்களில் ஒளிந்து தலைமறைவாக வாழ்ந்தார்.
பேசும்போதே விசும்புகிறார் மி ரியோங். “என்னை சிறையில் அடித்தார்கள், துன்புறுத்தினார்கள். வேறு பலரின் சடலங்களை புதைக்கச் செய்தார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்ததும் எனக்கு விவாகரத்து செய்து வைக்கப்பட்டது. என் மகள் அங்கேயே இருந்துவிட்டாள், நான் மட்டும் சீனாவுக்கு தப்பி ஓடிவிட்டேன்” என்று அவர் கூறினர்.
சீனாவில் பல ஆண்டுகள் மறைந்து வாழ்ந்த பிறகும் வடகொரியாவில் இருந்து தனது மகளை வெளியே கொண்டு வரமுடியவில்லை என்று சொல்லி வருந்துகிறார் மி ரியோங்.
தென்கொரியாவில் ஒரு நகரில் வந்து வசிக்கும் தனது சகோதரியின் முயற்சிகளால் தென்கொரியா வந்துவிட்டதாக கூறும் மி ரியோங், அதற்காக அவர் மிகவும் சிரமப்பட்டார் என்பதையும் குறிப்பிடுகிறார்.
உணவு விடுதி ஒன்றில் வேலை செய்யத் தொடங்கினேன். நாளொன்றுக்கு 15 மணி நேரம் வேலை செய்து பணம் சம்பாதித்தேன். அப்போதுதான் தங்குவதற்கு ஒரு கூரையாவது கிடைக்கும். இவ்வளவு கடினமான வேலைகளை செய்து பழக்கமும் இல்லை” என்கிறார் மி.
“பிரச்சனை அத்துடன் முடியவில்லை, மாரடைப்பு ஏற்பட்டு, பல மாதங்கள் படுத்த படுக்கையாகிவிட்டேன். சம்பாதிக்கும் வாய்ப்பும் முடங்கிவிட்டது. வருமானமே இல்லாமல் எப்படி வாழ்வது? பசி என்று ஒன்று இருக்கிறதே? ” என்று நிதர்சனத்தை பேசுகிறார் மி ரியோங்.
“அதன்பிறகு முதியவர்களுக்கு பணிபுரியும் வேலையைத் தொடங்கினேன். இதுவும் சுலபமானது இல்லை. மிக மோசமாக நடந்துக் கொண்டாலும் சகித்துக் கொள்ளவேண்டும். ஆனால் என் மகளை வடகொரியாவின் நரகத்தில் இருந்து மீட்கவேண்டும், அதற்காகவாவது பணம் சம்பாதிக்கவேண்டும்” என்று சொல்கிறார் மி.
1953ஆம் ஆண்டு கொரியப் போர் முடிவுக்கு வந்தபிறகு சுமார் 30 ஆயிரம் மக்கள் வடகொரியாவை விட்டு வெளியேறிவிட்டனர்.
பல தசாப்தங்களாக தொடரும் கிம் குடும்பத்தினரின் ஆட்சியின் வலிமிகுந்த நினைவுகளை மறந்து ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கும் நம்பிக்கையில் மக்கள் இருக்கின்றனர்.
பலர் சீனாவிற்கு சட்டவிரோதமாக சென்று குடியேறிவிட்டார்கள். அங்கிருந்து அவர்கள் தென்கொரியாவுக்கு வந்தால் மிக நீண்ட விசாரணைகளை சந்திக்கவேண்டும்.
தகவல்கள் திருப்தியளித்தால் பிறகுதான் அவர்கள் அங்கு குடியேற அனுமதிக்கப்படுவார்கள். வட கொரியாவை விட்டு வெளியேறிய மக்களுக்கு, நாட்டை விட்டு வெளியேறுவதில் கோபமோ வருத்தமோ எதுவுமே இல்லை.
வெளியேறிவர்களின் மிக நெருங்கிய உறவினர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் ஆபத்தான வடகொரியாவில் இருந்து வெளியே வரவில்லை, அவர்கள் தற்போதும் மிகவும் மோசமாக நிலையில் இருக்கிறார்கள்.
முன் மி ஹவாவைப் போலவே அங்கிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. முன் மி ஹாவின் கணவர் ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். குடும்பம் நன்றாகவே சென்றுக் கொண்டிருந்தது. 1990களில் ஏற்பட்ட வறட்சியினால் அவர்களது குடும்பத்தினர் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.
அவர்களது கருத்துப்படி, தலைநகர் பியோங்யாங்கில் இருந்து ஒன்றரை மணி நேரம் பயணிக்கும் தொலைவில் இருக்கும் ஹயரோங்-சி என்ற நகரத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது, எதிர்ப்பவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தனது மகளுடன் நாட்டை விட்டு வெளியேறிய முன் மி ஹவா லாவோஸில் உள்ள தென்கொரிய தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார்.
அவர் கூறுகிறார், “அங்கிருந்து எல்லையை கடக்கும்போது என்னுடைய ஒரு மகள் காணமல் போய்விட்டாள். நானும், எனது மற்றொரு மகளும் மட்டுமே நாட்டை விட்டு தப்பமுடிந்தது. அதன்பிறகு என் கணவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார், போலி ஆவணங்களை தயாரித்து அவரது சகோதரர் காப்பாற்றினார்”.
“அங்கே எந்தவொரு மனிதருக்கும் முக்கியத்துவம் கிடையாது, எல்லோரும் ரோபோக்களே. நானும் என் மகளும் இங்கே தென் கொரியாவில் சிறிய ஹோட்டல்களில் வேலை செய்கிறோம்.
வேலைக்கு மற்றவர்களுக்கு சமமான ஊதியம் கிடைக்காவிட்டாலும் நான் இங்கிருந்து திரும்பிப் போக விரும்பவில்லை” என்று அவர் உறுதியுடன் சொல்கிறார்.
அண்மை ஆண்டுகளில் வடகொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு தப்பியோடி வரும் மக்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது. ஆனால் அப்படி தப்பி வந்தவர்களும் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
தென்கொரியாவின் எம்.பி.யான ஓக்னீம் சுங், ‘வட கொரிய அகதிகள்’ குழுவின் தலைவராகவும் பணிபுரிந்தவர்.
அவர் கூறுகிறார், “வட கொரியாவில் இருந்து தப்பித்து வந்தவர்கள் ஜனநாயக சமுதாயத்தில் பங்கேற்கவேண்டும் என்பதற்கான முழு முயற்சிகளையும் நாங்கள் செய்கிறோம்.
ஆனால் ஐந்து முதல் ஆறு தசாப்தங்களாக மாறியிருக்கும் இவர்களின் சிந்தனையை மாற்றுவது எளிதாக இல்லை. தென் கொரியாவின் குடிமக்களாக இல்லை என்பது மற்றவர்களுடன் ஒன்றிப்போக அவர்களுக்கு தடையாக இருக்கிறது, அதனால் அவர்கள் இயல்பாக அதிக காலம் ஆகிறது. “
வட கொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு தப்பி வந்தவர்களில் பலர் பலர் இன்னும் பழைய நினைவுகளுடன் போராடி வருகின்றனர்.
வட கொரியாவின் எல்லைக்கு அருகே இருக்கும் எந்தவொரு தென் கொரிய நகரத்திலும் என்னால் வசிக்க முடியாது, இரவில் தூக்கம் வருவதில்லை, ஏனென்றால் மோசமான நினைவுகளை நெஞ்சம் மறப்பதில்லை” என்று துயர நினைவுகள் நீங்கா வடுக்களாக இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார் மி ரியோங்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment