ilakkiyainfo

வட கொரியா கிம் வம்ச ஆட்சி: தாத்தா, மகன், பேரன் சர்வாதிகாரப் பரம்பரை காலூன்றியது எப்படி?

வட கொரியா கிம் வம்ச ஆட்சி: தாத்தா, மகன், பேரன் சர்வாதிகாரப் பரம்பரை காலூன்றியது எப்படி?
January 10
14:41 2021

வட கொரியா ஒரு கம்யூனிச நாடு. சமத்துவத்தை வலியுறுத்தும் கம்யூனிச சித்தாந்தம் ஒரு நாட்டில் தாத்தா, மகன், பேரன் என்று வாரிசுரிமை ஆட்சிக்கு வழிவகுக்குமா? என்று நீங்கள் ஆச்சரியத்தோடு கேட்கலாம். ஆனால், வட கொரியாவில் அப்படித்தான் நடந்திருக்கிறது.

வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சங் ஆட்சி. பிறகு அவரது மகன் கிம் ஜோங் இல் ஆட்சி. பிறகு தற்போது வரை அவரது மகன் கிம் ஜோங் உன் ஆட்சி.

மூன்று தலைமுறையாகத் தொடரும் இந்த சர்வாதிகார வம்சத்தை கிம் இல் சங் எப்படி நிறுவினார் என்பது பற்றித்தான் இந்தக் கட்டுரை.

1945 அக்டோபர் 14 ஆம் தேதி பியோங்யாங்கில் உள்ள அரங்கத்திற்கு ரஷ்ய ராணுவமான செஞ்சேனையை வரவேற்க ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சோவியத் அதிகாரிகள் சூழ, கிம் இல் சங் தனது வாழ்க்கையில் முதல்முறையாக அன்று உரையாற்றினார். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே.

அவர் தனது உரை எழுதப்பட்டிருந்த காகிதங்களை தனது இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு மிகவும் பதற்றமாக இருந்தார்.

அவரது தலைமுடி மிகவும் குட்டையாக இருந்தது. அவர் நீல நிற டாங்க் சூட்(சீன பாரம்பரிய உடை) அணிந்திருந்தார்.

அந்த நிகழ்வுக்காக அதை அவர் ஒருவரிடமிருந்து கடன் வாங்கியது போலத் தெரிந்தது. அங்கு இருந்த ஒரு நபரின் கூற்றுப்படி அவர் ஒரு ‘சீன உணவகத்தின் டெலிவரி பையன்’ போல தோற்றமளித்தார்.

அவருக்கு கொரிய மொழியை அவ்வளவு நன்றாக பேசத்தெரியாது என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையின் 33 ஆண்டுகளில் 26 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

கொரியாவில் தலைமைக்கான சோவியத் நிர்வாகத்தின் முதல் தேர்வாக, சோ மேன் சிங் இருந்தார்.

கிம் இல் சங்கின் முதல் உரை ஒரு தோல்வியாக அமைந்தது. ஆனால் அவரது அதிர்ஷ்டம் அவரை கைவிடவில்லை.

சோ மேன் சிங் கம்யூனிஸ்ட் அல்ல என்றும் அவரை தனது கைப்பாவையாக ஆட்டி வைக்கமுடியாது என்றும் ஸ்டாலின் குழு விரைவில் கண்டறிந்தது.

சோ, நாட்டை நிர்வகிக்க, ரஷ்யர்களுக்கு கோபத்தை உண்டாக்ககூடிய கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினார்.

கிம் இல் சங் தங்களுக்கு சாதகமான மற்றும் சொல்பேச்சு கேட்கக்கூடியவராக இருப்பார் என்று திடீரென்று சோவியத் ஒன்றியம் நினைக்கத் தொடங்கியது.
வட கொரியத் தலைவர் கிம் இல் சங்.

வட கொரிய நிறுவனர் கிம் இல் சங்.

இதையடுத்து 1948 செப்டம்பர் 9 அன்று, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. கிம் இல் சங் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தென் கொரியா மீதான தாக்குதல்

ஜப்பானுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்களை உள்ளடக்கி அவர் உடனடியாக கொரிய மக்கள் ராணுவத்தை உருவாக்கினார்.

மாஸ்கோ சென்று, தென் கொரியாவைத் தாக்க ஸ்டாலினின் உதவியைப் பெற முயற்சியை தொடங்கினார்.

வட கொரியா தாக்கப்பட்டால் மட்டுமே பதிலடி கொடுக்கவேண்டும் என்று ஸ்டாலின் அவரிடம் தெளிவாக கூறிவிட்டார்.

 

சோவியத் ஒன்றியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின்

 

“தென் கொரியா மீதான தாக்குதல் குறித்த கிம்மின் யோசனையை ஓராண்டு கழித்து, ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் சீன தலைவர் மாவோவும் இதற்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். கிம் 1950 ல் பெய்ஜிங் சென்று மாவோவை தாக்குதலுக்கு சம்மதிக்க வைத்தார்,” என்று பிராட்லி மார்ட்டின் தனது ‘அண்டர் தி லவ்விங் கேர் ஆஃப் தி ஃபாதர்லி லீடர்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

“1950 ஜூன் 25 ஆம் தேதி அதிகாலையில் வட கொரிய துருப்புக்கள் 150 டி -34 ரஷ்ய பீரங்கிகளுடன் தென் கொரியாவுக்குள் நுழைந்தன.

சில நாட்களில், வட கொரிய துருப்புக்கள் பூசானுக்கு அருகிலுள்ள சில பகுதிகள் தவிர நாடு முழுவதையும் ஆக்கிரமித்தன,”என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
தலைநகரில் தலைக்கு ஒரு குண்டு

ஜப்பானில் அமெரிக்க இராணுவத்தின் தளபதியாக இருந்த ஜெனரல் டக்ளஸ் மெக்கார்தர் இந்த தாக்குதலால் சற்று ஆச்சரியம் அடைந்தார்.

ஆனால் அவர் உடனடியாக பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க துருப்புக்களை தென் கொரியத் தலைநகர் சோலுக்கு மேற்கே இஞ்சியான் அருகே குவித்தார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு வட கொரிய இராணுவம் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் பின்னோக்கித் தள்ளப்பட்டது.

இரண்டரை ஆண்டுகள் வரை இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டே இருந்தனர். ஆனால் யாராலும் முடிவான வெற்றியைப் பெற முடியவில்லை.

குண்டு வீச்சு

புரூஸ் கம்மிங்ஸ் தனது ‘தி கொரியன் வார்: எ ஹிஸ்ட்ரி’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார், “ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பேரழிவிற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மெக்கார்தர் வட கொரியா மீது அணுகுண்டு வீசுவது குறித்து மிகவும் தீவிரமாக யோசித்தார்.

ஆனால் விரைவில் இந்த யோசனை கைவிடப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக, அமெரிக்கா மொத்தம் 6,35,000 டன் எடைகொண்ட குண்டுகளை வட கொரியா மீது வீசியது.

அவற்றில் இரண்டு லட்சம் குண்டுகள் பியோங்யாங் நகரத்தின் மீது போடப்பட்டன. அதாவது நகரத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு குண்டு. ”

இந்த அழிவுக்குப் பிறகு, வட கொரியாவோ அல்லது தென் கொரியாவோ தெளிவான வெற்றியைப் பெற முடியாது என்பது திட்டவட்டமாக தெரிந்தபோது, 1953 ஜூலை 27 அன்று இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டனர்.
மக்கள் மீது கண்காணிப்பு

போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர், கிம் இல் சங் போரினால் பாதிக்கப்பட்ட வட கொரியாவில் தனது நிலையை வலுப்படுத்தினார்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு ‘ ஒரு கட்சி அரசு’ தனது மக்களைக் கட்டுப்படுத்தியது. மக்கள் என்ன படிக்க வேண்டும், அவர்கள் என்ன சொல்ல வேண்டும், அவர்கள் எங்கு தங்குவார்கள், எங்கு பயணிப்பார்கள் என்பதை அரசு தீர்மானிக்கத் தொடங்கியது.

 

ஜப்பானில் இருந்த அமெரிக்கப் படையின் தளபதி ஜெனரல் மெக்கார்த்தர்.

ஆண்ட்ரே லங்கோவ் தனது ‘தி ரியல் நார்த் கொரியா: லைஃப் அன்ட் பாலிடிக்ஸ் இன் பெஃய்ல்ட் ஸ்டாலினிஸ்ட் உடோபியா’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார், “பாதுகாப்பு உளவாளிகள் ஒவ்வொரு நபரையும் தனது கண்காணிப்பில் வைத்திருக்கத் தொடங்கினர்.

வட கொரியா vs தென் கொரியா பிரச்சனை: கடந்த கால வரலாறு என்ன?
வட கொரியாவுக்கு சுற்றுலா செல்ல விருப்பமா? மாறுபட்ட பயண அனுபவம்

யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவரை வடக்கு மலைகளின் தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தொழிலாளர் முகாம்களில் வேலைக்கு அனுப்பினர் .

வட கொரியா ஒரு ‘முற்றுகை மனநிலை’ கொண்ட நாடாக மாறியது. அங்கு அரசு வீரர்கள் விரும்பும் போதெல்லாம் யாருடைய தனியுரிமையையும் ஆக்கிரமிக்கக்கூடிய ஆபத்து எப்போதும் இருந்தது. ”
உச்சத்தில் தனிநபர் வழிபாடு

1955 இல் வட கொரியாவில் பயங்கர வறட்சி ஏற்பட்டது. பல குழந்தைகள் பனிப்பொழிவுக்கு இடையில் வெறுங்காலுடன் பிச்சை எடுப்பதைக் காண முடிந்தது.

வட கொரியா நிதி உதவிக்காக சீனா மற்றும் சோவியத் யூனியனை மட்டுமே நம்பியிருந்தாலும் கூட, அது படிப்படியாக மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்களை பொது இடங்களிலிருந்து அகற்றத்தொடங்கியது.
கிம் இல் சங்

1954 ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசிய தினத்தை முன்னிட்டு நடந்த அணிவகுப்பில் இந்த தலைவர்களின் ஒரு படம் கூட இல்லை. அதே நேரத்தில் ஒவ்வொரு ரயில் நிலையம், அமைச்சகம் மற்றும் ஹோட்டலிலும் கிம் இல் சங்கின் பெரிய உருவப்படங்கள் நிறுவப்பட்டன.

வட கொரியாவிற்கான சோவியத் தூதர் வி இவானோவ் தனது நாட்குறிப்பில் எழுதினார், “கிம் தனது கால் பதித்த இடங்களில் சிறப்புத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.

கிம் ஓய்வெடுத்த இடங்கள் சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டன. அந்தக் காலத்தில் வட கொரியாவில் எல்லா இடங்களிலும் கிம் காணப்பட்டார்.

தேனீக்களை எவ்வாறு வளர்ப்பது, பழத் தோட்டங்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது, நீர்ப்பாசன தொழில்நுட்பத்தில் என்ன மாற்றங்கள் செய்வது அல்லது எஃகு உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றி அவர் மக்களுக்கு எடுத்துக்கூறினார். ”

சிறிய தவறுகளுக்கு பெரிய தண்டனை

எல்லா இடங்களிலும் அச்சம் சூழ்ந்த நிலை இருந்தது. மாபெரும் தலைவர் மீதான சிறிய அவமரியாதை போக்குகூட பொறுத்துக் கொள்ளப்படவில்லை.

கிம் இல் சங்

 

பனிப்போர் சர்வதேச வரலாற்றுத் திட்ட செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்ட ‘1956 இல் வட கொரியா மீதான புதிய சான்றுகள்’ என்ற கட்டுரை இவ்வாறு கூறுகிறது:

“ஒரு நபர் தனது புத்தகத்திற்கு கிம் இல் சங்கின் புகைப்படம் அச்சிடப்பட்ட செய்தித்தாளை மேல்அட்டையாக போட்டதற்காக அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு விவசாயி கிம் படத்தை சுட்டிக்காட்டி, நீங்கள் மக்களை சித்திரவதை செய்கிறீர்கள் என்று கத்தியபோது, அவர் ஏழு ஆண்டுகள் தொழிலாளர் முகாமுக்கு அனுப்பப்பட்டார்.”
மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட மக்கள்

1957 ஆம் ஆண்டில், வட கொரியாவின் மொத்த மக்கள் தொகையும் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இதன் அளவுகோல் கிம் மீதான விசுவாசம். முதலாவது முக்கிய வகுப்பு என்று அழைக்கப்பட்டது.

இரண்டாவது பகுதி ஊசலாடும் வகுப்பு என்று அழைக்கப்பட்டது. மூன்றாம் பகுதி வர்க்க எதிரிகள் என அறிவிக்கப்பட்டது. இது மொத்த மக்கள் தொகையில் சுமார் 20 சதவிகிதம்.
கிம் இல் சங்

 

ஆண்ட்ரே லங்கோவ் தனது ‘க்ரைஸிஸ் இன் நார்த் கொரியா’ (வட கொரியாவில் நெருக்கடி’) என்ற புத்தகத்தில் எழுதுகிறார், “இந்த வகுப்பு முறையின் அடிப்படையில் தான் வட கொரியாவில் உள்ள அனைத்தும் தீர்மானிக்கப்பட்டன.

அதாவது ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு ரேஷன் கிடைக்கும் என்பதிலிருந்து குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமை கிடைப்பது வரை.

வட கொரியாவில், இந்த வகுப்பு முறை பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு வழிவழியே வந்தது. யாருடைய உறவினர்கள் தென் கொரியாவில் தஞ்சம் புகுந்தனரோ அவர்கள் நகரத்திலிருந்து கிராமத்தில் வசிக்க அனுப்பப்பட்டனர். ”

கிட்டத்தட்ட 3 லட்சம் பியோங்யாங் நகரவாசிகள் அரசியல் ரீதியாக நம்பமுடியாதவர்கள் என முடிவு செய்யப்பட்டு கிராமங்களில் வசிக்க அனுப்பப்பட்டனர்.

காதல் பாடல்கள் மற்றும் காதல் கதைகள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டன. பிரபல நாடக அரங்குகள் தடைக்கு உள்ளாயின. பாரம்பரிய இசை, பீத்தோவானைக் கேட்பது கூட தடைசெய்யப்பட்டது. 1968 மே மாதம் நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டு புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கிம் இல் சங்கின் 20 மீட்டர் உயர சிலை

கிம் இல் சங்கின் ஜப்பான் எதிர்ப்பு நடவடிக்கைகளை சிறப்பிக்கும்விதமாக 1956 ஆம் ஆண்டில், 5000 சதுர மீட்டர் பரப்பளவில் பியோங்யாங்கில் ஒரு புரட்சிகர அருங்காட்சியகம் கட்டப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் கிம்மின் 12 ஆளுயர சிலைகள் வைக்கப்பட்டன.
கிம் இல் சங் 20 மீட்டர் உயர சிலை

கிம் இல் சங்கின் 20 மீட்டர் உயர சிலை

15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த பகுதி 50,000 சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டது. கிம் இல் சங்கின் 20 மீட்டர் உயர சிலை அருங்காட்சியகத்திற்கு வெளியே நிறுவப்பட்டது.

அதில் அவர் இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்பதை காண முடிந்தது. இரவில் சில கிலோமீட்டர் தூரத்திலிருந்து கூட அதைக் பார்க்கக்கூடிய வகையில் ஒளி விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில், கிம் கையுறைகள், காலணிகள், பெல்ட்கள், தொப்பிகள், ஸ்வெட்டர்கள் மற்றும் பேனா போன்ற ஆயிரக்கணக்கான பொருட்கள் வைக்கப்பட்டன.

சில ஆண்டுகளுக்கு கிம் மக்கள் முன் மிகக் குறைவாகவே தோன்றினார். இருப்பினும், அவரது மேற்கோள்கள் ஒவ்வொரு செய்தித்தாளிலும் இருந்தன.

எந்தவொரு புத்தகத்திலும், அது சிவில் இன்ஜினியரிங் புத்தகமாக இருந்தாலும் அல்லது மூலக்கூறு உயிரியலாக இருந்தாலும், கிம்மின் பணிகள் குறித்த விவரங்களைத் தர வேண்டியது அவசியம்.

‘கிம் இல் சங்: தி நார்த் கொரியன் லீடர்’ என்ற தனது புத்தகத்தில் டே சூக் சு இவ்வாறு எழுதினார். “1968 ஜனவரியில், தென் கொரிய அதிபர் பார்க் சுங் ஹீவை படுகொலை செய்ய கிம் ஒரு கொரில்லா படைக்குழுவை தென் கொரியாவுக்கு அனுப்பியபோது அவர் எல்லா வரம்புகளையும் கடந்துவிட்டார்.

அவர்களால் வெற்றிபெற முடியவில்லை மற்றும் சில கமாண்டோக்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகு, கிம் ஆணைப்படி ‘பீப்பலோ’ என்ற அமெரிக்க உளவுப் படகு கைப்பற்றப்பட்டது. ஊழியர்களில் 80 பேர் 11 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.”

“இந்த நடவடிக்கையில் பங்குபெற்றவர்களை கிம் பகிரங்கமாக வாழ்த்தினார். ஆனால் இந்த கைதிகள் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டபோது, கிம் தனது 12 உயர் தளபதிகளை பதவியில் இருந்து நீக்கிவிட்டார்.

சக்திவாய்ந்த ஜெனரல்கள் எத்தனைதான் விசுவாசமாக இருந்தாலும்கூட எந்தவொரு சர்வாதிகாரியும் அவர்களிடம் பாதுகாப்பாக உணர்வதில்லை.”

கிம்மின் உருவப்படத்தின் முன் தலைவணங்கும் பாரம்பரியம்

1972 டிசம்பரில், கட்சியின் தலைவர் என்பதோடு கூடவே கிம், நாட்டின் அதிபராக அறிவிக்கப்பட்டார். அவரது நினைவாக பேட்ஜ்கள் வெளியிடப்பட்டன. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அவற்றை மார்பின் இடது பக்கத்தில் அணிய வேண்டியது அவசியம்.
கிம் இல் சங் சிலைகள்

கிம் இல் சங் சிலைகள்

கிம்மின் 60 வது ஆண்டு நிறைவுக்குப் பிறகு, தொழிற்சாலைகளில் தங்கள் பணியை தொடங்குவதற்கு முன்பு மக்கள் கிம் உருவப்படத்திற்கு முன்னால் தலை குனிந்து வணங்குவதை, தொலைக்காட்சி ஒளிபரப்பத் தொடங்கியது.

ஷிப்ட் முடிந்ததும், அவர்கள் மீண்டும் கிம் உருவப்படத்தின் முன் தலை குனிந்து வணங்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

படிப்படியாக மக்கள் அவரது மகன் கிம் ஜாங் இல் மீதும் விசுவாசம் காட்டத் தொடங்கினர். தனக்குப் பிறகு கிம் ஜாங் இல் தனது வாரிசாக இருப்பார் என்றும் கிம் அறிவித்தார்.
கிம் இல் சங்

கிம் இல் சங்

கிம் இல் சங் 1994 ஜூலை 8 ஆம் தேதி தனது 82 வது வயதில் காலமானார். அவரது மரணம் குறித்து 34 மணி நேரம் நாட்டிற்கு அறிவிக்கப்படவில்லை. அதன் பிறகு ரேடியோ பியோங்யாங்கில் “மாபெரும் இதயம் பணி செய்வதை நிறுத்தியது” என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் வட கொரியாவில் உள்ள ஒவ்வொரு அலுவலகம், பள்ளி மற்றும் தொழிற்சாலையிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பலர் துக்கத்தில் அழுவதைக் காண முடிந்தது. இந்த இடங்களில், அதிர்ச்சியில் மயக்கமடைந்த மக்களை கவனித்துக்கொள்ள மருத்துவர்கள் குழு நிறுத்தப்பட்டது. அடுத்த சில நாட்கள் வரை கிம்மின் பிரும்மாண்ட சிலைக்கு பூக்களால் அஞ்சலி செலுத்தும் மக்கள் வரிசையை காண முடிந்தது.

விமான காக்பிட்டில், விமானிகள் அழுவதையும், கப்பலில் இருந்த மாலுமிகள் சோகமாக ஓலமிட்டு அழுவதையும் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது.

நாடு முழுவதிலும் 10 நாள் துக்கம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், அங்குள்ள ரகசிய போலீசார் மக்களின் முகங்களை சோதித்துக்கொண்டே இருந்தனர். அவர்களின் வருத்தம் போலியானது அல்ல என்பதை தொடர்ந்து உறுதிசெய்தனர்.

கிம் இல் சங் மரணம்.

கிம்மின் இடத்தில் அவரது மகன் கிம் ஜாங் இல் ஆட்சிக்கு வந்தார். அவரது மேற்பார்வையில் கிம்மின் உடல் ஒரு பெரிய கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டு எப்போதுமே கெடாமல் இருக்கும் வகையில் அது பாடம் செய்து (எம்பாமிங்) வைக்கப்பட்டது.

வட கொரியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ‘நித்திய வாழ்க்கை கோபுரம்’ (Eternal life tower) கட்டப்பட்டன. அவற்றில் ‘மாபெரும் தலைவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்’ என்று எழுதப்பட்டது.

தற்போது கிம் இல் சங்கின் பேரன் கிம் ஜாங் உன், வட கொரியாவின் தலைவராக உள்ளார். அவரது சர்வாதிகாரத்தின் கதைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாக உள்ளன.

 

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com