ilakkiyainfo

விக்னேஸ்வரனின் முள்ளிவாய்க்கால் உரை அரசின் மீது மட்டுமல்ல கூட்டமைப்பின் மீதும் விரல் சுட்டுகின்றதா? யதீந்திரா (கட்டுரை )

விக்னேஸ்வரனின் முள்ளிவாய்க்கால் உரை அரசின் மீது மட்டுமல்ல கூட்டமைப்பின் மீதும் விரல் சுட்டுகின்றதா? யதீந்திரா (கட்டுரை )
May 26
22:23 2015

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், அவர் பல்வேறு விடயங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றார்.

போர் முடிவுற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, போரில் உயிரிழந்த பொது மக்கள் தொடர்பான உண்மைநிலை இன்னும் வெளிக்கொணரப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் விக்னேஸ்வரன், மக்களின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கண்டறிவதற்கான உண்மையான – நம்பகமான விசாரணை பொறிமுறை  ஏற்படுத்தப்பட்டமையானது, தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

மிகவும் பொருத்தமானதொரு தருணத்தில், யுத்தம் முடித்துவைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நிலத்தில் நின்றவாறே விக்னேஸ்வரன் இதனை குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து புதிய அரசு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நம்பகமான உள்ளக பொறிமுறை ஒன்றை உருவாக்கவுள்ளதாக வாக்குறுதியளித்திருக்கும்  பின்னணியிலேயே விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

ஆனால், அரசின் அண்மைக்கால நடவடிக்கைகளை உற்று நோக்கும் போது அரசு குறிப்பிட்டுவரும் உள்ளக பொறிமுறை தொடர்பில் சந்தேகங்களே மேலெழுகின்றன.

Major-General-Jagath-Dias-newsfirstமேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்

இவ்வாறு நான் மேலெழுந்தமானமாக குறிப்பிடவில்லை. சில தினங்களுக்கு முன்னர் இறுதி யுத்தத்தில் பங்குகொண்ட இராணுவ தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், இராணுவ தலைமையகத்தின் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து மேற்படி மனித உரிமைகள் கண்காணிப்பகம்     வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இறுதிகட்டப் போரில்  அதிகளவான மனித உரிமை மீறல்களில்   ஈடுபட்ட படைப்பிரிவிற்கு தலைமை தாங்கிய மூத்த அதிகாரி  ஒருவருக்கு  இலங்கை  அரசு பதவியுயர்வு வழங்கியிருப்பதானது.

போர்க்குற்றங்கள்  தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தவுள்ளதாக அரசு வழங்கியுள்ள வாக்குறுதி மீது சந்தேகம் கொள்ள வைக்கிறது என்று குறிப்பிட்டிருக்கும் மேற்படி மனித உரிமை ஸ்தாபனம், போர்க்கால மீறல்கள் தொடர்பில் நியாயமான வகையில் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கை எடுப்பதாக இலங்கையின் புதிய அரசு வாக்குறியளித்திருந்தது.

ஆனால், போர்க்குற்றச் சாட்டுக்குள்ளாகியிருக்கும் படைப்பிரிவின் ஜெனரல்  ஒருவருக்கு பதவியுயர்வு வழங்கியிருப்பதானது, பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் ஓங்கி அறையும் செயலாகும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இவ்வாறானதொரு சூழலில்தான் விக்னேஸ்வரன் புதிய அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் தன்னுடைய உரையை நுணுக்கமாக செதுக்கியிருக்கிறார்.

விக்னேஸ்வரன் உரையைத் தொடர்ந்து தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த மாதம் போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெறும் என்று அறிவித்திருக்கின்றார்.

கூட்டமைப்பு குறிப்பாக அதன் தலைவராக அறியப்படும் இரா. சம்பந்தன் புதிய அரசு தொடர்பில் நம்பிக்கையான அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி வருகின்ற சூழலில், அதற்கு மாறான வகையில் விக்னேஸ்வரனின் அபிப்பிராயம் அமைந்திருக்கிறது.

அவரது உரையை கூர்ந்து அவதானித்தால், விடயங்களை தமிழ் மக்களுக்குச் சாதகமான வகையில் நிகழாத வரையில் ஆட்சி மாற்றம் என்பது அர்த்தமற்ற ஒன்றுதான் என்பதையே விக்னேஸ்வரன் சுட்ட முற்படுகின்றார்.

may18_jaffna_002அவரது பின்வரும் கூற்று அதனைத்தான் வெளிப்படுத்துகின்றது.

“ஆட்சிக்கு வருகின்ற புதிதில் தம்மை சமதான தூதுவர்களாக காட்டிக்கொள்ளும் இலங்கையின் அரச தலைவர்கள், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பது போன்ற தோற்றப்பாட்டினை உருவாக்குவதும்   பின்னர் காலப்போக்கில் தமிழ் விரோதப் போக்கிற்கு மாறுவதும் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்துள்ளன. இந்த நிலை இனியும் நீடிக்கக் கூடாது”.

புதிய அரசு தொடர்பில் சம்பந்தன் காண்பித்து வரும் சாதகமான நம்பிக்கையை, எச்சரிக்கும் தொனியிலேயே விக்னேஸ்வரன்   இவ்வாறு கூறியிருப்பதாகவே நான் பார்க்கிறேன்.

பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் சம்பந்தன் சாதகமான பார்வையே வெளிப்படுத்தி வருகின்றார்.

தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அமெரிக்க மற்றும் மேற்குலக இராஜதந்திரிகளுக்கும் அவ்வாறானதொரு பார்வையே கூட்டமைப்பு கொடுத்து வருகிறது.

மஹிந்த ராஜபக்‌ஷவை ஆட்சியிலிருந்து அகற்றியதன் பலனாக சாதகமான ஒரு சூழல் உருவாகியிருப்பதாகவே கூட்டமைப்பு காண்பித்து வருகிறது.

எனினும், கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்கள் மத்தியில் இதில் கருத்துதொற்றுமை குறைவாகவே காணப்படுகிறது. இது பற்றி  இப்பத்தியில்  முன்னரும் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

இங்கு விக்னேஸ்வரன் ஆட்சிக்கு வருகின்றபோது தங்களை சமாதானத் தூதுவர்களாக காட்டிக் கொள்ளும் இலங்கையின் தலைவர் என்று குறிப்பிடுவதன் மூலம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடர்பில் சம்பந்தன் வெளிப்படுத்திவரும் நம்பிக்கையுமா விக்கினேஸ்வரன் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.

Sampanthan-Chandrika-ஏனெனில், சந்திரிக்கா குமாரதுங்க 1994ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது பெண் ஜனாபதியாக தெரிவான போது பெரும்பாண்மையான வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள், சந்திரிக்காவை ஒரு சமாதான தேவதையாகவே நோக்கினர்.

யாழ்ப்பாணத்தில் சந்திரிக்கா காப்பு, சந்திரிக்கா சீப்பு என்றெல்லாம் பொருட்கள் விற்கப்படுமளவிற்கு சந்திரிக்கா தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சாதகமான எண்ணமே மேலோங்கியிருந்தது.

விடுதலைப் புலிகளின் தத்துவ ஆசிரியராக அறியப்பட்ட அன்ரன் பாலசிங்கம் கூட சந்திரிக்காவை ஒரு சமாதான புறா என்று குறிப்பிடுமளவிற்கு சந்திரிக்கா தமிழ் அபிப்பிராயத்தை சம்பாதித்திருந்தார்.

ஆனால், காலப் போக்கில் அவரும் தெற்கின் சிங்கள இனவாத சகதிக்குள் வீழ்ந்து இறுதியில் அதற்குள் கரைந்து போனார்.

சமாதானத்திற்கான யுத்தம் என்னும் ஒரு புதுவகை யுத்தத்தை தமிழ் மக்களுக்கு பரிசளித்தார். இதன் போதும் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்தனர்.

முள்ளிவாய்க்காலில் பெருந் தொகையான தமிழ் மக்கள் ஒரேயடியாக உயிரிழக்க நேர்ந்ததன் காரணமாகவே இன்று அனைவரது பார்வையும் முள்ளிவாய்க்காலில் மட்டுமே குவிந்திருக்கிறது.

mahinda_rajapaksa

இதற்கு காரணம் மஹிந்த ராஜபக்‌ஷ. ஆனால், மஹிந்தவிற்கு முன்னர் கொழும்பை ஆட்சி செய்த சிங்களத் தலைவர்கள் எவரும் மாட்டின் லூதர் கிங்குகளோ அல்லது நெல்சன் மண்டேலாக்களோ இல்லை. அவர்களது காலத்திலும் அப்பாவி தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்திருக்கின்றனர்.

ஆனால், ஒரு கோடானது அதற்கு அருகில் போடப்படுகின்ற அதனைவிடவும் பெரிய கோடொன்றால் சிறிதாவது போன்று மஹிந்த ராஜபக்‌ஷ என்னும் ஒருவரது செயற்பாடு, அவரது ஆட்சிக்கு முன்னர் நிகழ்ந்த தமிழர் விரோத செயற்பாடுகள் அனைத்துக்கும் பாவமன்னிப்பு வழங்கிவிட்டது.

இவ்வாறானதொரு சூழலில்தான் அண்மையில் தனிநாட்டு பிரகடனத்தை செய்த தந்தை செல்வநாயகத்தின் நினைவு தினத்தில் சந்திரிக்கா நினைவுப் போருரை நிகழ்த்தியிருந்தார்.

தமிழரசு கட்சியின் இது போன்ற செயற்பாடுகளுக்கு பதலளிக்கும் வகையிலா விக்னேஸ்வரன் தன்னுடைய உரையில், குறிப்பாக இந்த விடயத்தை புகுத்தியிருக்கிறார் என்னும் ஒரு கேள்வியும் அவரது உரையை வாசித்த போது எனக்குள் எழுந்தது.

அதேவேளை, விக்னேஸ்வரனும் பலரும் எண்ணுவது போன்றே தற்போதிருக்கின்ற சூழலை தமிழர் தரப்பு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமென்றே கருதுகின்றார் போலும்.

தமிழ்ப் பேசும் மக்களது பிரதான பிரச்சினையான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் விரைந்து செயற்பட வேண்டிய கடமை நம் அனைவரும் முன்னாலும் உள்ளது.

இவ்வாறு குறிப்பிடும் விக்னேஸ்வரன், இப்படியும் குறிப்பிடுகின்றார், விரைந்து செயற்படாத தன்மையும் அளவுக்கதிகமான கால நீட்சியும் பிரச்சினைகளினதும் அதற்கான தீர்வுகளினதும் பரிமாணங்களை மாற்றியமைக்கும் அபாயம் கொண்டதாவன என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுமை காக்க வேண்டும், புதிய அரசை பழைய அரசு போன்று அணுகக் கூடாது என்று இராஜதந்திர தரப்பினர் கூறிவருகின்ற சூழலில்தான் விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

இதன் மூலம் கால அவகாசம் வழங்குவது தொடர்பில் அறிவுரை கூறிவரும் இந்திய மற்றும் அமெரிக்க தரப்பினருக்கும் மட்டுமல்ல அவற்றை பொறுமையாக செவிமடுத்துவரும் சம்பந்தனின் அணுகுமுறையையும் விக்னேஸ்வரன் மெல்லிதாக விமர்ச்சித்திருப்பதாகவே நான் பார்க்கிறேன்.

ஒருவேளை நாளை தென்னிலங்கையில் சடுதியான அரசியல் மாற்றங்கள் ஏற்படுமாயின் தற்போதிருக்கின்ற சூழலில் முற்றிலும் தலைகீழாகிவிடும்.

அப்போது நாம் மீண்டும் ஒப்பாரி வைப்பதில் பொருளில்லை. எனவே, கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை சம்பந்தன் முடிந்தவரையில் விரைவாக கையாள வேண்டும் என்பதையே விக்னேஸ்வரன் வலியுறுத்த முற்படுகின்றார்.

சம்பந்தன் பொறுமை காக்க வேண்டுமென்கிறார். ஆனால், விக்கினேஸ்வரனோ கூட்டமைப்பின் அளவுக்கதிகமான பொறுமை இறுதியில் அந்த பொறுமையையே மலினப்படுத்தி விடலாம் என்கிறார்.

விக்னேஸ்வரன் தன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் விடயங்கள் அனைத்தும் நியாயமானவை என்பதிலும், அவை இன்றைய சூழலில் முன்வைக்கப்பட வேண்டும் என்பதிலும் என்னிடம் இரு வேறு கருத்துக்கள் இல்லை.

ஆனால், விக்னேஸ்வரன் எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அதிகாரப் பரவலாக்கலுக்கு (அதாவது அரசியல் தீர்வு) சம்பந்தனோ, கூட்டமைப்பின் தலைவர்களோ எவருமே எதிரானவர்கள் அல்ல.

மேலும், தமிழ் மக்களுக்கு வடக்கு – கிழக்கு இணைந்த அதிகாரப் பகிர்வு ஒன்றையே அனைவரும் அவாவி நிற்கின்றனர். ஆனால், அதன் இன்றைய சாத்தியப்பாடு தொடர்பில் கேள்விகள் ஏராளமாக உண்டு.

சம்பந்தன் இந்த யதார்த்ததை புரிந்து வைத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன். இதனை இன்னொரு வகையில் குறிப்பிடுவதானால், சம்பந்தனாலோ அல்லது கூட்டமைப்பாலோ வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்னும் அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வொன்றை இன்றைய சூழலில் காண்பதென்பது சாத்தியமான ஒன்றல்ல.

இதனை சம்பந்தனும் அறிவார். சம்பந்தனுடன் சில விடயங்களில் உடன்பட்டும், பல விடயங்களில் உடன்படாமலும் இயங்கிவரும் கூட்டமைப்பின் ஏனைய முக்கிய தலைவர்களும் அறிவர்.

இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள், தங்களை தாங்களே தீர்மானித்து வாழ்வதற்கான ஒரு அரசியல் தீர்வை கொழும்பு வலிந்து தரப்போவதில்லை.

இதில் எவருக்காவது முரண்பாடு இருக்கிறதா? எனவே, இந்த இடத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமாயின், அதற்கு மூன்றாம் தரப்பொன்றின் தலையீடு அவசியம்.

இலங்கையின் புவிசார் அமைவில், அந்த சக்தி இந்தியா மட்டுமே! இந்தியத் தலையீட்டின் எல்லை எதுவோ, அந்த எல்லை வரை அமெரிக்காவும் வரும்.

தற்போது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் இருக்கின்ற மூலோபாய கூட்டு அப்படிப்பட்ட ஒன்று.

ஆனால், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தெற்கில் காணப்படும் ஸ்திரமற்ற நிலைமையை கருத்தில் கொண்டே தமிழர் விவகாரத்தை இந்தியா அளவிடும்.

தெற்கில் ஸ்திரமற்ற நிலைமை நீண்டுகொண்டு செல்லுமாயின், இந்தியா இந்த விவகாரத்தில் ஆக்கபூர்வமாக தலையீடு செய்வதற்கான வாய்ப்பில்லை.

அந்த வகையில் நோக்கினால், அண்மைக்காலத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த  அரசில்  தீர்வு என்பது ஒரு தமிழ் ஆசையாக இருக்க முடியுமே தவிர, அது நடைமுறைக்கு வரும் ஒன்றாக இருக்காது. இதனை விக்னேஸ்வரன் அறியாமலும் இருக்க முடியாதென்றே நான் கருதுகிறேன்.

ஆனால், இந்த நிலைமைகளில் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்தொருமித்து, ஒரு அரசியல் வேலைத்திட்டத்துடன் இயங்க முன்வர வேண்டும்.

இந்தியாவும் சரி அமெரிக்காவும் சரி வலிந்து எதனையும் தமிழ் மக்களுக்காக செய்யப் போவதில்லை. தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஒருமித்த நிலைப்பாடுதான், அவர்களை தமிழ் மக்களின் பிரச்சினை நோக்கி ஈர்ப்பதற்கான ஒரே வழியாகும்.

இன்று ஒரு பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.

உண்மையில் யுத்தம் முடிவுற்ற கடந்த ஆறுவருடங்களில் இளைஞர்கள், பெண்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆக்ரோசமாக வீதிக்கு வந்திருக்கின்ற முதல் சம்பவம் இதுவாகும்.

இது போன்று வடக்கு – கிழக்கு இணைந்த அரசியல் தீர்வொன்றிற்காவும் மக்கள் வீதிக்கு வர வேண்டும். அதற்கான தலைமையை கூட்டமைப்பு வழங்க வேண்டும்.

-யதீந்திரா-

About Author

admin

admin

Related Articles

3 Comments

 1. Daoud Tharik
  Daoud Tharik May 27, 20:32

  இலக்கியா நிர்வாகத்துக்கு, உங்களுடைய ஆக்கங்களை ஏன் Face Book இல் Share செய்ய முடியாமல் இருக்கிறது.

  Reply to this comment
  • admin
   admin Author May 27, 20:55

   நன்றி. எங்கள் இணையதளத்துக்கு எதிராக யாரோ விசமிகள் வைரஸ் பாச்சியுள்ளதால். பேஸ்புக் நிறுவனம் share இப்போதைக்கு தடைபண்ணியுள்ளது. விரைவில் சரி செய்வோம்.
   நன்றி.சேவைக்கு..

   Reply to this comment
 2. Daoud Tharik
  Daoud Tharik June 01, 09:52

  இலக்கியா நிர்வாகத்துக்கு, நன்றிகள் பல ….

  Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com