வவுனியா பம்பை மடு பெரிய கட்டு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பூவரசங்குளம் – பெரிய கட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும்  பயணம் செய்துள்ளனர்.

குறித்த உழவியந்திரம் பெரிய கட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் திரும்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மதகுடன் மோதி முற்றாக குடைசாய்ந்தது.

இந்நிலையில், உழவியந்திரத்தில் பயணம் செய்த கணவன் தூக்கி வீசப்பட்டதுடன், மனைவி உழவியந்திரத்தின் கீழ்பகுதியில் நசியுண்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை  மீட்டு அவசர ஆம்புலன்ஸ் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பெரியகட்டுபகுதியை சேர்ந்த தனுசா 21 வயதான ஒரு பிள்ளையின் தாயே  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இந்நிலையில், கணவன் சிறு காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணே உழவியந்திரத்தை ஓட்டியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த விபத்து தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

.