மே மாதத்தில் 88 தொற்றாளர்கள் வீடுகளிலேயே உயிரிழப்பு
கடந்த மே மாதம் 746 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இவற்றில் 88 மரணங்கள் வீடுகளிலேயே பதிவானவையாகும்.

இவ்வாறு வீட்டில் உயிரிழந்தவர்களில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமின்றி 24 வயதுடைய யுவதியொருவரும் உள்ளடங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

கொவிட் தொற்று பரவல் தீவிர தன்மை மற்றும் அதன் ஆபத்து குறித்து நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் தொற்றாளர்கள் உயிரிழப்பு எவ்வாறு அதிகரிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு விடை தேடுவதில் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. நாடாளவிய ரீதியில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய கொவிட் தடுப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமசேவகர் பிரிவுகள் பொதுசுகாதார ஊழியர்கள் மற்றும் கொவிட் தடுப்பு செயலணி உத்தியோகஸ்தர்கள் என பரந்துப்பட்ட கட்டமைப்பிற்குள் தொற்று தடுப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அதையும் மீறிய தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளில் தங்கவைத்திருப்பதென்பது சமூக பரவலுக்கு காரணமாகிவிடும். மறுப்புறம்  நாட்டின்  சுகாதார  கட்டமைப்பையும் பாதித்து விடும்.

இவ்வாறனதொரு நிலைமை கொவிட் தொற்றாளர்களை அதிகரிப்பதோடு மரண வீதமும் சடுதியாக  அதிகரிக்க  காரணமாகிவிடும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்தாகின்றது.

வைத்தியர்களின் ஆலோசனை
இலங்கையில் கொவிட் மூன்றாம் அலையில் பரவும் நிலைமாறிய வைரஸானது பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது.

எனவே அறிகுறியுடைய தொற்றாளர்களானாலும், அறிகுறிகள் அற்ற தொற்றாளர்களானாலும் வைத்தியசாலைக்கு சென்று துரித சிகிச்சைகளைப் பெற வேண்டியது அவசியமாகும் என்றும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவு பிரதம பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

தற்போது நாளாந்தம் பதிவாகும் கொவிட் மரணங்களில் நான்கில் ஒரு பகுதியினர் வீடுகளிலேயே உயிரிழக்கின்றமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொற்று அறிகுறிகள் தென்படுபவர்கள் அச்சத்தின் காரணமாக அல்லது தமது கொவிட் தொற்றாக இருக்காது என்ற அசமந்த போக்கின் காரணமாக வைத்தியசாலையை நாடும் வீதம் குறைவாகக் காணப்படுகிறது.

இந்த இரண்டு காரணிகளுமே தவிர்க்கப்பட வேண்டியவையாகும். வீடுகளில் பதிவாகும் மரணங்களில் இவ்விரண்டு காரணிகளே பிரதானமாக தாக்கம் செலுத்துகின்றன.

எனவே தொற்று அறிகுறிகள் தென்படுமாயின் அவ்வாறானவர்கள் உரிய மருத்துவ ஆலோசனையுடன் தமக்கான கொவிட் பரிசோதனையின் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அறிகுறிகள் எவையும் இன்றி தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் முறையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இள வயதினரானாலும் , முதியோரானாலும் தீவிர அறிகுறிகள் அதாவது சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை காணப்பட்டால் தாமதிக்காது வைத்தியாலைக்கு செல்ல வேண்டும்.

கொவிட் அச்சுறுத்தலால் வைத்தியசாலைக்கு செல்ல அச்சப்பட தேவையில்லை. வைத்தியசாலைக்கு செல்வதால் தொற்று ஏற்படக் கூடும் என்ற வீண் அச்சத்திலிருந்து மக்கள் வெளிவர வேண்டும் என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.