Site icon ilakkiyainfo

வீ ஓயாவை அதிரவைத்த இரட்டைக் கொலை: தந்தையே இயமனாக வந்த கொடூரம்

 

அன்று 16 ஆம் திகதி புதன்­கி­ழமை. எட்­டி­யாந்­தோட்டை நக­ரி­லி­ருந்து சுமார் 13 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் வீஓயா தோட்டம் மலல்­பொல பிரி­வி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்ற அதிர்ச்­சி­தரும் செய்தி மனதை ஈர­மாக்­கி­யது.
கொஞ்சி விளை­யாடும் பிஞ்சுக் குழந்­தைகள் இருவர் தந்­தையால் கொல்­லப்­பட்ட அந்தத் துயரச் செய்­தி­ய­றிந்து மலல்­பொ­ல­வுக்கு விரைந்தோம்.
வீ ஓயா ஆறு சல­ச­லக்கும் சத்தம் செவி­களை நிறைக்க இறப்பர் மரங்­க­ளுக்­கி­டையே நகர்ந்­தது எமது பயணம்.
மலல்­பொல தோட்­டத்தில் ஆங்­காங்கே மக்கள் குழு­மி­யி­ருந்து பேசிக்­கொண்­டி­ருந்­தார்கள். சிறு சிறு லயன்­க­ளுக்­கி­டையே நடந்து சென்று சம்­பவ இடத்தை அடைந்தோம்.
ஏழ்­மையை சுமந்து காட்­சி­ய­ளித்­தது அந்த வீடு. பொலி­ஸாரின் அனு­ம­தி­யுடன் உள்ளே சென்றோம்.
முகத்தில் களங்கம் எது­வு­மில்­லாமல் நிரந்­த­ர­மான உறக்­கத்­தி­லி­ருந்த குழந்­தை­களைப் பார்க்­கையில் இதயம் கனத்­தது. மூர்ச்­சை­யற்­றி­ருந்த அக்­கா­வி­னதும் தம்­பி­யி­னதும் உடல்கள் அரு­க­ருகே கிடத்­தப்­பட்­டி­ருந்­தன. சிறு­வனின் வலது கைக்கு அருகில் விளை­யாட்டுக் காரும் நிலத்தில் கிரிக்கெட் மட்­டையும் காணப்­பட்­டன.
இந்தப் பால­கர்­களை கொல்­வ­தற்கு எப்­படி தந்­தைக்கு மனம் வந்­தது? என்ன காரணம்? இவர்கள் என்ன பாவம் செய்­தார்கள் என்ற கேள்­விகள் இயல்­பா­கவே எம் மனதில் எழுந்­தன.
ஆம்! பிரபு என்­ற­ழைக்­கப்­படும் ஜோசப் பிரான்ஸிஸ் ராஜா (35) என்­வ­ருக்கும் மல்­லிகா என்­ற­ழைக்­கப்­படும் சிவ­ராமன் விஜ­ய­லட்­சு­மிக்கும் நடந்­தது காதல் திரு­மணம்.
எட்­டி­யாந்­தோட்­டையில் சீடி விற்­பனை நிலையம் ஒன்றை நடத்­தி­வந்த பிரான்ஸிஸ் பின்­னாளில் அவி­சா­வ­ளையில் உள்ள ஆடைத் தொழிற்­சா­லை­யொன்றில் தொழில்­பு­ரிந்து வந்தார். விஜ­ய­லட்­சுமி கொஞ்ச காலம் தோட்­டத்தில் தொழில் ­பு­ரிந்தார்.
இவர்­க­ளி­டையே எந்தக் குடும்பப் பிரச்­சி­னையும் இருக்­க­வில்லை. குடும்பச் சுமை­க­ளுடன் ஏழ்­மை­யாக வாழ்ந்­தாலும் கூட கண­வனும் மனை­வியும் சந்­தோ­ஷ­மாக வாழ்ந்து வந்­தனர்.
எனினும் சிறு லயன் அறையில் வாழ்­வது அவர்­க­ளுக்குச் சிர­ம­மாக இருந்­தது. அத்­தோடு விஜ­ய­லட்­சு­மியின் பெற்றோர் லயன் அறைக்குச் சற்றுத் தூரத்தில் மாட்டுக் கொட்­டி­லைப்­போன்று அமைக்­கப்­பட்ட வேறொரு அறையில் வாழ்ந்து வந்­தனர்.
சாதா­ரண வெயில், சாதா­ரண மழை என்றால் கூட அந்தக் குடிலில் இருக்க முடி­யாது. அவ்­வ­ள­வுக்கு கஷ்­ட­மான வாழ்க்கை வாழ்ந்து வந்த பெற்­றோரின் நிலையும் விஜ­ய­லட்­சு­மிக்கு சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தி­யது.
இந்­நி­லையில் குடும்ப வறு­மையை சமா­ளிப்­ப­தற்­காக விஜ­ய­லட்­சுமி பணிப்­பெண்­ணாக வெளிநாட்­டுக்குச் சென்றார். பின்னர் மீண்டும் இலங்­கைக்கு வந்து திரும்­பவும் வெளிநாட்­டுக்குச் சென்றார்.
கடந்த ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் மத்­திய கிழக்கு நாடான டுபாய்க்கு சென்ற விஜ­ய­லட்­சுமி தனது கண­வ­னுடன் தொலை­பே­சியில் உரை­யாடும் போது கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன.
இது தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வந்த நிலையில் பொறுத்­துக்­கொள்ள முடி­யாத பிரான்ஸிஸ் தனது மனை­வியின் சகோ­தரன் சிவ­ராமன் ராஜ­மூர்த்­தி­யிடம் இது குறித்து கூறி­யுள்ளார்.
இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் மனை­வி­யுடன் இன்­னு­மொரு நபர் இருக்கும் பட­மொன்று மனை­வியின் தொலை­பே­சி­யி­லி­ருந்து பிரான்­ஸிஸுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.
இதனைப் பார்த்­த­வுடன் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்த அவர் நடந்­தது அனைத்­தையும் மனை­வியின் பெற்­றோ­ரிடம் கூறி­யுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி இரவு வழ­மைபோல் தொழிலை முடித்­து­விட்டு வீட்­டுக்கு வந்த பிரான்ஸிஸ் மனை­வியின் பெற்­றோ­ரிடம், “பிள்­ளை­களை நினைத்தால் தான் கவ­லை­யாக இருக்­கி­றது. ஏதா­வது முடிவு செய்ய வேண்டும்” என ஆதங்­கத்­துடன் தெரிவித்­துள்ளார்.
அவர்­க­ளுடன் பேசிக்­கொண்­டி­ருந்து நித்­தி­ரைக்குச் செல்­லும்­போது நேரம் நள்­ளி­ரவு 12 மணியைத் தாண்­டி­யி­ருந்­தது. அநே­க­மாக பிரான்ஸிஸ் நித்­தி­ரை­கொள்­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­க­வில்லை. மனை­வி­மீது கொண்ட கோபத்­தினால் பிள்­ளை­களைக் கொன்­று­விட வேண்டும் என்றே மனம் துடித்­துக்­கொண்­டி­ருந்­தது.
அன்று அதி­காலை 1.30 மணிக்கு மனை­வியின் சகோ­த­ர­னு­டைய வீட்­டுக்குச் சென்று அவரை எழுப்­பி­யி­ருக்­கிறார் பிரான்ஸிஸ். தலையை கீழே குனிந்­த­வாறு ” நான் பெரிய தவறு செய்­து­விட்டேன். என்னைக் கொன்­று­வி­டுங்கள். என் பிள்­ளை­களை நிம்­ம­தி­யான ஓர் இடத்­துக்கு அனுப்­பிட்டேன்.இந்தப் பாவத்­துக்கு பரி­கா­ரமே கிடை­யாது. என்னைக் கொன்­று­வி­டுங்கள்” எனக் கூறி­யி­ருக்­கிறார்.
ஏதோ அசம்­பா­விதம் நடந்­து­விட்­டது என்­பதை புரிந்­து­கொண்ட ராஜ­மூர்த்தி உட­ன­டி­யாக பிரான்ஸிஸின் வீட்­டுக்கு வந்து பிள்­ளை­களைப் பார்த்­தி­ருக்­கிறார். அவர்கள் இந்த உலகை விட்டுப் பிரிந்­தி­ருந்­தனர்.
பிள்­ளை­களைக் கொலை செய்த குற்­ற­வு­ணர்வில் தன்­னையே வெறுத்த பிரான்ஸிஸ் வீட்­டி­லி­ருந்த கத்­தியினால் தனது கையை வெட்­டிக்­கொண்டு தற்­கொ­லைக்கு முயற்சி செய்­துள்ளார்.
உடனே அங்கு ஊரார் கூடினர். இது குறித்து தோட்ட முகா­மை­யா­ள­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. முகா­மை­யாளர் ஊடாக பொலிஸ் அவ­சர தொலை­பே­சிக்கு தகவல் வழங்­கப்­பட்­டது. அதி­காலை 2.40 மணி­ய­ளவில் எட்­டி­யாந்­தோட்டை பொலிஸார் சம்­பவ இடத்­துக்கு வருகை தந்­தனர்.
சந்­தேக நப­ரான பிரான்ஸிஸ் கைது செய்­யப்­பட்டார்.
எட்­டி­யாந்­தோட்டை இரா­ம­கி­ருஷ்ணா தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் 2 ஆம் தரத்தில் கல்வி கற்கும் ரம்யா சத்­து­ரங்கி (7 வயது), தோட்­டத்துப் பாலர் பாட­சா­லையில் கற்கும் சலிந்து சுசங்க (3 1/2 வயது) ஆகிய இரு­வ­ருமே தந்­தையால் கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.
மனை­வி­யு­ட­னான பிரச்­சினை கார­ண­மா­கவே பிள்­ளை­களை கொலை செய்­த­தாக பிரான்ஸிஸ் பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் அளித்­துள்ளார்.
வெளிநாட்டில் தொழில்­பு­ரியும் தனது மனை­வியின் தொலை­பே­சிக்கு அழைப்பு மேற்­கொள்ளும் அதி­க­மான சந்­தர்ப்­பங்­களில் வேறு ஒரு நபரே பதி­ல­ளிப்­ப­தா­கவும் மனை­வியி­ட­மி­ருந்து கிடைத்த குறுந்­த­கவல் புகைப்­பட ஆதா­ரங்கள் என்­பன தன்னை விரக்­தியின் உச்­சத்­துக்கு கொண்டு சென்­ற­தா­கவும் வாக்­கு­மூ­லத்தில் தெரிவித்­துள்ளார்.

இச்­சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
பிள்­ளை­களை கொலை செய்­ததா­க ஒப்­புதல் வாக்­கு­மூலம் அளித்­துள்ள சந்­தேக நப­ரான பிரான்ஸிஸ் எதிர்­வரும் 11 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக எட்­டி­யாந்­தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி அசேல கே. ஹேரத் கேச­ரிக்குத் தெரிவித்தார்.
உண்­மையில் மனை­வி­யுடன் பிரச்­சினை ஏற்­படும் பட்­சத்தில் அந்தக் கோபத்­தினை பிள்­ளைகள் மீது காட்டி கொலை செய்­யு­ம­ள­வுக்கு துணி­வது மிகபபெரி­ய குற்­ற­மாகும்.
அதே­வேளை குடும்பச் சுமையை தீர்ப்­ப­தற்­காக வெளிநாட்­டுக்குச் சென்று குடும்பம் குறித்த அக்­க­றை­யின்­மை­யுடன் செயற்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.
வெளிநாட்டு வேலை­வாய்ப்­புக்­காக குடும்பப் பெண்­களை அனுப்­பும்­போது இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஏற்­பட்டால் எவ்­வாறு தீர்­வினைப் பெற்­றுக்­கொள்ளலாம் என்­பது குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணி­ய­கத்தில் விளக்கம் அளிக்­கப்­ப­டு­கி­றது.
குழந்­தைகள் கட­வு­ளுக்குச் சம­மா­ன­வர்கள் என்று கூறு­வார்கள். கள்ளம் கப­ட­மற்ற உள்­ளத்­துடன் துள்ளி விளை­யாடும் வயதில் தந்­தையே இய­ம­னாக வருவார் என அவர்கள் சற்றும் எதிர்­பார்த்­தி­ருக்க மாட்­டார்கள்.
கண­வ­னுக்கும் மனை­விக்கும் இடை­யி­லான பிரச்­சி­னையில் அநி­யா­ய­மாக இரு குழந்­தைகள் கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.
முன்­கோ­பத்­தினால் தன் செல்லக் குழந்­தை­களை கொலை செய்­து­விட்டு சிறைக் கூண்­டுக்குள் இருந்து வேத­னைப்­பட்டு ஒவ்­வொரு நிமி­டமும் துடித்துக்­கொண்­டி­ருக்­கிறார் பிரான்ஸிஸ்.
இந்தச் சம்­பவம் நமக்குப் பல பாடங்­களை கற்­றுக்­கொ­டுத்­தி­ருக்­கி­றது. இனி­மேலும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடக்­கா­தி­ருக்க ஒவ்­வொருவரும் விழிப்புணர்வுடனும் சமூக அக்கறையுடனும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
மலல்பொல தோட்ட லயன் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் பிரான்ஸிஸ் தன் பிள்ளைகள் மீது எந்தளவு அன்பு வைத்திருந்தார் என்பதை எமக்குக் கூறினார்கள்.
பிள்ளைகளுக்கு சிறு எறும்பு கடித்தாலும் தோளில் தூக்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடிச்செல்லும் தந்தையா இப்படிச் செய்தார் என்பதை நம்ப முடியவில்லை என அயலவர்கள் அழுகையுடன் தெரிவித்தனர்.
எது எவ்வாறாயினும் அன்பை மாத்திரமே நெஞ்சில் சுமந்து சிட்டுக்குருவிகளாய் பறந்து திரிந்த அந்தப் பிஞ்சுகள் இன்று எங்களிடையே இல்லை. அன்றைய நாளின் விடியல் அந்தக் குழந்தைகளுக்கு மட்டும் அஸ்தமனமாகிப் போனதை எண்ணி வேதனையுடன் அங்கிருந்து புறப்பட்டோம்.
 நன்றி- வீரகேசரி

Exit mobile version